Saturday, March 5, 2011

யாதோ

கவிஞனாக அறிமுகமாயிருந்த 
என் நண்பனிடம்தான்
முதன் முதலாக
என் படைப்புகளைக் கொடுத்தேன்
பாதிபடிக்கும் வரை சமநிலையில் இருந்த 
அவன் முகம்திடீரெனக்  கறுத்துப் போனது

"கவிதைக்குரிய எந்தக் கூறும் இ ல்லை
இதை சரி செய்வதற்கான வாய்ப்பும் இல்லை
எந்தத் தைரியத்தில் என்னிடம் வந்தாய்" என்றான்
"என்ன செய்யலாம்" என பயந்த படி கேட்டேன்
"வேண்டுமானால் கட்டுரையாளரை சந்தித்துப் பார்
அவர்கள் தான் எதையும் ஒப்புக் கொள்வார்கள்"
 என்றான்

கட்டுரையாளரைச் சந்தித்தபோது அவர்
புத்தகத்தில் புதைந்து கிடந்தார்
படைப்பினில் பாதி கடக்கும்போதே
அவர் உடல் குலுங்கத் துவங்கியது
சப்தம் போட்டுச் சிரித்தபடி சொன்னார்
"கட்டுரைக்குரிய எந்த லாஜிக்கும் இல்லை
உனக்கு போதிய பயிற்சியும் இல்லை" 
என்றார்

"இதை என்ன செய்வது" என்றேன்
"வேண்டுமென்றால் கதாசிரியரிடம் போ 
அவர்கள் தான் எதையும் 
சரி பண்ணத் தெரிந்தவர்கள்" என்றார்

எழுதியபடியே இருந்த கதாசிரியர்
என்னைப் பார்ப்பதற்கே அரை மணி ஆனது
நம்பிக்கை இழந்த நிலையில்
என் படைப்புகளை அவரிடம் நீட்டினேன்
"அங்கே வைத்து விட்டுப் போ நாளை வா" 
என்றார்

அரசமரத்தடி பிள்ளையாரை
மௌனமாய் வேண்டியபடி
மறுநாள் அவரைப்  பயத்துடன் பார்த்தேன்
அவர் மேசையில் என் படைப்பு இல்லை
தூரமாய் கூடைக்கருகில்
குப்பை போல் இருந்தது

"கதைக்கு அவசியம் கரு வேண்டும்
உணரும்படியாகவும் ரசிக்கும்படியாகவும் 
நிகழ்வுகள் வேண்டும்
கொஞ்சம் கொஞ்சமாய் வளர்பிறை போல்............"
இன்னும் என்னென்னவோ சொன்னார்
எனக்கு எதுவுமே விளங்கவில்லை

முடிவாக

"இதனை இப்படியே கட்டி மூலையில் வை
ஓராண்டு தொடர்ந்து படி
பின்னர் முயற்சி செய்து பார்" என்றார்
"நல்லது" எனச் சொல்லி நொந்தபடி
நடுவீதிக்கு வந்தேன்

"கைகளில் என்ன பார்சல்"
இப்போது என்ன செய்து கொண்டிருக்கிறாய்"
 என்றான்எதிரில் வந்த
பத்தாம் வகுப்பில்தமிழில்
 முப்பது மதிப்பெண்களே எடுத்ததால் 
படிப்பிற்கே முழுக்குப் போட்ட
என் பால்ய நண்பன்.
"எழுத்தில் ஆர்வம் 
கொஞ்சம் எழுதியிருக்கிறேன்
இது எதில் சேர்த்தி என தெரியாமல் 
அலைகிறேன்" என்றேன் பயந்தபடி

"பிள்ளையை பெற்று விட்டு
பேருக்காக அலைகிறாயா" என்றவன்
ஆவலாய் அதனைப் பிடுங்கி
அவசரம் அவசரமாய் படிக்கத் துவங்கினான்
ஒவவொரு பக்கம் முடிய முடிய
"பேஷ் பேஷ்" என்றான்
அவன் முகம் ப்ரகாசமாகிக் கொண்டே போனது
எனக்குள் பயம் அதிகமாகிக் கொண்டே போனது

"நான் கிளம்பலாம் என நினைக்கிறேன்" 
என்றேன் மெதுவாக
கொஞ்சம் பொறு இன்னும் இரண்டு பக்கம் தான்"
 என்றான்
முதன் முதலாக
எழுத்தின் மீது நான் கொண்ட காதலுக்காகவும்
இதை எழுதியதற்காகவும் மனம் நொந்து அழுதேன்
திடுமென என் தோளை தட்டியபடி
"பிரமாதம்" என்றான்

தமிழில் தோற்றவனா என் எழுத்தை
ஏற்க வேண்டும்
எல்லாம் தலை விதி என்று நொந்து
"எப்படி" என்றேன்

"உன்னை பாதித்தவைகளை எழுதியிருக்கிறாய்
படிப்பவரை பாதிக்கும்படியும் எழுதியிருக்கிறாய்
குறிப்பாக புரியும்படியும் எழுதியிருக்கிறாய்
நோகாமல் தேன் கிடைப்பது சுகம் இல்லையா" 
என்றான்
அவனை அதிசயமாய் பார்த்து 
அச்சத்துடன் கேட்டேன்
"இது எதில் சேர்த்தி"

அவன் அமர்க்களமாய் ஆரம்பித்தான்
"சங்க காலங்களில் எழுதியவர் பெயர் தெரியாத
எத்தனையோ நல்ல கவிகள் கிடைத்தன
அவைகளை புறக்கணித்தா விட்டோம்
எழுதியவரை  " யாரோ "
எனச் சொல்லி சேர்த்துக் கொள்ளவில்லையா"
 என்றான்
நான் அமைதியாய் இருந்தேன்

எழுதியவர் பெயர் தெரியாதபோது
பெயரை" யாரோ "எனக் கொள்ளுதல் போல
எழுதியது எதனுள்ளும் அடங்காத போது
அதன் பெயர்" யாதோ" என்றான்

போதி மரத்து புத்தன் போல்
என் முன் அவன் பிரசன்னமானான்
எனது சிந்தனைகளை
இப்போதெல்லாம்
ஒரு வகைக்குள்ளோ
ஒரு வரையரைக்குள்ளோ
சிறை பிடித்துக் கொள்ளுவதேயில்லை
இப்போதெல்லாம்நான்
கதை கட்டுரை கவிதைப் பக்கம்
தலை வைத்துப் படுப்பதே இல்லை
நான் எழுதுவதெல்லாம்" யாதோ" தான்

21 comments:

வசந்தா நடேசன் said...

அசத்தல் சார், வாழ்த்துக்கள்.. (படித்து பார்த்து //முப்பது மதிப்பெண்களே//) எடுத்தவன் நான் இல்லை.. நான் முப்பத்து அஞ்சு..

எல் கே said...

சார் நல்லாதான் இருக்கு உங்கள் நடை. அடுத்தவர் அங்கீகாரம் எதற்கு ?

வை.கோபாலகிருஷ்ணன் said...

யாதோ பற்றிய விளக்கம் வெகு அருமையாக உள்ள்து. இதைப்பற்றி எனக்கும் நிறைய அனுபவங்கள் உள்ளன. பிறகு நேரம் கிடைக்கும்போது எழுதுகிறேன். பத்திரிகைத் துறையினர் சிலருடன் நான் படாத பாடு பட்டுள்ளேன். அன்று என் படைப்புக்களை புறக்கணித்த அவர்கள், இப்போது தொலைபேசியில் என்னை அழைத்து சிறுகதைகள் அனுப்புங்கள் என்று கேட்டுக் கொள்கிறார்கள். யாருமே எளிதில் ஆரம்பத்தில் அங்கீகாரம் தர மாட்டார்கள்.

உங்களின் இந்தப் பதிவும், இந்த என் பின்னூட்டமும் மற்றவர்களுக்கு ஒரு தன்னம்பிக்கையை அளிக்கட்டும், என்றே இதை எழுதியுள்ளேன்.

வாழ்த்துக்கள்.

raji said...

எழுதுவது எதனுள் வரும் என்பதை விட எழுதிய விதம்,
கற்பனை,எழுத்தின் கரு, எழுத்தின் தாக்கம் இவைதான்
நல்ல கலைஞனுக்கு மிக முக்கியம்.

வடிவத்திற்காக மற்றதை மாற்றியமைத்தல்
எழுத்தின் சக்தியை பாதித்துவிடும் என்பது எனது கருத்து.

கலைஞனுக்கும் சிறை வேண்டாம்,கலைக்கும் சிறை வேண்டாமே

'யாதோ' விற்கு வரையறை வேண்டாமே.ரசிகர்களின் வருகை போதும்

சிவரதி said...

யாதோ..எனத்தொடங்கி
யதார்த்த நிலையிதனை
யாவருக்கும் புரியும் வகையில்
வரிகளிலே வடித்தவிதம்
ரசிகர் வரவை மட்டுமல்ல
எழுத்தளர்களையும் எழுச்சி பெறவைக்கிறது

goma said...

என்னைப் பொருத்தவரை நான் எழுதும் எழுத்துக்கள் தமிழ் வாசிக்கத்தெரிந்த 5ம் வகுப்பு மாணவிகூட சிரமம் இல்லாமல் என் கருத்தைப் புரிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தோடுதான் எழுதுகிறேன்.

இராஜராஜேஸ்வரி said...

படிப்பவரை பாதிக்கும்படியும் எழுதியிருக்கிறாய்//
பலரையும் சிந்திக்கத்தூண்டும் வரிகள்.

G.M Balasubramaniam said...

எழுதியது யாதோ எனும்போது எல்லாமுமாகலாம் என்ற கருத்தும் தொக்கி நிற்கிறது. எண்ணங்களை எழுத்து மூலம் கடத்துபவன் எழுத்தாளன்.எல்லோருக்கும் புரியும்படி எழுதினால் சிறந்த எழுத்தாளன் படிப்பவனிடம் சென்றடைந்தால் அங்கீகாரம் தானே வரும். எழுதுபவனுக்கு எழுதுவதில் ஒரு ஆத்ம திருப்தி கிடைக்குமானால் வேறென்ன வேண்டும்.?எழுதுவது தொழிலாக மாறும்போதுதான் பிரச்சனையே. என்னுடைய ஆரம்ப பதிவுகள் எல்லாமே பல்லாண்டுகளுக்கு முன் எழுதியது. இப்போதுதானே வலைப்பூ வசதி. உங்கள் எழுத்துக்கள் ட்வுன் டு த எர்த். உங்கள் எழுத்துக்களில் உங்கள் மனம் தெரிகிறது. ஆதங்கம் தெரிகிறது அக்கரை தெரிகிறது.எளிமையான அழகு தெரிகிறது.தொடர்ந்து ஏழுதுங்கள் யாதோவாக அல்ல, எல்லாமுமாக. வாழ்த்துக்கள்

G.M Balasubramaniam said...

VENKAT.S.எனும் பெயரிலும் நீங்கள் அறியப்படுகிறீர்களா.?என் வலைத்தொடர்பாளர்கள் புகைபடம் காணும்போது ஏற்பட்ட ஐயம் இது. இரண்டு வலைப்பூக்களில் இரண்டு பெயர்களில் எழுதுகிறீர்களா.?

RVS said...

ஏதோ எழுதாமல் யாதோ எழுதியது அருமை... ;-)

ஹ ர ணி said...

ரமணி சார்...

உங்களுக்கு எழுத்து வசப்பட்டிருக்கிறது. அது உரிய இலக்கைச் சென்றே தீரும். அடுத்தவரை நாம் விமர்சனம் செய்வது எளிது. நம்மைப்பற்றி விமர்சனங்களை மறைத்துக்கொண்டுதான் நாம் செய்கிறாம் அதை. ஒரு காட்சியைப் பார்க்கிறோம். மனதைப் பறிகொடுக்கிறோம். ஒரு சம்பவம் நிகழ்கிறது நம்மைப் பாதிக்கிறது அழுகிறோம். ஒரு குழந்தையின் எச்சில் ஒழுகும் தோற்றம் நமக்கு சுவையாக இருக்கிறது. நம்முடைய ஆசையை, ஏக்கத்தை, இயலாமையை, கோபத்தை அடுத்தவரிடம் யாரும் சொல்லித்தராமலே அடுக்காக வெளிப்படுத்துகிறோம். நமக்கு பாட்டி கதை சொன்ன மரபு உண்டு. நாட்டுப்புற வழக்கில் தாலாட்டுப் பாடலைத் தாயிடமிருந்து கேட்டு வளர்ந்திருக்கிறோம். இதை சுவையாக சொல்லத் தெரிந்தவன் படைப்பாளனாகக் களத்திலே நிற்கிறான். மற்றவர்கள் சொல்கிறார்கள். வெளிப்படுத்துவதில்லை. அவ்வளவுதான் செய்தி. இதற்கு அறிவுரை தேவையில்லை. வாசிப்பு அவசியம். நல்ல சிந்தனை அவசியம். உங்களிடம் அருமையான படைப்பாளுமை இருக்கிறது. மெருகேறும் நாளாகநாளாக. எழுதுங்கள் எதுவேண்டுமானாலும் படிக்கக் காத்திருக்கிறோம். வாழ்த்துக்கள்.

ஆயிஷா said...

சிந்திக்கத்தூண்டும் வரிகள். வாழ்த்துக்கள்.

MANO நாஞ்சில் மனோ said...

//அவன் முகம் ப்ரகாசமாகிக் கொண்டே போனது
எனக்குள் பயம் அதிகமாகிக் கொண்டே போனது//

அசத்தல் குரு சூப்பரா இருக்கு....

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

இதனால் தான் பத்திரிகை பக்கம் நான் தலை வைத்து படுப்பது இல்லை! நாம் நமக்காக எழுதுகிறோம்.. நமது எழுத்தை ரசிப்பவர்களுக்காக எழுதுகிறோம்.அதனான் நமக்கு ஒரு பொறுப்பு கூடுகிறது!'ETHICAL VALUE'இல்லாத பத்திரிகைகளுக்கு எழுதுவதை விட இது எவ்வளவோ மேல்!

ஹேமா said...

அடுத்தவர்களுக்காக எழுத வேண்டாம்.எங்கள் மனப்பாரம் குறைக்க எழுதுவோம்.உணர்வோட புரியும்படி எழுதினால் அடுத்தவர்கள் படிக்கவும் உணரவும் சில பதிவுகள் படிப்பினையாகவும் இருக்கும் !

Kavinaya said...

//எழுதியவர் பெயர் தெரியாதபோது
பெயரை யாரோ எனக் கொள்ளுதல் போல
எழுதியது எதனுள்ளும் அடங்காத போது
அதன் பெயர் யாதோ என்றான்//

அருமை :)

//எனது சிந்தனைகளை
இப்போதெல்லாம்
ஒரு வகைக்குள்ளோ
ஒரு வரையரைக்குள்ளோ
சிறை பிடித்துக் கொள்ளுவதேயில்லை//

சிறைப்படாத சிந்தனையே மிகச் சிறந்தது :)

வெங்கட் நாகராஜ் said...

யாதோ! என்று ஆரம்பித்து அற்புதமான ஒரு கருத்தைச் சொல்லி இருக்கீங்க சார்.

vanathy said...

//உன்னை பாதித்தவைகளை எழுதியிருக்கிறாய்
படிப்பவரை பாதிக்கும்படியும் எழுதியிருக்கிறாய்
குறிப்பாக புரியும்படியும் எழுதியிருக்கிறாய்
நோகாமல் தேன் கிடைப்பது சுகம் இல்லையா" என்றான்
அவனை அதிசயமாய் பார்த்து அச்சத்துடன் கேட்டேன்
"இது எதில் சேர்த்தி"//

சூப்பர் போங்கள். தமிழ் பண்டிதர்கள் ஏதாச்சும் குறை கண்டு பிடிச்சுட்டே இருப்பார்கள். நமக்கு தோணுவதை எழுதிட்டே போக வேண்டியது தான்.

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

ஹேமா said...

அடுத்தவர்களுக்காக எழுத வேண்டாம்.எங்கள் மனப்பாரம் குறைக்க எழுதுவோம்.உணர்வோட புரியும்படி எழுதினால் அடுத்தவர்கள் படிக்கவும் உணரவும் சில பதிவுகள் படிப்பினையாகவும் இருக்கும் !

நானும் வழிமொழிகின்றேன்.

S.Venkatachalapathy said...

புதிய விஷயங்கள் மேதாவிகளுக்குப் புரிவதில்லை. யதார்தத்தின் சுவையை உணர அறிந்தவைகளிலிருந்து விடுதலை பெறவேண்டும் என்னும் மிகப் பெரிய விஷயத்தைக் கவிதையின் வரிகள் சுலபமாக விளக்கி விடுகின்றன.
"நோகாமல் தேன் கிடைப்பது சுகம் இல்லையா ".
நல்ல ஒரு சொல்லாட்சி..

இன்னும் கொஞ்ச நாட்களில் யாதோவிற்கு இலக்கணம் கண்டு பிடித்தால் ஆச்சரியப்படுவதற்கில்லை.

Anonymous said...

ரமணி சார் உங்கள் 'யாதோ' வைப் படித்தால் யாதொரு குழப்பமும் வராது போல் இருக்கிறதே.

ஐயோ கொள்ளை அழகு , அற்புதம் .

Post a Comment