Friday, February 2, 2018

இழக்கப் பிறக்கும் ஞானம்

இல்லற வானில்
நாற்பதாண்டுக் காலம்
இணைந்து இன்புற்று உடன் பறந்த
தன் துணை வீழ்ந்து பட..

வேரெடுக்கப்பட்ட
செடியாய்
மெல்ல மெல்ல
தன்னை இழந்து கொண்டிருந்தவனுக்கு
எப்படி ஆறுதல் சொல்வதெனத் தெரியாது
கைகளை மட்டும் இறுக்கப்
பற்றிக் கொண்டிருந்தேன்

எக்கணமும் வெடித்துச் சிதறுவான் போல்
இறுக்கிக் கிடந்தான் அவன்

பின் மெல்ல அவனே
பிதற்றத் துவங்கினான்

"இரவு இத்தனை நீண்டதென
இருள் இத்தனைக் கனத்ததென
தனிமை இத்தனை துயெரென
வெறுமை இத்தனைக் கொடிதென
அவளை இழந்தபின் தான்
இந்த ஒரு வாரத்தில்தான்
எனக்குப் புரிந்து தொலைக்கிறது

பசி இருக்க
உண்ண முடியாதும்
உடல் அயற்சியுற்றும்
உறங்க முடியாதும்
உயிர் இருந்தும்
இயங்க முடியாதும்
என்ன கொடுமையிது " என்றான்

கண்ணீருடன் கலங்கி நின்ற
அவன் நிலை காணக் காண
மனம் பற்றியெரியவும் துவங்கியது

"பாவக்கா கறியில்
உப்புக் கொஞ்சம் குறைந்ததற்காக
நேற்று
ருத்ரதாண்டவம் ஆடிய  எனக்கு"

4 comments:

Anuprem said...

கடின வாழ்க்கை...

புரிந்து வாழவேண்டும்....

Unknown said...

துணை இழந்தவன் துயரை நானும் அறிகின்றவன்! நண்பரே!நலமா?

வெங்கட் நாகராஜ் said...

ருத்ரதாண்டவம் ஆடிய எனக்கு! கடைசி வரியில் இருந்த நிஜம்.....

மனதைத் தொட்ட கவிதை.

Yarlpavanan said...

உள்ளத்தைத் தொட்ட
உயிருள்ள கவிதை இது!

Post a Comment