Sunday, July 3, 2022

பகுத்தறிவும் தமிழர்களும்

 தமிழர்களுக்கும்,வேதத்திற்கும் தொடர்பே இல்லை, இந்திய ஞானமரபுக்கும் தமிழனுக்கும் தொடர்பே கிடையாது என்பது திராவிட கோஷ்டிகளின் புலம்பல்


உண்மையில் அவைகளுக்கு தமிழ் இலக்கியம் முழுக்க தெரியுமா என்றால் தெரியாது, அவர்களாக சில குறட்பாக்களைப் படித்து வள்ளுவன் இந்து இல்லை என்பது மீதி திருக்குறளை மறைப்பது


அவர்களாக சில புறநானூற்று பாடல்களை சொல்வது மீதியினை மறைப்பது, அவர்களுக்கு தெரிந்த கவிஞன் பாரதிதாசன் எனும் புலவனும் அவனின் தமிழ்வெறி வரியும், மற்றபடி பாரதியும் தெரியாது சங்கப் புலவனும் தெரியாது


அவ்வையார் தெரிந்தாலும் அவர் பாடிய முருகனையும் பிள்ளையாரையும் பார்த்து கண்ணை மூடுவார்கள், இளங்கோவினை பார்த்தாலும் அவன் சொன்ன இயக்கி, இந்திரவிழா எல்லாம் பார்த்து முகத்தைப் பொத்திக் கொள்வார்கள்


மூவேந்தர் என்பார்கள் மூவேந்தரும் இந்துக்கள் இந்து ஆலயம் கட்டினார்கள் என்பதை மறைப்பார்கள், பல்லவன் கலை என்பார்கள் அக்கலையில் கோவிலும் இந்துமத சிற்பங்களும் எழும்பின என்பதை சொல்லமாட்டார்கள், அவ்வளவு திருட்டுத்தனம்.


இந்த திமுகவின் பிக்பிரதரும், முன்னாள் ஆர்மி ஜெனரலுமான அண்ணா எவ்வளவு பெரும் பொய்களைச் சொல்லியிருக்கின்றார் என்பதைப் பாருங்கள்


தேவர்களை வேண்டி தீயில் வேட்பது அறக்கள வேள்வி.


நான்மறையாளரைச் சுற்றமாகக் கொண்டு, அடிபணிந்த அர்சர் ஏவல் செய்ய, தலையங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியன் அறக்கள வேள்வி செய்தான் என மாங்குடிக்கிழார் கூறுவார்


இந்தப் பதிற்றுப்பத்துப் பத்துப் பாடல் சொல்வதைப் பாருங்கள், சேரன் பார்ப்பனரைக்  கேட்டு யாகம் செய்த காட்சியினைச் சொல்லும்.


பல்யானை செல்கெழுகுட்டுவன் கௌதமனாருக்காக பார்ப்பாரில் பெரியோரைக் கேட்டு பத்து பெருவேள்வி வேட்பித்தான். (பதிற்றுப்பத்து, பதிகம் 3)


பெருஞ்சேரல் இரும்பொறை வேள்விக்குரிய விதிகளைக் கேட்டு வேள்வி வேட்பதற்கு முன், தான் இருக்க விரதங்களை முறைப்படி முடித்து வேள்வி முடித்தான். (பதிற்றுப்பத்து, பதிகம் 74)


பாண்டியருக்கும் இக்காட்சி உண்டு


பாண்டியன் முதுகுடுமிப் பெருவழுதி பல யாகங்களைச் செய்ததால் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி எனப்பெயர் பெற்றான் என்பது வரலாறு


சிலப்பதிகாரம் என்ன சொல்கின்றது?


""பேரிசை வஞ்சிமூதூர்ப்புறத்து தாழ்நீர் வேலி தண் மலர்ப்பூம் பொழில் வேள்விக்கான மாளிகை கட்டி நன் பெரு வேள்வி முடித்த பின்."


சேரமான் செங்குட்டுவன் வஞ்சிமாநகரின் குளிர்ந்த பொழில்கள் சூழ்ந்த இடத்தில் வேள்விச்சாலை அமைத்தான். வேள்விமாக்களைக் கேட்டு உரிய முறையில் ராஜசூயம் வேட்டான்


அதை ஒட்டிச் சிறையிருந்த எல்லாக் கைதிகளையும் விடுதலை செய்தான். வந்திருந்த மன்னருக்கேற்ப வரிசை முடித்தான்


அதியமான் வாழ்வு பற்றி புற நானூறு இப்படி சொல்கின்றது


அதியமான் நெடுமான் அஞ்சியின் முன்னோர்கள் “அமரர் பேணியும் ஆவுதி அருத்தியும்” சிறப்பெய்தினர் (புறம்.99) வேளிர்கள் வேள்விக் குண்டத்தில் தோன்றியவர் என்ற வரலாறு உண்டு. சங்க காலத்தில் அரசர் வேள்வி வேட்டலை மிகச் சிறப்பாகக் கருதினர்.


சங்க காலத்திற்குப்பின் வந்த பல்லவரும் பாண்டியரும் வேள்வியில் ஈடுபாடு நிறைந்து விளங்கினர். ஒரு பாண்டிய மன்னன் காலையிலும் மாலையிலும் அக்னியில் ஹோமம் செய்தான் என்று தளவாய்புரம் செப்பேடு கூறுகிறது.


பாண்டியர்களில் அரிகேசரி மாறவர்மன் ஹிரண்யகருப்பம், துலாபாரம், பகு சுவர்ணம் என்பவற்றைச் செய்தான்


தேர்மாறன் என்னும் பாண்டியனும் எண்ணிறைந்த கோசஹஸ்ரமும், ஹிரண்யகருப்பமும், துலாபாரமும், செய்தான் என்று வேள்விக்குடி செப்பேடுகள் குறிக்கின்றன.


மாறவர்மன் இராஜசிம்மன் துலாபாரம் செய்தான் என்றும் சின்னமனூர் செப்பேடு கூறுகிறது.


பல்லவர்கள் முறைப்படி பல வேள்விகளை வேட்டவர்கள் என்று அவர்களது கல்வெட்டுகள் கூறுகின்றன. சிவ ஸ்கந்தவர்மன் என்பான் அக்னிஷ்டோமம், அச்வமேதம், வாஜபேயம் ஆகிய வேள்விகளை வேட்டான்.


குமார விஷ்ணு அச்வமேத யாகம் செய்தான். சோமயாகம் செய்யாதவரே பல்லவ குலத்தில் கிடையாது என ஒரு செப்பேடு குறிக்கிறது. அவர்கள் பல வேள்விகளை வேட்டதால் பிரும்மண்யம் நிறைந்தவராய் இருந்தனர். அதனால் பரம பிரும்மண்யர் என்று அழைக்கப்பட்டனர்.


சோழர்களில் முதல் ராஜாதி ராஜன் அச்வமேத யாகம் செய்தான் என அவன் கல்வெட்டுகள் கூறுகின்றன. விஜயாலயன் வழிவந்தவர்களில் இராஜாதி ராஜன் ஒருவனே அச்வமேத யாகம் செய்தவன்.


இதோ சங்க கால புலவன் முதுகுடுமி பெருவழுதியி எழுதிய பாடல்


"நல் பனுவல், நால் வேதத்து

அருஞ் சீர்த்திப் பெருங்கண்ணுறை

நெய்மலி ஆவுதி பொங்க, பல் மாண்

வீயாச் சிறப்பின் வேள்வி முற்றி,

யூபம் நட்ட வியன் களம் பல கொல்?"


அதாவது "வேத‌ நூல் சொன்னபடி வேதவிதிப்படி நெய்யும் சமித்தும் பொரியும் இட்டு நீ செய்த புகழ்மிக்க போற்றற்கரிய பெரும் யாகங்களை செய்த யாகசாலையில் நீ நிறுத்தி வைத்த தூண்களின் தொகை அதிகமா? "


இதில் தூண்களின் எண்ணிக்கை அல்ல விஷயம், தமிழன் நெய்யிட்டு யாகம் செய்திருக்கின்றான் என்பதுதான் கவனிக்கத் தக்கது


அடுத்தபாடல்


"எருவை நுகர்ச்சி, யூபநெடுந்தூண்

வேதவேள்வித் தொழில் முடித்ததூஉம்

அறிந்தோன் மன்ற அறிவுடையாளன்"


இது கல்லணை கட்டிய கரிகாலனை பற்றி கருங்குழல் ஆதனார் பாடிய பாடல், பொருள் என்னவென்றால் "வட்ட வடிவமாக செய்யப்பட்ட மதில் சூழ்ந்த வேள்விச் சாலையில்,கருட சயனம் என்கிற வேள்வித் தூணை நட்டு வேள்விகள் பல செய்து அறிவுடையாளனாக விளங்கிய வேந்தனே"


ஆக கரிகாலன் வேள்வி செய்திருக்கின்றான், வேள்வித் தூணை நட்டிருகின்றான்.


அடுத்து ஒரு வாழ்வு தத்துவ பாடல்.


"வாழச் செய்த நல்வினை அல்லது

ஆழுங் காலைப் புணைபிறிது இல்லை;

ஒன்றுபுரிந்து அடங்கிய இருபிறப் பாளர்

முத்தீப் புரையக் காண்தக இருந்த

கொற்ற வெண்குடைக் கொடித்தேர் வேந்திர்,

யான்அறி அளவையோ இதுவே"


அதாவது, நீங்கள் வாழும்பொழுது இவ்வுலகில் செய்த நல்வினைகளைத் தவிர, நீங்கள் மறுவுலகிற்குச் செல்லும்பொழுது உங்களுக்குத் துணையாக வருவது வேறொன்றுமில்லை. வீடுபேறு ஒன்றையே விரும்பிப், புலன்களை அடக்கிய அந்தணர்கள் வளர்க்கும் முத்தீயைப் போல அழகுடன் வீற்றிருக்கும் வெண்கொற்றக் குடையையும் கொடிகட்டிய தேரையும் உடைய மூவேந்தர்களே! நான் அறிந்த அளவில் முடிவாகத் தெரிந்தது இதுவேயாகும்.


ஆம் இங்கும் யாகம் பற்றி சொல்லபடுகின்றது


மூவேந்தர் கூடிய இடத்தில் ஒளவையார் சொன்ன பாடல் இது.


"ஆன்ற கேள்வி யடங்கிய கொள்கை

நான்மறை முதல்வர் சுற்ற மாக

மன்ன ரேவல் செய்ய மன்னிய

வேள்வி முற்றிய வாய்வாள் வேந்தே " - புறம் 26


இதன் பொருள் தகுந்த கல்வி கற்று ஐம்புலன்களை அடக்கிய மனவலிமையோடு,

நான்கு வேதங்களையும் கற்ற அந்தணர்கள் உன்னைச் சூழ்ந்திருக்க, பிற மன்னர்கள் உன் சொற்படி கேட்டுப் பணிவிடை செய்ய, நிலையான பெயர் தரக்கூடிய வேள்வியைச் செய்து முடித்த பெருமை வாய்ந்த வாளினை உடைய வேந்தனே.


இதோ கோவூர் கிழார் எனும் புலவனின் வரிகள்


"மறவர் மலிந்த தன்

கேள்வி மலிந்த வேள்வி தூணத்து" - புறம் 400


அதாவது போர் மறவர்கள் மிகுந்த படைக்கலத்தையும், கேள்வி அறிவிற் சிறந்த மறையோர்கள் நிறைந்த வேள்விச் சாலையில் தூண்களை நிலைநாட்டியவன் என்று சோழன் நலங்கிள்ளியை கோவூர் கிழார் புகழ்ந்து பாடுகிறார்.


"கேள்வி முற்றிய வேள்வி அந்தணர்க்கு

அருங்கல நீரோடு சிதறிப் பெருந்தகை"

- புறம் 362


இதன் பொருள் பலநூல்களை படித்து வேள்வி செய்யும் அந்தணர்க்கு நீரைவார்த்து தானம் வழங்கும் பெருந்தகை.


இன்னும் எவ்வளவோ உண்டு, ஆம் தமிழரின் இலக்கியமெல்லாம் அவன் அந்தணர்களை ஆதரித்த கதைகளும் அவர்கள் மன்னனுக்காக வேள்வி செய்த வரிகளும் எங்கும் நிறைந்திருக்கின்றன‌


அது குறளில் உண்டு, புற நானூற்றில் உண்டு இன்னும் பல இடங்களில் உண்டு, அதை ஆதாரத்துடன் சொல்ல முடியும்


ஆக திமுகவின் முன்னாள் ஆர்மி ஜெனரலான பிக்பிரதர் பெரும் புரட்டர் , பொய்யர், ஈரோட்டு சீனியர் சிட்டிசன் சொல்லி கொடுத்த பொய்யினை தானும் சொல்லி தம்பி ஆர்டிஸ்டுக்கும் சொல்லி தமிழகத்துக்கும் சொல்லி கொடுத்த வஞ்சகர்.


நன்றி நண்பர் திரு Stanley Rajan அவர்கள்.

3 comments:

நெல்லைத் தமிழன் said...

அப்போ நீங்க சொன்ன யாருமே தமிழன் இல்லையா? ஒருவேளை திராவிடனாக இருக்குமோ?

திருக்குறளையே, லஞ்சம் கொடுத்து, வேறு மத நூலாக நிறுவவேண்டும் என்று பேராயர் ஒருவர் முன்னர் முயற்சித்தது வெளியில் வந்தது. இங்குள்ள அல்லக்கைகள், அது இந்துமத நூல் அல்ல என்று நிறுவ ரொம்பவே கஷ்டப்படுகிறார்கள். (அதை நிறுவ முற்படுபவர்கள், குறள் வழி கனவில்கூட நடந்ததில்லை என்பதும் உண்மை)

திண்டுக்கல் தனபாலன் said...

என்னது குறளில் உண்டா...? எந்தக் குறளில் உள்ளது...? வேதத்திற்கு எதிராக வேண்டுமானாலும் பல குறள்கள் உண்டு... வேள்வி எனும் சொல் எத்தனை குறள்களில் வருகிறதோ, அதன் விளக்கத்தை அறிக... ஐயன் நெஞ்சறிந்து அறிக... அதற்கும் ஒரு கணக்கியல் உண்டு...!

வீடு என்பது முப்பாலில் கிடையாது... உறுதிப் பொருட்கள் கொண்டதே திருக்குறள்...

https://dindiguldhanabalan.blogspot.com/2019/11/Regime-and-Government-End-Part.html

மேற்கண்ட இணைப்பில் உள்ள பதிவின் முடிவில் ஒரு கேட்பொலி உண்டு... முழுவதும் கேளுங்கள்... பிறகு ஒரு பதிவு போடுங்கள் பார்ப்போம்...

நெல்லைத் தமிழன் said...

நல்லவேளை.... கவிமணி, வெளிப்படையாக, ஆட்டின் கழுத்தை அறுத்துப் பொசுக்கி நீர் ஆக்கிய யாகத்து அவியுணவை ஈட்டும் கருணை இறையவர் கைகளில் ஏந்திப் புசிப்பரோ கூறுமையா' என்று புத்தர் வரலாறு எழுதும்போது எழுதியிருக்கிறார். இல்லையென்றால், புதிய தமிழ் அர்த்தம் கண்டுபிடிக்கும் புத்திசாலிகள், ஆகம் என்பதற்கு மனம் என்னும் அர்த்தம் உண்டு, அவி உணவு என்பது, அவித்த உணவு, அதாவது சாதம் என்றும் அர்த்தம் சொல்வார்கள்.

Post a Comment