Wednesday, August 19, 2020

அழிவின் விளிம்பில் ....

 இதுதான் வாழ்க்கை !  வெள்ளம் உணர்த்தும் பாடம் !


“இந்தப் பகுதி இன்னும் அரைமணி நேரத்தில் மூழ்கிவிடும். 

முக்கியமானதை மட்டும் எடுத்துக்கொண்டு வெளியேறுங்கள்”


இதைக் கேட்டபோது அவர்கள் முழங்கால் அளவு


தண்ணீரில் நின்றுகொண்டிருந்தார்கள்.


இப்போது அவர்கள் பிரச்சினை

எதையெல்லாம் எடுத்துக்கொள்வது என்பதல்ல

எதையெல்லாம் கைவிடுவது என்பதுதான்.


முதலில் கைகளில் எதையெல்லாம் தூக்கிக்கொள்ள முடியாதோ அதையெல்லாம் கைவிட்டார்கள். 


பிறகும் கைவிடுவதற்கு ஏராளமாக இருந்தன.


பரிசுப்பொருள்கள்

தெய்வப்படங்கள்

புகைப்பட ஆல்பங்கள்

ஆடைகள்

உள்ளாடைகள்

புத்தகங்கள்

இசைக்கருவிகள்

இசைப்பேழைகள்

ஸ்பூன்கள்

கண்ணாடிக் கோப்பைகள்

பொம்மைகள்

கண்ணீரின் உப்புப் படிந்த தலையணைகள்

உடல் வாசனையுள்ள போர்வைகள்


அழகு சாதனப்பொருள்கள்


கைவிடுவதற்கு முடிவேயில்லாமல் ஏராளமாக இருந்தன.


நீங்கள் கைவிடும்போது உங்கள் மனதை ஒரு பனிக்கட்டியைப்போல உறையச் செய்ய வேண்டும். 


எவ்வளவு கருணையற்றவராக இருக்கமுடியுமோ அவ்வவு கருணயற்றவராக மாறவேண்டும்.

 

ஒரு தூக்கிலிடுபவனைப்போல உங்கள் கண்கள் மரத்துப் போக வேண்டும்.


ஒரு பாலித்தீன் பை அளவுக்கு மட்டுமே எதையும் எடுத்துக்கொள்ள அவர்களுக்கு அவகாசம் இருந்தது. அனுமதி இருந்தது.


அவர்கள் ஒரு பிரம்மாண்டமான விற்பனையகத்தின் முன்னால்கூட அப்படி திகைத்து நின்றதில்லை.


தேர்வு என்பது அத்தனை கடினமானதாக இருந்தது. 


அத்தனை உணர்ச்சிகரமானதாக இருந்தது. 


எதுவுமே அவ்வளவு முக்கியமல்ல என்று தோன்றிய கணத்தில் அவர்கள் தோள் அளவுக்கு தண்ணீர் வந்துவிட்டிருந்தது.


கடவுச்சீட்டுகளை எடுத்துக்கொண்டார்கள்.


வங்கிக் கணக்குப் புத்தகங்களை எடுத்துக் கொண்டார்கள்.


சான்றிதழ்ககளை எடுத்துக் கொண்டார்கள். 


ஆயுள் காப்பீட்டுப் பத்திரங்களை எடுத்துக்கொண்டார்கள்.


ரேஷன் கார்டுகளை, வாக்காளர் அட்டைகளை, ஆதார் அட்டைகளை, வாகனங்களை கைவிட்டு ஓட்டுனர் உரிமங்களை, கடன் பத்திரங்களை இன்னும் என்னென்னவோ! 


முத்திரையிடப்பட்ட காகிதங்களை, ஆவணங்களைத் தவிர நம் வாழ்வை மீண்டும் நீட்டிக்கச் செய்வதற்கு வேறு எதுவுமே முக்கியமல்ல என்பது அவர்களை ஒரு கணம் அதிர்ச்சியடைய வைத்தது.


பிறகு வீடுகளை அப்படியே திறந்து போட்டு விட்டு ஒரு பாலீத்தின் கவரை தலைக்கு மேலாக தூக்கிப் பிடித்தபடி மேட்டு நிலம் நோக்கி தண்ணீரில் வேக வேகமாக நடந்து சென்றார்கள்...


வாழ்க்கையே இவ்ளோதான்... இதிலே,  நான்தான் உத்தமன்... நான்தான் உயர்ந்தவன்...  என் தலைவர்தான் நல்லவரு - வல்லவரு (?)...  என் மதமும், ஜாதியும் தான் ஒசந்த ஜாதி,... என் சாமிதான் ஒசந்தது... இது என்னோட இடம்... நான்தான் பணக்காரன்... இப்படி எத்தனை பாகுபாடுகள்.... "கடைசி"யா இதுல ஏதாச்சும்  கைகுடுத்துச்சா...???.கை கொடுக்குமா...??? .. 


சிந்திப்போம்... 


இதுதான் வாழ்க்கை! இவ்வுலகில் நீங்களோ, நானோ  எதை விட்டுச் செல்ல போகிறோம்...??? 


நாளைக்கு எதை இங்கிருந்து எடுத்துச் செல்ல போகிறோம்...??? 


இருக்கும் வாழ்க்கையில், பிறர் மனம் நோகாமல்  நல்லவைகளை பேசி, முடிந்தவரை  பிறருக்கு உதவி  செய்து... எவருக்கும் தீங்கிழைக்காமல் வாழ்வோம்...!!!


நான் ௮ப்படித்தான் வாழ நினைக்கிறேன், நீங்கள்👉?

13 comments:

ஸ்ரீராம். said...

எழுதுவதற்கும் யோசிப்பதற்கும் நல்ல களம்.  'இந்நிலையில் நாம் என்ன செய்வோமாயிருக்கும்' என்று திகைக்க வைத்தது.

திண்டுக்கல் தனபாலன் said...

காதற்ற ஊசியும் வாராது காண் கடைவழிக்கே...

திண்டுக்கல் தனபாலன் said...

// முத்திரையிடப்பட்ட காகிதங்களை, ஆவணங்களைத் தவிர நம் வாழ்வை மீண்டும் நீட்டிக்கச் செய்வதற்கு வேறு எதுவுமே முக்கியமல்ல என்பது அவர்களை ஒரு கணம் அதிர்ச்சியடைய வைத்தது. //

அப்படியென்றால்.... குறள் :-

நில்லாத வற்றை நிலையின என்றுணரும்
புல்லறி வாண்மை கடை 331

மற்றவைகளுக்கு, நிலையாமை அதிகாரத்தின் மற்ற குறள்கள்...

KILLERGEE Devakottai said...

இன்றைய சூழல் இப்படித்தான் இருக்கிறது மக்களுக்கு...

G.M Balasubramaniam said...

ஒரு கணம் பிரளய காலம் இப்படித்தான் இருக்குமோ என்னும் எண்ணம் வந்தது

Kamala Hariharan said...

வணக்கம் சகோதரரே

சிந்திக்க வைக்கும் பதிவு. சுமுகமாக ஒடும் வாழ்க்கையில் அசம்பாவித விளிம்பின் தேர்வு நிலை... வாழ்வில் எதை விடுப்பது என்பதை தேர்ந்தெடுக்கும் போது மனம் எவ்வளவு கடினபடும் என்பதை படிக்கும் போது உணர்கிறேன். அச்சமய முடிவு எத்தகையது என்பதை ஒவ்வொரு வார்த்தைகளிலும் வடித்து விட்டீர்கள். பாராட்டுக்கள். பகிர்வுக்கு மிக்க நன்றி.

நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.

கரந்தை ஜெயக்குமார் said...

உண்மைதான்

வல்லிசிம்ஹன் said...

உயிர் என்று ஒன்று. அதைக் காக்க எடுக்கும் கடைசி நடவடிக்கைகள்.
இரு வாரங்கள் முன் இங்கேயும்
அப்படி ஒரு நிலை வந்தது .20 நிமிடங்கள் கெடு கொடுத்தார்கள்.
நீங்கள் சொன்னவற்றை எடுத்து வீட்டின் அடித்தளத்துக்கு விரைந்தோம். என்
கையில் என் மருந்து டப்பா.

ஆனால் நீங்கள் குறிப்பிடும் இந்தப் பிரளயம்
உயர் மட்ட அழுத்தம். எதுதான் நம் கையில்?
மிகச் சிறப்பான எழுத்து.
இறைவன் நமக்கு உணர்த்தும் நிலையாமை பற்றிய
கணங்கள்.
அருமை.

நெல்லைத்தமிழன் said...

உயிரைத் தவிர வேறு எதுதான் முக்கியமாகப் போகிறது? சிந்திக்க வைத்த எழுத்து.

ஆவணங்கள் தவிர வேறு எதுவுமே முக்கியமானது இல்லை என்பது கசப்பான உண்மை.

மனோ சாமிநாதன் said...

உண்மை தான்! இந்த வினாடியில் தான் வாழ்க்கை எல்லோருக்கும் புரியும்!

வெங்கட் நாகராஜ் said...

சிந்திக்க வைத்த பகிர்வு.

காதற்ற ஊசியும் தான் எனக்கும் நினைவுக்கு வந்தது.

Thulasidharan V Thillaiakathu said...

ரொம்பவே சிந்திக்க வைத்த பதிவு. கொஞ்சம் இதை யோசித்துப் பார்த்த போது ஒரு பயம் அப்பியது என்னவோ உண்மை. எதை எடுத்துக் கொள்வது? எதை விடுவது? இப்படி ஒரு நிலைக்கு நாம் தள்ளப்பட்டால்? நினைத்துப் பார்க்கவே அஞ்சியது.

கேரள வெள்ளம், சென்னை வெள்ளம் நினைவுக்கு வந்தது.

கடைசியில் சொன்ன வரிகளை அப்படியே டிட்டோ செய்கிறேன்.

கீதா

Thulasidharan V Thillaiakathu said...

அருமையான பதிவு.

கேரளத்து வெள்ளம் நினைவுக்கு வருகிறது. இப்படித்தான் மக்கள் மிக மிகத் துன்பப்பட்டார்கள். வாழ்வு என்பது எத்தனை நிச்சயமற்ற தன்மையுடையது.

கடைசியாகச் சொன்னது நல்ல கருத்து. அதைத்தான் கூடியவரை நாம் எல்லோருமே பின்பற்ற முயற்சிசெய்கிறோம்.

துளசிதரன்

Post a Comment