Monday, December 26, 2016

அப்பல்லோ மர்மங்கள்

சட்டென அப்பல்லோ மருத்துவனை குறித்த
மர்மங்களை எழுதுவதை விட முதலில்
ஒரு சிறு விளக்கம் சொல்லி அதை எழுதுவது
அதை மிகச் சரியாகப் புரிந்து கொள்ள உதவும்

நான் சிறு வயதில் நில உடமைச் சமூதாயத்தின்
முழுமையான எச்சமாய் இருந்த ஒரு கிராமத்தில்
வளர்ந்தவன்

ஜாதிவாரியாகத் தெருக்கள்,ஜாதி வாரியாகக்
கோவில்கள், சுடுகாடுகள்,திருவிழாக்கள்,
இனம் சார்ந்து மரியாதை,இவையெல்லாம்
நூற்றுக்கு நூறு மிகச் சரியாகக் கடைப்பிடித்து
வந்த ஊர் அது

அதன் காரணமாகவே மத நமபிக்கைகள்
மட்டுமல்ல, மதச் சடங்குகள் மட்டுமல்ல
மூட நம்பிக்கைகளும் அதிகம் விரவிக் கிடந்த
கிராமம் அது

ஊரின் நான்கு எல்லைகளிலும் தெய்வங்கள்
இருந்து  காப்பது மட்டுமல்ல, பேய்களும்
இருந்து பயமுறுத்திக் கொண்டிருந்த ஒரு
வித்தியாசமான ஊர் அது

எப்போதும் ஊரில் ஏதேனும் ஒரு தெருவில்
பேயோட்டும் உடுக்கைச் சப்தமும்
அது தொடர்பான கதைகளும் காற்றில்
கலந்து சிறுவர்களாய் இருந்த எங்களை
மட்டுமல்ல, பெண்களையும் ஒரு பய உணர்வுடன்
உலவும்படியே வைத்திருக்கும்

இந்தச் சூழலில் மாதம் ஒருமுறை வரும்
நடு இரவில் வரும் குடுகுடுப்பைக்காரர்களே இந்தப்
பதிவின் கதாநாயகர்கள்

ஏறக்குறைய பூம்பூம் மாட்டுக்காரன் சாயலில்
உடை அமைப்பு முதலானவைகள் இருந்தாலும்
அவன் மீசை, உருட்டும் விழி,நெற்றி குங்குமப்பட்டை
உடுக்கைச் சப்தம், இவைகளின் மொத்த உருவமாய்
இருக்கும் அவர்களை பட்டப் பகலில் பார்த்தால்
கூட பயந்து நடுங்கும்படியாக இருப்பார்கள்

காரணம் அவர்களது நடு இரவு மர்மங்கள்

அவர்கள் நட்ட நடுநிசில்தான் வருவார்கள்
நேராக சுடுகாட்டில் இருந்துதான் வருவார்கள்
அவர்கள் வருகையில் நேர் எதிராக வரக்கூடாது
அப்படி வந்தவர்கள் இரத்தம் கக்கிச்
செத்திருப்பதற்கான ஆதாரப்பூர்வமான நெடுங்கதைகளை
எல்லாம் திரும்பத் திரும்பக் கேட்டு
பயத்திலுறைந்து கிடக்கும் எப்போதும்
எங்கள் ஊர் ...

மாதம் ஒருமுறை அல்லது  இரண்டு மாதத்திற்கு
ஒருமுறை நட்ட நடு நிசியில் அவர்கள் உடுக்கைச்
சப்தமெழுப்பியபடி வரும் இரவினை
இப்போது நினைத்தாலும் என்போன்றோருக்கு
ஒருபய உணர்வு நெஞ்சில் மிக லேசாய் படரும்

இந்தச் சூழலில்
நான் சிறுவனாய் இருக்கையில், கனத்த இருளும்,
குளிரும், நிசப்தமும் விரவிக் கிடந்த ஒரு நாளில்

வீதியே அதிரும்படி உடுக்கைச் சப்தம் எழுப்பியபடி
 "நல்ல காலம் பிறக்குது நல்ல காலம் பிறக்குது "
என ஒரு பொது வாக்கியத்தை சொல்லி
குடுகுடுப்பைக்காரன் வந்த ஒரு நள்ளிரவில்...

படுக்கையில் இருந்த எனது தாயார், மெல்ல
எழுந்து , விளக்கு ஏதும் போடாது ,அந்தப்
பெரிய வாசல் நிலைக்கதவை சப்தமெழுப்பாதபடி
மிக  லேசாய்த் திறந்து வாசலைப் பார்க்காதபடி
,மிகச் சரியாய் கவனிக்கும்படியாய்
காதின் அடிப்பகுதியை மட்டும் நிமிர்த்தியபடி
மிக லேசாய் உடல் நடுங்கியபடி  இருந்தச்
சூழலில்,

நான் இரு கண்களையும் இறுக்க மூடியபடி
அம்மாவின் இருகால்களையும் இறுக்க
அணைத்தபடி,மொத்த உடலும் நடுங்கும்படி
இருக்க

குடுக்குடுப்பைக்காரனின் அந்த குடுகுடுப்பை
ஒலியும்,அதைத் தொடர்ந்த அவனின் கணீரென்ற
குரலும் வீதியே அதிரும்படி எங்கள்
வீட்டுக்கு மிக அருகில் ஒலிக்கிறது

இதற்கு முன்பு வரை " நல்ல காலம் பொறக்குது
நல்ல காலம் பொறக்குது" எனச்
சொல்லிக் கொண்டு வந்த குடுகுடுப்பைக்காரன்
திடுதெப்பென்று "ஐய்யோன்னு போகுதே
ஐயோன்னு போகுதே..ஒரு பச்சைப்பாலகன் உசுரு
ஐயோன்னு போகுதேன்னு "வீதி அதிரக்
கத்துகிறான்

என் உடன் அந்தக் குரல் கேட்டு இன்னும்
நெருக்கமாய் அம்மாவைக் கட்டிக் கொள்கிறேன்
அம்மா இன்னும் இறுக்கமாய் என்னை
அணைத்துக் கொள்கிறாள்

என் உடல் நடுக்கத்தோடு அவள் உடலும்
சேர்ந்து நடுங்குகிறது

எத்தனை நேரம் அப்படி இருந்தோம் என்கிற
நினைவு இல்லை

குடுகுடுப்பைக்காரன் குடுகுடுப்பை ஒலியும்
குரலும் மெல்ல மெல்ல தூரம் சென்றுக்கரைய
பின் மெல்லக் கதவை மூடிவிட்டு
படுக்கையில் சாய்கிறோம்

பயத்தில் எனக்கு எதுவும் பேசத் தோன்றவில்லை
அம்மாவை இறுக அணைத்தபடி நான்
பயத்தை மறக்க முயற்சிக்கிறேன்

அம்மாவும் பேசவில்லை. ஆனால் அந்தப்
பாலகன் நானாக இருந்துவிடக் கூடாது
என்ற எண்ணமோ என்னவோ அம்மாவும்
என்னை இறுக அணைத்துக் கொள்கிறாள்

எப்போது விடிந்தது எனத் தெரியவில்லை

நான் விழித்து எழுந்து அம்மாவைத் தேடுகையில்
அம்மா வீட்டு வாசலில் யாருடனோ
பேசிக் கொண்டிருப்பது தெரிய, வேகமாக
வாசலுக்கு ஓடுகிறேன்

தெருவில் ஆங்காங்கே கும்பல் கும்பலாய்
நின்றபடி, நேற்றைய குடுகுடுப்பைக்காரன்
விஷயத்தை பயந்தபடி பேசிக் கொண்டிருக்கிறார்கள்

என் வீட்டிற்கு எதிர் வீட்டிலும் என் வயதொத்தவன்
இருந்த காரணத்தால் அந்த மாமியும்
என அம்மாவும் மிகச் சரியாக யார் வீட்டு
வாசலில் இருந்து அந்த "ஐயோன்னு போறானே"
என்பதைச் சொல்லி இருப்பான் என்கிற
ஆராய்ச்சியில் இருக்கிறார்கள்

இருவருக்கும் நம் வீடாக இருக்கக் கூடாது
என்கிற என்கிற எண்ணம் இருப்பது அவர்கள்
பேச்சில் தெரிகிறது

அம்மா என்னை அணைத்தபடி என் தலையை
கோதியபடி இருப்பதைப் போலவே
எதிர் வீட்டு மூர்த்தியின் தலையை
அவர்கள் அம்மா கோதியபடி இருக்கிறாள்

நேரமாக, நேரமாக, பேச்சு கொஞ்சம் இலகுவாக
எதிர்வீட்டு  மாமி சட்டென " அதுசரி
நேத்து நடந்ததெல்லாம் சரி. அந்த சமயம்
நம்ம தெரு நாய்களெல்லாம் எங்கே போனது
ஒரு நாய் குரைப்புச் சப்தமும் கேட்கவில்லையே"
என்கிறாள் ஆச்சரியமாக

அப்போதுதான் நினைவு வந்தவளாக என்
அம்மாவும் " அட ஆமா..நம்ம வீட்டுப் பக்கமே
எப்போதும் ஏழெட்டுத் திரியுமே அதுக்கெல்லாம்
என்ன ஆச்சு " என்கிறாள்

எனக்கும் அது ஆச்சரியமாகத்தான் இருந்தது

எங்கள்  பேச்சைக் கேட்டுக் கொண்டு அருகில்
இருந்த சுந்தர் மாமா சட்டெனத் திரும்பி

"உங்களுக்கு விஷயம் தெரியாதா ?
நடுச்சாமக் கோடாங்கி எல்லாரும் சுடுகாட்டில்
பூஜை செஞ்சு வரும்போது கையில் ஒரு
தாயத்து வெச்சிருப்பாங்க

அதை நாய்க்கு நேராக் காட்டினா போதும்
அது நாய் வாயைக் கட்டிடும் அவன் தெரு
தாண்டும் வரையில் வாயத் திறக்காது"
என்றார்

அப்போது அதைக் கேட்க எங்களுக்கு
இன்னமும் பயம் கூடிப் போனது

பின் வயது கூடக் கூட அப்படியெல்லாம்
நாய் வாயைக்கட்டுவது என்பது சாத்தியமே இல்லை
அது கட்டுக் கதை. நாம் குடுகுடுப்பைக்காரனையே
முழுக் கவனத்துடன் கவனிக்கிற நிலையில்
நாயின் குரைப்பைக் கவனித்திருக்க விட்டிருக்கும்
என்கிற முடிவுக்கு வந்தேன்

ஆனால் இப்போது அப்போலோவில்
நடந்த விஷயத்தைப் பார்க்கையில் எனக்கு
தாயத்தால் வாயை கட்டுதல் சாத்தியம் என்றே
படுகிறது

காரணம், எத்தனைப் பெரிய நிலையில்
இருக்கிறவர்கள் ஆனாலும் கூட இரண்டாம்
தளம் தாண்டி மூன்றாம தளம் போக முடியாமல்
போனது,....

மாதக் கணக்காகியும் முன்னாள்  முதல்வரின்
உடல் நலம்குறித்து எந்தச் செய்தியும்
யார் வாய் வழியும்கசியாதிருப்பது,....

தஞ்சை மாவட்டத்தில் இருந்து வந்த யாரோ
ஒரு கைதேர்ந்த குடுக்குடுப்பைக்காரன்
இரண்டம் தளத்தில் வைத்துவிட்டுப் போயிருக்கிற
தாயத்தால்தான் இருக்கும் என நிச்சயம் நம்புகிறேன்

நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் ?

( ஒரு ஜன நாயக நாட்டில், விஞ்ஞான வளர்ச்சியும்
மக்களின் விழிப்புணர்வும் உச்சத்தில் இருக்கிற
இந்த நூற்றாண்டிலும், ஒரு மக்களின் ஏகோபித்த
தலைவரின் மரணம் குறித்த மர்மத்தை விலக்க
முடியவில்லையெனில்,என்ன நடந்தது என்பதைத்
தெரிந்து கொள்ளமுடியவில்லையெனில்
விக்கிரமாத்தித்தன் கதைகளைப் போல நாமும்
இதுபோல அப்போலோ மர்மக் கதைகளை எழுதிக்
கொண்டிருக்கவேண்டியதுதான்.
வெட்கக் கேடு ஆனாலும் வேறு வழி ? )

10 comments:

தி.தமிழ் இளங்கோ said...

அருமை! அருமை! அந்த காலத்து குடுகுடுப்பைக்காரன் நினைவுகள். படிக்கும்போது, உங்கள் வர்ணனையால் கூடவே எனது மலரும் நினைவுகளும் ஓடி வந்தன.

அந்த குடுகுடுப்பைக்காரன் மர்மத்தோடு இந்தக் கால மர்மங்களை இணைத்தது அருமை. இந்தக் கால தஞ்சை குடுகுடுப்பைக்காரன் வைத்த தாயத்து ’அவதூறு சட்டம்’ என்பது தில்லை அம்பலத்துக்கே தெரியும். இப்போது அந்த தாயத்தை மக்களே உடைத்து விட்டார்கள்.

ஸ்ரீராம். said...

காலப்போக்கிலாவது இந்த மர்மங்கள் விலகுமா என்கிற ஏக்கம்தான் வருகிறது.

Sampath said...

குடுகுடுப்பைக்காரன், அவனுடைய வார்த்தைகள், வருகின்ற நேரம் என்று அனைத்தும், மிக அருமை. வாயை கட்டிப்போடும் தாயத்து என்ன என்று திரு. தமிழ் இளங்கோ ஐயா கூறி விட்டார். நன்றி.

கரந்தை ஜெயக்குமார் said...

அருமைஅருமை ஐயா
இன்றைய நிலையினை அற்புதமாய் வெளிக்கொணர்ந்துவிட்டீர்கள்
வாயை மட்டுமல்ல தமிழ் நாட்டையே கட்டிப்போடும் தாயத்தாக அல்லவா இருக்கிறது
ஆனாலும் காலம் மாறும்
தம +1

வெங்கட் நாகராஜ் said...

அப்பல்லோ மர்மங்கள் - அவற்றை குடுகுடுப்பைக்காரன் மர்மங்களோடு ஓப்பீடு செய்தது நன்று! நெய்வேலியில் இந்த மாதிரி குடுகுடுப்பைக் காரன் வேஷத்தில் வந்தாலும் நடு ஜாமத்தில் வந்ததில்லை - எல்லாம் பகல் நேரத்தில் தான்! ஏமாற்றுப் பேர்வழி என துரத்தி விடுவார்கள்!

திண்டுக்கல் தனபாலன் said...

உண்மை ஒரு நாள் தெரிந்தே ஆகணும்...

வை.கோபாலகிருஷ்ணன் said...

குடுகுடுப்பைக்காரனைப்பற்றி வர்ணித்து எழுதியுள்ளது மிகவும் அருமை.

நாம் இருவரும் ஓரளவு சமவயதில் இருப்பதால், இவற்றையெல்லாம் என்னாலும் நன்கு உணர முடிகிறது.

மிகச்சிறுவனாக இருந்த அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்து போனது, எனக்கும்.

பகிர்வுக்கு நன்றிகள்.

கோமதி அரசு said...

குடுகுடுப்பைக்காரனைப் பற்றி சிறுவயது அனுபவங்களை அழகாய் சொன்னீர்கள். திகிலுணர்வுடன் படித்தேன்.

G.M Balasubramaniam said...

இந்த மர்மங்கள்தான் அரசியலில் இன்னும் அவிழ்க்கப்படாத முடிச்சுகள். ஏதாவது குடுகுடுப்பைக் காரன் மூலம் உண்மை வெளியானால் சரி

Thulasidharan V Thillaiakathu said...

அட! அந்தநாள் குடுகுடுப்பைக்காரனுடன் இப்போதைய நிகழ்வுகளை ஒப்பிட்டு ..சரிதான்..அப்படியேனும் மர்மங்கள் அவிழ்ந்தால் தேவலாம். ஆனால் காலம் செல்லச் செல்ல மக்களுக்கும் ஐயம் வந்துவிடுமே இப்போது வரும் கதைகளில் எல்லாம் உண்மைதானா அல்லது இடைச்செருகல்கள் இருக்குமோ என்று!!! அப்போதே சொல்லியிருந்தால் இந்த ஐயம் வந்திருக்காதுதானே!!!

ஜெஜெ ஆவி வேறு நிலவுவதாகப் பரபரப்பான செய்திகள் !!!!!!!ஹஹஹ்

Post a Comment