Thursday, August 6, 2015

மரண பயம்.?

குற்றவாளிபோல் நான் இருக்க
என்னைச் சுற்றி
மகனும் மகளும் மருமகளும்

"நான் என்ன குறை வைக்கிறேன்னு
நீங்களே நேரடியா கேளுங்கோ
காலையில் ஆறு மணிக்கு
ஸ்ராங்கா ஒரு கப் காஃபி
வாக்கிங் போய் வந்ததும்
ஒரு கப் ஓட்ஸ் கஞ்சி
பதினொரு மணிக்கு
முளைகட்டிய பயறு ஏதாய்ச்ச்சும்
மதியம் காய்கறியோடு
அளவான சாப்பாடு
சாய்ந்திரம் ஏதாவது ஜூஸ்
ராத்திரி எண்ணையில்லாம
சப்பாத்தி நாண் இப்படி ஏதாவது
முடியுதோ முடியலையோ
நான் சரியாகத்தான் செய்து தந்தேன்
இப்போது ஒரு மாதமாய்  அவர் சரியாக
சாப்பிடரதும் இல்லை
முகம் கொடுத்து பேசரதும் இல்லை"
முந்தானையால் கண்ணீரைத்
துடைக்க முயன்று தோற்கிறாள் மருமகள்

" கோவில் போய்வர ஆட்டோ
ஆன்மீக டூர் போகணுமா
ஆறு மாதத்துக்கு ஒருமுறை
அதுக்கும் ஏற்பாடு பண்ணித்தாரேன்
என்னிடம் பணம் கேட்கச்
சங்கடப் படக்கூடாதுண்ணு ஏ.டி.எம் கார்டு
நானும் யோசிச்சு யோசிச்சு
முடிந்ததையெல்லாம் செய்யரேன்
அப்படியும் ஏன் இப்பவெல்லாம்
சரியா பேசமாட்டேங்கராருன்னு தெரியலை"
பல நாள் அடக்கிவைத்ததை
கொட்டி த்தீர்க்கிறான் ஆருயிர் மகன்

"மனதில் என்ன குறை இருந்தாலும்
சொல்லுப்பா
எதுன்னாலும் செய்யுறொம்
எங்களை சங்கடப் பட வைக்காதே அப்பா"
எனக் கையைப் பிடி த்துக் கொள்கிறாள்
பார்த்துப் போக வந்த மகள்

நான் என்னவெனச் சொல்வது ?
அவர்களுக்கு எப்படி புரிய வைப்பது?

ஆட்டுக்குத் தேவையான அனைத்தும் கொடுத்தும்
எதிரில் புலியை கட்டிவைத்த கதையாய்...

வீட்டுக்குள் கரு நாகம்படமெடுத்து நுழைந்ததை
கண்ணாரப் பார்த்தும்
இருப்பிடம் தெரியாது வீட்டுக்குள்
பயந்து திரிபவன் ..நிலையாய் 

நாற்பதாய் இருந்த நண்பர்களின் எண்ணிக்கை
நாள்பட நாள்பட நசிந்து கொண்டே போய்
ஒன்றாகிப் போனதும்
அந்த ஒருவனும் போன மாதம்
பொசுக்கென போனதும்..

அடுத்தது நான் தான் என
மனம் முற்றிலுமாய் ஏற்று
அரண்டு போய் இருப்பதையும்
காலனின் கரிய நிழல்
உயிரினில் உரசும் சப்தம்
இடியோசையாய் என்னுள்
சில நாட்களாகக் கேட்பதையும்..

எப்படிச் சொல்லிப் புரிய வைப்பது ?

எப்படி அவர்களை நோக வைப்பது ?

17 comments:

ஸ்ரீராம். said...

இந்த பயத்திலிருந்து சீக்கிரமே மீள வேண்டும்.

கரந்தை ஜெயக்குமார் said...

எதற்கு இந்த தேவையற்ற பயம்
தம +1

Yaathoramani.blogspot.com said...
This comment has been removed by the author.
Yaathoramani.blogspot.com said...

"நான் " என்பது நான் இல்லை
நான் சந்தித்த ஒரு வயோதிகரின்
மன நிலையைச் சொல்ல முயன்றிருக்கிறேன்
அவ்வளவே
நான் 63 வயது பக்கா இளைஞனாக்கும்...

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

//நான் 63 வயது பக்கா இளைஞனாக்கும்...//
அதே அதே நீங்கள் தினம் ஒரு பதிவு எழுதும் வேகம் அதை உறுதிப் படுத்துகிறது.

balaamagi said...

வணக்கம்,
இயற்கையின் நியதி இது என்போம்,
சொல்வது சரி ஏற்பது மனம் தானே
நல்ல பகிர்வு நன்றி.

ப.கந்தசாமி said...

மரண பயத்தை வெல்வதே முதிர்ச்சியின் வெளிப்பாடு.

G.M Balasubramaniam said...

நீங்களெல்லாம் நம்பும் பேரருள் மரண பயத்தை விலக்கட்டும். அது சரி. மரணம் பயப்படவைக்குமா.?மரணித்தபின் அந்த பயம் தெரியுமா.?

KILLERGEE Devakottai said...

நான் என்பதை அவர் என்று சொல்லியிருந்து எங்களை பயமுறுத்தாமல் இருந்திருக்கலாம்.
தமிழ் மணம் 5

S.Venkatachalapathy said...

இப்படி எல்லாம் வரும் பயம் தாக்காமல் மனதைத் தயார்படுத்திக்கொள்ளத் தான் மிருத்யூஞ்ஜெய மந்திரம் சொன்னார்கள் போலும்.

S.Venkatachalapathy said...

இப்படி எல்லாம் வரும் பயம் தாக்காமல் மனதைத் தயார்படுத்திக்கொள்ளத் தான் மிருத்யூஞ்ஜெய மந்திரம் சொன்னார்கள் போலும்.

தி.தமிழ் இளங்கோ said...

மயக்கமா? கலக்கமா? மனதிலே குழப்பமா? - அறுபதைக் கடந்தாலே எல்லோருக்கும் ஏற்படும் உணர்வுதான் இது. நமது வயது ஒத்த இறந்த நண்பர்களை நம்முடன் ஒப்பிட்டு அடுத்து நாம்தான் என்று கலங்குவதை விட, இன்னும் இருக்கும் நம்மில் மூத்தவர்களை எண்ணி வாழ்க்கையை சுலபமாக்கிக் கொள்வதுதான் ஒரே ஆறுதல்.

இளமதி said...

ஐயா!..
மனதில் இனம்புரியா வலிவந்து உட்கார்ந்துவிட்டது
உங்கள் கவிவரிகளால்..:(

பின்னூட்டம் கண்ட பின்பே மனம் சற்று ஆறுதல் கண்டது.

எல்லோருக்கும் வருவதுதான் இந்தப் பயம்.
அதை வெல்வது சவாலே!.
அதற்காக பயந்துகொண்டே வாழ்தல் வாழ்க்கையுமல்ல.
இன்றைய பொழுதின் இனிமைய ஏற்று வாழ்திட்டால் நாளை அது ஒரு புதிய நாளே!

மனம் தொட்ட கவிதை ஐயா!
வாழ்த்துக்கள்!

Unknown said...

காலா என் அருகில் வாடா ,காலால் மிதிக்கிறேன் என்று சொல்லும் தைரியம் எல்லோருக்கும் வரணும் :)

வெங்கட் நாகராஜ் said...

மரண பயம்......

என்றாவது வந்தே ஆக வேண்டும் என்பது புரிந்தால் பயம் போய்விடும்.....

”தளிர் சுரேஷ்” said...

குறிப்பிட்ட வயது கடந்ததும் சிலருக்கு இந்த பயம் வரத்தான் செய்கிறது! அருமையாக சொல்லியுள்ளீர்கள்!

Thulasidharan V Thillaiakathu said...

பெரும்பான்மையான வயோதிகர்களுக்கு மரண பயம் வந்துவிடுகின்றது...என்றாவது ஒரு நாள் போய்த்தானே ஆக வேண்டும்..இருக்கும் வரை சந்தோஷமாக...இருக்க வேண்டும்...வரிகள் அருமை...

நீங்கள் நிச்சயமாக இளைஞர்தான் சந்தேகமே இல்லை...

Post a Comment