Monday, May 11, 2015

வெற்றி வெற்றியே

சின்னச் சின்ன அடிகள் வைத்து
சிகரம்  ஏறுவோம்
சிந்தை தன்னில் குழப்ப மின்றி
தொடர்ந்து  ஏறுவோம்
விந்தை போலக் கனவு யாவும்
நிஜமாய் மாறவே -அந்தச்
சொர்க்கம் கூட மண்ணில் வந்து
நிலைத்து  வாழவே  

ஞாலம் என்னும் பூதம் கூட
துகளால் ஆனது
மாயம் செய்யும் காலம் கூட
நொடியால் ஆனது
சீறும் அலைகள் கொண்ட கடலும்
துளியால் ஆனது-உலகில்
காணு கின்ற   பொருட்கள் எல்லாம்
அணுவால்  ஆனது

வெற்றி பெற்ற மனிதர் என்றால்
இதனை அறிந்தவர்
பொத்தி நாமும் தூங்கும் போது
விழித்து எழுந்தவர்
முயலும் தோற்று ஆமை வென்ற
கதையைச் சொல்வதே -இந்த
ரகசி யத்தை நாமும் நன்றாய்ப்
புரிந்து கொள்ளவே

வானை முட்டி திமிராய் நிற்கும்
மலையைக் கூடவே
காணத் தெரியா சிறிய வேர்கள்
நொறுக்கி நகருமே
தொடர்ந்து முயன்றால் இந்த உலகில்
எல்லாம் முடியுமே-இதை
உணர்ந்தால் போதும் என்றும்  வாழ்வில்
வெற்றி வெற்றியே 

12 comments:

கவிஞர்.த.ரூபன் said...

வணக்கம்
ஐயா.

உண்மைதான் மனிதன் முயன்றால் எதையும் சாதிக்கமுடியும் ஒவ்வொரு வரியிலும் ஒவ்வொரு கருத்தை சொல்லிய விதம் நன்று ஐயா பகிர்வுக்கு நன்றி த.ம 2
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

ஸ்ரீராம். said...

முதல் அடி எடுத்து வைத்தால் போதும்! அருமை.

வை.கோபாலகிருஷ்ணன் said...

//வானை முட்டி திமிராய் நிற்கும் மலையைக் கூடவே காணத் தெரியா சிறிய வேர்கள் நொறுக்கி நகருமே//

நம்பிக்கையூட்டும் நல்ல வரிகள். :) பாராட்டுகள்.

சசிகலா said...

தொடர் முயற்சி தான் வெற்றிக்கு வழியென்பதை வெகுசிறப்பாக சொன்னீர்கள் ஐயா.

G.M Balasubramaniam said...

உறசாகம் பெற ஊக்குவிக்கும் வரிகள். வாழ்த்துக்கள்.

கதம்ப உணர்வுகள் said...

த.ம.5

வெற்றி பெறுவது என்பது எளிதன்று... அதே சமயம் முடியாதது என்பது எதுவுமில்லை... துளி தான் பெருவெள்ளமாகும்.. இடைவிடாது முயற்சிப்போர் அடைவது வெற்றி அல்லது அனுபவம் என்று சிந்திக்க தூண்ட வைத்த வரிகளோடு எழுதிய அத்தனையும் சிறப்பு ரமணி சார்...

மனம் நிறைந்த அன்பு வாழ்த்துகள்.

திண்டுக்கல் தனபாலன் said...

முயற்சி + பயிற்சி = என்றும் வெற்றியே...

Yarlpavanan said...


"சின்னச் சின்ன அடிகள் வைத்து
சிகரம் ஏறுவோம்
சிந்தை தன்னில் குழப்ப மின்றி
தொடர்ந்து ஏறுவோம்" என்று
வெற்றி நோக்கிய பயணத்திற்கான
சிறந்த வழிகாட்டல்
தொடருங்கள்

சோழ நாட்டில் பௌத்தம் Buddhism In Chola Country said...

நல்ல ஒரு நேர்மறைக் கவிதை. பாராட்டுகள்.

Thulasidharan V Thillaiakathu said...

அருமையான நேர்மறை எண்ணங்கள் ஒலிக்கும் கவிதை! வாழ்த்துகள்!

கவிஞர்.த.ரூபன் said...

வணக்கம்
ஐயா.

வாருங்கள் வந்து அன்புடன் வந்து பாருங்கள் ஐயா
ரூபனின் எழுத்துப்படைப்புக்கள்: வலையுலக ஜம்பவான்கள் இருவருக்கு விருது…-2015:

vimalanperali said...

எடுத்தால் தானே ஓட்டமே/

Post a Comment