Thursday, November 10, 2016

வஸந்த காலம் உன் வாசல் வர

உனக்கு பேசவும் எழுதவும் வர
கொடுத்துள்ள உரிமையின் எல்லையை
சோதிக்க முயலாதே
அந்த எல்லை
மிகச் சிறியது என உனக்கு
புரிந்தும் போகலாம்
அதனால் நீ நொந்தும் போகலாம்
எனவே அந்த வழி வேண்டாம் நமக்கு

உண்மையைத்தானே சொல்கிறேன் என
சிறுபிள்ளைத்தனமாய்
உளறித் தொலைக்காதே
நீ கைது செய்யவும் படலாம்
உன் வீடும் தாக்கப் படலாம்
ஊமையாய் இருக்கப் பழகு
காசு கொடுத்து கருமாந்திரம் நமக்கெதுக்கு

எழுதுபவன் வாசிப்பவன் எல்லாம்
சராசரியைத் தாண்டியவன் என
தப்புக் கணக்குப் போடாதே
நீ ஏமாந்துத் தொலைக்கலாம்
எழுத்தையே வெறுக்கலாம்
தெரிந்ததைப் பதுக்கப் பழகு
அதுதான் என்றும் சுகம் நமக்கு

மதம்" பிடித்தவனாயினும்
"மதம்" பிடிக்காதவனாயினும்
அவனவன் நிலையில்
"மதம் 'பிடித்தவனே
நியாயம் பேசி ஏமாறாதே
நிம்மதி இழந்துத் திரியாதே
சராசரியாய் இருக்கப் பழகு
சங்கடங்களை விலக்கப் பழகு

பயனற்றதை சுவாரஸ்யமாகச் சொல்லிப்போ
ஆடிக்காற்றுப் போல எதன் மீதும்
மிகச் சரியாகப் படாது புழுதிக் கிளப்பிப் போ
மகுடங்களும் மலர் மாலைகளும்
நிச்சயம் கிட்டும்
யானைவைத்து பிச்சை எடுப்பது போல்
அறிவைக் கொண்டு பிழைக்கப் பழகு
நிச்சயம் வஸந்த காலம்
உன் வாசல் கதவைத் தட்டும்

5 comments:

Yarlpavanan said...

சிந்திக்க வைக்கும்
சிறந்த பாவரிகள்

வை.கோபாலகிருஷ்ணன் said...

வஸந்த காலம் வாசல் வர சொல்லியுள்ள அறிவுரைகள் யாவும் அருமை.

பகிர்வுக்குப் பாராட்டுகள் + நன்றிகள்.

திண்டுக்கல் தனபாலன் said...

ஆலோசனைகள் நன்று ஐயா...

K. ASOKAN said...

இனிய அறிவுரைக்கு மிக்க நன்றி

”தளிர் சுரேஷ்” said...

சிந்தனையை தூண்டும் வரிகள்! அருமை! நன்றி ஐயா!

Post a Comment