Thursday, February 13, 2020

அணிலாய்...

பதினைந்து வருடங்களுக்கு முன்புஒரு மாலைப் பொழுதில் மதுரை ரயில்வே ஸ்டேசனின் முகப்பு வாசலில் நான் நின்றிருக்கும் போது சிறிது தூரத்தில்  ஏதோ சலசலப்பு ஏற்பட்டாற் போலிருத்தது. மதுரையில் இதுபோன்ற சலசலப்புகள் சகஜம் என்றாலும் பத்து பதினைந்து ஆட்டோக்காரர்களுக்கு இடையில் யாரோ ஒருவர் சப்தம் போட்டுக் கொண்டிருந்து தெரிய  நிச்சயமாக இதுஆட்டோக்காரர்களின் சம்பந்தப்பட்ட ஏதோ ஒரு அசம்பாவிதமாகத்தான் இருக்கும்.யாரோ ஒரு நியாயஸ்தன் இவர்களுக்கிடையில் சிக்கி இருப்பான் என நினைத்தபடியே நெருங்கிப் போனேன்.     அந்த சமயம் வெளிநாட்டினர் இருவரை ஏற்றியபடி ஆட்டோ ஒன்று கிளம்பத் தயாராகிக் கொண்டிருந்து.    என்னவென்று விசாரித்தபோது வெளிநாட்டினர் இருவர் ஒரு ஆட்டோக்காரரிடம் காலேஜ் ஹவுஸ் போகவேண்டும் வண்டி வாடகை எவ்வளவு ஆகும் எனக் கேட்டிருக்கிறார்.அவர்கள் கேட்ட இடத்திலிருந்து காலேஜ் ஹவுஸ் போக தெற்குத் திசையில் ஐம்பதடி  போய் பின் கிழக்கில் ஐம்பதடிப் போனால் போதும்.இதற்கு முப்பது ரூபாய் தரலாம் இதற்கு கொஞ்சமும் கூச்சப்படாமல் அந்த ஆட்டோக்காரர் ரூபாய் முன்னூறு ஆகும் என்றிருக்கிறார்.இதைப் பார்த்துக் கொண்டிருந்த நம் போன்ற நியாயஸ்தர் இது என்ன கொள்ளையாய் இருக்கிறது நூறு அடிக்கு முன்னூறு ரூபாயா என நியாயம் கேட்டிருக்கிறார் உடனே அங்கிருந்த ஆட்டோக்காரர்கள் அவரை வலுக்கட்டாயமாக அவ்விடத்தை விட்டு அகற்ற முற்பட்டிருக்கிறார்கள்.அதனால் ஏற்பட்ட சலசலப்பே அது .பின் அவர்கள் பேரம் பேசி முடிவாக இருநூற்றம்பது என முடிவாகி அவர்கள் ஆட்டோவில் ஏற ஆட்டோக்காரர் ஆட்டோவை வடக்குத் திசையில் (போக வேண்டிய திசைக்கு  நேர் எதிராக )திருப்பி ஓட்ட ஆரம்பித்தார்..சரி ஆட்டோக்காரர்  இருநூற்றம்பது சரிதான் என வெளிநாட்டினர் உணரும்படியாகச் செய்யவே வேண்டுமென்றே வெட்டி ரவுண்ட் அடித்து இறக்கிவிட முயற்சிக்கிறார் எனப் புரிந்து கொண்டேன்..                                 வெகு நாட்களுக்கு இந்த சம்பவம் எனக்குப் பெரும் உறுத்தலாகவே இருந்தது. காரணம் உண்மையில் .நான் சமூக நல நோக்கமுடையவனாக இருந்திருந்தால் தைரியமாகப் பக்கம்தான் உள்ளது நடந்தே போய்விடலாம் என அவர்களுக்குச் சொல்லி இருக்கலாம். அழைத்தும் போய்  ஒருவர் அனாவசிய்மாக ஏமாறுவதைத் தவிர்த்திருக்கலாம் என்ற எண்ணமே.                                         ஆனாலும் இதுபோல் அப்பட்டமாக ஏமாற்றப்படுவதைத் தடுக்க ஏதும் செய்ய முடியாதா என்கிற எண்ணமும் ஏக்கமும் எப்போதும் என்னைத் தொடர்ந்து கொண்டுதான் இருந்தது.                                        இந்தச் சூழலில்தான் இதற்குப் பின் சில வருடங்களில் நண்பர்கள் மூலம் கூகுள் மேப் வந்த விவரம் குறித்தும் அது நம் வசம் மொபைலில் இருந்தால் உலகின்எந்த இடமாயினும் யாரிடமும் விலாசம் கேட்டு அலைய வேண்டியதும் இல்லை ஏமாற வேண்டியதும் இல்லை என அறிந்து மிகவும் புளங்காகிதம் அடைந்து போனேன்.            இருந்தாலும் சிலர் கூகுள் மேப் நாம் ஓரிடம் கேட்டால் வேறு இடம் காட்டுகிறது...சரியான வழி காட்டாது வேறு வழி காட்டுகிறது எனச்சிலர் சொல்ல நானும் இது போன்று சில சமயம் அவதிப்பட அதற்கு என்ன காரணமாயிருக்கும் என்ன செய்யலாம் என விசாரித்தும் நானேயோசித்தும் ஒரு முடிவுக்கு வந்தேன்..                                          குகூள் நிறுவனம் முதல்படியாக இந்தச் சேவையைத் துவங்குகையில் நகரின் முக்கியமான இடம் தூரம் முதலான முக்கிய தகவல்களை தங்கள் நிறுவனம் மூலமாகவே செய்தது என்றும் இன்னும் விரிவாகச் செய்ய பொதுமக்களையும் கைடுகளாக இணைத்துச் செய்கையில் அவர்களது பொறுப்பின்மையாலும் தொழிற்நுட்ப அறிவு போதாமையாலும் சில பல தவறுகள் நேர்ந்துள்ளது எனப் புரிந்து கொண்டேன்.                                                   மழை பெய்யவில்லையே என வானத்தைப் பார்த்து அழுது கொண்டிருப்பதற்குப் பதில் ஏர்ப் பூட்டி உழுது கொண்டிரு.மழை வந்தால் உழவு இன்னும்  சுலபமாகும் என்பதாக ஒரு பழமொழி கிராமப் பகுதிகளில் புழக்கத்தில் உண்டு....அந்த வகையில் நாமும் குறைமட்டும் சொல்லிக்கொண்டிராமல் சின்னச் சின்ன தவறுதல்களை திருத்த முயன்றால் என்ன அது குறிக்காத இடங்களைக் குறித்தால் என்ன என யோசித்து கூகுள் கைடாக கடந்த சில வருடங்களாக என்னை இணைத்துக் கொண்டு செயல்பட்டு வருகிறேன்.                                                       கடந்த நான்குஆண்டுகளில்குறைந்த பட்சம் ஒன்றரை ஆண்டுகள்வெளிநாட்டில் இருக்க நேர்ந்த வாய்ப்பை தவறவிடாமல் போகும் பகுதியை எல்லாம் படத்துடன் பதிய ஆரம்பித்தேன்.ஊரில்இருக்கும் போதும் இது போல பதியப்படாத பகுதிகளை படத்துடன் தொடர்ந்து பதிவு செய்தும் தவறுகளைத் திருத்தம் செய்தும் வருகிறேன்.இன்றைய நிலையில் முன்னூறு இடங்கள் குறித்த பதிவையும் அது தொடர்பாக இரண்டாயிரத்து எண்ணூறு புகைப்படங்களையும் பதிவு செய்துள்ளேன்.இதனை இன்றுவரை முப்பத்து நான்கு இலட்சத்திற்கும் மேலாக பார்வையிட்டிருக்கிறார்கள். என்னுடைய இந்த தன்னலமற்ற சேவையைக் கௌரவிக்கும் விதமாக கூகிளும் எனக்கு எட்டு ஸ்டார் (அதிகப்பட்சம் என்பது           பத்து )அந்தஸ்துக் கொடுத்துக் கௌரவித்திருக்கிறது என்பதைப் பதிவு செய்வதில் பெருமிதம் கொள்கிறேன்.இராமர் பாலம் கட்ட அணில் செய்த தொண்டு  கணக்கிட்டால் கணக்கிலேயே வராது என்றாலும் அணில் கொண்ட மகிழ்வினை அளக்கவே முடியாது என்பதைப் போல என் பதிவுகள் எந்த விதத்திலும் பெரிய விசயமில்லை என்றாலும் என்னைத் தெரிந்த நண்பர்கள் என் பதிவின் துணையோடு அவ்விடத்தைச் சரியாகப் போய்ச்சேர்ந்தேன் எனச் சொல்லும் போது அடைகிற மகிழ்வுக்கு விலையே இல்லை...இதைப் போல யாரும் செய்யலாம்..இது ஒருவகையில் நமக்கு நாமே உதவிக்கொள்வதைப் போலத்தான் இல்லையா.

7 comments:

கோமதி அரசு said...

//.இன்றைய நிலையில் முன்னூறு இடங்கள் குறித்த பதிவையும் அது தொடர்பாக இரண்டாயிரத்து எண்ணூறு புகைப்படங்களையும் பதிவு செய்துள்ளேன்.இதனை இன்றுவரை முப்பத்து நான்கு இலட்சத்திற்கும் மேலாக பார்வையிட்டிருக்கிறார்கள்.//

நன்றி.
வாழ்த்துக்கள்.
என் கணவருக்கு மதுரையில் நிறைய இடம் தெரியாது என்பதால் கூகுள் மேப்பின் உதவியை நடுவது உண்டு.

balu said...

சிறப்பான பதிவுகள்.

வெங்கட் நாகராஜ் said...

சிறப்பான விஷயம் ரமணி ஜி. தொடரட்டும் உங்கள் சேவை.

தில்லியில் இப்படி சில ஆட்டோக்காரர்களிடம் மாட்டிக் கொண்ட தமிழரை அவர்களிடமிருந்து காப்பாற்றி அழைத்து வர முற்பட்டபோது பிரச்சனை வந்தது! :) ஆனாலும் பொதுமக்கள் ஒத்துழைக்க அங்கிருந்து தப்பித்தோம்.

திண்டுக்கல் தனபாலன் said...

உங்களின் சேவை மிகவும் பயனுள்ளது... வாழ்த்துகள் ஐயா...

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

அனுபவங்கள் பகிரப்படும்போது பயன்தான்.

G.M Balasubramaniam said...

சென்னையில் பக்கத்தில் இருக்கும் இடத்துக்கு ஊர் சுற்றிப் போவார்கள்

ராமலக்ஷ்மி said...

வாழ்த்துகள். நல்ல சேவை.

Post a Comment