Tuesday, November 22, 2016

சூட்சுமம் வெளியில் இல்லை

புன்னகை முகத்தில் என்றும்
பொங்கியே ஜொலிக்கக் கூடின்
பொன்நகை ஜொலிப்பு கொஞ்சம்
மங்கிடத் தானே செய்யும் ?

நன்மனை வாய்க்கப் பெற்று
நலமுடன் வாழ்ந்து வந்தால்
அரண்மனை சுகங்கள் கூட
அலுப்பினைத் தானே கூட்டும் ?

இருப்பதைக் கொண்டு வாழும்
இலக்கணம் அறிந்து கொண்டால்
பறப்பதைப் பிடிக்கும் மோகம்
மறைந்திடத் தானே செய்யும் ?

ஆசையது போடும் ஆட்டம்
அடங்கிடக்  கூடும் ஆயின்
தேவையின் சுமைகள் கூட
குறைந்திடத் தானே வேண்டும் ?

சுகமதை நிலைக்கச் செய்யும்
சூட்சுமம் வெளியில் இல்லை
நிதமிதை உணர்ந்தால் வாழ்வே
சொர்க்கமாய் தானே ஆகும் ?

9 comments:

KILLERGEE Devakottai said...

இரசித்தேன் கவிஞரே நன்று
த.ம.2

வை.கோபாலகிருஷ்ணன் said...

//இருப்பதைக் கொண்டு வாழும்
இலக்கணம் அறிந்து கொண்டால்
பறப்பதைப் பிடிக்கும் மோகம்
மறைந்திடத் தானே செய்யும் ?//

உண்மை.

சூட்சுமம் வெளியில் இல்லை - நமக்குள்ளேயேதான் உள்ளது.

மிக அருமையான ஆக்கம். பாராட்டுகள்.

கீதமஞ்சரி said...

இப்படி சூட்சுமத்தை அப்பட்டமாய் அறிவித்தபின்னும் கூட அறியாமையில் உழலும் மனங்கள் ஏராளமன்றோ... சிந்தனையில் பதியவைக்கவேண்டிய அற்புத வரிகள்.

அது ஒரு கனாக் காலம் said...

wonderful.

கோமதி அரசு said...

//இருப்பதைக் கொண்டு வாழும்
இலக்கணம் அறிந்து கொண்டால்
பறப்பதைப் பிடிக்கும் மோகம்
மறைந்திடத் தானே செய்யும் ?//

அருமை.

மனோ சாமிநாதன் said...

//நன்மனை வாய்க்கப் பெற்று
நலமுடன் வாழ்ந்து வந்தால்
அரண்மனை சுகங்கள் கூட
அலுப்பினைத் தானே கூட்டும் ?//

வாழ்க்கை அனுபவத்தில் கிடைத்த‌ பொன்வரிகள் இவை! எத்தனை சத்தியமானது! அத்தனையும் அருமை!

சிவகுமாரன் said...

சொக்கவைக்கும் சூட்சுமம்.
அருமை

Yarlpavanan said...

"ஆசையது போடும் ஆட்டம்
அடங்கிடக் கூடும் ஆயின்
தேவையின் சுமைகள் கூட
குறைந்திடத் தானே வேண்டும்?" என்ற
அருமையான வரிகள்
மீண்டும் மீண்டும்
படிக்கத் தூண்டுகின்றன...

ஸ்ரீராம். said...

உள்ளுக்குள்ளே ஒளிந்திருக்கும் சூட்சுமம்! இருப்பது போதும் என்று சொல்லும் மனம் இருந்தால் வேறு சொர்க்கம் இல்லை.

Post a Comment