Sunday, September 13, 2020

எம்.ஜி.ஆரின் கதையும் நம் பதிவரின் கதையும்

ஆகஸ்ட் 15 1968 ஆம் நாள் காலை.

சுமார் எட்டு மணிக்கே ஆசியாவிலேயே

பெரிய தியேட்டர் எனப் பெயர்பெற்ற மதுரை

தங்கம் தியேட்டர் டிக்கெட் கவுண்டரில்

நாங்கள் டிக்கெட் எடுக்க மூச்சுத்திணற வைக்கும்படியான

கூட்டத்தில் முட்டி மோதி முன்னேறிக் கொண்டிருந்தோம்..


ஆம் என்னைப் போன்ற எம்.ஜி.ஆரின் 

தீவிர ரசிகர்களுக்கெல்லாம் அவரின் படம் 

வெளியாகிற அன்றே முடிந்தால் முதல் ஷோவே

பார்ப்பதே ஒரு பெரும் கெத்து.


போலீஸ் அடிவாங்கி சட்டை கசங்கி சமயத்தில்

கிழிந்து டிக்கெட் எடுக்கும்படியான நிலை

என்ற போதும் கூட அதைப் பார்த்து விட்டு

ஊரில் தெருவில் முதல் நாள் முதல் ஷோ

பார்த்துவிட்டேன் என சக நண்பர்களிடம்

பீத்துவதில் உள்ள சுகம் கெத்து அது

அதை அனுபவித்தவர்களுக்குத்தான் தெரியும்


அந்த வகையில் அன்று எம்.ஜி.ஆரின்

கணவன் என்கிற படம் ரிலீஸ் ஆகி இருந்தது

அவர் நடிப்பில் வந்த படத்துக்கே கூட்டம் அள்ளும்

இந்த படத்திற்கு கதை எம்.ஜி.ஆர் என வேறு

போட்டிருந்ததால் கூட்டம் எக்கிக் கொண்டிருந்தது


எழுபது பைசா கௌண்டர் அதை அடுத்து எண்பது

பைசா அதை அடுத்து ஒரு ரூபா பத்து பைசா

கவுண்டர் என வரிசையாக இருக்கும்


முதலில் குறைந்த டிக்கெட் என்பதால் எண்பதில்தான்

அதிகக் கூட்டம் இருக்கும்.முதலில் அதைத்தான்

கொடுக்கவும் செய்வார்கள்.அது முடிந்ததும் அந்த டிக்கெட்

கிடைக்காதவர்கள் சட்டென கம்பித் தடுப்பை

அவர்கள் இருப்பிடத்திலிருந்து அப்படியே

இருக்கிற மேல் இடைவெளியில் அடுத்த

கவுண்டருக்கு லாவகமாக்த் தாண்டுவார்கள்.


அவர்கள் அப்படித் தாவி இறங்குவது

பெரும்பாலும் நம் தலையாகவோ நம்

முதுகாகவோ கூட இருக்கும்.. போலீஸ்

கவுண்டருக்கு வெளிப்பகுதியில் இருப்பதால்

அவர்களால் இதைத் தடுக்க எதுவும்

செய்ய முடியாது.


இந்தக் களேபரத்தில் கழுத்துச் சுளுக்கு

கைகால் சேதாரம் எல்லாம் சர்வ சாதாரணம்.

அதை இரசிகர்கள் வீரத் தழும்பாகவே

ஏற்றுக் கொள்ளும் பக்குவம் பெற்றிருந்ததால்

நாங்களும் அந்தப் பக்குவத்தோடும்

பெருமிதத்தோடும் தியேட்டருக்குள் போய்

மக்கள் திலகம் எம்.ஜி. ஆர் என்ற எழுத்து

வந்ததுமுதல் இறுதிக் காட்சிவரை

விசிலடித்து ஜிகினா பேப்பர் கட்டிங் தூவி

சூடம் காண்பித்து பெரும் ஆரவாரத்தோடு

படம் பார்த்து வெளியில் வந்தால்.......


முதலில் இருந்ததை விட இப்போது

போலீஸ் அதிகம் இருந்தது...இரண்டு மூன்று

போலீஸ் லாரிகள் வேறு ஆயுதம் ஏந்திய

போலீஸோடு இருந்தது..


பயந்து வேகமாக வெளியே வந்து

என்ன வென்று விசாரித்தால் போன

காட்சியில் டிக்கெட் கவுண்டரில்

கூட்ட நெரிசலில் இரண்டு பேர்

நசுங்கிச் செத்ததாகச் சொன்னார்கள்.


நாங்கள் நல்லவேளை அது நாமாக

இல்லாமல் போனோமே என

ஆண்டவனுக்கு வானம் பார்த்து

ஒரு கும்பிடு போட்டு நடக்கத் துவங்கினோம்


அப்போது அங்கு கடையோரம்

நின்றிருந்த ஒரு பெரியவர்

"சும்மாவே ஆடறவன் கொட்டடிச்சா

சும்மாவா இருப்பான்.

அவர் நடிப்பு மட்டும்னாலே கட்டி ஏறுகிறவன்.

கதை வேற அவருன்னா ...

இப்படித்தான் ஆகும் " என

யாரிடமோ சொல்லிக் கொண்டிருந்தார்.


அது சரி..அது என்ன கதை ?

அது எம். ஜி ஆர் தன் கதை என சொல்லிக்

கொள்ளும்படியாக அதில் என்ன சிறப்பு ?


அதெல்லாம் கூட இருக்கட்டும்

தலைப்பில் சொன்னது போல் 

எம்.ஜி.ஆரின் கதைக்கும் நம் பதிவர்

கதைக்கும் என்ன தொடர்பு ?

அந்தப் பதிவர் யார் ?  ....


நீளம் கருதி அடுத்தப் பதிவில்...

...

16 comments:

KILLERGEE Devakottai said...

இன்றைய இளைஞர்கள் ப்ளாஷ்டிக் பதாகைகளுக்கு பாலாபிஷேகம் செய்வதின் ஆணிவேர் இவைகள்தான் என்பது புலனாகிறது.

தொடர்கிறேன்...

Yaathoramani.blogspot.com said...

பதிவர் யார் என யூகிக்க முடிந்ததா...

வல்லிசிம்ஹன் said...

மதுரையில் முகராசி படம் பார்த்த நினைவுதான் இருக்கிறது. மற்றபடி
பதிவின் சாராம்சம் பிடிபடவில்லை.:)

Yaathoramani.blogspot.com said...

இது கணவன் பட கதை குறித்து..அடுத்த பதிவைப் படித்ததும் விசயம் பிடிபடும்...

திண்டுக்கல் தனபாலன் said...

ஆவலுடன் காத்திருக்கிறேன் ஐயா...

Kamala Hariharan said...

வணக்கம் சகோதரரே

பழைய கால திரைப்படம் பார்த்த மலரும் நினைவுகள் ஸ்வாரஸ்யமாக இருக்கின்றன. கணவன் படம் தொலைக்காட்சியில் பார்த்த நினைவு இருக்கிறது. ஆனால், கதை தெளிவாக நினைவுக்கு வரவில்லை. கதையையும், குறிப்பிடும் பதிவரையும், அடுத்தப்பதிவில் ஆவலுடன் எதிர்பார்க்கிறேன். பகிர்வுக்கு நன்றி.

நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

இளமைக்காலத்தில்கும்பகோணத்தில் சில திரைப்படங்களைக் காண முண்டியடித்துச் சென்ற நினைவு வந்துவிட்டது.

Yaathoramani.blogspot.com said...

நீங்கள் நிச்சயம் பதிவரை யூகித்திருக்கக் கூடும்...

Yaathoramani.blogspot.com said...

வரவுக்கும் விரிவான மனம் திறந்த பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நல்வாழ்த்துகள்..

Yaathoramani.blogspot.com said...

ஆம் நம் காலத்தில் சினிமா ஒன்றே எளிதில் அருகில் கிடைக்கக் கூடிய பொழுது போக்கு அம்சமாக இருந்தது..

Jayakumar Chandrasekaran said...

பதிவர் செல்லப்பா சார் தானே?

Yaathoramani.blogspot.com said...

இல்லை...

துரை செல்வராஜூ said...

இதெல்லாம் கேள்விப்பட்டதோடு திரையரங்க வாசலில் வேடிக்கை பார்த்திருக்கிறேன்...

அடிபட்டு உதைபட்டு திரைப்படம் பார்த்த அனுபவம் எதுவும் என்னிடம் இல்லை...

அன்றைக்கு நசுங்கிச் செத்தவர்களின் குடும்பங்கள் எல்லாம் இன்றைக்கு எந்த கதியில் உள்ளனவோ!..

Yaathoramani.blogspot.com said...

ஆம் இந்த தீவீர ரசிகர் மனோபாவம் சேரும் நண்பர்களை வைத்து உருவாவது..இது MRTK எனச் சொல்லப்படும் தென்மாவட்டங்களில் அதிகம்..அது ஒரு விடலைப் பருவ காலம்..

வெங்கட் நாகராஜ் said...

அடி உதை பட்டு திரைப்படம்! ஸ்வாரஸ்யம். பதிவர் யார் எனத் தெரிந்து கொள்ள அடுத்த பகுதிக்காக நானும் காத்திருக்கிறேன்.

Yaathoramani.blogspot.com said...

வரவுக்கும் பதிலுரைக்கும் மனமார்ந்த நல்வாழ்த்துகள்

Post a Comment