நமது நாட்டின் தேசிய முழக்கமான வந்தே மாதரம் பாடலுக்கு 150-வது வயது துவங்குகிறது. இதை எழுதியவர் வங்க நாவலாசிரியர் பங்கிம் சந்திரர். இதுபற்றிய எனது கட்டுரை டிசம்பர் மாத அமுதசுரபி இதழில் வந்துள்ளது.
ஆங்கிலேயரை
அலறவைத்த
வந்தே மாதரம்
இந்தியாவில் அன்று…. வந்தே மாதரம் பாடல் நாட்டு மக்களின் புகழ்பெற்ற தாரக மந்திரமாக விளங்கியது. நாட்டின் சுதந்திரத்துக்கு முன்னரே எழுதப்பட்ட இப்பாடல் அன்றே மக்கள் மனதில் கலந்து, உறைந்து, சுதந்திரத் தீயை மேலும் கனன்று எரியச் செய்தது என்றால் அது மிகையல்ல!
சீரிய கருத்தான இப்பாடல் அன்று ஆங்கிலேய அடக்குமுறைக்கு எதிரான ஒப்பற்ற விடுதலை முழக்கமாக இருந்தது. நாட்டு மக்களிடையே விடுதலை தாகத்தை இப்பாடல் மேலும் தீவிரமாகத் தூண்டி விடக்கூடிய ஆபத்தை உணர்ந்த ஆங்கிலேய ஆட்சியாளர்கள் இப்பாடலை பொது இடங்களில் பாடுவதை தடை செய்தனர்; தடையை மீறிய விடுதலைப் போராட்ட வீரர்களை சிறை வைத்தனர். ரவீந்திரநாத் தாகூர் உட்பட பலரும் ஆங்கில அரசின் தடைகளைப் புறக்கணித்து இப்பாடலை சற்றும் அச்சமின்றி பல்வேறு காலகட்டங்களில் பொது இடங்களில் பாடினர்.
அன்று பிரிட்டிஷார் ஆட்சியில் `Save the Queen’ என்று தொடங்கும் இங்கிலாந்து இராணியைப் புகழ்ந்து பாடும் பாடலை இந்திய மக்கள் அனைவரும் பாட வேண்டும் என கட்டாயமாக்கினார்கள்.
இதற்கு போட்டியாக எழுதப்பட்ட பாடல் தான் வந்தே மாதரம்!
1876ல் உருவான வந்தே மாதரம் எனும் இப்பாடலுக்கு.. `தாய் மண்ணே… உனை வணங்குகிறேன்’ என்று பொருளாகும். இப்பாடலை உருவாக்கியவர் பிரபல வங்க இலக்கியவாதியான பங்கிம் சந்திர சட்டர்ஜி. இவரது படைப்புகளில் ஒன்றான ஆனந்த மடம் நாவலில் இடம் பெற்ற பாடலாகும். இது இந்திய இலக்கிய வரலாற்றில் மிக முக்கியமான நாவல்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது இது 1770ல் வங்கத்தில் ஏற்பட்ட கடும் பஞ்சத்தை அடிப்படையாகக் கொண்ட நெகிழ்ச்சியான கதையாகும்.
நாட்டின் பல லட்சக்கணக்கான வாசகர்கள் படித்து மகிழ்ந்த இந்த நாவல், அன்று வெற்றிகரமான மேடை நாடகமாக நடத்தப்பட்டு, பின் 1952ல் பிருத்வி ராஜ் கபூர், பாரத் பூஷண், பிர்தீப் குமார், கீதா பாலி முக்கிய பாத்திரங்களில் நடிக்க, ஹேமன் குமார் குப்தா இயக்கத்தில் இந்தி திரைப்படமாகவும் வந்து நல்ல வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.
பின், லீடர், அமர்ஆஷா ஆகிய பிரபல திரைப்படங்களில் வந்தே மாதரம் பாடலுக்கான சில காட்சியமைப்புகளும் இடம்பெற்றன..
நாட்டின் சுதந்திரத்திற்குப் பிறகு, இது 1950ல் இந்தியக் குடியரசின் தேசியப் பாடலாகவும் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
ஆங்கிலேய அரசின் கீழ் பணிபுரிந்த போதே, வந்தே மாதரத்தை எழுதும் எண்ணம் பங்கிம் சந்திரரின் மனதில் இருந்ததாகச் சொல்லப்படுகிறது.
பங்கிம் சந்திரர், இப்பாடலை தனது தாய் மொழியான வங்க மொழியில் சமஸ்கிருத மொழிச் சொற்களைக் கொண்டு எழுதினார். எனினும், முதலில் இப்பாடலில் உள்ள சில சொற்களை உச்சரிப்பதில் இருந்த சிரமங்களால் இப்பாடல் அன்று பெரிதும் விமர்சிக்கப்பட்டது. இப்பாடலுக்கு ஜாதுநாத் பட்டாச்சார்யா மெட்டமைக்க, ரவீந்திரநாத் தாகூர் இசையமைத்தார்.
"எதிர் வரும் காலங்களில் இப்பாடல் பிரபலமடைவதை காண நான் இல்லாமல் மறைந்து போகலாம். ஆனால், இது ஒவ்வொரு இந்தியனாலும் பல்லாண்டு காலம் தொடர்ந்து பாடப்படும்" என்று அன்றே தன் பாடல் குறித்த சிறப்பை தீர்க்க தரிசனமாகக் கூறினார் பங்கிம் சந்திரர்.
இப்பாடலின் பெருமை கருதி, மஹாகவி பாரதி இதை இருமுறை மொழி பெயர்த்திருக்கிறார். முதலில் `இனிய நீர்ப் பெருக்கினை! இன்கனி வளத்தினை!....’ எனத் தொடங்குகிறது. அடுத்தது… `நளிர்மணி நீரும் நயம்படு கனிகளும்’ எனத் தொடங்குகிறது.
இவ்விரு மொழி பெயர்ப்புகளிலும் வந்தே மாதரம் என்ற சொற்றோடரை, அது மந்திர சக்தி நிறைந்தது எனக் கருதியதால், பாரதியார் அதை மொழி பெயர்க்காமல் அப்படியே பயன்படுத்தியுள்ளார். இதில் `நளிர் மணி நீரும்..’ என்ற பகுதியை இசையரசி எம்.எஸ். சுப்புலட்சுமி பாடியுள்ளது குறிப்பிடத்தக்கது!
இப்பாடல் வரிகளை அடிப்படையாக வைத்து பல்வேறு இசை மற்றும் கவியாக்க முயற்சிகள் செய்யப்பட்டுள்ளன. இப் பாடலின் பல்வேறு வடிவ இசைப் பதிப்புகள் இருபதாம் நூற்றாண்டு முழுக்க வெளியாகின.
அகில இந்திய வானொலி நிலையங்களில் ஒலிபரப்பப்படும் வந்தே மாதரம் பாடலுக்கு பண்டிட் ரவி சங்கர் இசையமைத்ததாகச் சொல்லப்படுகிறது. இன்றும் வந்தே மாதரம் பாடல் இந்தியர்கள் தங்கள் நாட்டுப்பற்றை வெளிப்படுத்தும் ஓர் வீர முழக்கமாகவே கருதப்படுகிறது. முதலில் இதுவே அன்று இந்தியாவின் தேசீய கீதமாக கருதப்பட்டது. பின் சில காரணங்களால் தாகூரின் `ஜன கண மன..’.. பாடலே நாட்டுப் பாடலாக முடிவு செய்யப்பட்டது.,
இருப்பினும் இப்பாடலின் சிறப்பு கருதி முதல் இரண்டு வரிகளை மட்டும் நாட்டுப் பாடலாக அறிவிப்பது என அன்றைய காங்கிரஸ் அரசு முடிவு செய்தது. எனவே, கடந்த 2006, செப்டம்பர் 7 அன்று வந்தே மாதரம் நாட்டுப் பாடலாக அறிவிக்கப்பட்டு 131 ஆண்டுகள் நிறைவடைந்ததைக் கொண்டாடும் விதமாக இந்தியா முழுக்க அனைத்துப் பள்ளிகளிலும் காலை இறை வணக்கத்தின் போது தவறாமல் இப்பாடலைப் பாட வேண்டும் என அன்றைய காங்கிரஸ் அரசு அறிவித்தது..
இப்பாடல் 1876ல் எழுதப்பட்டதால், கடந்த 7-11-2025 அன்று தனது 150-வது வயதை தொட்டுள்ளது! இந்த சிறப்புக்காக மத்திய அரசின் பல அலுவலகங்கள் மற்றும் இந்திய ரயில்வே துறை, பல மாநில அரசுகளின் பல துறைகளிலும் காலை இப்பாடல் ஊழியர்கள் மற்றும் பொது மக்களால் நினைவுகூர்ந்து பாடப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும்!
இப்பாடலின் நினைவாக மத்திய அரசு தில்லியில் ஏற்பாடு செய்த மாபெரும் கவியரங்கம் மற்றும் கருத்துச் சொற்பொழிவுகள் ஜனாதிபதி மற்றும் பிரதமர் மோடி தலைமையில் நடந்தன..அத்துடன் பங்கிம் சந்திரர் நினைவாக மத்திய அரசால் ஏற்கனவே அவரது நூற்றாண்டு விழாவில் தபால் தலை வெளியிடப்பட்டுள்ளது. இருப்பினும் மீண்டும் ஓர் நினைவு தபால் தலையும் 150வது ஆண்டைக் குறிக்க ஓர் நாணயமும் வெளியிடப்பட்டது. வாழ்க பாரதம். வந்தே மாதரம்!
_________
By sridar ex.hindu
No comments:
Post a Comment