Tuesday, April 14, 2015

மீண்டும் யாதோ


சின்னஞ் சிறுவயதிலிருந்தே எனக்கு விரும்பியோ 
அல்லது வாழ்ந்த சூழல் காரணமாகவோ 
பொதுப் பணியில்ஈடுபடுவது என்பது 
தவிர்க்க முடியாததாகிவிட்டது

காலப் போக்கில் நானும் அதை விரும்பிச் 
செய்யத் துவங்கியதால் அனைவரை விடவும் 
மிக நேர்த்தியாகவும்எளிமையாகவும் வித்தியாசமாகவும் 
செய்யவேண்டும்என்கிற எண்ணம் என்னுள் 
உறுதியாய் வேறூன்றிவிட்டது

அப்போதெல்லாம் எங்கள் கிராமப் பகுதியில் 
திருமணமண்டபம் என்பது கிடையாது.
தர்ம சிந்தனையுடன் கூடியபெரிய வீடுடைய உறவினர்கள் 
மூன்று நாட்களுக்குதங்களை ஒரு அறைக்குள் 
சுருக்கிக் கொண்டுமொத்த வீட்டையும்
 திருமண வீட்டார்கள் உபயோகித்துக்
கொள்ள விட்டு விடுவார்கள்

அதைப் போல இப்போது போல ஏ முதல் இஜட் வரை
என்கிற காண்டிராக்டர்கள் கிடையாது.ஒரு மெயின்
சமையல் காரரும் இரண்டு மூன்று கைப்பானங்களும்
தவிர மற்ற வேலைகளையெல்லாம் உறவினர்கள்தான்
பகிர்ந்து கொள்வார்கள்.

அந்த வகையில் நான் சிறுவனாக இருக்கையில்
 எனக்குமுதலில் அனைத்து எடுபிடி வேலைகளும்
 பின் கொஞ்சம்கொஞ்சமாக முதலில் இலைபோடுதல்
 தண்ணீர் பரிமாறுகிறவேலையும்பின் அப்பளம் 
வடை நெய் எனத் தொடங்கி பின் காய்கறி 
சாதம் பறிமாறுதல்
  அதுதான் கொஞ்சம் கடினம் )
எனப் படிப்படியாய் முன்னேறி ஒன்பதாவது பத்தாவது
படிக்கையில் ஒட்டு மொத்த பந்தி வேலையையே
பார்த்துக் கொள்கிற அளவு தேர்ச்சிப் பெற்றுவிட்டேன்

அது போன்ற சமயங்களில் எல்லாம் தொடந்து
சாப்பாடு வாடையில் இருப்பதாலோ என்னவோ
சாப்பிடப் பிடிக்காது. ஆனாலும் சாப்பிடாது தொடர்ந்து
வேலை செய்யவும் முடியாது

அந்த நேரத்தில்தான் மெயின் சமையல்கார்கள்
சாப்பிடுகிற முறையை அறிந்து கொண்டேன்

அவர்கள் தொடர்ந்து அனைத்து பதார்த்தங்களையும்
ருசிபார்க்கவேண்டியிருப்பதாலும் தொடர்ந்து 
அடுப்படியிலேயே இருப்பதாலும் சாப்பிடும் ஆர்வம்
இல்லையென்றாலும் கூட தெம்புக்குச் 
சாப்பிடுகிறவகையில் ஒரு சட்டியில் 
கொஞ்சமாக சாதத்தைப் போட்டுக் கொண்டு 
அதனுடன் அனைத்து காய்கறிகளையும் 
உடன் சாம்பார் ரசம் மற்றும் நெய்யையும் ஊற்றி
கெட்டியாகப் பிசைந்து மூன்று நான்கு கவளம்
மட்டும் சாப்பிடுவார்கள்.அதைக்  
கலவை சாதம் என்பார்கள்

அது அத்தனை ருசியாகவும் இருக்கும் .
சத்தாகவும் இருக்கும்தொடர்ந்து அலுப்பில்லாமல்
 வேலை செய்யவும் உதவும்

நான் வெகு நாட்களுக்கு பாதி பந்தி 
வேலை முடிந்ததும்கொஞ்சம் சோர்வு ஏற்படுகையில் 
மெயின் சமையல்காரரைஅணுகி இரண்டு கவளம் 
கலவை சாதம் போட்டுத் தரும் படியே கேட்டு 
வாங்கிச் சாப்பிட்டுவிடுவேன்

அதனால் கால நேர விரயம் மிச்சம் ,ருசிக்கு ருசி
சத்துக்குச் சத்து என அத்தனை அம்சங்களும்
அதில் எளிதாய்க் கிடைத்தது

அது சரி 
அதற்கும் இந்தப் படத்திற்கும் என்ன சம்பந்தம் ?


( அடுத்த பதிவில் )

15 comments:

வை.கோபாலகிருஷ்ணன் said...

//தொடர்ந்து அடுப்படியிலேயே இருப்பதாலும் சாப்பிடும் ஆர்வம் இல்லையென்றாலும் கூட தெம்புக்குச் சாப்பிடுகிறவகையில் ஒரு சட்டியில்
கொஞ்சமாக சாதத்தைப் போட்டுக் கொண்டு
அதனுடன் அனைத்து காய்கறிகளையும் உடன் சாம்பார் ரசம் மற்றும் நெய்யையும் ஊற்றி
கெட்டியாகப் பிசைந்து மூன்று நான்கு கவளம்
மட்டும் சாப்பிடுவார்கள்.//

ஆம். உண்மை தான்.

தங்கள் சிறு வயது அனுபவங்களைச் சிறப்பாகச் சொல்லியுள்ளீர்கள். தொடரட்டும்.

ஸ்ரீராம். said...

தொடர்ந்து சாப்பாட்டு மணத்திலேயே புழங்குபவர்களுக்கு இப்படி ஒரு கஷ்டம் வரும் என்பது நீங்கள் சொன்னவுடன் புரிகிறது. தொடர்கிறேன்.

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

சமையல்செய்பவர்களுக்கான கஷ்டம் அது.சாப்பாட்டு வாசமே சாப்பிட்ட நிறைவை ஏற்படுத்திவிடும் போலிருக்கிறது. படம் தங்களுக்கு
விருது வழங்கப் பட்டதாக தெரிவிக்கிறது.விவராமாக அறிந்து கொள்ள ஆவல்

கரந்தை ஜெயக்குமார் said...

விருது பெற்றிருப்பது தெரிகிறது
வாழ்த்துக்கள் ஐயா
தம +1

திண்டுக்கல் தனபாலன் said...

அடுத்த பதிவை ஆவலுடன் காண காத்திருக்கிறேன் ஐயா...

இந்தப் பதிவின் தலைப்பு reader-ல் வரவில்லை...

தங்களுக்கும் குடும்பத்தினருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்...

தி.தமிழ் இளங்கோ said...

மீண்டும் வலைப் பக்கம் வந்தமைக்கு நன்றி. தயையும் கொடையும் பிறவிக் குணம் என்றாள் அவ்வை. அவை உங்களிடம் உள்ளன. பந்தி பரிமாறுவது என்பது அவ்வளவு சுலபமில்லை. ஒரு ருசியான அனுபவத்தை சுவாரஸ்யமாக சொன்னதற்கு நன்றி.

சசிகலா said...

இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் ஐயா.
கலவை சாதம் இதை அம்மாவின் கைமணத்தில் சாப்பிட்ட நினைவு வந்தது. அடுத்த பகிர்வுக்கு காத்திருக்கிறோம்.

கே. பி. ஜனா... said...

கலவை சாதத்தின் சுவையே தனி...

கவிஞர்.த.ரூபன் said...

வணக்கம்
ஐயா.
நன்றாக சொல்லியுள்ளீர்கள் அடுத்த பகுதிக்காக காத்திருக்கேன் த.ம 9
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

Unknown said...

கலவைச் சாதம் போன்றே கலவைப் பதிவுகள் போட்டுக் கலக்கி 'யதார்த்தக் கவி' விருதினை பெற்றுள்ளமைக்கு வாழ்த்துகள்:)

Anonymous said...

கல்யாண மண்டபம் திறந்தீர்களா?
புத்தாண்டு வாழ்த்து

தனிமரம் said...

கலவைச் சாதம் தனிச்சுவைதான் ஐயா. விருது பெற்றது போல இருக்கு ! அடுத்த பகிர்விள் அறியும் ஆசையுடன்.

வெங்கட் நாகராஜ் said...

கலவை சாதம்..... அருமையான சுவை அதற்கு உண்டு.

என்ன சம்பந்தம் என்று தெரிந்து கொள்ள காத்திருக்கிறேன்.

kowsy said...

விருது பெற்றதற்கு வாழ்த்துக்கள். உங்கள் கவிதைச் சமையலைத்தான் சுவைத்திருக்கின்றேன். அதனால் இப்பதவு படிக்கும் போது உங்கள் பதிவகம் பற்றி எழுதுவதுபோல்த்தான் எனக்குத் தோன்றுகிறது.

Thulasidharan V Thillaiakathu said...

ஹை கலவை சாதம்....சுவை கூடுதல்!

அடுத்த பகிர்வு அறிய ஆவல்!!!

Post a Comment