Friday, April 15, 2011

உறவுகள் தொடர --ஒரு இலகுவான வழி

உன்னிடம்
இருக்கிறதோ இல்லையோ
எல்லாமும் எப்போதும்
இருப்பது போல
ஒரு பாவனை செய்து கொள்

உணர்வு கலக்காது
விருப்பம் கலக்காது
எப்போதும் பேச
உன்னைத்  தயார் செய்து கொள்

நம்புகிறாயோ இல்லையோ
அதிகம் நம்புவதுபோல்
அவ்வப்போது
சில வாசகங்களை
உதிர்த்துக்கொண்டிரு

அனைவரிடத்தும்
அதிக உரிமை உள்ளவன்போல்
அடிக்கடி காட்டிக்கொள்
தவறுதலாகக் கூட
உரிமை எடுத்துக் கொள்ளாதே
பிறரையும்
உரிமை எடுத்துக்கொள்ள
துளியும் அனுமதியாதே

அதிகம் ஊதப்பட்ட பலூன்
நிச்சயம் வெடித்துச் சிதறும்
அதிக  நெருக்கமும் ஆபத்தானதே
என்வே
 எப்போதும் எவரிடத்தும்
போதிய இடைவெளியை
தொடர்ந்து பராமரி

இப்படியெல்லாம்  இருந்து
எதற்கு அந்த போலி நட்பு என
உள்ளம் துடிக்கிறதா ?
உங்களுக்கு வயதாகிவிட்டது
அல்லது
நீங்கள் பத்தாம்பசலி எனக் கொள்க

ஏனெனில்
குடலுக்காகவும்  உடலுக்காகவும்
உணவு என்பது மாறிப்போய்
நாவுக்காகவும் நாசிக்காகவும்
என மாறி
வெகு காலம் ஆகிவிட்டது

சூழல்பொருத்து உடல்மறைப்பது
ஆடை என்பது மாறிப்போய்
செல்வாக்கு காட்டவும்
ஓரளவு உள்ளுறுப்பு காட்டவும்
என மாறி
பல வருடம் ஆகிவிட்டது

உணர்வோடு கலந்திருப்பது
உயிரோடு ஒன்றியிருப்பது
என்றெல்லாம் பழங்கதைகள் பேசி
உங்களை நீங்களே
ஏமாற்றித் திரிய வேண்டாம்

ஏனெனில்
நீ என் வீட்டுக்கு வந்தால்
என்ன கொண்டு வருவாய்
நான் உன் வீட்டுக்கு வந்தால்
எனக்கு என்ன தருவாய் என
உறவுகளின் இலக்கணம் மாறி
வெகு காலம் ஆகிவிட்டது

எனவே
உறவுகள் தொடர்ந்து நிலைக்க....
(முன்னிருந்து மீண்டும் படிக்கவும்)

34 comments:

Chitra said...

மாறி வரும் காலத்துக்கேற்ற கவிதை. Super! :-)

சுந்தர்ஜி ப்ரகாஷ் said...

யதார்த்தமான கவிதை. துவக்கம் போலவே முடிப்பும் கவருகிறது. உண்மையான அன்பு எடை போடப்படுகிறது இப்போதெல்லாம்.

raji said...

அப்படியே கவிதை என்ற கண்ணாடி மூலம் தெளிவாய் நடப்பு காலத்தை,
நடப்பு உறவுகளை பிரதிபலித்திருக்கிறீர்கள் சார்.அனேகமாக நாம்
எல்லோருமே நீங்கள் கவிதையில் கூறியிருப்பதை நம் வாழ்வில் ஏதோ ஒரு தருணத்தில்
உணர்ந்துதான் இருப்போம் என நினைக்கிறேன்.

raji said...

//அதிகம் ஊதப்பட்ட பலூன்
நிச்சயம் வெடித்துச் சிதறும்
அதிக நெருக்கமும் ஆபத்தானதே//

ஏனெனில்
//குடலுக்காகவும் உடலுக்காகவும்
உணவு என்பது மாறிப்போய்
நாவுக்காகவும் நாசிக்காகவும்
என மாறி
வெகு காலம் ஆகிவிட்டது//

//சூழல்பொருத்து உடல்மறைப்பது
ஆடை என்பது மாறிப்போய்
செல்வாக்கு காட்டவும்
ஓரளவு உள்ளுறுப்பு காட்டவும்
என மாறி
பல வருடம் ஆகிவிட்டது//

நிலைமையை தெளிவாய் எடுத்துக் காட்டும் வரிகள்,நன்றாய் வந்து விழுந்துள்ளது

Nagasubramanian said...

//இப்படியெல்லாம் இருந்து
எதற்கு அந்த போலி நட்பு என
உள்ளம் துடிக்கிறதா ?
உங்களுக்கு வயதாகிவிட்டது
அல்லது
நீங்கள் பத்தாம்பசலி எனக் கொள்க//
அருமை !!!

சாகம்பரி said...

//அதிக நெருக்கமும் ஆபத்தானதே
என்வே
எப்போதும் எவரிடத்தும்
போதிய இடைவெளியை
தொடர்ந்து பராமரி//தற்காலத்திற்கு தேவையான கருத்து.

இன்னா செய்ததை மறந்து விடுவதும் , இடுங்கண்ணில் உதவுவதும் உறவின் ஆயுளை அதிகரிக்கும். சமூகம் மேம்பட உறவுகளை வளர்ப்போம். நன்றி.

சக்தி கல்வி மையம் said...

எளிமையான தமிழில்.. ஒர் யதார்த்தமான கவிதை..
அருமை..

செல்ல நாய்க்குட்டி மனசு said...

நீ என் வீட்டுக்கு வந்தால்
என்ன கொண்டு வருவாய்
நான் உன் வீட்டுக்கு வந்தால்
எனக்கு என்ன தருவாய்//
ஹய்!! இது நல்லா இருக்கே !

வெங்கட் நாகராஜ் said...

யதார்த்தமான கவிதை.

இராஜராஜேஸ்வரி said...

என்றும் தொடரும் கதை.

MANO நாஞ்சில் மனோ said...

காலம் மாறி போச்சே குரு....

MANO நாஞ்சில் மனோ said...

அட்டகாசமாக யதார்த்தம் கலந்து சொல்லி இருக்கீங்க குரு....

MANO நாஞ்சில் மனோ said...

//எப்போதும் எவரிடத்தும்
போதிய இடைவெளியை
தொடர்ந்து பராமரி//

மிக சரியாக சொன்னீர்கள்....

G.M Balasubramaniam said...

எனக்கு வயதாகிவிட்டது;ஒப்புக்கொள்கிறேன்; ஆனால் பத்தாம் பசலி இல்லை. ஆங்கிலத்தில் கூறுவதுபோல்
“FAMILIARITY BREEDS CONTEMPT."

Avargal Unmaigal said...

போலித்தனம்தான் இந்த காலவாழ்க்கை என்பதை அழகாக சொல்லியிருக்கிறிர்கள்.

வை.கோபாலகிருஷ்ணன் said...

//அதிகம் ஊதப்பட்ட பலூன் நிச்சயம் வெடித்துச் சிதறும் அதிக நெருக்கமும் ஆபத்தானதே எனவே எப்போதும் எவரிடத்தும் போதிய இடைவெளியை தொடர்ந்து பராமரி //

மிகவும் உண்மையான வரிகள், ஐயா.
பலமுறை அனுபவத்தில் உணர்ந்துள்ளேன்.
இப்போதும்கூட.. தேவைப்படுவதாய் இருப்பதால்.. நினைவூட்டியதற்கு நன்றிகள்.

பாராட்டுக்கள். வாழ்த்துக்கள். அன்புடன் vgk

Rathnavel Natarajan said...

நல்ல பதிவு.

நிரூபன் said...

உன்னிடம்
இருக்கிறதோ இல்லையோ
எல்லாமும் எப்போதும்
இருப்பது போல
ஒரு பாவனை செய்து கொள்//

இந்த உலகில் நடிக்கத் தெரிந்த மனிதனாக மாற வேண்டும் என்பதனை வெளிப்படையாக கவிதை வரிகள் சொல்லி நிற்கின்றன.

நிரூபன் said...

உணர்வு கலக்காது
விருப்பம் கலக்காது
எப்போதும் பேச
உன்னைத் தயார் செய்து கொள்//

ஆஹா... யதார்த்தத்தை விடுத்து, பொய்யிற்கு மட்டும் முதன்மையளித்தால் இவ் உலகில் வாழலாம்..
தத்துவக் கவிதையாகப் புனைந்துள்ளீர்கள்.

நிரூபன் said...

ஆடை என்பது மாறிப்போய்
செல்வாக்கு காட்டவும்
ஓரளவு உள்ளுறுப்பு காட்டவும்
என மாறி
பல வருடம் ஆகிவிட்டது//

ம்.. என்ன செய்ய, காலம் செய்த கோலம் என்று கவலைப்படத் தானே முடியும்?

நிரூபன் said...

மனித மனங்களின் வித்தியாசமான குணாதிசயங்களை, இவ் உலகில் வாழும் மனிதர்களின் இயல்பான நடிக்கத் தெரிந்த பண்பினை, காலத்திற்கேற்றாற் போல பச்சோந்தி போல நிறம் மாறும் யதார்த்தத்தைக் கவிதையில் அழகாக வெளிப்படுத்தியுள்ளீர்கள்.

எண்ணங்கள் 13189034291840215795 said...

இப்படியெல்லாம் இருந்து
எதற்கு அந்த போலி நட்பு என
உள்ளம் துடிக்கிறதா ?
உங்களுக்கு வயதாகிவிட்டது//

:)))))

ரொம்ப சரி..

மனோ சாமிநாதன் said...

அருமையான யதார்த்தக் கவிதை என்றாலும் வழக்கமான அனல் எழுத்தைக் காண முடியவில்லை இதில்!

ஹேமா said...

எல்லாம் மாறிப் போலியாகிவிட்ட வாழ்வியலை ஒவ்வொரு நிகழ்வாகச் சொல்லியிருக்கிறீர்கள்.
இன்றைய வாழ்வு குடும்ப உறவுகளிடம்கூட பட்டும் படாமலும்தான் !

Bharathi said...

என்ன ஒரு உண்மை வரிகள். ரொம்பவும் உரிமை எடுதுகொண்டோம் என்றால், நம்மை அறியாமலேயே பிரிவு வந்துவிட்டால், அது அப்படியே
வளர்ந்து, அந்த உறவு போல் எந்த எதிரியும் இனி இருக்க முடியாது என்னும் நிலைக்கு கொண்டு வந்துவிடும்...
இடைவெளி நிச்சயம் தேவை..

ஜோதிஜி said...

பலங்கொண்ட வரிகள்.

ஏன் தமிழ்மணத்தில் தலைப்பு தெரிய மாட்டேன் என்கிறது?

சிவகுமாரன் said...

எளிய வார்த்தைகளில் மிகப் பெரிய கருத்துகளை சொல்லி விடுகிறீர்கள். அருமை.
உறவுகள் தொடர நல்ல யோசனை.
இல்லாள் குசும்பான ஆனால் நெஞ்சைத் தொடும் கவிதை.
,அவரவர் அளவில் சாட்டை.

Kavi Tendral said...

உறவுகள்
சொந்தங்களிலும் சரி , நண்பர்களிலும் சரி
உண்மையான உபசரிப்பு , அன்பு , கருத்து பரிமாற்றங்கள் ,
ஆபத்துக் காலத்தில் உதவுதல் , எல்லாம்
முற்காலங்களில் உள்ளதுப் போல் இப்போது இல்லை !
தற்காலத்திற்கு ஏற்ற தரமான கவிதை இது!
வாழ்த்துக்கள் !

Murugeswari Rajavel said...

இலகுவான,ஆனால் செயலாக்க கடினமான வழி.
உண்மையைச் சொல்லும் உயரிய கவிதை!

சுதா SJ said...

நடைமுறைக்கு ஏற்ற கவிதை

சுதா SJ said...

//நம்புகிறாயோ இல்லையோ
அதிகம் நம்புவதுபோல்
அவ்வப்போது
சில வாசகங்களை
உதிர்த்துக்கொண்டிரு//

இது ஒண்ணு தெரியாத வடியாத்தான் நான் பல விசையங்களில் அவதிப்படுறேன்
ரெம்ப ரியல் ஆனா கவிதை

Anonymous said...

இக்காலத்தில் பாவனை மனிதர்கள் அதிகமாகிப் போனார்கள் என்பது உண்மை.
நம் உண்மையான உணர்வுகளுக்கு எங்கே வடிகால் ?
அறிவுரை, தேவையான ஒன்று. அருமை.

Yaathoramani.blogspot.com said...

ஸ்ரவாணி //

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
விரிவான பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி

போதும் நம்பி நம்பி ஏமாந்தது... said...

நல்லவனாக இருந்தது போதும்.....இனி

Post a Comment