Wednesday, June 3, 2015

நாமும் கவிமன்னர்கள்தான்...

வானக் கடலில் பறவை ஒன்று
சிறகை விரித்து நீந்தும்-அதைக்
காண மனதில் பொங்கும் மகிழ்வு
கவியாய் மாற ஏங்கும்

மௌன மொழியில் மலரை அணைத்து
நிலவு கதைகள் பேசும்-அந்தக்
காமக் கதைகள் கேட்க நெஞ்சில்
கவிதை புயலாய்ச் சீறும்

பருவ உணர்வில் முதிர்ந்த நாற்று
தலையைத் தாழ்த்தி நாணும்-அதை
அறிந்த எந்த இளமை நெஞ்சும்
புதிய சந்தம் தேடும்

மலையைத் தடவி  மகிழ்ந்த அருவி
மண்ணில் வெட்கி ஓடும்-அந்த
அழகை ரசிக்க  மனதில் கவிகள்
அருவி போலப்  பாயும்

கரையைத் தழுவி முத்தம் ஈந்து
அலைகள் மயங்கித் திரும்பும் -அதன்
நிலையை உணர்ந்தால் கவிதைப பூக்கள்
நெஞ்சில் தானே அரும்பும்

உலகில் காணும் காட்சி யாவும்
கவிதைக் கோலம் தானே -இதை
உணர்ந்து கொண்டால் போதும் நாமும்
கவிதை மன்னர் தானே

10 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

சந்தேகமே இல்லை ஐயா... நீங்கள் கவிமன்னர்...

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

எழுதும் நீங்களும், ரசிக்கும் நாங்களுமே கவிதை மன்னர்கள்தான். நல்ல சிந்தனை. நன்றி.

கரந்தை ஜெயக்குமார் said...

திண்டுக்கல் தனபாலன் அவர்களின் மொழியினையே நானும் வழிமொழிகின்றேன்
நன்றி ஐயா
தம +1

Iniya said...

ஆஹா ஆஹா! அருமையான கவிதை சகோ !
பாடிப் பார்க்க சூப்பராக இருக்கிறது.நன்றி ! தொடர வாழ்த்துக்கள் ....!

G.M Balasubramaniam said...

ஒவ்வொரு வரியையும் அனுபவித்து எழுதி இருக்கிறீர்கள். பின்னூட்டத்தில் வெறுமே அருமை என்று மட்டும் சொல்கிறேன். என்றோ எழுதியதானாலும் எனக்கும் பிடித்தது.வாழ்த்துக்கள்

UmayalGayathri said...

அனுபவித்து நீங்கள் எழுத நாங்க அதை அனுபவித்து ரசித்தோம். கவிமன்னர் நீங்கள் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை ஐயா...

UmayalGayathri said...

தம +1

Anonymous said...

காணும் காட்சி யாவும்
கவிதைக் கோலம் தானே -இதை
உணர்ந்து கொண்டால் போதும் நாமும்
கவிதை மன்னர் தானே..

Thulasidharan V Thillaiakathu said...

என்ன ஒரு கவிதை நண்பரே! க்ளாஸ்!!!!

Thulasidharan V Thillaiakathu said...

கவிதை மன்னரே தாங்கள்!!!!

Post a Comment