ஒரு உணர்வாகவோ
ஒரு நிகழ்வாகவோஒரு சொல்லாகவோ
என்னை அசைத்துப் போகிறது
ஒரு சிறு அதிர்வு
அதுவரை எங்கோ புதைந்து கிடந்த
அனுபவக் கனல்
மிக இயல்பாக அதனுடன்
தன்னை இணைத்துக் கொண்டு
எரிக்கத் துவங்குகிறது
அதிர்வுடன்
அனுபவக் கனல் இணைய
உணர்வு அதை ஊதிப் பெரிதாக்க
உள்ளமெங்கும் ஒளியும் உஷ்ணமும்
என்னை உலுக்கிப் போடுகிறது
என்னுள்
சிதறிக் கிடந்த வார்த்தைச் சுள்ளிகள்
தானாக அதனுடன் இணைய
சிறு பொறி வேள்வித் தீயாக
விஸ்வரூபம் எடுக்கிறது
என்னால்
எனச் சொல்லிக் கொள்ள ஏதுமில்லை
சிதறிக் கிடப்பவைகளை
சேகரித்து தருபவனாக மட்டுமே இருப்பதால்
பெருமைப்பட ஏதுமில்லை
ஆயினும் வழக்கம்போல
"அடுத்த முறையேனும்
நல்ல படைப்பைத் தர முயற்சி செய் "என
முகம்சுளித்து வெறுப்பேற்றிப் போகிறது
திருப்தியடையாத கவிமனது
3 comments:
வணக்கம் சகோதரரே
பதிவு அருமை. நல்லதொரு சொல்லாடல்கள். அருமையான நடையமைப்பு. உங்கள் வார்த்தைக் கோர்வைகள் என்றுமே அழகான, கருத்தாழம் மிக்க கவிதைகளைத்தான் கொடுத்து கொண்டிருக்கின்றன. இன்றைய தங்கள் கவியையும் ரசித்து வாசித்தேன்.
ஆனால்,
/ஆயினும் வழக்கம்போல
"அடுத்த முறையேனும்
நல்ல படைப்பைத் தர முயற்சி செய் "என
முகம்சுளித்து வெறுப்பேற்றிப் போகிறது
திருப்தியடையாத கவிமனது/
இது (இந்த வரிகள்) எனக்கானதாக நான் உணர்கிறேன். காரணம் என் படைப்புக்களில் என்றுமே என் மனது திருப்தி கண்டதில்லை. அதற்கான முயற்சிகளையும் தங்களின் கூற்றுப்படி செய்து கொண்டேதான் உள்ளேன். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரரே.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
பொறி உண்டாகி கனல் மூண்டதும் வார்த்தைகள் வாகாக வந்து அமைகின்றன. சிறப்பு.
சிறப்பு.
Post a Comment