Friday, August 5, 2016

அபுரிக் கவிதைகள்

"அந்த ஜோல்னாக் கவிஞன்
 கூப்பிட்டான்.பூங்காவில் ஒரு கூட்டமாம்
 போகலாமா ? " என்றான் நண்பன்

"எனக்கு இந்த ஜோல்னா,குறுந்தாடி
ஜிப்பா,கவிஞ்ர்களைக் கண்டாலே அலர்ஜி
கொள்கையை நிலை நாட்ட
எப்போதுசட்டையைக் கிழிப்பார்கள்
எனச் சொல்ல முடியாதே "என்றேன்

"இப்போது கொஞ்சம் மாறி இருக்கிறார்கள்
பயப்படாமல் வா " என
இழுத்துப்போனான் நண்பன்

கூட்டம் கூடி இருந்தது
வட்ட வடிவில்
பத்து பேர் அமர்ந்திருந்தார்கள்

நாளை மறு நாள்
உலகம் அழியப்போவது போலவும்
அது இவர்களுக்கு மட்டும் தான்
தெரியும் போலவும்
ஏதாவது செய்தாகவேண்டுமே என்கிற
அதீதக் கவலையில் இருப்பது போல்
அனைவரின் முகங்களும் இறுகிக் கிடந்தன

நாங்கள் இருவரும் அமர
வட்டம் கொஞ்சம் நெகிழ்ந்து
எங்களையும் சேர்த்துக் கொண்டது

நாங்களும் முகத்தை இறுக்கிக் கொண்டோம்

ஓய்வுப் பெற்ற அரசு அதிகாரியைப் போலிருந்தவர்
பேசத் துவங்கினார்

"இது பதினெட்டாவது வாசிப்புக் கூட்டம்
இம்முறையும் ஐம்பது பேருக்கு  கடிதம் போட்டேன்
பதினைந்து பேருடன் போனில் பேசினேன்
பத்து  பேருக்குக் குறையாமல் வந்திருப்பது
நம்பிக்கையூட்டுகிறது

நம் அமைப்புக்குத் தலைவர் எல்லாம் கிடையாது
எல்லோரும் தலைவர்கள்தான்..."
இன்னும் என்ன என்னவோ எல்லாம் சொல்லித்
தலைமை உரை ஆற்றியப் பின்

"கவிதை வாசிப்பைத்   துவங்கலாமா " எனக்கேட்டு
ஜோல்னாவில் இருந்து ஒரு புத்தகத்தை எடுத்துப்
பிரித்து உரக்கப் படிக்கத் துவங்கினார்.

சிறுவன் மிட்டாயை இரசித்துச் சாப்பிடுவது போல
ஒவ்வொரு வார்த்தையும் இரசித்துப் படித்தார்

கூட்டம் சப்புக் கொட்டியது

எங்களுக்கு இது தமிழ் என்பது புரிந்தது
வார்த்தைகளும் புரிந்தது
அதற்கு மேல் ஒன்றும் புரியவில்லை

எதற்கு வம்பு என்று நாங்களும்
சப்புக் கொட்டி வைத்தோம்

படித்து முடித்ததும் " இக்கவிதை ஒவ்வொருவருக்கும்
அவரவர் அனுபவம் பொறுத்து
புதுப் புதுப் பொருள் கொடுத்திருக்கும்
எனக்கானதைச் சொல்லி கவிதையை
நீர்த்துப் போகச் செய்ய விருப்பமில்லை "என்றார்

கூட்டமும் கனத்த (" ன "வுக்கு முடிந்தால்
 ஐந்து சுழி கூடப்போட்டுக் கொள்ளலாம் )
மனத்தோடு மௌனமாய் அங்கீகரிக்க
அடுத்தவர் அடுத்தக் கவிதையைப்
 படிக்கத் துவங்கினார்

இப்படியே பத்துப்  பேரும் அர்த்தமே சொல்லாது
படித்து முடிக்கிற நேரத்தில்
முதலில் படித்தவருக்குஅலைபேசியில்
யாரோ பேச,

"நண்பர்களே !மனைவிக்கு இரண்டு நாளாய்
கடும் காய்ச்சல்.நான் கிளம்புகையில்
வயிற்றுப் போக்கும் சேர்ந்து விட்டது
மருத்துவரிடம் அழைத்துச் செல்ல
எட்டுக்குள் வருவதாகச் சொல்லி இருந்தேன்
இப்போது கிளம்பினால் சரியாக இருக்கும் "
எனச் சொல்லியபடி அனைவரிடமும்
விடைபெற்றுக் கொண்டுக் கிளம்பினார்

கவிதைக்குச் செய்ய வேண்டிய கடமையை
மிகச் சரியாகச் செய்து விட்டதைப் போலவும்
இனி கவிதைப் பிழைத்துக் கொள்ளும்
என்பதைப் போலவும் அவர் திருப்தியுடன்
சிரித்துச் சென்றார்

கவிதை இவர்களைக் கஷடப்படுத்துகிறதா
அல்லது இவர்கள்  கவிதையை
கஷ் டப்படுத்துகிறார்களா என  எனக்குக்
குழப்பமாக இருந்தது

"இது எந்த மாதிரியான கவிதையில் சேரும்
மரபு தெரியும்  வசன கவிதை,புதுக்கவிதை
ஹைக்கூ மற்றும் சென்ட்ரியூ  கூடத்  தெரியும்
இந்தப் புரியாத கவிதைகள் எதில் சேர்த்தி"
என்றான்  குழப்பத்துடன் நண்பன்

வட்டம் இரண்டாக மூன்றாக ஐந்தாக
உடைந்து தனித்தனியாய்ப் பிரியத் துவங்கியது

"இதன் பேர் அபுரி "என்றேன்

"இப்படி ஒன்றைக் கேள்விப்பட்டதே இல்லையே"

"இது காரணப் பெயர் .புரிய முயற்சி செய்
புரிந்தால் இந்தக் கவிதைகள் போல
சுகம்  தரும்.புரியவில்லையா  ஒன்றும்
பிரச்சனை இல்லை .புரிகிறதா "என்றேன்

நாங்களும் கிளம்பினோம்

(புதிய வார்த்தைத் தந்த  பதிவர்
ஸ்ரீராம் அவர்களுக்கு  நன்றி )


  

25 comments:

Thulasidharan V Thillaiakathu said...
This comment has been removed by the author.
Thulasidharan V Thillaiakathu said...

இது போன்ற கூட்டம் எல்லாம் கொஞ்சம் அலர்ஜி தான் சார்...

கீதா:அபுரி... ஆமாம் ஸ்ரீராம்தான் இதனை உபயோகப்படுத்துவார்..அவரிடம்தான் நானும் தெரிந்துகொண்டேன்..

வை.கோபாலகிருஷ்ணன் said...

’ஸத்’ விஷயம் என்றால் நல்ல விஷயங்கள்.

இந்த ’ஸத்’ உடன் ஆரம்பத்தில் ஒரு ‘அ’ என்ற எழுத்தைச் சேர்த்து விட்டால் அது ’அஸத்’ ஆகிவிடுகிறது.

ஹிம்ஸை x அஹிம்ஸை
தர்மம் x அதர்மம்

போன்ற பல உதாரணங்களை நாம் சொல்லலாம்.

’புரி’ என்றால் புரிந்துகொள்ளக்கூடியது.

’அபுரி’ என்றால் ஒன்றும் புரியாத சுத்த அபத்தம் என்ற அர்த்தமாக ஒருவேளை இருக்குமோ?

யோசிக்க வைக்கும் பகிர்வுக்கு நன்றிகள்.

[ஸ்ரீராம் ஜயராம் ஜய ஜயராம் அவர்களுக்கும் என் நன்றிகள்.]

ஸ்ரீராம். said...

அந்த 'அபுரி' வார்த்தைக்குச் சொந்தக்காரர் எழுத்தாளர் சுஜாதா!

நீங்கள் சொல்லியிருப்பது போல கவிதை வாசிப்பை நானும் கேட்டிருக்கிறேன்.

Yaathoramani.blogspot.com said...

வார்த்தையினைத் தந்த சுஜாதா அவர்களுக்கும்
அதை நான் அறியத் தந்த ஸ்ரீராம் அவர்களுக்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

வை.கோபாலகிருஷ்ணன் //

மிகச் சரியாக அதுவே
மிக்க நன்றி

Yaathoramani.blogspot.com said...

Thulasidharan V Thillaiakathu said...//

இது போன்ற கூட்டம் எல்லாம் கொஞ்சம் அலர்ஜி தான் சார்...//

நீங்களும் பட்டிருக்கிறீர்களா ?
வரவுக்கும் கருத்துக்கும்
நல்வாழ்த்துக்கள்

Yaathoramani.blogspot.com said...

கீதா:அபுரி... ஆமாம் ஸ்ரீராம்தான் இதனை உபயோகப்படுத்துவார்..அவரிடம்தான் நானும் தெரிந்துகொண்டேன்//
ஆம் என் அபுரி ஒன்றுக்கு
அந்த வார்த்தையைப் பயன்படுத்தி இருந்தார்
அதன் தொடர்சியாய்தான்
இதை எழுதினேன்
வரவுக்கும் கருத்துக்கும் வாழ்த்துக்கள்

வை.கோபாலகிருஷ்ணன் said...

இன்றைய கவிஞர்களில் பலரும் அபுரிக் கவிதைகளாகவே எழுதிக்கொண்டிருப்பதாக எனக்குள் ஓர் பொதுவான அபிப்ராயம் உள்ளது.

கவிதைகளில் எனக்கு மிக அதிக ஈடுபாடு இல்லாததால், ஒருவேளை நான் இதுபோல நினைப்பது தவறாகவும் இருக்கக்கூடும்.

எனக்குத் தெரிந்த ஒரே புரி-க்கவிஞர் யாதோவாகவே (அதாவது நீங்களாகவே) இருக்கக்கூடும் என்பதையும் இங்கு தங்களுக்குச் சொல்லிக் கொள்ள நான் கடமைப்பட்டுள்ளேன். :)

உங்களுக்கு என் நல்வாழ்த்துகள்.

Yaathoramani.blogspot.com said...

வை.கோபாலகிருஷ்ணன் said...//

கவிதைகளில் எனக்கு மிக அதிக ஈடுபாடு இல்லாததால், ஒருவேளை நான் இதுபோல நினைப்பது தவறாகவும் இருக்கக்கூடும்.//

எதிர்ப்பார்ப்பை எகிரச் செய்யும் துவக்கம்
சுவாரஸ்யமானத் தொடர்ச்சி,நிறைவைத் தரும்முடிவு
இந்த பாணியில் கட்டமைக்கப்பட்ட எல்லாம்
கவித்துவமானவையே

நீளம் பொருத்து அதைக் கவிதை என்கிறோம்,
கதையென்கிறோம் என்பதே என் தனிப்பட்ட கருத்து

என் இந்த வரையரைப்படி உங்கள் கதைகள்
எல்லாம் கவிதைகள்தான்

வாழ்த்துக்களுடன்...

வை.கோபாலகிருஷ்ணன் said...

//எதிர்ப்பார்ப்பை எகிரச் செய்யும் துவக்கம்
சுவாரஸ்யமானத் தொடர்ச்சி,நிறைவைத் தரும்முடிவு .. இந்த பாணியில் கட்டமைக்கப்பட்ட எல்லாம் கவித்துவமானவையே//

ஆஹா, தங்களின் மிக அருமையான கவித்துவமான விளக்கம் கண்டு நான் அப்படியே சொக்கிப்போனேன். :)

//நீளம் பொருத்து அதைக் கவிதை என்கிறோம்,
கதையென்கிறோம் என்பதே என் தனிப்பட்ட கருத்து. என் இந்த வரையரைப்படி உங்கள் கதைகள் எல்லாம் கவிதைகள்தான். வாழ்த்துகளுடன் ...//

ஆஹா இதைத்தங்கள் வாயிலாகக் கேட்க தன்யனானேன். மிக்க நன்றி, ஸார்.

G.M Balasubramaniam said...

அபுரி என்று சொன்னால் புரியாவிட்டால் அது உன் குற்றம் என்று எண்ணுபவர்களும் உண்டுஎழுதுவது புரிந்து கொள்ளப்பட வேண்டும் புரியாதபடி எழுதுவதை மேதாவித்தனம் என்று கருதுகிறார்களோ

vimalanperali said...

நான் கவிஞ்சனுமில்லை,
நல்ல ரசிகணுமில்லை எனச்சொல்லிச்சென்று விட முடியாது,கவிக்கூட்டங்கள்
அழகுதான் நல்ல கவிதைப்பாடபடும் நேரங்களில்/

Yaathoramani.blogspot.com said...

Vimalan Perali //

புரிந்தால் கூடுதல் அழகுதான் இல்லையா ?

Yaathoramani.blogspot.com said...

G.M Balasubramaniam said...//

புரியாதபடி எழுதுவதை மேதாவித்தனம் என்று கருதுகிறார்களோ/

ஆம் அவர்களும் கஷ்டப்பட்டு
படிப்பவரையும் கஷ்டப்படுத்தி../கவிஞர்.த.ரூபன் said...

வணக்கம்
ஐயா.

அபுரி என்ற வார்த்தை பிரயோகம் புதுமை புதுமை...நல்ல விளக்கம் கொடுத்தமைக்கு நன்றி ஐயா..நானு புரிந்து கொண்டேன்

ஜீவி said...

உங்கள் கவிதை வாசிப்பதற்கு நன்றாக இருந்தது.

இளம் வயதில் இந்த மாதிரி ஜோல்னா பையும்
ஜிப்பாவும் கவியரங்களுமாய் நிறைய சுற்றியதுண்டு, எவ்வளவு சுகமான அனுபவங்கள் அவை!

இன்றும் பட்டுப் போய் விடாமல் வாசிப்பு அனுபவம் மனதில் துளிர்த்துக் கொண்டிருப்பதிற்கு அந்த பலமான அஸ்திவாரம் தான் காரணம் என்று நினைக்கிறேன்.

RajalakshmiParamasivam said...

அபுரி என்கிற வார்த்தையைத் தெரிந்து கொண்டேன்.
வாழ்த்துக்கள்!

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

இவ்வாறான கூட்டங்களில் கலந்துகொண்ட அனுபவம் எனக்கு உண்டு. சம்பிரதாயத்திற்காக நடக்கும் பலவற்றை அக்கூட்டங்களில் கண்டுள்ளேன்.

வெங்கட் நாகராஜ் said...

அபுரி - :)

சுஜாதாவிற்கும், ஸ்ரீராமிற்கும் உங்களுக்கும் நன்றி!

Yaathoramani.blogspot.com said...

rajalakshmi paramasivam said.../
உடன் வரவுக்கும்
பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

Dr B Jambulingam //

உடன் வரவுக்கும்
பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

வெங்கட் நாகராஜ் //

உடன் வரவுக்கும்
பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

ஜீவி //

அனைத்து விஷயங்களிலும்
நேர்மறையானப் பக்கம் என்று
ஒன்று உண்டுதானே

உடன் வரவுக்கும் விரிவான
அருமையான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

தேன்மதுரத்தமிழ் கிரேஸ் said...

அபுரி!!
http://thaenmaduratamil.blogspot.com/2016/08/blog-post_21.html#more

ஸ்ரீராம் அபுரி என்று சொல்லி, என்னவென்று தேடினால் உங்கள் தளத்தில் ஒரு பதிவு..
அச்சச்சோ..நான் தப்பு பண்ணிட்டேனோ என்று ஒரு குழப்பம்... :)
நன்றி ஐயா.

Post a Comment