Thursday, April 30, 2020

மரபுக் கவி படைக்க சுருக்கு வழி

விளம"தும் "மா "வும் தேமா
முறைப்படி அமையும் வண்ணம்
இலக்கணக் கவிதை ஒன்று
உடனடி யாக உன்னால்
இயற்றிடக் கூடு மாயின்
கவியென ஏற்பேன் " என்றான்
வலதுகை போன்றே நாளும்
என்னுடன் உலவும் நண்பன்

"இதந்தரு மனையி னீங்கி
இடர்மிகு சிறைப்பட் டாலும் "
முதல்வரி இதுவாய்க் கொண்டு
முத்தெனத் தொடரும் அந்தச்
சுதந்திரத் தேவிப் பாடல்
சந்தமென் நினைவில் ஊற
பதட்டமே சிறிது மின்றி
பகிர்ந்தேன் இந்தப் பாடல்

"சிந்தனை செய்ய வேணும்
சிலநொடி நேரம் வேண்டும் "
என்றுநான் சொல்வே னென்ற
நினைப்பினில் இருந்த நண்பன்
மந்திரம் சொல்லல் போல
நிமிடமாய்ச் சொல்லக் கேட்டு
வந்தெனைக் கட்டிக் கொண்டு
வாழ்த்தினைப் பகிர்ந்து கொண்டான்

எட்டயப் புரத்து வேந்தன்
இயற்றிய பாடல் தன்னை
நித்தமும் பயின்றால் சந்தம்
நிலையென நெஞ்சில் தங்கும்
பக்குவம் இதனை யாரும்
பழகினால் மட்டும் போதும்
நிச்சயம் நொடியில் யாரும்
கவிஞராய் மாறக்  கூடும்

4 comments:

வெங்கட் நாகராஜ் said...

ஆஹா....

Jayakumar Chandrasekaran said...

கவிதைக்கு ஒரு கவிதை

 Jayakumar

திண்டுக்கல் தனபாலன் said...

அருமை ஐயா... மிகவும் ரசித்தேன்...

கரந்தை ஜெயக்குமார் said...

ஆகா அருமை

Post a Comment