Saturday, August 29, 2020

அது ஒரு வஸந்த் & கோ காலம்

 நாற்பதாண்டுகளுக்கு முன்பு வாங்கிய

ஒரு இரும்புக்கட்டிலில் அமர்ந்து அதனுடன்

சேர்த்து வாங்கிய இரும்பு பீரோவைப் பார்த்தபடி

இதை எழுதத் துவங்குகிறேன்..


இப்போது அவசியத் தேவையோ இல்லையோ

நினைத்ததும் இலட்சம் ரூபாய் ஆனாலும்

கிரடிட் கார்டை தேய்த்து உடன் பொருளை

வீட்டுக்குக் கொண்டு வருகிற இன்றைய 

தலைமுறையினருக்கு இந்தப் பதிவு

வித்தியாசமானதாகவோ ஏன் ஒருவேளை

கேலிக்கூத்தானதாகவோ தோன்றவே அதிகச்

சாத்தியம்


எண்பதை ஒட்டிய காலங்களில் ஒரு

நடுத்தர ஊழியரின் சம்பளம் என்பது

உத்தேசமாக எண்ணூறு தொள்ளாயிரம்

என்கிற அளவிலேயே இருக்கும்              ..நான்கு இலக்கச் சம்பளம்

என்பது உயர்தரப்பணியாளர்களைக் குறிக்கும்

ஒரு குறியீடாகவே இருந்த காலம்..


கிராமத்தில் இருந்து படித்து

முடித்து அரசுப் பணி கிடைத்து வெளியூர்

வேலைக்குச் செல்வதும் அந்த வேலையின்

காரணமாகவே திருமணத்திற்குப் பெண்கள்

எளிதாக அமைவதுமாக இருந்த காலம்....


அந்தக் காலக் கட்டத்தில் சீர் வரிசையாக

வீட்டுக்குத் தேவையான அனைத்துப் பொருட்களும்

கிடைத்துவிடும் சாத்தியம் இருந்த போதும்

புரட்சிகர சிந்தனையின் பால் ஈர்க்கப்பட்டு

வரதட்சணை சீர்வரிசை வாங்கக் கூடாது என்பதை

இலட்சியமாகக் கொண்ட பலருக்கு

அது ஒரு சோதனைக் காலமே.


பெண் எளிதாகக் கிடைத்தாலும் வசதியான

ஆடம்பரமான வாழ்வுக்கு ஏற்ப ஊதியம்

இல்லையென்றாலும் வருகிற் பெண்ணும்

பெண்ணும் பெண் வீட்டாரும் கௌரவமாக

நினைக்கிற அளவு வீட்டில் அத்யாவசியத்

தேவையெனச் சொல்லத் தக்க கட்டில் பீரோ

குக்கர் கேஸ் ஸ்டவ் டேபிள் நாற்காலி 

மற்றும்தகரப் பொட்டி அல்லாது ரெக்ஸின

சூட்கேசாவது இருக்கவேண்டும் என்கிற

தேவை இருந்த காலம்..


குறைந்த பட்ச மேற்குறித்த தேவைகளை

நிறைவு செய்ய அன்றைய சம்பளத்தில்

குறைந்த பட்சத் தேவை நான்கு மாதச்

சம்பளமாவது வேண்டி இருக்கும்..


கிராமத்தில் இருக்கும் பெற்றோருக்கு

முடிந்ததை அனுப்பியது போக

இங்கு வேலை பார்க்கும் இடத்துத் தேவையான்

ரூம் வாடகை சாப்பாட்டுச் செலவு

இவையெல்லாம் எப்படித்தான்

சிக்கனமாகச் செய்தாலும்

கூட மாதம் இருபதோ முப்பதோ

மிச்சப்படுத்துவதற்குக் கூட பிரம்மப்பிரயத்தனப்

படவேண்டும்....


புரட்சிகர எண்ணத்தையும் விட்டுக் கொடுக்க

முடியாது...அத்யாவசியத் தேவையையும்

நிறைவு செய்யாது இருக்க முடியாது

பணம் சேர்த்து பொருள் வாங்கவும் முடியாது

இப்படிப் பட்ட இடியாப்பச் சிக்கலில்

இருந்த என்போன்ற நடுத்தர மக்களுக்கு

வாயத்த வரப்பிரசாதம் தான் வஸந்த & கோ

மாதிரியான தவணையில் பொருள் கொடுக்கும்

நிறுவனங்கள்....



தொடரும்

12 comments:

நெல்லைத் தமிழன் said...

தவணைக்கு பொருட்கள் கொடுப்பதை முதலில் ஆரம்பித்தது வி.ஜி.பன்னீர்தாஸ் கம்பெனி அல்லவா? அதன் பிறகு அதே மாடலை வசந்த் & கோ பிற்காலத்தில் கைக்கொண்டது என்பதுதான் என் நினைவு

துரை செல்வராஜூ said...

தவணை முறையில் எதையும் வாங்க வில்லை எனினும் ஓரளவுக்கு வீட்டு உபயோகப் பொருட்களை அரும்பாடு பட்டு வாங்கியிருக்கிறேன்...

Yaathoramani.blogspot.com said...

ஆம்...1978 ல் விஜிபி க்குப் பின் ஆரம்பிக்கப்பட்டதே வசந் &கோ..

Yaathoramani.blogspot.com said...

ஆம் அந்தக் காலத்தில் ஏறக்குறைய மத்யமர் எல்லோருடைய நிலையும் அப்படியே...

கரந்தை ஜெயக்குமார் said...

முதன் முதலில் தொலைக்காட்சிப் பெட்டியையே தவனை முறையில்தான் வாங்கினேன்

KILLERGEE Devakottai said...

ஏழைகள் வீட்டில் தொலைக்காட்சி பெட்டி நுழைந்தது வசந்த் அன்கோவால்தான்...

Yaathoramani.blogspot.com said...

ஆம் எங்கள் வீட்டிலும்...அதுவும் கருப்பு வெள்ளைக்கே ...

Yaathoramani.blogspot.com said...

ஆம் ஏழைகள் மட்டுமல்ல நடுத்தர மக்கள் வீட்டிலுமே...

வல்லிசிம்ஹன் said...

விவேக் அண்ட் கோ லயும் இருந்தது.
தவணை முறையில் ஃபிலிப்ஸ் ரேடியோ சேலத்தில் வாங்கினோம்.
அது 1967இல்:)
வசந்த் அண்ட் கோ மைலாப்பூரில் தான்
இருந்தது. அந்த சிரித்த முகம் நினைவில்.

திண்டுக்கல் தனபாலன் said...

"வசந்த் & கோ"வில் எந்தப் பொருளையும் வாங்குவதற்கு ஒரு நம்பகத்தன்மை இருக்கும்...

Yaathoramani.blogspot.com said...

ஆம் அதைத்தான் ஆரம்பவரியாகக் குறிப்பிட்டுள்ளேன்...

வெங்கட் நாகராஜ் said...

வசந்த் & கோ - விற்கு விஜிபி முன்னோடியாக இருந்தது! வசந்த் & கோ தொடங்குவதற்கு முன்னர் திரு வசந்தகுமார் விஜிபியில் வேலை பார்த்துக் கொண்டிருந்தார் என்று கேள்விப்பட்டதுண்டு.

கோ-ஆப்டெக்ஸ் கூட தவணை முறையில் துணி விற்பனை - தீபாவளி பொங்கல் சமயத்தில் செய்ததுண்டு - குறிப்பாக நாங்கள் இருந்த நெய்வேலியில்!

Post a Comment