Thursday, May 21, 2020

கவிதை என்பது உணர்வு கடத்தி...


" ஏதோ ஒன்று குறைவதைப் போலுள்ளது
இன்னும் கொஞ்சம் முயற்சி செய் "என்கிறேன்

தரையில் சட்டென விழுந்து ஓடும்
தை மாத மேகம் போல்
சிறு வெறுப்பு அவன் முகம் கடக்கிறது

"எதுகை இருக்கிறது
மோனை இருக்கிறது
பாயாசத்து முந்திரியாய்
படிமமும் இருக்கிறது
மொக்கையாக இல்லாது
ஒரு செய்தியும் சொல்லி இருக்கிறேன்
கவிதைக்கு வேறென்ன வேண்டும் "என்கிறான்

"தலைவாரிப் பூச்சூடுகிறாள்
ஆடை அணிவிக்கிறாள்
சோரூட்டுகிறாள்.தாலாட்டுகிறாள்
தாய்க்குரிய அனைத்தையும் செய்வதால்
அவள் தாயாக இருக்கவேண்டும் என்பதில்லை
கவிதைக்குரிய அனைத்தும் இருப்பதால்
அது  கவிதை போல் இருக்கலாம்
ஆயினும் அது கவிதையாய் இருக்கவேண்டியதில்லை
ஏனெனில் கவிதை ஒரு புராடெக்ட் இல்லை"என்கிறேன்

"பின் இவை ஏதுமற்றதுதான் கவிதையா ""என்கிறான்

"அப்படியும் இருக்கலாம்
கவிதை வெறும் சொல்லடுக்கு இல்லை
கவிதை  நாட்டு நடப்புகளைச் சொல்லும்
செய்தித் தாளும் இல்லை
இலக்கண அறிவை விளம்பிட உதவும்
விடைத்தாளும் இல்லை
தான் அறிந்ததை பிறர் அறியச் சொல்லும்
விளம்பர சாதனமும் இல்லை
தான் உணர்ந்ததை பிறர் உணரச் செய்பவை எவையோ
அவை மட்டுமே  கவிதையாய் இருக்க முடியும்
ஏனெனில் கவிதை ஒரு உணர்வு கடத்தி "என்கிறேன்

புரிந்தது போல் லேசாகத் தலையாட்டிப் போகிறான்

புரிந்ததும் புரியாததும் அவனது அடுத்த படைப்பில்
புரிந்துவிடும் என்பது நமக்கெல்லாம் புரிந்தததுதானே ?


7 comments:

கரந்தை ஜெயக்குமார் said...

கவிதை ஒரு உணர்வு கடத்தி

உண்மை
அருமை

திண்டுக்கல் தனபாலன் said...

// கவிதை ஒரு உணர்வு கடத்தி //

அருமை... இதை விட :

நீங்கள் சொல்லும் உதாரணங்கள் மேலும் மேலும் ரசிக்கத்தக்கவை...

G.M Balasubramaniam said...

தான் உணர்ந்ததை பிறர் உணரச் செய்பவை எவையோ
அவை மட்டுமே கவிதையாய் இருக்க முடியும்
ஏனெனில் கவிதை ஒரு உணர்வு கடத்தி "என்கிறேன் உணர்ந்தும் உணர வில்லை என்பதுபோலும் இருப்பவரகளுக்காக எழுதி பிரயோசனம் இல்லை

Jayakumar Chandrasekaran said...

செய்யுள் என்பதற்கு இலக்கணம் எழுதியவர் பலர். சங்கம் தொட்டு இன்று வரை வெண்பா, ஆசிரியப்பா, என்று பல்வேறு இலக்கணங்கள். 

பாரதி மட்டும் செய்யுளும், புதியதாக கவிதை என்ற வடிவில் எதுகை மோனையுடன் மெட்டுகளுக்கு பாடல்களாகவும் எழுதியதில் இருந்து கவிதை என்ற சொல் பிரபலம் ஆனது.

கவிதைக்கு இலக்கணம் எழுதியவர் பலர். ஆனால் ஒன்றும் நிலைக்கவில்லை. கவிதை, மரபுக் கவிதை, புதுக் கவிதை, குறுங்கவிதை, சென்றியு, ஹைக்கூ என்று பல விதங்கள். இலக்கணங்களும் வேறு.  அதில் ஒரு இலக்கணமாக உணர்வு கடத்தி என்று புதிய சொல் நீங்கள் அறிமுகப் படுத்தியுள்ளீர்கள். இதுவும் உண்மை எனினும் இது மட்டும் போதாது. விரைவில் நீங்கள் மற்றவற்றையும் கண்டுபிடிப்பீர்கள். 
Jayakumar

வெங்கட் நாகராஜ் said...

உணர்வு கடத்தி - நன்று.

நீங்கள் எடுத்துச் சொல்லும் உதாரணங்கள் ரொம்பவே சிறப்பு.

ஸ்ரீராம். said...

ஜெயக்குமார் சந்திரசேகர் ஸார் சொன்னது போல நிறைய வகைகள் இருக்கின்றன.  என்னைப்பொறுத்தவரை இதை எல்லாம் ஆராயக்கூடாது, அனுபவிக்கணும் டைப்தான்!  தோன்றியதை மடக்கிப் போட்டு எழுதி கவிதை என்று தந்து விடுவேன்!!!

மாதேவி said...

தான் உணர்ந்ததை பிறரும் உணரச்செய்வது.

Post a Comment