Saturday, April 9, 2016

"சைத்தான் என்பது மெய் ...

                  

"சைத்தான் என்பது பொய்
அப்படி எதுவும் இல்லை"
எனச்  சொல்பவனைத்  தொடராதே
அவன் அறியாது பேசுகிறான்

கரிய இருள் போர்த்தியபடி
குழிவிழுந்தக்  கண்களோடு
கோரைப் பற்களைக்  கடித்தபடி
கர்ஜித்து வரும் சைத்தான்
அழிந்துக்   காலம் பலவாகிவிட்டது

முன்பு போல அவன்
முட்டாள் சைத்தான் இல்லை
அவன் புத்திசாலி ஆகி
பலயுகங்களாகிவிட்டது

முன்பு போல
கோடாலி கொண்டு மரத்தை வெட்டி
அவன் நொந்து சாவதில்லை

மாறாக
வேரைப்  பிடுங்கி வெந்நீர் ஊற்றிவிட்டு
வேடிக்கைப் பார்க்கிறான்

நம்மை வீழ்த்தக் கூட
இப்போதெல்லாம் அவன்
தன் கோரைப் பற்களையும்
கூரிய நகங்களையும்
நம்புவதே இல்லை

நம் வீட்டுக் கூடத்தில்
தொலைக்காட்சிப் பெட்டியில் துவங்கி
உல்லாச உதவாக்கரை நண்பர்களாகத் தொடர்ந்து
நம்மைப்  பாதை தவறவிட்டு ஏமாளியாக்கி
முதலில் நம் நேரத்தை களவாடிக் கொள்கிறான்

பின்
வீண் கனவுகளில்
கற்பனைகளில் மூழ்கவிட்டு
நோக்கமற்று அலையவிட்டு

நாவுக்கும் மனதிற்கும்
குடலை பலியாக்கி

ஆசைக்கும் உணர்வுக்கும்
நம் மனத்தைப் பழிவாங்கி

நம் சக்தி முழுவதையும் உறிஞ்சிக் கொள்கிறான்

முடிவாக
உல்லாசங்களில் கேளிக்கைகளில்
தேவையற்ற ஆடம்பரங்களில்,
போலி கௌரவங்களில்
நம்மை முழுமையாக மூழ்கவிட்டு
நம் வளத்தையெல்லாம் அபகரித்துக் கொள்கிறான்

இப்படித்
தேரிழந்து
ஆயுதமிழந்து
சக்தியிழந்து
மண்பார்த்து நிற்கும்
 நிலையானப் பின்னே

சக்தியற்றவன் உடலில்
சட்டெனப் புகும் நோயினைப் போல்
நமக்குள் முழுமையாய் நிறைந்து கொள்கிறான்

நம்மிடம் இப்போது எதுவுமே இல்லை
ஆயினும்
தொடர்ந்து வாழ
எல்லாமும் வேண்டியதாயும் இருக்கிறது

இப்படியோர்
இடியாப்பச் சிக்கலில்
ஆப்பசைத்து மாட்டிய குரங்காக
செய்வதறியாது கைபிசைந்து நிற்கும்வரை

நமக்கு அன்னியன் போலிருந்த சைத்தான்
இப்போது நமக்குள்
நாமாகவே மாறி
நமக்கே புதிய வேதம் ஓதுகிறான்

" பணத்தைக்  கொண்டு
எதை வேண்டுமானாலும்
செய்ய முடியும்,வாங்க முடியும் என்கிற
இந்த கேடுகெட்ட உலகில்
பணம் சம்பாதிக்க
எந்த கேடு கெட்டதைச்   செய்தால்தான் என்ன ?"
என்கிறான்

சுயநலமாகவோ
தர்க்கரீதியாகவோ
யோசித்துப் பார்க்கையில்
உலக நடப்பினைக்  கூர்ந்துப்  பார்க்கையில் ...

அவன் சொல்வது
சரியாக மட்டும் படவில்லை
நிலை தவறிய நமக்குப்
புதிய கீதை போலவே படுகிறது

வேறு வழியின்றி
நம்மை அறியாது
நாமே சாத்தானாக உரு மாறத் துவங்குகிறோம்

எனவே
"சைத்தன் என்பது பொய்
அப்படி எதுவும் கிடையாது"
இப்படிச் சொல்பவனைத் தொடராதே
அவன் அறியாது பேசுகிறான்

9 comments:

ஸ்ரீராம். said...

உண்மைதான். நம் மனமே சாத்த்தானின் கூடாரமாகி விடுகிறது.

கரந்தை ஜெயக்குமார் said...

உண்மைதான் ஐயா
நன்றி
தம+1

வை.கோபாலகிருஷ்ணன் said...

இதுபோல இன்று நிலை தவறிய எனக்கும், தாங்கள் இந்தப்பதிவின் மூலம் ’புதிய கீதை சொன்னக் கண்ணன்’ஆகவே தெரிகிறீர்கள் ரமணி சார்.

அருமையான ஆக்கம். யோசிக்க வைக்கிறது. பகிர்வுக்கு நன்றிகள், சார். - VGK

G.M Balasubramaniam said...

சைத்தான்களின் பிடியில் நாம் ?

MANO நாஞ்சில் மனோ said...

அருமையாக சொன்னீர்கள் குரு...!!!

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

தேவையானதைப் பகிர்ந்தவிதம் அருமை.

கோமதி அரசு said...

உண்மை.
நல்ல கவிதை.

Bhanumathy Venkateswaran said...

Very true!

Thulasidharan V Thillaiakathu said...

நிதர்சனமான ஓர் உண்மையை அருமையாகச் சொல்லிவிட்டீர்கள் உங்கள் நடையில்...

Post a Comment