Saturday, April 9, 2011

இல்லாள்

 அன்று கோவிலில்
வழக்கத்திற்கு மாறாக
பெண்கள் கூட்டம் அதிகம்இருந்தது

உபன்யாஸகர்
உணர்ச்சிக் கொந்தளிப்பின்
உச்சத்தில் இருந்தார்

"நம் முன்னோர்கள்
எவ்வளவு தெளிவானவர்கள்
ஒரு சிறு சொல்லை
கவனித்துப்பாருங்கள்
அதில்தான் எத்தனை அர்த்தமிருக்கிறது

தமிழில் இல்லான் என
ஆண்களைக் குறிப்பதில்லை
ஏனெனில் அது
ஏதும் இல்லாதவன்
என்பதைதான் குறிக்கும்
ஆனால்
இல்லாள் என்பதை எடுத்துக்கொள்ளுங்கள்
அது இல்லத்தை ஆள்பவள்
என்பதையல்லவா குறிக்கிறது "என்றார்

கூட்டதில் இருந்த பெண்கள்
ஒருவரை ஒருவர்
பெருமையாகப் பார்த்துக் கொண்டனர்

வழக்கம்போல
என்னைக் குழப்பும் குழப்பம்
இப்போது
ரொம்பக் குழப்பியது

பெண்கள்
பிறந்து வளர்ந்த வீட்டை
திருமணத்திற்குப்பின்
பிறந்த வீடு என்கிறோம்

உடல் பொருள் ஆவி
அனைத்தையும் கொடுத்து
செழித்தோங்கச் செய்யும் வீட்டை
புகுந்த வீடு என்கிறோம்

வயது முதிர்ந்து தளர்ந்து
மகன் மகளை
அண்டி வாழ்கையில்
மகன் வீடு அல்லது
மகள் வீடு என்கிறோம்

வீட்டையும் வாழ்வையும்
அர்த்தப்படுத்தும் ஆனந்தப்படுத்தும்
அவளுக்கென வீடு
இல்லவே இல்லை என
மிகத் தெளிவாகச் சொன்னதை
ஒரு எழுத்துக்கான  விளக்கத்தை  மட்டும்
மாற்றிச சொல்லி
எல்லோரையும் ஏன் இவர்
இப்படிக் குழப்புகிறார்?

அவர்தான் குழப்புகிறாரா?
இல்லை
நாம்தான் குழம்பியிருக்கிறோமா?
இல்லையேல்
வழக்கம் போல
நான்தான் ரொம்ப குழம்பியிருக்கிறேனா?

16 comments:

சுந்தர்ஜி ப்ரகாஷ் said...

எந்த இல்லத்தையும் ஆள்பவள் என்ற கோணத்தில் அது சரியென்றே படுகிறது.

ஆனால் இந்த மாதிரியான தன்மைகள் எல்லாம் இன்றைக்கு மீதமிருக்கிறதா?

Rathnavel Natarajan said...

நீங்கள் சரியாகத் தான் சொல்கிறீர்கள்.

Narayanan Narasingam said...

நல்ல பதிவு. எனக்கு என்னமோ பெண்களை இல்லாள் என சொல்லி பின்னால் இருந்து ஆண்களே அவர்களை ஆள்கிறார்கள் என்று தோன்றுகிறது.

சாந்தி மாரியப்பன் said...

ஆஹா!!.. இதுக்கு தீர்வே கிடையாதா :-))

G.M Balasubramaniam said...

ஒரு சமயம் இல்லாள் என்பதற்கு ஏதும் இல்லாதவள் என்று பொருள் கொள்ளவேண்டுமோ.?இப்படியெல்லாம் சொல்லியே பெண்களை ஏமற்றுகிறோமா, பெருமைப் படுத்துகிறோமா.

MANO நாஞ்சில் மனோ said...

போச்சு குரு என்னையும் குழப்பிட்டீன்களே....

MANO நாஞ்சில் மனோ said...

ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம் இல்லாள் இல்லையெனில் ஆம்பிளை என்றைக்கும் இல்லான்தான்...

செல்ல நாய்க்குட்டி மனசு said...

எத்தனைக் காலம் தான் ஏமாறுவார் இந்த நாட்டிலே ! இந்த நாட்டிலே !

RVS said...

மனோ சொல்றது சென்ட் பர்சென்ட் கரெக்ட்டு. ;-)
நீங்க சொல்ற மாதிரியும் சொல்லலாம்.. சுந்தர்ஜி சொல்றா மாதிரியும் சொல்லலாம்.
பாசிடிவ்-ஆ எடுத்துக்கணும்னா இல்லத்தை ஆள்பவள் கரெக்க்டா இருக்கிற மாதிரி தெரியுதுங்க... ;-))

வை.கோபாலகிருஷ்ணன் said...

உபன்யாசகர் சொன்னது புரிந்தது போலவும் பெண்களைப் பெருமைப்படுத்துவது போலவும் நினைத்து அந்தப்பெண்கள் போலவே நானும் மகிழ்ந்தேன்.

பிறகு உங்கள் விளக்கத்தின் மூலம் பிறந்த வீடு, புகுந்தவீடு, மகன் வீடு, மகள் வீடு என்று இருக்கும் இந்தப்பெண்களுக்கு ஏது தனி வீடு என்பதும் தெளிவாகத் தெரிய வந்தது.

இந்த இடத்தில் தான் குழம்ப ஆரம்பித்தேன்.

கடைசியில் குழப்பியது யார், குழம்பியது யார்?

அவரா, நானா, நீங்களா என்பது போல ஒரு கேள்வியை எழுப்பி என்னை மீண்டும் நன்கு ஒரேகுழப்பாகக்குழப்பி, குழப்பம் தான் என்று தெளிவு படுத்திவிட்டீர்கள்.

அருமையானதொரு குழப்பம் ஏதும் இல்லாத மிகத்தெளிவான படைப்பு.

ரசித்து மகிழ்ந்தேன்.

பாராட்டுக்கள். தொடர்ந்து எழுதுங்கள்.

குறையொன்றுமில்லை. said...

ஐயோ நல்லா குழப்புரீங்களே.

வெங்கட் நாகராஜ் said...

ஏற்கனவே நிறைய குழப்பம். இப்போது புதியதாய் ஒரு குழப்பம் வேறு சேர்ந்து விட்டது ரமணி சார். எது சரி நீங்களே சொல்லி விடுங்கள் – குழப்பம் தீர்ந்தவுடன் :)

S.Venkatachalapathy said...

ரிஷி மூலம், நதி மூலம் போல் சொல் மூலமும் அவ்வளவு எளிமையானதல்ல போலும்.
சபாஷ் சரியான குழப்பம்! ஆண்களுக்குப் பெண்களை புரிந்து கொள்வதிலிருப்பதைப் போல.
அப்படியே இருக்கட்டும்.இதுவும் நல்லத்தானிருக்கு!!!!

raji said...

நான் சுந்தர் ஜி யின் கருத்தையே ஆமோதிக்கிறேன்.
ஆனால் இன்றைக்கு இத்தன்மைகள் மிச்சமிருக்கிறதா என்ற ஜி யின் கேள்விக்கு,
அதிக சதவிகிதத்தில் இல்லாவிட்டாலும் முழுதும் மறையவில்லை என்றே
பதில் கூறலாம்.

Anonymous said...

இருப்பவனுக்கு ஒரு வீடு .. ஏதும் இல்லாத இல்லாளுக்கு
இருக்கும் இடம் எல்லாம் தன் வீடே. இது எப்படி இருக்கு ?

Yaathoramani.blogspot.com said...

ஸ்ரவாணி //

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
அருமையான வித்தியாசமான
கருத்துரைக்கும் நன்றி

Post a Comment