Wednesday, March 12, 2014

வை. கோ அவர்களின் சிறுகதை விமர்சனப் போட்டி

உடம்பெல்லாம் உப்புச் சீடை என்கிற
வை,கோ அவர்களின்  சிறுகதைக்கு நான் எழுதிய
விமர்சனம் முதல் பரிசு பெற்றுள்ளது என்பதை
மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறேன்

என்னுடைய விமர்சனத்தை தங்கள் பார்வைக்காகவும்
விமர்சனத்திற்காகவும் கீழே கொடுத்துள்ளேன்


உடம்பெல்லாம் உப்புச் சீடை

பதிவுலக சிறுகதை ஜாம்பவான் திருவாளர்
வை, கோபாலகிருஷ்ணன் அவர்களின்
 தீவீர விசிறி நான்

அவர் பதிவில் வெளியிட்டுள்ள அனைத்துச்
சிறுகதைகளையும் நான் விரும்பிப் படித்துள்ளேன்
ஆயினும் இந்த உப்புச் சீடைக் கதைதான்
என்னை மிகவும் பாதித்த ,
யோசிக்க வைத்த கதை என்றால்
நிச்சயம் அது மிகையான கூற்றில்லை

நிர்வாக இயலில் மிக உயர்ந்த கருத்தாக இப்போது
வள்ளுவரின்
"இதனை இதனால் இவன் முடிக்கும் என்றாய்ந்து
அதனை அவன் கண் விடல் "
என்னும் குறளை அதிகம் மேற்கோளாகக்
காட்டுவதைப்போலவிமர்சனம் எனில் வள்ளுவரின்"
"எப்பொருள் யார் யார் வாய்க்கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பதறிவு "
என்னும் குறளையே வழிகாட்டியாகக் கொண்டால்...

(அறிவு என்பதனை விமர்சன அறிவு எனப்
பொருள்  கொண்டால்,
மெய்ப்பொருள் என்பதனை கதை சொல்லியின்
நோக்கம் என்ன என்பதனை புரிந்து கொள்ளுதல்
எனக் கொண்டால்)

நிச்சயம் யாரும் எந்தப் படைப்பையும்
மிகச் சிறப்பாக விமர்சிக்க முடியும்
பரிசு பெறவும் முடியும் என்பது எனது கருத்து
.
(இப்போட்டியில் பரிசு பெற்றவர்களின்
விமர்சனங்களைசற்று கூர்ந்து படித்ததில்
என்னுள் இக்கருத்துத்தான்
உறுதியானது )

அந்த வகையில் திருவாளர் வை,கோ அவர்கள்
இந்தக்கதையை எழுதியதன் நோக்கத்தை
இந்தக் கதைக்கான மெய்ப்பொருளை மிகச் சரியாக
அனுமானித்தாலே நிச்சயம் அது மிகச் சிறந்த
விமர்சனமாகத்தான் அமையும்

வாழ்க்கை என்பதற்கான உவமையாக
எத்தனையோ சொல்லப்பட்டிருந்தாலும் கூட
வாழ்க்கை ஒருபயணம் போன்றது என்பதைப் போல
மிக அருமையான மிக எளிமையான மிக மிகச் சரியான
உவமை வேறு இல்லை என நிச்சயம் சொல்லலாம்

பயணிக்காது பயணிப்பவர்களைப் பார்த்தே காலத்தை
ஓட்டிக் கொண்டிருப்பவர்கள்,

பயணத்திற்கான நோக்கம் இன்றி
பயணத்தை வெற்று அலைச்சலாக்கித் திரிபவர்கள்

பயணத்தை அனுபவிக்காது அலுத்துத் தானே
அதனையும்ஒரு நரகமாக்கிக் கொள்பவர்கள்,

பூர்வ புண்ணிய பாக்கியத்தால்
சொகுசாக பயண செய்யக் கொடுத்துவைத்தவர்கள்

டிக்கெட் கிடைத்தும் இடம் கிடைக்காது அவதியுடன்
பயணிக்க நேர்ந்தவர்கள்,

பயணத்தின் நோக்கத்தையே மறந்து
இடையில் ஏற்படும் சிறு சிறு நிகழ்வுகளால்
திசை மாறித் தொலைப்பவர்கள்

இப்படி பயணிப்பதில் உள்ள பல்வேறு
நிலைகளை வாழ்வின் நிலைகளுடன்
ஒப்பிட்டுப் பார்த்துசிறிது நேரம் யோசித்துவிட்டுப்
பிறகுஇந்தக் கதையைப் படிக்கப்புகுந்தால்
இந்தக் கதைநமக்குள் விளைவித்துப் போகும்
அனுபவம் நிச்சயம் வித்தியாசமானதாகத்தான்
இருக்கும்

அந்த நோக்கத்தோடுதான்
வாழ்வின் சம நிலை கொண்டர்களின்
 உன்னதங்களையும்அது தவறியவர்களின்
அவதிகளையும்வாழ்வின் மிக முக்கிய அம்சமாகச்
சொல்ல விரும்பும் கதாசிரியர் இரு மாறுபட்ட
கதாபாத்திரங்களை உருவாக்கியதோடு
பயணத்தையே தன் கதையின் முக்கிய
நிகழ்வாகக் கொண்டிருக்கிறார் என்பது
எனது அபிப்பிராயம்

இக்கதையின் நாயகரும் ஒரு நோக்கத்தோடுதான்
பயணிக்கத் துவங்குகிறார்.சராசரி மனிதருக்குரிய
அத்தனை திறமைகளும் சுதாரிப்புக் குணங்களும்
அவரிடம் நிறைந்திருக்கிறது என்பதனை அவரது
சுதாரிப்பு நடவடிக்கைகளும் பயணச் சுகத்திற்காக
அவர்செய்து கொண்ட உணவு முதலான ஏற்பாடுகளும்
நமக்கு விளக்கிப் போகின்றன.

ஆயினும் அவரிடன் இருக்கும்
அவரை விட அடுத்தவர் குறித்து அதிகம்
அலட்டிக் கொள்ளும் குணமும்,
அடுத்தவரின் செயல்பாடுகள் மூலம் அவரை
அனுமானிக்காதுஅவரது வெளித் தோற்றத்தைவைத்து
எடை போடும் விதமும்
எதிலும் தேவையற்ற அதிக உணர்ச்சிப் படுபவர்
என்பதுவும்நிச்சயம் இவர் வயதானவர்தான்
ஆயினும்வாழ்வைப் புரிந்து கொள்ளாதவர் ,
முதிர்ச்சி கொள்ளாதவர் என்பதனை மிகத்
தெளிவாகப்புரியவைத்துப் போகிறது.

அதுவும் கதை துவக்கத்திலேயே மூச்சிரைக்க
 புகைவண்டியின்வால் முதல் தலைவரை
ஓடித் திரும்பும் அவர்எதிலும் ஒரு
சம நிலையற்றவர் என்பதையும்
முடிவாக புகைவண்டி விட்டு இறங்குகையில்
எதில் கவனம் கொள்ள வேண்டுமோ அதில்
கவனம் கொள்ளாது எதில் கவன்ம் கொள்ளத்
தேவையில்லையோஅதில் கவனம்
கொள்ளுதல் மூலம் அவர்வாழ்வின் சூட்சுமம்
 புரியாதவர் என்பதை நாசூக்காகப் புரியச்
 செய்து போவது மிக மிக அருமை

அறியாமை காரணமாக வித்தியாசமானவராகத்
தெரிவதால்பயம் கொள்கிற பெண்ணிடம்,
தனக்குக் கிடைத்த ஜன்னலோர
இருக்கையையும் அந்தப் பெரியவர் மூலம் கிடைத்த
ஐஸ்ஸை ரசித்தபடி அவருடைய
 உப்புச் சீடை கொப்புளம்வலியெடுக்கிறதா என்கிற
நோக்கில் தொட்டுப் பார்க்கிற அந்த ரவியிடம்
இருக்கும் மனித நேயமும்  கூட இல்லாது
அவர் மனம் புண்படும்படி பேசிவிடுகிற அந்த
மனிதரைப்பற்றிப்புரிந்தவுடன்
,சரி இவர் ஏதோ ஒன்றை இழக்கப் போகிறார்
அடையவேண்டிய எதையோ அடையாது
போகப் போகிறார் எனத் தெளிவாக முதலிலேயே
 புரியவைத்துப் போவதுகதையில் மிக மிகச் சிறப்பு

புறச் சூழல் காரணமாக நாம் சம நிலை தடுமாறும்
பல சமயங்களில்தான் நாம் வாழ்வில் பல்வேறு
இழப்புகளைச் சந்திக்கிறோம்.தியானம் பக்தி முதலான
விஷயங்கள்  கூட நாம் சமநிலை தவறாது நம்மை நாம்
அவ்வப்போது சரிபடுத்திக் கொள்வதற்காகத்தான்
என்பதைப்புரிந்து கொண்டாலே நாம்  வாழ்வின்
 ரகசியத்தை பாதிப் புரிந்தவர்கள் ஆகிவிடுவோம்.

அதீத உணர்வு அறிவை மழுங்கடிக்கச் செய்துவிடும்
பல சமயங்களில் கற்ற கல்வி,கற்ற வித்தைகள்
உற்ற காலத்தில் பெரும்பாலும் பயன்படாமல் போவது
இந்தச் சமநிலை தவறும் மனோபாவத்தால்தான்.

அலகபாத் வந்துவிட்டது இறங்க வேண்டும்  என்பதில்
அதிகக் கவனம் கொள்ளாது,தான் தன்னுள் அந்தப்
பெரியவரின் மேல் கொண்டஅருவருப்பின்
காரணமாகவே அவர் முகத்தில் விழிக்காது
இறங்கவேண்டும் என்பதற்காக லைட்டை போட்டால்
அவர் விழித்துவிடக் கூடும் என்பதற்காகவே
அரை குறை வெளிச்சத்தில் சாமானை இறக்க முயலும்
அந்தப் பெரியவரின் முயற்சிதான் எத்தனைக்
 கேலிக் கூத்தானது

அந்த சம நிலை தவறிய நிலைதான் அவர்
பயணத்திற்கானஆதாரத்தையே விட்டுவிட்டு
பயண சுகத்திற்கெனகொண்டு வந்த பொருட்களில்
மட்டும் கவனம் செலுத்தவைத்துவிடுகிறது.
கதையின் மையப் புள்ளி அதுதான்

அந்த உப்புச் சீடையை உடலில் கொண்டப்
பெரியவரின்செயல்பாடுகள் அனைத்தும்
மிக நேர்த்தியாய்முதிர்ச்சிபெற்றவர் என்பதைவிட
ஞானம் பெற்றவர் என்பதைசிறு சிறு நிகழ்வுகள் மூலம் சொல்லிப்போனவிதமும்அவர் குறித்து பிறர் மூலம்
அவர் உன்னதங்களைச்சொல்லிப்போனவிதமும்
மிக மிக அருமை

மிகக் குறிப்பாக அந்தப் பெரியவரை அது அந்த ஆசாமி
என அரைவேக்காட்டு மனிதர் கண்ணோட்டத்திலேயே
சொல்லிப்போனவிடமும்

கதை முடிவில் பிறர் மூலம் அவர் சிறப்பைச்
சொல்லிப்போன விதமும் மிக மிக அருமை

விமர்சனம் என்பது என்னைப் பொருத்தவரை
ஒரு வழிகாட்டி மரமாகத்தான் இருக்கவேண்டும்
வழித் துணையாய் கையைப் பிடித்து
 இழுத்துக் கொண்டு இம்சைப்படுத்தக் கூடாது

உணவின் ருசியை மணம் மூலமும்
நிறம் மூலமும் குறிப்பாக உணர்த்துவதாகத் தான்
இருக்கவேண்டுமே ஒழிய
வலுக்கட்டாயமாக ஊட்டுவதாக இருக்கக் கூடாது

அந்த வகையில் கதையில் நாம் அவசரத்தில்
கவனிக்காது போய்விடக் கூடிய வாய்ப்புள்ள
இடங்களை மட்டும்மிக லேசாக இந்த
விமர்சனம் மூலம்வெளிச்சமிட்டுக்காட்டியுள்ளேன்

பசியுள்ளவர்களுக்கு ருசியின் தரம் அறிந்தவர்களுக்கு
இந்தக் கதை சத்துள்ள அற்புதமான விருந்து

நல்விருந்துப் படைத்த பதிவுலக சிறுகதை மன்னருக்கு
எனது மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

17 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

ஐயாவின் தளத்திலும் ரசித்துப் படித்தேன்... மிகவும் சிறப்பான இரு குறள்கள் மூலம் விமர்சித்த விதம் மிகவும் அருமை...

அடுத்தடுத்து, தொடர்ச்சியாக நான்கு முறை முதல் பரிசு பெற்றதற்கும், பல 'ஹாட்-ட்ரிக்’ பரிசுகளும் பெறுவதற்கும் வாழ்த்துக்கள் ஐயா...

கோமதி அரசு said...

அருமையான அழகான விமர்சனம். முதல் பரிசு பெற்றதற்கு வாழ்த்துக்கள்.

எனக்கும் வை,கோ சாரின் இந்த கதை மிகவும் பிடிக்கும். வலைச்சரத்தில் இந்த கதையை பகிர்ந்து இருக்கிறேன்.
வெளி அழகை பார்க்காது உள் அழகைப் பார்க்கச் சொல்லும் கதை.
மனிதநேயம் மிக்க கதை.
நீங்கள் சொல்வது போல் நல் விருந்து தான்.

கவிஞர்.த.ரூபன் said...

வணக்கம்
ஐயா..

மீண்டும் மீண்டும் வெற்றி வாகை சூடியமைக்கு எனது வாழ்த்துக்கள்...ஐயா.

நன்றி
அன்புடன்.
ரூபன்

நண்டு @நொரண்டு -ஈரோடு said...

வாழ்த்துக்கள் .

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

ஆழ்ந்த பார்வையுடன் விமர்சனம் அமைந்துள்ளது.
வாழ்த்துக்கள் ஐயா

கரந்தை ஜெயக்குமார் said...

ஆழ்ந்த
தெளிந்த
விமர்சனம்
வாழ்த்துக்கள் ஐயா

தி.தமிழ் இளங்கோ said...

த.ம.7

தி.தமிழ் இளங்கோ said...

கவிஞருக்கு வெற்றிகள் பல வந்தடைய வாழ்த்துக்கள்!

Yarlpavanan said...

சிறந்த பகிர்வு
தொடர வாழ்த்துகள்
திறனாய்வில் பல தடவை
வெற்றி ஈட்டிய ஐயா!
தங்கள்
திறனாய்வுப் பார்வை
எமக்கு நல்ல பாடம்!
அதனைப் படிக்கவே
ஓடோடி வருகிறோம்
தங்கள் தளத்திற்கு...

வெங்கட் நாகராஜ் said...

அருமையான விமர்சனம். அவரது கதைகளில் எனக்கும் பிடித்த கதைகளில் முதலிடம் பெறுவது இந்த கதை தான்.....

பரிசு பெற்றமைக்கு வாழ்த்துகள். மேலும் பல பரிசுகள் உங்களுக்குக் கிடைக்கவும் தான்!

RajalakshmiParamasivam said...

வாழ்த்துக்கள் ரமணி சார். ஸ்பெஷல் பரிசுக்கு ஸ்பெஷல் வாழ்த்துக்கள்!

கே. பி. ஜனா... said...

வாழ்த்துக்கள்!

Maria Regan Jonse said...

வாழ்த்துக்கள் ஐயா!

Maria Regan Jonse said...

இன்று என் தளத்தில் சிற்றுலா (சிறுகதை).

மாதேவி said...

அருமையான விமர்சனம்.நல்வாழ்த்துக்கள்.

Thulasidharan V Thillaiakathu said...

மிகவும் உள்ளார்ந்த விமர்சனம்!

(அறிவு என்பதனை விமர்சன அறிவு எனப்
பொருள் கொண்டால்,
மெய்ப்பொருள் என்பதனை கதை சொல்லியின்
நோக்கம் என்ன என்பதனை புரிந்து கொள்ளுதல்
எனக் கொண்டால்)//

நல்லதொரு விளக்கம்!

பரிசு பெற்றதற்கு வாழ்த்துக்கள்! நண்பரே!

த.ம.

Usha Srikumar said...

வாழ்த்துக்கள்!

Post a Comment