Thursday, July 23, 2015

நிஜமல்ல கதை

இன்னும் இன்னுமென பசியில்
குடல் ஆவலுடன் துடிக்கையில்
விஷத்தையே உணவாய் ஊட்டி

இன்னும் இன்னுமென அறிவு
வெறியுடன் தேடித் திரிகையில்
குப்பையை முன்னால் பரப்பி

உடலையும் மனத்தையும்
விஷமிருக்கும் கூடாக்கி
செரிமானமாகாது பின் அது
கக்கித் தொலைக்கையில்தான்

வெந்துச் சாகிறோமோ ?
 மனம் நொந்து வீழ்கிறோமோ ?

"அழகானவர்கள் என்றால் கெட்டவர்களா
அதைவிடக் கொஞ்சம்
சுமாரானவர்கள்தான் நல்லவர்களா"
என்றாள் என் பேத்தி

"அப்படி இல்லையே யார் சொன்னது " என்றேன்

"சும்மா கேட்டேன் " என்றாள்

நானும் விட்டுவிட்டேன்

"கலெக்டர் ஆனாலும்
வீட்டிலும் ஊரிலும் முட்டாளாகத்தான் இருப்பார்களா
அலுவலகத்தில்தான் புத்திசாலிகளா " என்றாள்

அப்படியெல்லாம்  கிடையாதே யார் சொன்னது
அவர்கள் எப்போதும் புத்திசாலிதான் "என்றேன்

பின் ஒரு நாளில் இப்படிக் கேட்டாள்
"நல்லவர்கள் எல்லாம் கடைசி நாள்வரை
கஷ்டப்படுகிறார்களே
தீயவர்கள் எல்லாம் கடைசி ஒரு நாள் மட்டும்
கஷ்டப்படுகிறார்களே
நாம் ஏன் நல்லவர்களாக இருந்து
எப்போதும் கஷ்டப்படவேண்டும் " என்றாள்

துளித்துளியாய் விஷமேற்றும்
அந்த மாயப் பெட்டியின் அற்புத வேலைதான்
இது என்பது அப்போதுதான் எனக்குப் புரிந்தது

பள்ளிச் சூவினிற்குள் தேளிலிருப்பதை
கவனியாது மாட்டிவிட்டு
சட்டையின் தூசிதனைப் பாசமாய்த்
 தட்டித் துடைத்துவிடும்
பாசமிக்க தாயினைப் போல்

நல்ல பள்ளி
நல்ல சூழல்
நல்ல நண்பர்கள் எல்லாம்
வெளியிலே பாடாய்ப் பட்டுத் தேடிக் கொடுத்து
வீட்டுக்குள் மட்டும் விஷக்காற்றை
பரவவிட்டுக் கொண்டிருப்பதை
அப்போதுதான் அறிந்து தொலைத்தேன்

அவளின் எதிகாலம் கருதி
இப்போதெல்லாம் அபத்தத் தொடர்களை
நாங்கள் அடியோடு பார்ப்பதில்லை

முட்டாள் பெட்டி சொல்வதெல்லாம்
நிஜமல்ல கதை என்பதனை
நிஜமாக அந்தப் பிஞ்சு உள்ளம்
தெளிவாகத தெரிந்து கொள்ளும் வரை
நாங்கள் இப்போதெல்லாம்
கதையல்ல நிஜம் கூட
கண்விழித்துப் பார்ப்பதில்லை

10 comments:

ஸ்ரீராம். said...

நல்ல விழிப்புணர்வு!

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

நாங்கள் எப்பொழுதும் பார்ப்பதிலை. தேவையான பதிவு.

KILLERGEE Devakottai said...

ARUMAIYANA PATHIVU.

Unknown said...

தாத்தாக்கள் காலத்தில் நாளிதழ் செய்த வேலையை ,பேரன்கள் காலத்தில் முட்டாள் பெட்டி செய்து கொண்டிருக்கிறது !

Thulasidharan V Thillaiakathu said...

நல்ல செய்தி...உங்கள் வீட்டிலும் விஷத்தை நிறுத்திவிட்டீர்கள்...நாங்களும் இதை அனுமதிக்கவே இல்லை......இன்னும் பல வீடுகளில் பரவிக் கொண்டிருக்கின்றதே ஸ்லோ பாய்சன் போல...அதை யார் தடுப்பார்கள்?!! கவலையாகத்தான் இருக்கின்றது..

மிகவும் தேவையான விழிப்புணர்வுப் பதிவு!

சசிகலா said...

துளித்துளியாய் விஷமேற்றும்
அந்த மாயப் பெட்டியின் அற்புத வேலைதான்.
சரியாகச் சொன்னீர்கள் ஐயா.

G.M Balasubramaniam said...

அன்னப் பட்சி நீர் கலந்த பாலில் பாலை மட்டும் எடுத்துக் கொண்டு நீரை விட்டு விடுமாம்.என்னும் கதை சொல்லக் கேட்டிருக்கிறேன் அதுபோல் நல்லதை மட்டும் கிரகித்து மற்றது பற்றிக்கவலைப்படுவதைத் தவிர்க்கலாமே நெருப்பு ஆக்கவும் உதவும் அழிக்கவும் உதவும்

திண்டுக்கல் தனபாலன் said...

அருமை ஐயா... படிக்கும் வயதில் படிப்பு ஒன்றில் தான் முக்கிய கவனம் தேவை...

”தளிர் சுரேஷ்” said...

முட்டாள் பெட்டியை மூலையில் வைத்தால் வீடு உருப்படும்தான்! அருமை!

கவிஞர்.த.ரூபன் said...

வணக்கம்
ஐயா
சிந்தனைக்கள் மாறும் போது மனிதன் மாறுகிறேன்.. வாழ்க்கைக்கு தகுந்தால் போல்
வாழப்பழகினால் நன்று.
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்

Post a Comment