Wednesday, January 18, 2017

கவிதையும் குழம்பும்

கவிதைகள் குறித்து
நானும் என்  மனைவியும்
விவாதித்துக் கொண்டிருந்தோம்

"அனுபவங்களை மட்டுமே
மூலதனமாக்கிச் செய்த கவிதைகள்
வெற்றுப் புலம்பலையும்..

கருவின் விளக்கத்தையே
இலக்காகக்  கொண்டவை
மழைக்காலத் தவளைகளையும்...

வார்த்தை ஜாலங்களை மட்டுமே
நம்பிச் செய்தவைகள்
கழைக் கூத்தாடிகளையுமே
நினைவூட்டிப்போகின்றன

மூன்றின் சம அளவுச் சேர்மானமே
நல்ல கவிதைகளாகின்றன  " என்றேன்

"அப்படியானால் கவிதைகள் கூட
குழம்பு போலத்தான் "
என்றாள் துணைவி

"குழம்பு எப்படி கவிதையாகும் ? " என்றேன்

அவள் பொறுமையாய் விளக்கினாள்

" புளி உப்பு மிளகாய்
குழம்புக்கு அவசியத் தேவை
அவை இல்லாது
குழம்புக்கு ருசியில்லை

ஆயினும்
அவைகளின் இருப்புத்  தெரியாத
மிகச் சரியான சேர்மானமே
ருசியான குழம்பு " என்றாள்

"அப்படியானால் நன்கு  சமைக்கிற
பெண்கள் எல்லோரும் கவிதாயினிகள் தான்   "என்றேன்

" நிச்சயமாக
நீங்கள் பிறர் ரசிக்கப் படைக்கும் குழம்பு - கவிதை
நாங்கள் பிறர் ருசிக்கச் செய்யும் கவிதை- குழம்பு" என்றாள்

10 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

ஆகா...! அருமையாக சொல்லி விட்டார்கள்...

வை.கோபாலகிருஷ்ணன் said...

கவிதை இல்லாமல்கூட நாம் (குறிப்பாக நான்) வாழ்ந்து விட முடியும்

ஆனால் குழம்பு இல்லாமல் நம்மால் (குறிப்பாக என்னால்) வாழவே முடியாது.

தங்கள் துணைவியார் அவர்களின் கட்சிக்கு மட்டுமே என் ஆதரவு எப்போதும் உண்டு. :)

வை.கோபாலகிருஷ்ணன் said...

//நாங்கள் பிறர் ருசிக்கச் செய்யும் கவிதை-குழம்பு//

மிகவும் ரஸமாகவும் ரஸனையாகவும்தான் சொல்லியுள்ளார்கள். பாராட்டுகள்.

http://engalblog.blogspot.com/2017/01/170109.html

இதோ இந்த மேற்படி பதிவினில் உள்ள என்னுடைய பின்னூட்டங்களைப் படித்தால், குழம்புக்கும் ரஸத்திற்கும் உள்ள வித்யாசம் என்ன என்பது அனைவருக்கும் புரியவரும். :)

Nagendra Bharathi said...

அருமை

”தளிர் சுரேஷ்” said...

உங்களின் உவமைகள் எளிமையானவை! அருமையாக சொன்னீர்கள் கவிதை விளக்கம்! வாழ்த்துக்கள்!

G.M Balasubramaniam said...

மீண்டும்படிக்கும் போதும் சுவைக்கிறது

Yaathoramani.blogspot.com said...

வை.கோபாலகிருஷ்ணன் said...//

அனைத்தையும் கேட்டுக்கொண்ட ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹா பெரியவா, சிரித்துக்கொண்டே தன்னுடைய விளக்கத்தைக் கீழ்க்கண்டவாறு சொல்லுகிறார்:

-=-=-=-=-

குழம்பில்தான் ‘தான்’ உண்டு.

’தான்’ என்ற ஒன்று இருப்பதால்தான் குழம்புபோல நாமும் மிகவும் குழம்பித்தவிக்க வேண்டியுள்ளது.

(தான் = அகந்தை, அகம்பாவம், செறுக்கு, மண்டை கர்வம் முதலியன).

’தான்’ இல்லாத அதே குழம்பு தெளிவடைந்து விட்டால் ’ரஸம்’ என்றாகி விடுகிறது.

‘ரஸம்’ என்றால் ’பரமாத்மாவான பகவான்’ என்று பொருள்.

நாம் குழம்பிலிருந்து (நம் குழம்பிய மனத்திலிருந்து) ரஸமான பகவானை அடைய முயற்சிக்கும் முன்பு, ‘தான்’ என்ற அகந்தையை முதலில் நம்மிடமிருந்து நீக்கிவிட முயற்சிக்க வேண்டும்.

Yarlpavanan said...

குழம்புக்கு ருசிக்க
புளி, உப்பு, மிளகாய் தேவை போல
கவிதையைச் சுவைக்க
எழுத்து, சொல், சொல்லமைவு தேவையே!

Thulasidharan V Thillaiakathu said...

அட!!! இப்படியும் எப்படி ஒரு அழகான சிந்தனை!

வெங்கட் நாகராஜ் said...

ஆகா அருமையான சிந்தனை.....

Post a Comment