நாவும் மனமும் இனிக்க
நவின்று மகிழ்ந்துச் சுகிக்கஊரும் நாடும் என்னை
உச்சி மோந்து இரசிக்க
பேரும் புகழும் நிழலாய்
விடாது என்னைத் தொடர
நூறு கவிகள் நாளும்
பாட வேணும் நானும்
நாளும் கண்டு இரசித்த
அழகுக் கோலம் எல்லாம்
நாளும் உணர்ந்துத் திளைத்த
நல்ல உணர்வு எல்லாம்
நீளும் எனது கவியில்
இயல்பாய் இணையும் வண்ணம்
நாளும் கவிகள் நூறு
நவில வேண்டும் நானே
கற்றுத் தேர்ந்தோர் உறவில்
கிடைத்தக் கேள்வி ஞானம்
குட்டுப் பட்டு நாளும்
கற்ற உண்மை ஞானம்
முற்றும் விடுதல் இன்றி
முழுமை பெற்ற தாக
நித்தம் நூறு கவிதை
படைக்க வேண்டும் நானே
வெள்ள நீரைப் போல
விரைந்து பெருகும் வண்ணம்
உள்ளம் தன்னில் கவிதை
பொங்கிப் பெருகும் வண்ணம்
வெள்ளைப் பூவில் அமர்ந்து
வீணை மீட்டும் வாணி !
எந்த னுள்ளும் அமர்ந்து
அருளைப் பொழிய வா நீ !
1 comment:
வணக்கம் சகோதரரே
பதிவு அருமை. வாணி தேவியை நோக்கி வேண்டும் கவிதை அருமை. ரசித்துப் படித்தேன். கலைவாணி கண்டிப்பாக நல்லருள் தரட்டுமென நானும் பிரார்த்திக்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
Post a Comment