Wednesday, December 11, 2024

புலி வேட்டை...

 அவர்களுக்கு நிச்சயமாய்த் தெரியும்


யானையக் கொண்டு
பிச்சை எடுப்பதை விட
எடைத் தூக்கப் பயிற்றுவிப்பது
எளிதானதில்லை என்று.

ஆயினும் அவர்கள்
எடைத் தூக்க பயிற்றுவித்தலையே செய்கிறார்கள்

அவர்களுக்கு உறுதியாய்த் தெரியும்

புல்லாங்குழல்கொண்டு
அடுப்பூதுவதை விட
இசைப்பயிற்சி மேற்கொள்வது
சிரமமானது என்று

ஆயினும்
இசைப்பயிற்சிப் பெறுதலையே நாளும் செய்கிறார்கள்

அவர்களுக்கு திட்டவட்டமாய்த் தெரியும்

ஜாதி மதம் கொண்டு
ஒற்றுமைப் படுத்துவதை விட
வேற்றுமைப் படுத்துதலே மிக எளிதென்று

ஆயினும் அவர்கள்
ஒற்றுமைப் படுத்தவே நாளும் முயல்கிறார்கள்

அவர்களுக்குச் சந்தேகமின்றித் தெரியும்

சமூக வலைத் தளங்களில்
பயனற்ற சுவாரஸ்யங்களுக்கு இருக்கும் மதிப்பு
பயனுள்ள உண்மைகளுக்கு இல்லை என்று

ஆயினும் அவர்கள்
பயனுள்ள உண்மைகளையே நாளும் பதிவு செய்கிறார்கள்

காரணம் அவர்கள் அனைவருக்கும்
எவ்வித ஐயமுமின்றித் தெரியும்....

எலி வேட்டையாடித்
ஜெயிக்கக் கிடைக்கிற மகிழ்வை விட
புலி வேடையாடி
தோற்பதில் உள்ள ஆனந்தத்தின் அற்புதம் 

5 comments:

ஸ்ரீராம். said...

உண்மை. ஆமாம், யார் அவர்கள்?

Yaathoramani.blogspot.com said...

நீங்களும் தான்

Jayakumar Chandrasekaran said...

இன்றைய பதிவு யாருக்காக? ஸ்ரீராமுக்கா, அவர் அவ்வளவு பயனுள்ள பதிவுகளா இடுகிறார்?

கவிதையின் கருத்துக்கு மாறாக இன்று எலி வேட்டையாடுபவர்கள் தான் தோற்கிறார்கள்.

Yaathoramani.blogspot.com said...

உம்...என்பதன் பொருள் பயனுள்ள தை எழுதும் அனைவருக்..கும் தான்..

Anonymous said...

சிரமமானவை என்று தெரிந்தும் அதை முன்னெடுத்துச் செய்பவர்கள் இருக்கிறார்கள் தான்...அதில் திருப்தி கிடைக்கிறதுதான். பதிவின் கருத்து உண்மை என்றாலும் மாற்றாகத்தானே நடந்துகொண்டிருக்கிறது.

கீதா

Post a Comment