Thursday, February 8, 2018

தமிழகத்தின் பெருமைதன்னை தொய்யவிடாது ...

"குற்றம் நிரூபிக்கப்பட்டு
குற்றவாளி என தண்டிக்கப்பட்ட ஒருவரின்
பிறந்த நாளின் போது நீ விடுவிக்கப்படுவாய்"
எனத் தண்டிக்கப்பட்ட குற்றவாளியைப் பார்த்து
 ஒருவன் சில மாதங்களுக்கு முன்னாலோ
சில வருடங்களுக்கு முன்னாலோ
 சொல்லி இருந்தால் ......

சந்தேகமில்லாமல்
 நிச்சயம் அவனைப் பைத்தியம் என்றுதானே
முத்திரைக் குத்தியிருப்போம் /

அப்படிப் பட்ட தேசம்
ஒரு பைத்தியக்காரர்களின் தேசம்
என்றுதானே முடிவு செய்திருப்போம்/

அப்படி அப்போது
முடிவெடுக்கவில்லை என்றால்
 நம்மை அல்லவா எல்லோரும்
 பைத்தியம் என முத்திரைக் குத்தி இருப்பார்கள்/

சரி சரி இப்போதும்
அரசின் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க முடிவை
 ஆதரிக்கவில்லை எனில்
நமக்கு பைத்தியங்கள் எனப்  பெயர் பெறவே
 நிச்சயம்சாத்தியம் /

எனவே  வை.கோ சார் வகையறாக்கள்
ஆதரிக்கும் முன்னே
நாம் இதனை ஆதரித்து
புரட்சியாளர்கள் எனப் பெயர் பெறுவோம் வாரீர்.

தமிழகத்தின் பெருமைதன்னை
தொய்யவிடாது தொடர்ந்துக் காப்போம் வாரீர்

Tuesday, February 6, 2018

அதைப் போலவும்....

எண்ணம் மட்டும்
நல்லதாய்க்  கொண்டால்
நிச்சயம் செயலெல்லாம்
சிறப்பானதாகத்தான் இருக்கும்

அது தெரியத்தான் செய்கிறது

செயலில் மட்டும்
கவனமாய்  இருந்தால்
உறவுகள் எல்லாம்
சிறப்பானதாகத்தான் அமையும்

அது புரியத்தான் செய்கிறது

உறவுத் தெரிவு மட்டும்
சரியாக இருந்தால்
இவ்வுலக வாழ்வே
சொர்க்கமாகத்தான் இருக்கும்

அது நிஜமெனத்தான் தெரிகிறது

ஆயினும் என்ன செய்ய...?

ஆள்பவர்களை மட்டும்
மிகச் சரியானவர்களாக
தேர்ந்தெடுத்துவிட்டால்
நாடு நன்றாக இருக்கும்
எனது தெரிந்தும்

நாமும் நலமாகத்தான் இருப்போம்
எனத் தெரிந்தும்...

பணத்திற்கும்
வேறு எதெதற்கோ
ஆசைப்பட்டு அடிமைப்பட்டு
காலம் காலமாய்
பாழ்ப்பட்டுக் கிடக்கிறோமே
அவதிப்பட்டுக் கிடக்கிறோமே

அதைப் போலவும்....

(முழுவதையும்
விளக்கத்தான் வேண்டுமா என்ன  ? )

Friday, February 2, 2018

இழக்கப் பிறக்கும் ஞானம்

இல்லற வானில்
நாற்பதாண்டுக் காலம்
இணைந்து இன்புற்று உடன் பறந்த
தன் துணை வீழ்ந்து பட..

வேரெடுக்கப்பட்ட
செடியாய்
மெல்ல மெல்ல
தன்னை இழந்து கொண்டிருந்தவனுக்கு
எப்படி ஆறுதல் சொல்வதெனத் தெரியாது
கைகளை மட்டும் இறுக்கப்
பற்றிக் கொண்டிருந்தேன்

எக்கணமும் வெடித்துச் சிதறுவான் போல்
இறுக்கிக் கிடந்தான் அவன்

பின் மெல்ல அவனே
பிதற்றத் துவங்கினான்

"இரவு இத்தனை நீண்டதென
இருள் இத்தனைக் கனத்ததென
தனிமை இத்தனை துயெரென
வெறுமை இத்தனைக் கொடிதென
அவளை இழந்தபின் தான்
இந்த ஒரு வாரத்தில்தான்
எனக்குப் புரிந்து தொலைக்கிறது

பசி இருக்க
உண்ண முடியாதும்
உடல் அயற்சியுற்றும்
உறங்க முடியாதும்
உயிர் இருந்தும்
இயங்க முடியாதும்
என்ன கொடுமையிது " என்றான்

கண்ணீருடன் கலங்கி நின்ற
அவன் நிலை காணக் காண
மனம் பற்றியெரியவும் துவங்கியது

"பாவக்கா கறியில்
உப்புக் கொஞ்சம் குறைந்ததற்காக
நேற்று
ருத்ரதாண்டவம் ஆடிய  எனக்கு"

Sunday, January 28, 2018

இறுதிச் சுற்று ........

தேவையின்றி 
அலட்சியமாய்
உரச உரச
உதிர்ந்த
ஒடிந்த
தீக்குச்சிகளின்
அருமையை
உணரச் செய்து
பதட்டமேற்றிப் போகிறது....

அவசியமாய்
மிகக் கவனமாய்
உரச வேண்டிய
நிலையில்
எஞ்சிக்
கடைசியாய்
கையில் உள்ள
ஒரே ஒரு
தீக்குச்சி

மடத்தனம் மீண்டும் தொடர்கிறது...

படுத்திருப்பவன்
அனுபவித்துத் தூங்காது
தன்னைக் கடப்பவனுக்கு
தான் உயிர்த்து இருப்பதை
நிரூபிக்கவேண்டும் என்பதற்காக
காலாட்டிக் கொண்டிருக்கும்
மடத்தனத்திற்கு
எந்த விதத்திலும்
குறைவாகப்படவில்லை...

அனுபவப்பட்டவன்
அனுபவத்தைப் பாடமாக்கி வாழாது
தன்னைச் சூழ்ந்தவருக்கு
தான் அனுபவமானவன் என்பதை
நிரூபிக்கவேண்டும் என்பதற்காக
எழுதிக் கொண்டிருப்பதும் என்பதுவும்..

இது தெளிவாகத் தெரிந்தும்...

காலாட்டுபவன் கொள்ளும்
அற்ப சுகத்தை
அவனுக்கு விட மனமில்லை
என்பதுபோல்
எழுதும் அற்ப சுகத்தை விட
எனக்கும் மனமினமையால்...

மடத்தனம்
மீண்டும் தொடர்கிறது

Thursday, January 18, 2018

அரண்மனையும் கோவிலும்

மன்னர்களின் அரண்மனைகளில்
பெரும்பாலானவை சிதிலமடைந்து இடிந்து
அழிந்து போக

அவர்கள் கட்டிய கோவில்கள் இன்றும்
புதுப் பொலிவுடன் இருக்கக் காரணமே
மன்னர்கள் கோவில்களை மக்களின் சொத்தாக
அவர்களை உணரவைத்ததுதான்

அதைப் போன்றே அரசு மற்றும் ,தொண்டு
நிறுவங்கள் தங்கள் பொறுப்பில் என்னதான்
செய்து கொடுத்தபோதும், அதில் சிறிதேனும்
மக்களின் பங்களிப்பில்லை எனில் நிச்ச்யம்
அது தரிசாகத்தான் போகும்

அதனாலேயே நாங்கள் சார்ந்திருக்கிற
சேவைச் சங்கமான உலக அரிமா சங்கம் மூலம்
எந்தச் சேவையைச் செய்தாலும் உடலுழைப்பாகவே
பொருளாகவோ பணமாகவே எங்கள் பகுதியைச்
சார்ந்தவர்களிடம் சிறிய பங்கேனும் பெறாமல்
எந்தச் சேவையையும் செய்வதில்லை

அந்த வகையில் எங்கள் பகுதியில் பிரதான
சாலை வெறும் காட்டுச் செடிகளாலும்
முட்செடிகளாலும் சூழப்பட்டு கவனிப்பாரற்ற
அனாதைச் சாலைகள் போல இருந்தது

குறைந்த பட்சம் காலையில் நானூறு ஐநூறு
நபர்களுக்கு மேல் காலை மாலை நடைபயிற்சி
மேற்கொள்வார்கள்

இதனை ஒரு மனோரம்மியமான நடைப்பகுதியாக
மாற்றும் நோக்கில் சில பகுதிகளைத் தேர்ந்தெடுத்து
அருகில் இருந்த சில நல்ல உள்ளங்களை அணுகி
சாலையில் பூச்ச்செடிகளை  நட்டுவைத்தோம்
பணம் பெற்றதும், நட்டு வைத்ததும், சிலர்
பாராட்டி வைத்ததும், எங்கள் பகுதியிலும்
செய்யுங்கள் நாங்களும் எங்கள் பங்களிப்பைத்
தருகிறோம் என்பதெல்லாம் எங்களுக்கு
பெரும் மகிழ்ச்சியைச் தரவில்லை

மாறாக சில நாட்கள் கழித்து ஒரு நாள்காலை
நடைப்பயிற்சி மேற்கொள்ளுகையில்
அந்தச் செடிகளை தன்னுடைய செடிகளாக
மதித்து ஒரு பள்ளி மாணவி இரசித்து
நீரூற்றிக் கொண்டிருந்தாள்

நிச்சயமாக இனி இந்தச் செடிகள் குறித்து
நாங்கள் கவலை கொள்ளவேண்டியதில்லை
அது அரண்மனை போலல்லாது நிச்சயம்
கோவில்கள் போல என்றும் பொலிவுடன்
திகழும் என்ப்தைச் சொல்லவும் வேண்டுமோ ?


Wednesday, January 17, 2018

அடுத்து யாரோ ?

முன்பெல்லாம் தன்னைச் சமூகம்
திரும்பிப் பார்க்கும்படிச் செய்ய வேண்டுமெனில்
சமூகம் கவனித்து இரசிக்கும்படியாக 
இதுவரை யாரும் சொல்லிச் செல்லாத ஒன்றை
மிக அழகாக சொல்லிச் செல்வார்கள்

இப்போதெல்லாம் சமூகம் தன்னைக்
கவனிக்க வேண்டுமெனில் ஒரு நல்ல
சங்கீதக் கச்சேரிக்கிடையில் தகரத்தைத்
தட்டுபவன் போல்

சமூகமே எரிச்சலடையும்படியாக
சமூக அமைதியைக் கெடுக்கும்படியாக
ஏதேனும் ஒன்றை வாந்தி எடுத்துப் போகிறார்கள்

முதலில் வைரமுத்து, பின் ராஜா
இப்போது நைனார் நாகேந்திரன்
அடுத்து யாரோ ?