Monday, July 21, 2025

இணைந்து மகிழ்வோம்..

 நான் விழிக்கும் முன்பே

கதிரவன் விழித்துத் தன் ஒளிக்கரங்களால்
உலகை அணைக்கத் துவங்கியிருந்தான்

தோட்டத்துப் பூக்களும்
மலர்ந்து சிரித்து மணம் பரப்பி
சூழலை ரம்மியமாக்கி கொண்டிருந்தன

சின்னஞ் சிறு பறவைகளும்
கூடுவிட்டுக் வெளிக் கிளம்பி
சந்தோஷக் குரலெழுப்பித் திரிந்தன

இவையெல்லாம்
அவைகளில் இயல்பு இயற்கையின் நியதி என
எண்ணித் திரிந்தவரை
எனக்கும் அவைகளுக்குமான உறவு
அன்னியமாகத்தான் இருந்தது

கதிரவனின் அதிகாலை விழிப்புக் கூட
என் தூக்கம் கலைத்து
என்னை விழிக்கச் செய்யத்தான்
என புரிந்தது முதல்

மலர்கள் சிரித்து மகிழ்ந்து
மணம் பரப்புதல் கூட
என்னைக் கவரத்தான்
என அறிந்தது முதல்

பறவைகளின் சந்தோஷப் பாடலும்
உற்சாகப் பவனியும் கூட
எனக்குள் அதை விதைக்கத்தான் என
உணர்ந்து கொண்டது முதல்

"உலகம் பிறந்தது எனக்காக
ஓடும் நதிகளும் எனக்காக " எனச் சொன்ன
கவிஞனின் உள்ளத்துணர்வு மட்டுமல்ல

விலகி நின்று ரசிப்பதை விட
இயைந்து போவதிலும
இணைத்துக் கொள்வதிலும் உள்ள
உண்மையான சுகம்
மெல்ல மெல்ல புரியத்தான் செய்கிறது

Friday, July 18, 2025

அந்தக் கடைசி நொடி..


வினு சக்கரவர்த்தி போன்ற ஆஜானுபாவமான
 உடற்கட்டும்பெரிய மீசையும் கிரீடமும்
கையில் கதாயுதமும் கொண்டு
மூன்று கதவுகளும் இறுக்கமாகப் பூட்டி இருந்தும்
 உள்ளேவந்ததை வைத்தே எனக்கு புரிந்து போயிற்று
இவர் "எமதர்மன்தான் " என்று

ஆமை புகுந்த வீடு அமீனா புகுந்த வீடு
எமன் புகுந்தவீடும்உருப்பட்டதாக சரித்திரம் இல்லை
.இருந்தாலும் மரியாதை நிமித்தமாக
"வாருங்கள் வாருங்கள்
நான் ரெடி போவோமா ?"என்றேன்

எமர் (ன் )என்னை ஒரு மாதிரியாகப் பார்த்தார்

"எத்தனை யுகங்களோ எவர் எவர் உயிரையோ
எடுத்திருக்கிறேன்இதுவரை யாரும் உன்போல
 நான் ரெடி போவோமா எனச் சொன்னதில்லை
உனக்கு சாவென்றால் பிடித்தமா இல்லை
வாழ்வு வெறுத்துப் போயிற்றா "

"இல்லை இல்லை நீங்களும் மூன்று தபால்
 போட்டுவிட்டீர்கள்நான் தான் பதில் போடமுடியவில்லை.
ஆனாலும் மனத்தளவில் ரெடியாகிவிட்டேன்
அதுதான் தங்கள் வரவு அதிர்ச்சி அளிக்கவில்லை "என்றேன்

"நீர் எழுத்தாளர் எனத் தெரியும் அதுதான்
பொடிவைத்துப் பேசுகிறீர்நான் கோடிவீட்டுக்
 குப்புசாமியைத்தான் கொண்டுபோக வந்திருக்கிறேன்
உம்மைக் கொண்டுபோக இல்லை
என்வே பதற்றப் படாமல் அமரும்
உன்னிடம் எமக்கு ஒரு கேள்விக்கு பதில் வேணும்
ஒளிக்காமலும் பயப்படாமலும் பதில் சொல்லும் " என்றார்

நான் சாகப் போவதில்லை எனத் தெரிந்ததும்
எப்படித்தான்தைரியம் வந்தது எனத் தெரியவில்லை
சோஃபாவில் நன்றாக
சொகுசாக சாய்ந்து உட்கார்ந்து கொண்டேன்.
வெட்டாத கத்திக்கும்உயிரெடுக்காத எமனுக்கும்
 எதற்குப் பயப் படவேணும்

பின் எமரே தொடர்ந்தார் "இந்திரலோகத்தில்
எல்லோரும்என்னைஏகமாகப் பேசுகிறார்கள்.
சாவின் கடைசி நிமிடங்களில் யாரையும்பேசவிடாது
 அவர்களைக் கொன்றுவிடுகிறேனாம்
.இதனால் அவர்கள் வாழ்ந்த வாழ்வில்
அறிந்து கொண்டதைபுரிந்து கொண்டதை
சொல்ல முடியாமலே போகிறதாம்
அதனால்தான் பூமியில்பஞ்சமா பாதகங்கள்
பெருத்துப் போனதாகச் சொல்லுகிறார்கள்
எனக்கு அது உடன் பாடில்லை
நீ என்ன சொல்கிறாய் "என்றார்

"அவர்கள் சொல்வதுபோல் கொஞ்சம்
பரீட்சித்துப் பார்க்கலாமே " என்றேன்

"அதைச் செய்யாமல் உன்னிடம் வருவேனா.
ஒருவனிடம் கனவில் தோன்றிஅடுத்தவாரம்
 உன் உயிர் எடுக்கப் போகிறேன் எனச் சொன்னேன்
அதுவரை யோக்கியனாக இருந்தவன்
அந்த ஒருவாரத்தில் ஆடித் தீர்த்துவிட்டான்
முப்பது வருடம் செய்யாத பாவங்களை
ஒரு வாரத்தில் முடித்துவிட்டான்
சரி. அடுத்தவனிடம் சொல்லிப் பார்த்தேன்.
அவன் அந்த ஒரு வாரமும்
செத்த பிணமாகத்தான் உலவிக் கொண்டிருந்தான்.
சரி அதுதான் போகட்டும் என
கடைசி நிமிடங்களில் ஒருவனுக்கு தகவல் சொல்லி
அரை மணி நேரம்கெடு கொடுத்தும் பார்த்தேன்
முழு நேரத்தையும் 'பினாத்தியே "தீர்த்துவிட்டான்
இதுவரை எவனுக்கும் தான் வாழ்வில்
 புரிந்து கொண்டதை அடுத்தவருக்குச்
சொல்லிச் செல்லவேண்டும் என்கிற எண்ணம்
 சுத்தமாக இல்லை " என்றான்

எனக்கு என்ன சொல்வதென்று புரியவில்லை

"அதுதான் இப்போது அடுத்த முயற்சியாக
 உன்னிடம் வந்துள்ளேன்உன்னை இப்போது
 கொண்டு போகப் போவதில்லை
உன்னை கொண்டுபோகப் போகும் நாளையும்
 சொல்லப் போவதில்லை
என்வே பயப்படாமல் சொல்லு . நீ இப்போது
சாகப் போகிற நொடியாக இருந்தால்
வாழ்வை அர்த்தப் படுத்துவதாக ஒரு செய்தி
சொல்லும்படியாகச் சொல்
எனச் சொன்னால் என்ன சொல்லுவாய் " என்றான்

இது நான் வாழ்க்கையில் சந்தித்த கேள்விகளிலேயே
கடினமான கேள்வியாகவும்
புதிரான கேள்வியாகவும் பட்டது.
சிறுவயது முதல் இன்றுவரை நடந்த அனைத்து
 நிகழ்வுகளையும் ஒவ்வொன்றாக
அசைபோட்டுப் பார்த்தேன்
நல்ல கல்லூரியில் இடம் பிடிக்க
பள்ளியில் மெனக்கெட்டது
வேலைக்கான தயாரிப்புக் கூடமாக
கல்லூரியை க் கருதியது
நல்ல இல்லறம் அமையவே
வேலை எனக் கொண்டது
குழந்தைகளின் எதிர்காலம் கருதியே
பகலிரவாய் உழைத்தது ....
யோசிக்க யோசிக்க மர்மம் விலகுவது போலப் பட்டது
இத்தனை ஆண்டு காலம் உயிரோடுதான்
இருந்திருக்கிறேனே ஒழிய
அந்த அந்த காலங்களில் வாழ வேண்டிய வாழ்க்கையை இரசித்து வாழவே இல்லை
என்கிற உண்மை புரிய வெட்கிப் போனேன்

" ஞாழிகை ஆகிறது ஏதும் உன்னால்
 சொல்ல முடியுமா ' என்றான்

" முடியும் ஒரு வாக்கியமாகச் சொல்லவா
 விவரித்துச் சொல்லவா " என்றேன்

"விவரித்தல் வேண்டியதில்லை
 நான் புரிந்து கொள்வேன் இரத்தினச் சுருக்கமாய் சொல் "

"நேற்றும் இல்லை நாளையும் இல்லை
அந்த அந்த நொடியில்
வாழுதலே வாழ்க்கை " என்றேன்

எமன் முகத்தில் பரவசம் படரத்துவங்கியது

"சபாஷ் சபாஷ் "எனக் கூச்சலிட்டபடி என் முதுகில்
 ஓங்கி ஒரு தட்டு தட்டிவிட்டு
மறைந்து போனான் நான் நடு நடுங்கிப் போனேன்

வலி பொறுக்காது நான் லேசாக உடல் அசைக்க
 உடல் பாரமாகத் தெரிந்தது
கண்களை கஷ்டப்பட்டு திறக்க என்னைச் சுற்றி
ஒரு பெரும் கூட்டமே நின்று கொண்டிருந்தது

"அபாயக் கட்டத்தைத் தாண்டிவிட்டார்
இனி பயமில்லை ..  இன்னும் என்ன என்னவோ
சொல்லிக் கொண்டிருந்தார் குடும்ப டாக்டர்

Saturday, July 12, 2025

இன்கவி பெறலாம் யாரும்..

 விளமதும் மாவும் தேமா

வகையென அமையும் வண்ணம்
இலக்கணக் கவிதை ஒன்று
இலகுவாய்ப் புரியு மாறு
இயற்றிட நானும் நாளும்
பலமுறை முயன்றுப் பார்த்தேன்
பயனிலை தோற்றே வீழ்ந்தேன்

தினம்தினம் இதுபோல் நானும்
தவித்திடும் நிலையைக் கண்டு
மனக்குறைப் போக்கும் வண்ணம்
மகிழ்வது கொள்ளும் வண்ணம்
எனதுயிர் நண்பன் ஓர்நாள்
ஒருவழி எனக்குச் சொன்னான்
வினவிடக் கேட்டு நானே
வியப்பினில் உச்சம் போனேன்

"கரையது உயர்ந்து நன்றாய்
இருபுறம் இருக்க நீரும்
சிறையது பட்டாற் போல
அடங்கியே நடத்தல் போல
வரையரை ஒன்றை நீயும்
வகுத்தபின் வார்த்தை தன்னை
சிறையிட நினைத்தால் போதும்
சிலநொடி கவிக்குப் போதும்

"இதந்தரு மனையின் நீங்கி"
எனவளர் கவிதை தன்னை
சுதந்திரத் தாபம் கூட்டும்
சுடர்கவி பாடல் தன்னை
நிதமொரு முறையே நீயே
நயம்பட படித்தால் போதும்
மதகதைக் கடக்கும் நீராய்
கவியது பாயும் " என்றான்

தினம்தினம் காலை மாலை
திருத்தமாய் பாடல் தன்னை
மனனமே செய்தல் போல
மகிழ்வுடன் சொல்லச் சொல்ல
தனத்தனத் தான தான
எனுமொலி இயல்பாய் என்னுள்
இணக்கமாய் இணைந்து கொள்ள
உடன்கவி பிறக்க லாச்சு

இங்கணம் இப்போ தெல்லாம்
எப்பொருள் குறித்தும் பாட
சங்கடம் கொள்வ தில்லை
சந்தமே முதன்மை யென்னும்
சங்கதி அறிந்த தாலே
சஞ்சல மேதும் இல்லை
இம்முறை முயன்றால் நாளும்
இன்கவி பெறலாம் யாரும்