Sunday, November 24, 2013

வாழும் வகையறிந்து....

அந்த அழகிய ஏரியில்உல்லாசப் படகில்
எல்லோரும் பயணித்துக் கொண்டிருந்தார்கள்
அதில் நீச்சல் அறிந்தவர்களும் இருந்தார்கள்
அறியாதவர்களும் இருந்தார்கள்

அறிந்தவர்கள் எல்லாம்
ஏரி நீரின் குளுமையை
கரையோர மலர்களை
படகு செலுத்துவோனின் லாவகத்தை
ரசித்து மகிழ்ந்து
உல்லாசமாய் பயணித்துக்கொண்டிருந்தார்கள்

அறியாதவர்கள் எல்லாம்
ஏரியின் ஆழத்தையும்
படகின் வேகத்தையும்
இதற்கு முன் நடந்த விபத்தையும்
எண்ணி எண்ணிப்  பயந்து
படகுக்குள்  ஒடுங்கிக் கிடந்தார்கள்

படகில் பயணம் செல்வதற்கு
நீச்சல் தெரிந்திருக்கவேண்டியது
நிச்சயம் அவசியமில்லைதான்
உல்லாசமாக பயணம் செய்வதற்கு
அவசியம் தெரிந்திருக்கவேண்டும்

29 comments:

அம்பாளடியாள் said...

உண்மைதான் கற்க முடிந்தவைகளில் ஒன்றான நீச்சலும் கற்றிருந்தால் தக்க சமயத்தில் கைகொடுக்கும் அல்லவா .வாழ்வில் எதையும் தேவைக்கு ஏற்ப கற்றால் போதும் என்ற
மனப் பக்குவமே சிலவற்றைத் தள்ளி வைக்கக் காரணமாகிறது .சிறப்பான பகிர்வு வாழ்த்துக்கள் ஐயா .

Anonymous said...

வணக்கம்
ஐயா

சரியான கருத்துள்ள பதிவு..... அருமை வாழ்த்துக்கள் ஐயா

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

கரந்தை ஜெயக்குமார் said...

அருமை ஐயா.
ரசிக்கவும் மனம் வேண்டும்
கோயிலுக்குச் சென்றால் கூட
வெளியில் விட்டு வந்த
காலனிகளைப் பற்றி
கவலைப்படும்
கூட்டம் இருக்கத்தான் செய்கிறது.
நன்றி ஐயா
த.ம.3

இளமதி said...

பயத்தினால் பயணத்தையே ரசிக்கத் தெரியாதவர்கள் பயணிக்காமல் வீட்ட்டிலேயே இருந்திருக்கலாம்.

வாழ்கையில் அவதானம் வேண்டும் கூடவே அனுபவிக்கத் தெரிதலும் வேண்டும்.

அருமையான கருத்து ஐயா!

வாழ்த்துக்கள்!

ஸ்ரீராம். said...

நிச்சயம்.

யோசிக்க வைத்த கவிதை.

Avargal Unmaigal said...

பாசிட்டிவாக சிந்தித்தால் நீச்சல் தெரியவில்லையென்றாலும் சந்தோஷமாக உல்லாச பயணம் மேற்கொள்ளலாம் அல்லவா? tha.ma 6

Unknown said...

நாம் நிலப்பிராணிகள்! நம் பலம் தண்ணீரில் இல்லை!

Athisaya said...

வணக்கம் ஐயா!!உண்மை தான்.இந்த பணங்களில் தான் வாழ்வின் பாதி உல்லாசங்களை தொலைத்து விடுகிறோம்.அருமை சொந்தமே!சந்திப்போம்

Unknown said...

எதிலும் ரிஸ்க் இருக்கத்தான் செய்யும் மன திடம் இருந்தால் எதையும் சந்தோசமாக அனுபவிக்கலாமே !
த.ம 7

திண்டுக்கல் தனபாலன் said...

அருமை ஐயா... மனம் போன போக்கு...!

RajalakshmiParamasivam said...

சிந்திக்கத் தூண்டும் கவிதை.

ஸாதிகா said...

கவிதை நிரையவே யோசிக்க வைத்துவிட்டது.

உஷா அன்பரசு said...

பிரச்சினைகளை சமாளிக்க கற்றுக்கொள்பவர்களால்தான் மகிழ்ச்சியான வாழ்க்கை வாழ முடியும்... கவிதை சொல்லும் கருத்து இதுவோ?
த.ம-9

தேன்மதுரத்தமிழ் கிரேஸ் said...

அருமை ஐயா! பயந்து கொண்டிருந்தால் வாழ்வை ரசிப்பது எப்படி?
த.ம. 10

vetha (kovaikkavi) said...

''..உல்லாசமாக பயணம் செய்வதற்கு
அவசியம் தெரிந்திருக்கவேண்டும்...'''
உண்மை தான்!.
இனிய பாராட்டுகள் அருமைச் சிந்தனைக்கு.
வேதா. இலங்காதிலகம்.

ADHI VENKAT said...

//படகில் பயணம் செல்வதற்கு
நீச்சல் தெரிந்திருக்கவேண்டியது
நிச்சயம் அவசியமில்லைதான்
உல்லாசமாக பயணம் செய்வதற்கு
அவசியம் தெரிந்திருக்கவேண்டும்//

சிறப்பான வரிகள்....

கே. பி. ஜனா... said...

சிந்திக்க வேண்டிய ஓர் விஷயம் பற்றி சிறப்பாக சொல்லியிருக்கிறீர்கள்...

”தளிர் சுரேஷ்” said...

அருமையான கருத்தை அழகாக சொன்னீர்கள்! சிறப்பான படைப்பு! வாழ்த்துக்கள் நன்றி!

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

வாழ்க்கை பாடம்

வை.கோபாலகிருஷ்ணன் said...

//படகில் பயணம் செல்வதற்கு நீச்சல் தெரிந்திருக்கவேண்டியது நிச்சயம் அவசியமில்லைதான் ...

உல்லாசமாக பயணம் செய்வதற்கு
அவசியம் தெரிந்திருக்கவேண்டும்//

எங்கெங்கும்
எப்போதும்
எதிலும்
என்றென்றும்

உல்லாசம் முக்கியமே ! பகிர்வுக்கு நன்றிகள்.

சென்னை பித்தன் said...

மனித மனங்களைப் படம் பிடித்துக் காட்டி விட்டீர்கள்

கவியாழி said...

பயமா? பயணமா?

Unknown said...

நீங்கள் சொல்வது நூறு சதம் உண்மை! நான் வெளிநாடு சென்றபோது உணர்ந்தது

அப்பாதுரை said...

வாழ்க்கை எனும் ஓடம்..

கீதமஞ்சரி said...

நீச்சல் தெரியுமோ தெரியாதோ... அந்த நேரத்தின் இனிமையை அழகாய் ரசிக்கும் மனமிருக்கவேண்டும். அது இல்லாதவரை நீச்சல் தெரிந்திருந்தும் பயனில்லைதானே... சிந்திக்கவைக்கும் பதிவுக்கு நன்றி ரமணி சார்.

பால கணேஷ் said...

கவிதை சொல்லும் உட்பொருளை யோசித்தபடி வருகையில் உஷா அன்பரசு சொல்லியிருப்பது மிகப் பொருத்தமாகவே படுகிறது. வாழ்வையும், அதன் முடிவையும் அதன் போக்கில் ஏற்பதற்கு மனமானது பக்குவப்பட்டு விட்டால் படகுப் பயணமும், வாழ்க்கைப் பயணமும் ரசிக்க வைக்கும்தானே ரமணி ஸார்!

Yarlpavanan said...

நீச்சல் தெரிந்தவரின்
உள்ளத்து எண்ணங்களையும்
நீச்சல் தெரியாதவரின்
உள்ளத்து எண்ணங்களையும்
அழகாய் ஒப்பீடு செய்தீர்
என் உள்ளம் விரும்பும்
சிறந்த பதிவிது!

Iniya said...

நீச்சல் தெரிந்தவர்களுக்கு மட்டும் என்று சட்டம் போட்டிடலாமா? அப்படியானால் விமானத்தில் பயணம் செய்பவர்களுக்கு என்ன கதி ....பயத்தை தள்ளி விட்டு அனனுபவிக்க வேண்டியது தான். இல்லை என்றால் காரிலும் போகமுடியாது.

விதிவழி தானே மதியும் போகும்.
நதி வழி தானே ஓடமும் போகும்

சுவாரஸ்யமானது ரசித்தேன். நன்றி ....!தொடர வாழ்த்துக்கள்.....!

கோமதி அரசு said...

வாழும் வகை அறிந்து வாழ சொல்லும் கவிதை அருமை.

Post a Comment