Friday, January 6, 2017

ஆண்டவனின் வேண்டுதல்

வானம் பார்த்து
மண்ணில் நடந்து
இன்னும் எத்தனை நாள்
பாதாளத்தில் வீழ்ந்து கொண்டிருக்கப் போகிறீர்கள்

ஞானம் தேடி
காடு மலை ஓடி
இன்னும் எத்தனை யுகம்
வாழ்வை இழந்து கொண்டிருக்கப் போகிறீர்கள்

நான் இருப்பதும் இல்லாதிருப்பதும்
உலகுக்கு பிரச்சனையே இல்லை

என்னை வைத்துப் பிழைப்பதும்
என்னை  "வைதுப் " பிழைப்பதுவுமே
உலகில் பெரும் பிரச்சனை

அர்ச்சனை செய்தால்
அள்ளிக் கொடுக்கவோ
செருப்படிக்  கொடுத்தால்
சீரழித்துப் போகவோ
நான் அற்ப  மனிதனில்லை

ஒலியாக ஒளியாக
பொதுவாக இருந்தவனை
மொழியாக  விளக்காக  நீங்கள்தான்
பிரித்துத் தொலைத்தீர்கள்

வெளியாகத்   தெளிவாக
இருந்தவனை
கோவில்  சிலையாக்கி என்னைப்
சின்னாபின்னப்படுத்தி
நீங்களும்
சிதறுண்டுப்  போனீர்கள்

நான் ஒருவனே என்று சிலரும்
நானே எல்லாம் என்று சிலரும்
என்னை நீங்களாகவே
உங்கள் தேவைக்கேற்றார்ப்போல
உருவகப் படுத்திக்கொண்டீர்கள்

எங்கும் நிறைந்த  என்னை
வெளிச்சமிட்டுக்காட்ட
ஊடகமும் ஏஜெண்டுகளும்
தூதர்களும்
தேவையென முடிவு செய்து
என்னை மகா சிறியவனாக்கிவிட்டீர்கள்

வெட்டவெளிதன்னை
மெய்யென்றுணரும்
பக்குவம்  வரும் வரையில்

பொருளுள்  என்னைத்
தேடித் திரியும்
பேதமை  ஒழியும் வரையில்

என்னை நீங்கள்
உணரப்  போவதில்லை

 உறுதியாகவும்
இறுதியாகவும்
எல்லோருக்குமாகவும் சொல்கிறேன்

என்னைப் படைத்து
என்னைப் புகழ்ந்து
அல்லது மறுத்து
நீங்கள் எதுவும் அடையப் போவதுமில்லை
என்னை நீங்கள் அடையப் போவதும் இல்லை

உங்கள் நிம்மதிக்காக இல்லையென்றாலும்
என் நிம்மதிக்காக வேணும்
என்னைச்  சிலகாலம்
கண்டு கொள்ளாது விட்டு விடுங்களேன்
பிளீஸ்

11 comments:

ஸ்ரீராம். said...

அருமை. கோவிலில் சி(றை)லையாக நிலையாக்கி விட்டோம்!! ஆண்டவனின் வேண்டுதல் இல்லை இது, கடவுளின் கதறல்!

KILLERGEE Devakottai said...

அற்புதமான கதறல் ஒலி

Yarlpavanan said...

ஆண்டவன் உள்ளம்
பக்தர்கள் அறிவாரோ

வை.கோபாலகிருஷ்ணன் said...

எங்கும் நிறைந்துள்ள பரப்பிரும்மம்தான் கடவுள்.

அவர் இல்லாத இடம் இந்தப் பிரபஞ்சத்திலேயே இல்லை.

மனிதர்களில் மட்டுமல்லாமல் ஒவ்வொரு ஜீவராசிகளின் உடம்பிலும் என்றுமே அழிவில்லாத ஆன்மாவாக இருப்பவர்தான் கடவுள்.

அவரைத்தேடி எங்குமே கோயில் கோயிலாக நாம் யாரும் அலைய வேண்டியதே இல்லை.

ஒரு பைசா செலவில்லாமல், நாம் இருக்கும் இடத்திலேயே இருந்து கொண்டு, நம்மில் நாமே அவரை உணர முடியும். நம் உள்ளம் உருகி வணங்கவும் வழிபடவும் முடியும்.

ஆத்மசாக்ஷாத்காரத்தை அடைந்துள்ள ஒருசில மஹான்களுக்கு மட்டுமே இதுபற்றி முற்றிலுமாகத் தெரியும்.

மனசாட்சிக்கு மட்டும் பயந்து, நேர்மையாகவும், நியாயமாகவும் நடந்து, எவ்வுயிரையும் தன் உயிர் போல நேசித்து, அன்புடனும், பண்புடனும், அடக்கத்துடனும், இரக்கத்துடனும் நடந்து கொண்டாலே போதும்.

அதுபோன்று யாரேனும் ஒருவர் இருப்பின் அவரே கடவுளின் சொரூபம் என்பதை நாம் மிகச்சுலபமாக அடையாளம் கண்டு உணர்ந்து கொள்ளலாம்.

இருக்கும் இடத்தைவிட்டு, இல்லாத இடம் தேடி எங்கெங்கோ அலைகின்றார் .. ஞானத்தங்கமே .. அவர் ஏதும் அறியாரடி .. ஞானத்தங்கமே .. என்ற பாடல் போலத்தான் பலரும் கடவுளைத்தேடி எங்கெங்கும் ஊர் ஊராகக் கோயில் கோயிலாக அலைந்து ஏதேதோ வேண்டுதல்களை நிறைவேற்றி வருவதாக, தங்களின் அறியாமையால் நினைத்துக்கொண்டு உள்ளனர்.

‘ஆண்டவனின் வேண்டுதல்’ என்ற தலைப்பும் படைப்பும் அருமை. பகிர்வுக்கு நன்றிகள்.

வெங்கட் நாகராஜ் said...

இப்படி அவரையும் கதறவிட்டு விட்டார்களே.....

நல்ல பகிர்வு.

Sampath said...

மிக எளிமையாக,அருமையான கருத்துக்கள். நன்றிகள் நண்பரே.

G.M Balasubramaniam said...

The kingdom of heaven is within youஉன்னில் இருக்கும் இறைவனைத் தேடி எங்கும் அலைய வேண்டாம் இதையே கடவுள் அறிவா உணர்வா என்று ஒரு முறை எழுதி இருந்தேன் தத் த்வமசி என்றும் சொல்வார்கள்

வை.கோபாலகிருஷ்ணன் said...

சமீபத்தில் சென்ற நூற்றாண்டில் (இன்றிலிருந்து சுமார் 70 ஆண்டுகளுக்கு முன்பு) ரமண மகரிஷி என்றொரு மஹான் திருவண்ணாமலையில் இருந்தார் என்பது நம்மில் பலருக்கும் தெரிந்திருக்கும்.

மதுரை அருகேயுள்ள திருச்சுழியில் 30.12.1879 இல் பிறந்தவர். தன் 17-வது வயதில், ஓர் லெட்டர் எழுதி வைத்துவிட்டு, கையில் மூன்று ரூபாய் பணத்துடன் மட்டும், வீட்டை விட்டுப் புறப்பட்டு, ரயிலில் ஏறி விழுப்புரத்தில் இறங்கி மாம்பழப்பட்டு வரை சென்று, பின்னர் அங்கிருந்து கால்நடையாகவே நடந்து அண்ணாமலையை அடைந்தார் பால ரமணர்.

பின் அதுவே அவரது நிரந்தர வாசஸ்தலமாயிற்று. திருவண்ணாமலைக்குப் போய் அருணாசலேஸ்வரர் - லிங்கத்தை ஒரேயொருமுறை முதன்முதலாகக் கட்டித்தழுவிக்கொண்டார்.

அதன் பிறகு 54 ஆண்டுகள் திருவண்ணாமலையை விட்டு வேறு எங்குமே அவர் வெளியில் செல்லவில்லை. சதா ஸர்வ காலமும் ஸ்ரீ அருணாசலேஸ்வரர் நினைவாகவே அவர் இருந்திருப்பினும், மீண்டும் அவர் அந்த அருணாசலேஸ்வரை தரிஸிக்கக் கோயிலுக்கு செல்லவே இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

பல்வேறு குகைகளில் எளிமையுடன் தங்கி வந்தார். அவரது அருள் ஒளி தரிசனம் பெற பலரும் திரண்டு வந்தனர். ஆன்மீக சூரியனாய் அவர் தகிக்க அவரது ஒளி தரிசனத்தைப் பெற உள்நாடு மட்டுமல்லாது, வெளிநாட்டில் இருந்தும் பல அறிஞர்கள் வந்தனர். பகவானின் அருளமுதம் பருகினர். அவர் புகழைப் பரப்பினர்.

ரமணர் மிகவும் எளிமையாகவே இருந்து பல்வேறு அற்புதங்கள் செய்துள்ளார்.

14-04-1950 இரவு 8.47 மணிக்கு பகவான் ரமண மகரிஷி மகா சமாதி அடைந்தார். இவர் உயிர் பிரிந்த தருணத்தில், ஆசிரமத்திலிருந்து மிகப் பெரிய பேரொளி ஒன்று தோன்றி, தெற்கிலிருந்து வடக்காகப் புறப்பட்டு, அருணாசல மலைக்குள் சென்று கலந்தது.

இன்றும் ரமணாச்ரமத்திலிருந்து, தம்மை நாடி வரும் அன்பர்களுக்கு சூட்சும ரீதியில் பகவான் ரமண மகரிஷி உதவிக் கொண்டுதான் இருக்கிறார் என்பது மறுக்க முடியாத உண்மை.

தன்னை நேரில் வந்து அடிக்கடி தரிஸிக்காவிட்டாலும், மனதளவில் எப்போதும் தன்னையே நினைத்துக்கொண்டிருக்கும், இதுபோன்ற தூய்மையான பக்தர்களுக்கு மட்டுமே பகவானின் அருள் கிடைக்கக்கூடும்.

சிவகுமாரன் said...


அருமை . கடவுளை நினைத்தால் பாவமாய்த் தான் இருக்கிறது.

\\\\என்னைச் சிலகாலம்
கண்டு கொள்ளாது விட்டு விடுங்களேன்
பிளீஸ்///
மக்களும் அப்படித்தான் இருக்கிறார்கள்.

கரந்தை ஜெயக்குமார் said...

அருமை
அருமை

Thulasidharan V Thillaiakathu said...

அருமை அருமை!!! பாவம் கடவுள்!!!

கீதா: என் மனதினை அப்படியே வரிகளில் வடித்துவிட்டீர்கள்! சூப்பர்! எங்கும் நிறைந்த என்னை
வெளிச்சமிட்டுக்காட்ட
ஊடகமும் ஏஜெண்டுகளும்
தூதர்களும்
தேவையென முடிவு செய்து
என்னை மகா சிறியவனாக்கிவிட்டீர்கள்// அருமை

இறுதி வரிகள் நான் அடிக்கடிச் சொல்லுவது...கடவுள் சொல்லுகிறார் என்னை விட்டுவிடுங்களேன் ப்ளீஸ் என்று கெஞ்சுவதாக..அதை அப்படியே இங்கு உங்கள் வரிகளில் கண்டதும் மகிழ்ச்சி. அட என்னைப் போல் ஒருவர் என்று!!!

Post a Comment