Friday, July 1, 2011

தன் முனைப்பு

சில வருடங்களுக்கு முன்பு எங்களூரில் மேற்கு ஊரணியும் மற்ற ஊரணிகளைப் போல
சாக்கடை ஊரணியாகத் தான் இருந்தது

ஒரு மழைமாத முடிவில் ஊரணியின் கிழக்குக் கரையில்ஒரு வேம்பும் அரசும் சேர்ந்து வளர
ஊரார் உற்சாகமடைந்து போயினர்

உடன் ஊர் கூடி முடிவெடுத்து கழிவுகளைக் கொட்டுதலை நிறுத்தி கால் நடைகள் இறங்குதலை தடுத்து
நாள் நட்சத்திரம் பார்த்துஒரு பிள்ளையாரையும் பிரதிஷ்டை செய்து வைத்தனர்

அழுக்கடைந்து கிடந்த குப்பைஊரணி "அரச மரத்து ஊரணி" என பேர் பெற்றுப் போனது. சீண்டுவாரின்றிக் கிடந்த நீர்
தீர்த்தமாகிப் போனது. குப்பைமேட்டுக் குளக்கரை கோவிலாகிப் போக ,ஊருக்கு அக்குளம் புஷ்கரணி ஆகிப் போனது

சில காலம் எல்லாம் நன்றாகத் தான் போனது

வெகு நாட்கள் கழித்து அவ்வூர் வந்த சூறைக் காற்று
புதிய சூழல் கண்டுபொருமிப் போயிற்று

"நீ வரும் முன்பு இக்குளத்தி பெயர் என்ன தெரியுமா குப்பைக் குளம்
உன்னால் அது இன்று புனிதக் குளம் ஆகிப் போனது உனக்கது தெரியுமா " என
அரச மரத்தை அசைத்துப் பார்த்தது

"அப்படியா" எனஅரசு அதிசயித்துக் கேட்க சூறை காற்று
 ராமாயணக் கூனியானது

"அதை கூட பொறுத்துக்கொள்ளலாம் பெயரில் கூடவா உன்னைப் புறக்கணிக்க வேண்டும்
ஊரணிக்கரை அரசமரம் என்பது எப்படி?அரசமரத்து ஊரணி என்பது எப்படி?
நீயே யோசித்து கொள்" எனஒரு விஷ விதையை ஊன்றிப் போனது
விஷ வித்தும் ஒரே நாளில் விஷ விருட்ஷமாக வளர்ந்தும் போனது

" நான் வருவதற்கு முன்பு உன் பெயர் குப்பை ஊரணியாமே" எனச் சொல்லிச் சிரித்தது அரசு
மர்ம ஸ்தானத்தில் விழுந்த அடிபோல கலங்கிப் போனது ஊரணி

"நீ வந்த விதம் ஊருக்குத் தெரியாது எனக்குத் தெரியும்
காக்கை எச்சத்தில்தானே நீ இங்கு கருத்தரித்தாய்
என் குப்பை நீரால் தானே உன் உயிர் வளர்த்தாய் " என்றது

" நானா ?ஊரே வலம் வந்து வணங்கும் நானா?உன் நாற்ற நீர் குடித்தா ?
என் புகழ் பொறுக்காது பொருமலில் பேசுகிறாய் நீ .உன் நாற்ற நீர் எனக்குத் தேவையில்லை.
எனக்கு ஆண்டவன் கொடுக்கும் மழை நீர் போதும் "எனச் சொல்லி
இனி அக்குளத்து நீரை தொடவேண்டாம் தன் ஆணிவேர்களுக்கு உத்தரவிட்டது அரசு

தானின்று அவளுக்கு ஏது வாழ்வென்றுஅகங்காரம் கொண்ட குளமும்
கிழக்கே செல்லும் ஊற்றுகளை திட்டமாய் அடைத்துவைத்தது

ஒருவர் திறனை மற்றொருவர் ஏற்றுக்கொள்ளும் பக்குவம் இருந்தால் ஒரு நொடியில்
சாம்பலாகிப் போகும் பிரச்சனை,பக்குவமின்மையால் தீயாய் பற்றிக் கொண்டது
நீயா நான யுத்தம் நீண்டு கொண்டே போனது

இவர்களைக் கடந்து போன காலப் பறவைகள் இவைகளின்  முட்டாள் வீம்பு கண்டு கலங்கிப் போயின

நீரின்றி வேம்பும் அரசும் கருகத் துவங்க ஊரார் முகமும் சுருங்கத் துவங்க்கியது

"நீர் இருந்தும் வாடுகிறது எனச் சொன்னால் ஏதோ தெய்வ குற்றம்" இருக்கும் என
ஊரார் எண்ணத் துவங்கினர்.உள்ளூர் கோடாங்கியும்  அவர்களை அனுசரித்தே பாடி வைத்தான்

மீண்டும் நாள் நட்சத்திரம் பார்த்து பிள்ளையரை பெயர்த்தெடுத்து வேறு இடத்தில்
பிரதிஷ்டை  செய்து மகிழ்ந்தனர் கிராமத்தினர்

பட்டுப் போன வேம்பும் அரசும் வெட்டப் பட்டு விறகாகிப் போக
மெல்ல மெல்ல குப்பைகளையும் கூளங்களையும்  ஊர் மக்கள் கொட்டத் துவங்க மேற்கு ஊரணியும்
மற்ற ஊரணியை போல மீண்டும்  குப்பை ஊரணி ஆகிப் போனது

30 comments:

தமிழ் உதயம் said...

ஊரணிகளை குப்பையாக்கியதை தவிர வேறு எதை உருப்படியாக செய்தார்கள் மனிதர்கள்.

இராஜராஜேஸ்வரி said...

ஒருவர் திறனை மற்றொருவர் ஏற்றுக்கொள்ளும் பக்குவம் இருந்தால் ஒரு நொடியில்
சாம்பலாகிப் போகும் பிரச்சனை,பக்குவமின்மையால் தீயாய் பற்றிக் கொண்டது//

பக்குவமாய் பகிர்ந்த வாழ்வியல் தத்துவத்திற்குப் பாராட்டுக்கள். வாழ்த்துக்கள்.

சக்தி கல்வி மையம் said...

வாழ்த்துக்கள்..

A.R.ராஜகோபாலன் said...

//ஒருவர் திறனை மற்றொருவர் ஏற்றுக்கொள்ளும் பக்குவம் இருந்தால் ஒரு நொடியில்
சாம்பலாகிப் போகும் பிரச்சனை,பக்குவமின்மையால் தீயாய் பற்றிக் கொண்டது//

நிதர்சனமான வார்த்தைகளின் வழியே
போட்டி பொறாமையின் வகையை
வீண் வீம்பின் வாதத்தை
தங்களுக்கே உரிய சொல்லாட்சியில்
கம்பீரமாய்
கவிதையாய்
கருத்துக்களை சொன்ன விதம்
அபாரம் ரமணி சார்.

குணசேகரன்... said...

மாற்றம் தேவை..இல்லையேல் இயற்கை நமக்கு எதுவும் கொடுக்காது

MANO நாஞ்சில் மனோ said...

அட்டகாசமா சொல்லிட்டீங்க குரு....!!

MANO நாஞ்சில் மனோ said...

இயற்கையை செயற்கை ஆக்கி நாசப்படுத்துவது மனிதன் மட்டுமே....!!!

சாகம்பரி said...

இதெல்லாம் காற்றுக்கு புரியுமா? மரத்திற்கு புரியுமா? ஊரணிக்குத்தான் புரியுமா? நாம் இது மூன்றாகவும் இல்லாமல் இருந்தாலே நல்லது. சிறப்பான சிந்தனைக்கு நன்றி சார்.

Rathnavel Natarajan said...

நல்ல பதிவு.

வை.கோபாலகிருஷ்ணன் said...

ஒருவர் திறனை மற்றொருவர் ஏற்றுக்கொள்ளும் பக்குவம் இல்லாததால் தான் அனைத்துப் பிரச்சனைகளும் ஏற்படுகிறது என்பது உண்மை.

இந்த உண்மையை ஏற்றுக்கொள்ளாத பிடிவாதம் தான் அழிவுக்கும், அசுத்தத்திற்கும் காரணமாகிவிடுகிறது.

அருமையாக சிந்தித்து அழகாக எழுதியுள்ளீர்கள் சார். சபாஷ். நன்றி. பாராட்டுக்கள். வாழ்த்துக்கள்.

எல் கே said...

nalla irukku

கவி அழகன் said...

ஒருவர் திறனை மற்றொருவர் ஏற்றுக்கொள்ளும் பக்குவம் இருந்தால் ஒரு நொடியில்
சாம்பலாகிப் போகும் பிரச்சனை,பக்குவமின்மையால் தீயாய் பற்றிக் கொண்டது
நீயா நான யுத்தம் நீண்டு கொண்டே போனது

நல்ல பாடம் அறிவுக்கண்ணை திருந்திருக்கிரீர்கள்
வாழ்த்துக்கள்

சி.பி.செந்தில்குமார் said...

இவ்வளவு சிம்ம்ப்பிள் & நீட் பிளாக் லே அவுட்டை நான் பார்த்ததே இல்லை செம..

வெங்கட் நாகராஜ் said...

நல்ல பதிவு....

//ஒருவர் திறனை மற்றொருவர் ஏற்றுக்கொள்ளும் பக்குவம் இருந்தால் ஒரு நொடியில் சாம்பலாகிப் போகும் பிரச்சனை// உண்மையான வரிகள்...

மாலதி said...

ஒருவர் திறனை மற்றொருவர் ஏற்றுக்கொள்ளும் பக்குவம் இல்லாததால் தான் அனைத்துப் பிரச்சனைகளும் ஏற்படுகிறது என்பது உண்மை.

ஹேமா said...

நீங்க சொல்லியிருக்கும் விதமே தனிச்சிறப்பு !

Thenammai Lakshmanan said...

உண்மைதான் தீதும் நன்றும் பிறர்தர வாரா..

சாந்தி மாரியப்பன் said...

வீணான போட்டி பொறாமைகளால் விளையும் விபரீதங்களை நல்லா சொல்லியிருக்கீங்க..

vidivelli said...

//பட்டுப் போன வேம்பும் அரசும் வெட்டப் பட்டு விறகாகிப் போக
மெல்ல மெல்ல குப்பைகளையும் கூளங்களையும் ஊர் மக்கள் கொட்டத் துவங்க மேற்கு ஊரணியும்
மற்ற ஊரணியை போல மீண்டும் குப்பை ஊரணி ஆகிப் போனது//

ஆகா கடைசியில் கவிநயத்துடன் எல்லோ முடிச்சிருக்கிறீங்க.......
அத்தனையும் சுப்பர்
அருமையான பதிவு....
வாழ்த்துக்கள்.........


நண்பர்களே நம்ம பக்கம்!!! மல்லாக்க படுத்துகிட்டு யோசிக்க வேண்டிய விஷயம்!!! நீங்களும் யோசித்து பாருங்களேன்

நெல்லி. மூர்த்தி said...

"பட்டுப் போன வேம்பும் அரசும் வெட்டப் பட்டு விறகாகிப் போக மெல்ல மெல்ல குப்பைகளையும் கூளங்களையும் ஊர் மக்கள் கொட்டத் துவங்க மேற்கு ஊரணியும் மற்ற ஊரணியை போல மீண்டும் குப்பை ஊரணி ஆகிப் போனது" -

’தான்’ எனும் அகந்தை தானே இதன் மூல காரணம். சகிப்புத்தன்மை என்ற ஒன்றும், உண்மையை ஒப்புக் கொள்ளும் மனப்பக்குவமும் இல்லையேல்... அழிவு நிச்சயம். இது அரசியல், பொருளாதார, சமூக வாழ்வியலுக்கு சரியாக பொருந்தும். கலக்கல்!

பிரணவன் said...

நாம் வந்த நோக்கத்தை மறந்தால் இப்படித்தான். . .

பட்டுப் போன வேம்பும் அரசும் வெட்டப் பட்டு விறகாகிப் போக மெல்ல மெல்ல குப்பைகளையும் கூளங்களையும் ஊர் மக்கள் கொட்டத் துவங்க மேற்கு ஊரணியும் மற்ற ஊரணியை போல மீண்டும் குப்பை ஊரணி ஆகிப் போனது. . .அருமை sir. . .

சுந்தர்ஜி ப்ரகாஷ் said...

அவரவருக்கு அவரவர் வேலை. சுயபுத்தி இல்லாதவர்கள் படும் பாட்டை மரமும் குளமும் வெளிச்சம் போட்டுக் காட்டியது.

உங்கள் ப்ளாகில் இன்று பின்னூட்டமிட முடிந்தது.

ADHI VENKAT said...

நல்ல பதிவு.

கதம்ப உணர்வுகள் said...

சிறப்பான சிந்தனை...
நான் பெரியவன் என்ற எண்ணம் எங்கு எழுகின்றதோ அப்பவே அங்க பிரச்சனைக்கு வித்து தொடங்கி விட்டதுன்னு அர்த்தம்... ஒற்றுமையாய் திறமைகளை அறிந்து ஒன்றாய் கைக்குலுக்கி இருந்தால் பெருமை.... அதை விட்டு இப்படி செய்தால்??? இப்படி சில வல்லூறுகள் இருக்கத்தான் செய்கிறார்கள் சரியான பெயர் ராமாயண கூனி என்று....

என்ன தான் ஆகப்போகிறதோ முடிவில் என்று படித்தேன்... ஹூம் விறகாகி போனது தான் மிச்சம்... ஒற்றுமையின்மை மறுபடி குப்பையாகி போனது தான் மிச்சமாகி போனது...

மிக அரிய விஷயத்தை கூட எளிய நடையில் அருமையாய் சொல்லி இருக்கீங்க ரமணி சார்... அன்பு வாழ்த்துகள்.

S.Venkatachalapathy said...
This comment has been removed by the author.
S.Venkatachalapathy said...

ஊரணி,காற்று மற்றும் அரசமரத்திற்குள்ளும் மனம் என்று ஒன்று முளைத்துவிட்டால், EGO(தான் என்ற உணர்வு)என்ன பாடு படுத்தவல்லது என்பதற்கு சுவையான கற்பனை.அரசு-வேம்பு இரண்டும் இணைந்து முளைத்தால் அது வழிபாட்டு இடம் ஆகிவிடுவதும், மரங்கள் பட்டுப்போனால் வழிபாட்டு இடம் மாறுவதும், வழிபாட்டு இடமென்றால் மட்டுமே சுத்தம் அனுஷ்டிக்கப்படுதலும் நம் மனங்களின் அறியாமையா?

இந்தக் கதையில் வரும் ஊரணியை முதல் தலைமுறையாகவும் சுற்றுச் சூழலாகவும், அரசு-வேம்பு அடுத்தத் தலைமுறையாகவும், காற்றை நாகரீகமாகவும் எடுத்துக் கொள்வோமானால், நம்முடைய விழிப்புணர்வு எங்கு இருக்க வேண்டும் என்று விளக்க ஒரு அற்புதப் படைப்பு சார்.

Unknown said...

தத்துவத்தை தத்தெடுத்து
விட்டார் இரமணி
சத்துவத்தை கட்டுரையாய்
விட்டார் இரமணி

நன்றி நன்று நன்றி

புலவர் சா இராமாநுசம்

raji said...

நல்லதொரு விதை.பகிர்விற்கு நன்றி

Madhavan Srinivasagopalan said...

படிப்பினை தரும் கதை..

வெட்டிப்பேச்சு said...

//ஒருவர் திறனை மற்றொருவர் ஏற்றுக்கொள்ளும் பக்குவம் இருந்தால் ஒரு நொடியில்
சாம்பலாகிப் போகும் பிரச்சனை//

இதுதான் இப்போதைய தேவை..

எழுத்தும் நடையும் மிக நன்று.

Post a Comment