Wednesday, November 27, 2013

" யாதோ"

கவிஞனாக அறிமுகமாயிருந்த
என் நண்பனிடம்தான்
முதன் முதலாக
என் படைப்புகளைக் கொடுத்தேன்
பாதிபடிக்கும் வரை சமநிலையில் இருந்த
அவன் முகம்திடீரெனக் கறுத்துப் போனது

"கவிதைக்குரிய எந்தக் கூறும் இ ல்லை
இதைச் சரி செய்வதற்கான வாய்ப்பும் இல்லை
எந்தத் தைரியத்தில் என்னிடம் வந்தாய்" என்றான்
"என்ன செய்யலாம்" எனப் பயந்த படி கேட்டேன்
"வேண்டுமானால் கட்டுரையாளரை சந்தித்துப் பார்
அவர்கள் தான் எதையும் ஒப்புக் கொள்வார்கள்"என்றான்

கட்டுரையாளரைச் சந்தித்தபோது அவர்
புத்தகத்தில் புதைந்து கிடந்தார்
படைப்பினில் பாதிக் கடக்கும்போதே
அவர் உடல் குலுங்கத் துவங்கியது
சப்தம் போட்டுச் சிரித்தபடி சொன்னார்
"கட்டுரைக்குரிய எந்த லாஜிக்கும் இல்லை
உனக்குப் போதிய பயிற்சியும் இல்லை"என்றார்

"இதை என்ன செய்வது" என்றேன்
"வேண்டுமென்றால் கதாசிரியரிடம் போ
அவர்கள் தான் எதையும்
சரி பண்ணத் தெரிந்தவர்கள்" என்றார்

எழுதியபடியே இருந்த கதாசிரியர்
என்னைப் பார்ப்பதற்கே அரை மணி ஆனது
நம்பிக்கை இழந்த நிலையில்
என் படைப்புகளை அவரிடம் நீட்டினேன்
"அங்கே வைத்து விட்டுப் போ நாளை வா"என்றார்

அரசமரத்தடி பிள்ளையாரை
மௌனமாய் வேண்டியபடி
மறுநாள் அவரைப் பயத்துடன் பார்த்தேன்
அவர் மேசையில் என் படைப்பு இல்லை
தூரமாய்க் கூடைக்கருகில்
குப்பை போல் இருந்தது

"கதைக்கு அவசியம் கரு வேண்டும்
உணரும்படியாகவும் ரசிக்கும்படியாகவும்
நிகழ்வுகள் வேண்டும்
கொஞ்சம் கொஞ்சமாய் வளர்பிறை போல்............"
இன்னும் என்னென்னவோ சொன்னார்
எனக்கு எதுவுமே விளங்கவில்லை

முடிவாக

"இதனை இப்படியே கட்டி மூலையில் வை
ஓராண்டு தொடர்ந்து படி
பின்னர் முயற்சி செய்து பார்" என்றார்
"நல்லது" எனச் சொல்லி நொந்தபடி
நடுவீதிக்கு வந்தேன்

"கைகளில் என்ன பார்சல்"
இப்போது என்ன செய்து கொண்டிருக்கிறாய்"என்றான்
எதிரில் வந்தபத்தாம் வகுப்பில்தமிழில்
முப்பது மதிப்பெண்களே எடுத்ததால்
படிப்பிற்கே முழுக்குப் போட்ட
என் பால்ய நண்பன்.

"எழுத்தில் ஆர்வம்
கொஞ்சம் எழுதியிருக்கிறேன்
இது எதில் சேர்த்தி எனத் தெரியாமல்
அலைகிறேன்" என்றேன் பயந்தபடி

"பிள்ளையைப் பெற்று விட்டு
பேருக்காக அலைகிறாயா" என்றவன்
ஆவலாய் அதனைப் பிடுங்கி
அவசரம் அவசரமாய்ப் படிக்கத் துவங்கினான்
ஒவவொரு பக்கம் முடிய முடிய
"பேஷ் பேஷ்" என்றான்

அவன் முகம் ப்ரகாசமாகிக் கொண்டே போனது
எனக்குள் பயம் அதிகமாகிக் கொண்டே போனது

"நான் கிளம்பலாம் என நினைக்கிறேன்"என்றேன் மெதுவாக
கொஞ்சம் பொறு இன்னும் இரண்டு பக்கம் தான்"என்றான்

முதன் முதலாக
எழுத்தின் மீது நான் கொண்ட காதலுக்காகவும்
இதை எழுதியதற்காகவும் மனம் நொந்து அழுதேன்

திடுமென என் தோளை தட்டியபடி
"பிரமாதம்" என்றான்

தமிழில் தோற்றவனா என் எழுத்தை
ஏற்க வேண்டும்
எல்லாம் தலை விதி என்று நொந்து
"எப்படி" என்றேன்

"உன்னைப் பாதித்தவைகளை எழுதியிருக்கிறாய்
படிப்பவரை பாதிக்கும்படியும் எழுதியிருக்கிறாய்
குறிப்பாகப் புரியும்படியும் எழுதியிருக்கிறாய்
நோகாமல் தேன் கிடைப்பது சுகம் இல்லையா"என்றான்

அவனை அதிசயமாய்ப் பார்த்து
அச்சத்துடன் கேட்டேன்
"இது எதில் சேர்த்தி"

அவன் அமர்க்களமாய் ஆரம்பித்தான்
"சங்க காலங்களில் எழுதியவர் பெயர் தெரியாத
எத்தனையோ நல்ல கவிகள் கிடைத்தன
அவைகளைப் புறக்கணித்தா விட்டோம்

எழுதியவரை " யாரோ "எனச் சொல்லி
 சேர்த்துக் கொள்ளவில்லையா"என்றான்

நான் அமைதியாய் இருந்தேன்

எழுதியவர் பெயர் தெரியாதபோது
பெயரை" யாரோ "எனக் கொள்ளுதல் போல
எழுதியது எதனுள்ளும் அடங்காத போது
அதன் பெயர்" யாதோ" என்றான்

போதி மரத்து புத்தன் போல்
என் முன் அவன் பிரசன்னமானான்

எனது சிந்தனைகளை இப்போதெல்லாம்
ஒரு வகைக்குள்ளோ ஒரு வரையரைக்குள்ளோ
சிறை பிடித்துக் கொள்ளுவதேயில்லை

இப்போதெல்லாம்நான்
கதை கட்டுரை கவிதைப் பக்கம்
தலை வைத்துப் படுப்பதே இல்லை

நான் எழுதுவதெல்லாம்" யாதோ" தான்

28 comments:

தேன்மதுரத்தமிழ் கிரேஸ் said...

அருமை ஐயா..அதனால் தான் யாதோ ரமணி என்று பெயர் வைத்து விட்டீர்களா? பகிர்விற்கு நன்றி!

திண்டுக்கல் தனபாலன் said...

யாதோ வந்த விதம் அருமை ஐயா... வாழ்த்துக்கள்...

நண்பருக்கு நன்றி...

ஸ்ரீராம். said...

மனதிலிருப்பதைக் கொட்ட வேண்டும். அதற்கு என்ன பெயராயிருந்தால் என்ன! உணர்வுகள் புரிந்தால் சரி.

வை.கோபாலகிருஷ்ணன் said...

//
"உன்னைப் பாதித்தவைகளை எழுதியிருக்கிறாய்
படிப்பவரை பாதிக்கும்படியும் எழுதியிருக்கிறாய்
குறிப்பாகப் புரியும்படியும் எழுதியிருக்கிறாய்
நோகாமல் தேன் கிடைப்பது சுகம் இல்லையா"//

’யாதோ’வை மீண்டும் படித்தேன் ரஸித்தேன். எவ்வளவு முறை படித்தாலும், ஒவ்வொரு முறையும் சுவை கூடிக்கொண்டே போகிறது.

ஏனெனில் எக்காலத்திற்கு ஏற்ற உண்மை அதில் உள்ளது. வாழ்த்துகள்.

”தளிர் சுரேஷ்” said...

அருமை! யாதோவின் ரகசியம் இதுதானா? வாழ்த்துக்கள்!

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

வலைத்தள முகவரி மூலம் தெரிந்துவிட்டது.யாதோவில் இவ்வளவு உள்ளதா?
கதையோ கவிதையோ கட்டுரையோ பிறருக்கு புரிவதுதான் படைப்பு என்பது யாதோ உணர்த்தி விட்டது

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

த.ம. 5

கரந்தை ஜெயக்குமார் said...

உங்கள் நண்பர் தமிழில் மதிப்பெண் எடுக்க மட்டுமே தவறியவர் ஆனால் தமிழ் அறிந்தவரல்லவா?
எழுத்தில்
கவிதை இருக்க வேண்டியதில்லை
கதை இருக்க வேண்டியதில்லை
கட்டுரை இருக்க வேண்டியதில்லை
உண்மையும்
உணர்வும் இருந்தால் போதாதா?
நன்றி ஐயா

கரந்தை ஜெயக்குமார் said...

த.ம.6

அருணா செல்வம் said...

ஆழமான உண்மையைச் சொல்லும் பதிவு.
மீள் பதிவானாலும் மீண்டும் மீண்டும் படிக்கத் துாண்டும் பதிவு இரமணி ஐயா.

வெங்கட் நாகராஜ் said...

மீண்டும் ஒரு முறை படித்தேன். ரசித்தேன்....

த.ம. 8

Yaathoramani.blogspot.com said...

வெங்கட் நாகராஜ் said...
மீண்டும் ஒரு முறை படித்தேன். ரசித்தேன்..//

புதிய பதிவர்கள் அதிகம் இருப்பதால்
பழைய பதிவுகளையும் கொஞ்சம் அவ்வப்போது
எடுத்துப் போடவேண்டியுள்ளது
ஏனெனில் யாரும் பதிவுகள் பிடித்திருந்தாலும்
கொஞ்சம் முன் சென்று பார்ப்பதில்லை தானே
வரவுக்கும் உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

vetha (kovaikkavi) said...

AAAm..oomm...எழுதுவதெல்லாம்" யாதோ" தான்.
Eniya vaalththu.
Vetha.Elangathilakam.

RajalakshmiParamasivam said...

யாதோ அர்த்தம் விளங்கியது.
அதை சொன்ன விதம் அருமை.

ஸாதிகா said...

நான் எழுதுவதெல்லாம்" யாதோ" தான் என்ன சார் இப்படி சிம்பிளாக சொல்லி விட்ட்ர்கள்.

த.ம 10

Iniya said...

சபாஷ் ரமணி ஐயா...!
என் வழி தனி வழி அப்படி தானே அசத்திட்டீங்க.
அலட்சியம் செய்தவங்களையும் அரளவச்சிட்டிங்க. மிகவும் சுவாரஸ்யமாக இருந்தது. ரசித்தேன் ..!
பகிர்வுக்கு நன்றி வாழ்த்துக்கள்...!
நன்றி கெட்ட மாந்தர் கவிதை போட்டிருகிறேன்.
முடிந்தால் வலைப் பக்கம் வாருங்கள்.

http://bharathidasanfrance.blogspot.com/ said...


வணக்கம்!

தமிழ்மணம் 11

மாதோ, மலரோ, மாமதியோ
மனத்தை மயக்கக் கவிபிறக்கும்!
சூதோ, வாதோ, இவ்வுலகைச்
சூழும் பொழுதில் உயிர்துடிக்கும்!
காதோ, கண்ணோ, கொள்ளாமல்
கமழும் தமிழை அளிக்கின்ற
'யாதோ' என்னும் நற்படைப்பும்
என்னைக் காதல் கொண்டதுவே!

கவிஞா் கி. பாரதிதாசன்
தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு

Avargal Unmaigal said...

///புதிய பதிவர்கள் அதிகம் இருப்பதால்
பழைய பதிவுகளையும் கொஞ்சம் அவ்வப்போது
எடுத்துப் போடவேண்டியுள்ளது
ஏனெனில் யாரும் பதிவுகள் பிடித்திருந்தாலும்
கொஞ்சம் முன் சென்று பார்ப்பதில்லை தானே///

இது மிகவும் உண்மை.. இப்ப நான் எழுதும் மொக்கை பதிவுகளை பாராட்டுபவர்கள் நான் மெனகெட்டு எழுதிய ஆரம்ப காலத்தில் எழுதிய பதிவுகளை புது பதிவர்கள் படிக்க நானும் இப்படி செய்வதுண்டு

G.M Balasubramaniam said...

முன்பே படித்ததுதான் என்றாலும் மீண்டும் படிக்கும் போதும் சுவை குறையவில்லை. ஏனென்றால் எழுதி இருப்பது அத்தனையும் உணர்வின் வெளிப்பாடு. வாழ்த்துக்கள்.

உஷா அன்பரசு said...

நிச்சயம்... வாசிக்கும் அனைவர்க்கும் புரியும்படி எழுதுவதுதான் சுகமான எழுத்துக்களாக இருக்க முடியும்..!

த.ம-13

ராஜி said...

நீங்க எழுதும் யாதோ கூட மிகவும் ரசிக்கும்படியா இருக்குப்பா

Yarlpavanan said...

எழுதுவதால்
எழுதுவோனுக்கு நிறைவு (திருப்தி) வேண்டும்...
எழுதியதை வாசிப்பதால்
வாசகன் மகிழ்சி அடைய வேண்டும்...
எழுதுவதெல்லாம்
"யாதோ" ஆகாது
எழுதுவோன் வாசகனுக்கு
செய்தி ஒன்று சொல்ல வருகிறார் - அதை
சொல்ல எடுத்தாளும் ஊடகமே
எழுத்து என்பேன்!

ADHI VENKAT said...

யாதோ அருமையாக உள்ளது. ... உங்கள் கருத்துகள் எங்களைச் சேர எதில் சேர்த்தியாயிருந்தால் என்ன?

vimalanperali said...

ஏதுமற்ற மனோநிலையில் படிக்கிற வாசகனுக்குப் புரிவதே எழுத்தின் பலம் என்கிறார்கள்.

அம்பாளடியாள் said...

சோர்வில்லாத மனத்தின் வலிமையால் அந்த யாதோ ஒன்றும் சொக்கத் தங்கமாகக் கருத்தப்படும் காலத்தின் கட்டளைக்கு ஏற்ப
தங்கள் கவிதைகள் போல் !! வாழ்த்துக்கள் ரமணி ஐயா .

Anonymous said...

மீண்டும் ஒருமுறை படிக்க சுவையாய் இருந்தது
யாரோவும் யாதோவும்.

கோமதி அரசு said...

யாதோ வி9ளக்கம் அருமை.

Thulasidharan V Thillaiakathu said...

அருமை. இதை நீங்கள் 2013ல் எழுதியிருந்தாலும்...இப்போது படித்ததும்நாங்கள் மீண்டும் இதனை வாசித்தோம்...எதேச்சையாகக் கையில் சிக்கியது யாதோ என்று உங்கள் வலைப்பக்கத்தைக் கூகுளில் தேடும் போது யாதோ என்று நினைத்தால் "யாதோ" வே தான்!!!!!

Post a Comment