Saturday, July 1, 2017

காலச் சூழல்...

நாங்கள்  சிறுவனாய் இருந்தபோது
தீயவைகள் இல்லாமல் இல்லை
இருந்தது

ஆனால் தேடித் தேடி
கண்டுபிடிக்கும்படியாய்
எங்கோ ஒளிந்து கொண்டு
கொஞ்சம் பயந்தபடியும்...

நாங்கள்  வாலிபனான போதும்
அவைகள் இல்லாமல் இல்லை
இருந்தது

ஆனால் தேடினால்
கிடைக்கும்படியாய்
கொஞ்சம் தூரத்தில் எட்டாதபடி
தன்னை மறைத்தபடியும்...

இன்றைய நிலையில்
அவைகள் இல்லாமல் இல்லை
இருக்கிறது

ஆனால் விலகிப்போனாலும்
விடாது தொடர்கிறபடி
கொஞ்சம் அசந்தாலும் வீழ்த்திவிடுகிறபடி
திமிராய் தான் தோன்றித்தனமாய்..

இப்போது நல்லவைகளும்
இல்லாமல் இல்லை
இருக்கிறது

ஆனால்முன்பு தீயவைகள்
இருந்ததுபோல்
தன்னை மறைத்தபடியும்
நிறையப் பயந்தபடியும்...



11 comments:

ஸ்ரீராம். said...

அருமை. நல்லவைகளும் தீயவைகளும் கண்ணில் படுவது அவரவர் வாழ்க்கை முறையினால். சூழ்ந்திருக்கும் நட்பால். வளர்ப்பால்.

தம +1

Unknown said...

இந்த தலைக்கீழ் மாற்றம்தான் ,இன்றைய தலைமுறையை தலைக்கீழாய் மாற்றிக் கொண்டிருக்கிறதே :)

Yaathoramani.blogspot.com said...

ஸ்ரீராம். //

வாழ்க்கை முறையினாலா
அல்லது சமூக மாற்றத்தினாலா ?

முன்பு சாராயம் விற்றது கிராமத்தில்
எங்கோ சுடுகாடு போல்
அவசியமானவர்கள் மட்டும்
போகும்படியாய் ...

இன்று நான் விரும்பினாலும்
விரும்பாவிட்டாலும்
என் வீட்டருகில்...

ஸ்ரீராம். said...

என் வீட்டருகிலும் இரண்டு பக்கம் சாராயக்கடை இருக்கிறது. அது என்னை பாதிப்பதில்லை! நான் மாறவில்லை!

Yaathoramani.blogspot.com said...

ஸ்ரீராம். //
அதைத்தான் கடைசிப் பாராவில்
சொல்ல முயன்றிருக்கிறேன்

KILLERGEE Devakottai said...

காலம் மாறும் பொழுது காட்சியும் மாறுகிறது

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

தற்போதைய நிலையைப் படம் பிடித்துக் காட்டிய விதம் நன்று.

வை.கோபாலகிருஷ்ணன் said...

காலச்சூழல் .... அன்றும் இன்றும் .... தங்கள் பாணியில் அழகாகச் சொல்லி அசத்தியுள்ளீர்கள்.

பாராட்டுகள்.

G.M Balasubramaniam said...

இவற்றை அணுகும் முறையில்தான் இருக்கிறது

Thulasidharan V Thillaiakathu said...

மிக மிக அருமையாகச் சொல்லியிருக்கிறீர்கள் சகோ! வாழ்க்கை முறைகளும், கண்ணோட்டங்களும் மாறுவதால்தான். நம் எண்ணங்கள் எப்போதும் நிலைத்திருந்தால் எத்தனை கெட்டவை நம்மைச் சுற்றியிருந்தாலும் அது நம்மை பாதிக்காது. பெற்றோரின் வளர்ப்பிலும் உள்ளது. பெற்றோரே வாழ்க்கையின் கண்ணோட்டங்களை மாற்றிக் கொண்டுவிட்டால் சந்ததியினரும் அப்படித்தானே ஆவர்?!! காலச் சூழல் மாறினாலும் நம் வாழ்க்கை முறையே மாறினாலும் நம்
நல் எண்ணங்கள் வலுவாக இருந்தால் பாதை தெளிவாக இருந்தால் எந்தப் பாதிப்பும் இருக்காது என்று தோன்றுகிறது...

கீதா

கோமதி அரசு said...

வாழ்க்கை அவர் அவர் கையில்.

Post a Comment