Tuesday, February 7, 2017

பன்னீரும் வெந்நீர் ஆனது...

மக்களின் எண்ணங்களை
அவர்தம் உணர்வுகளை
எது எதற்கோ சோரம்போய்

அரிதில் கடத்திகளாகச்
செய்தித் தாள்களும்
ஊடகங்களும் ஆகிப்போனதால்தான்

முக நூல் சுவர்களும்
வாட்ஸப்  திண்ணைகளும்
பதிவர் மேடைகளும்

உண்மைக் கடத்திகளாக
எளிதில் கடத்திகளாக
ஆகிப் போனதால்தான்

இளைஞர்களின்
எழுச்சியும் சாத்தியமானது

மெரினாவும்
மக்கள் சதுக்கமானது

ஜல்லிக்கட்டும்
சாத்தியமானது

அதன் தொடர்ச்சியாய்
இன்று பன்னீரும் வெந்நீர் ஆனது

இனிப் படிப்படியாய்
கபட வேடதாரிகளின்
வேஷம் நிச்சயம் கலையும்

இனிப் படிப்படியாய்

"போலித் தலைமைகளின் "
தான்தோன்றித்தனங்களும்
நிச்சயம் மண்ணைக் கவ்வும்

அதற்காகவேணும்

நாட்டு நடப்பினில் கூடுதல்
கவனம் கொள்வோம் வாரீர்

மனதில் பட்டதை நேர்மையாய்த்
தொடர்ந்து எழுதுவோம் வாரீர் 

10 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

இன்னும் பல உண்மைகள் வெளி வர வேண்டும்...

KILLERGEE Devakottai said...

உண்மைகள் வெளிவரும்...

கரந்தை ஜெயக்குமார் said...

உண்மைகள் வெளிவரட்டும் ஐயா

வை.கோபாலகிருஷ்ணன் said...

'பன்னீரும் வெந்நீர் ஆனது...' என்ற
தலைப்புத் தேர்வு மிகவும் அருமை.

நேற்றுவரை பன்னீராக மணம் கமழ்ந்தது இன்று ஏனோ வெந்நீராகச் சுடுகிறது. :(

’உஷ்ணம் உஷ்ணேன சாந்திஹி’ என வடமொழியில் சொல்லுவார்கள்.

அதாவது வெப்பம், வெப்பத்தால் மட்டுமே தணிக்கப்படும் என்ற பொருளில் சொல்லுவார்கள்.

அதனால் வரும் கோடை காலத்திற்குள் வெந்நீர் மீண்டும் ஒருவேளை பன்னீர் ஆகலாம்.

சற்றே பொறுத்திருந்து ‘என்னதான் நடக்கும் நடக்கட்டுமே .......’ என்று பார்ப்போம்.

G.M Balasubramaniam said...

சூத்திர தாரி தலை நகரில் இருக்கிறாரோ என்னவோ

Unknown said...

புறக்கடை வழி அடைபடட்டும்
அறவழி அரசியல் ஆரம்பமாகட்டும்
திறவிழி கொடுமைக் கெதிராகட்டும்.

...பெரணமல்லூர் சேகரன்

இராய செல்லப்பா said...

அனைத்திந்திய தேசீய அரசியல் கட்சி ஏதாவது ஒன்று தமிழகத்தில் ஆட்சிப் பொறுப்பிற்கு வரும் வரை இம்மாதிரி நிகழ்வுகள் அடிக்கடி நடந்தேறுவதை யாராலும் தடுக்கமுடியாது. - இராய செல்லப்பா நியூஜெர்சி

Thulasidharan V Thillaiakathu said...

முக நூல் சுவர்களும்
வாட்ஸப் திண்ணைகளும்
பதிவர் மேடைகளும்

உண்மைக் கடத்திகளாக
எளிதில் கடத்திகளாக
ஆகிப் போனதால்தான்

இளைஞர்களின்
எழுச்சியும் சாத்தியமானது

மெரினாவும்
மக்கள் சதுக்கமானது// உண்மைதான் சமூக வலைத்தளங்கள் அதற்குக் காரணம் என்பதை மறுக்க இயலாது. உண்மைகள் வெகுநாட்கள் உறங்காது!

ஸ்ரீராம். said...

ஏமாற்றம் இல்லாமல் மாற்றங்கள் வரவேண்டும்.

Imayavaramban said...

ஊடகங்கள் தந்ததுதான் செய்தி என்ற நிலை மாறி யாரும் எதையும் எப்படிப்பட்ட கருத்தையும் பரிமாறிக் கொள்ள உள்ள வாய்ப்புக்களால்தான் உண்மை என்ன என்று தெரிந்து கொள்ள முடிகின்றது.

Post a Comment