Friday, July 7, 2017

பேராசையும் தேவையும்

தேவைகள் மட்டும்
எவையென அறிந்திருந்து
பேராசைகள் குறித்து
ஏதுமறியாது
நிம்மதியாய் இருந்தார்கள்
நம் பாட்டன்மார்கள்

தேவைகள் குறித்தும்
பேராசைகள் குறித்தும்
ஒரு தெளிவிருந்தும்
பேராசைகள் தேவையற்றவை என
தெளிவாய் இருந்தார்கள்
நம் தகப்பன்மார்கள்

தேவைகள் எவை
பேராசைகள் எவை என்கிற
பெருங்குழப்பத்தில்
இரண்டிலும் பாதியே நிறைவேற
எப்போதும் பதட்டத்தில்
வாழ்ந்தோம்  நம் காலத்தவர்கள்

பேராசைகளே தேவைகளென்றாக
எந்தத் தேவையும் அடையாது நீள
புலிவால்பிடித்த நாயராய்
பிடிக்கவும் இயலாது விட்டுவிடமும் முடியாது
நொடிதோறும்திண்டாடுது
இன்று நம் குலத்தோன்றல்கள்

ஆம்
ஆதி முதல்  இன்றுவரை
 கூடியும்  குறைந்தும்
 ஒன்று போலவும் நேரெதிர்போலவும்
ஒளிபோலும்  நிழல் போலும்
பம்மாத்துக்காட்டி
உலகினைத் தம் போக்கில்   இயக்கிப் போகுது
பேராசையும் தேவையும்

12 comments:

ஸ்ரீராம். said...

பதட்ட உலகம்!

வெங்கட் நாகராஜ் said...

பேராசையும் தேவையும்..... நல்லதொரு பகிர்வு. இன்றைக்கு தேவைகளை விட பேராசை தான் அதிகம்...

திண்டுக்கல் தனபாலன் said...

சுயநலத்தால் அனைத்தும் அதிகம்...

G.M Balasubramaniam said...

ஆசை பேராசை என்பது காலங்களில் மாறி வருகிறது ஆனால் அந்தந்த காலத்துக்கு அவையவை சரியே

வை.கோபாலகிருஷ்ணன் said...

ஆசையும் பேராசையும்

அவரவர் மனத்தையும்,

அந்தந்த காலக்கட்டத்தையும்,

அவரவரின் புத்திசாலித் தனத்தையும்

அவரவரின் தேவைகளையும்

அவரவரின் படிப்பையும்

அவரவரின் திறமைகளையும்

அவரவரின் ஆர்வத்தையும்

அவரவரின் அதிர்ஷ்டத்தையும்

பொறுத்தது என்பது அடியேனின் தாழ்மையான எண்ணமாகும்.

யோசிக்க வைக்கும் நல்லதொரு ஆக்கத்திற்கு நன்றிகள்.

KILLERGEE Devakottai said...

சொன்ன விதம் அழகு நன்றி

கோமதி அரசு said...

நாளுக்கு நாள் தேவைகள் அதிகமாகி கொண்டு போகிறது. ஆசைகளும் அதிகமாகி வருகிறது.
தேவைகள் குறையும் போது பேராசைகள் குறையலாம்.
அருமையான கவிதை.

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

பேராசையிலும் பேராசை. அதனால்தான் அவதிப்படுகிறோம்.

Unknown said...

நான் வை .கோ அவர்களின் கருத்தை வழி மொழிகிறேன்

வை.கோபாலகிருஷ்ணன் said...

புலவர் இராமாநுசம் said...
நான் வை .கோ அவர்களின் கருத்தை வழி மொழிகிறேன்//

மிக்க நன்றி, ஐயா.

எனக்கும் பிறரைப்போலவே (மனதிற்குள்) பேராசைகள் உண்டுதான்.

இருப்பினும் என் சக்தியை நான் உணர்ந்துள்ளேன்.

என் தேவைகளை நான்
மிகவும் குறைத்துக்கொண்டுள்ளேன்.

சத்தியமாக, நேர்மையாக, நாணயமாக, பொறுமையாக, அருமையாக, வாழ்க்கையை அனுபவித்து வாழ்ந்தும் வருகிறேன்.

அதனால் இதுவரை எனக்குக் குறையொன்றும் இல்லை.

vimalanperali said...

வாழ்க்கைக்கான சம்பாத்தியம் என்பது போய் சம்பாதிப்பதற்காக வாழ்கிற நடைமுறை நம்மில் திணிக்கப்பட்டிருக்கிறது,கட்டாயப்படுத்தப்பட்டிருக்கிறது,

Unknown said...

#நிம்மதியாய் இருந்தார்கள்நம் பாட்டன்மார்கள்#
??????ஆசையே அழிவுக்குக் காரணம் என்று புத்தர் சொன்னது நம் பாட்டன் காலத்தில்தானே :)

Post a Comment