Wednesday, September 22, 2021

நிறைவின் சூட்சுமம்

நிறைவின் சூட்சுமம்


எடுப்பதை விட வைப்பது

கூடுதலாய் இருக்க வேண்டும் என்பதில்

கவனமாய் இருக்கிறேன்


இருப்பது எப்போதும்

நிறைவாகவே இருக்கிறது


பெறுதலை விட கொடுப்பது

அதிகமாயிருத்தல் அவசியம் என்பதில்

தெளிவாய் இருக்கிறேன்


இருப்பது எப்போதும்

குறையாதே இருக்கிறது


கூலியை விட உழைப்பது

மிஞ்சி இருக்கவேண்டும் என்பதில்

உறுதியாய் இருக்கிறேன்


வளர்ச்சி எப்போதும்

என் வழியிலேயே குடியிருக்கிறது


பதவியை விடத் தகுதி

உயர்ந்திருக்கவேண்டும் என்பதில்

சமரசம் கொள்ளாதிருக்கிறேன்


பதவிகள் எமையடைய

நாளும் தவமிருக்கின்றன


பேசுதலை விட கேட்பது

கூடுதலாய் இருக்கவேண்டும் என்பதில்

சரியாய் இருக்கிறேன்


கேட்பதற்கெனவே ஒரு கூட்டம்

எப்போதும் காத்திருக்கிறது


எழுதுவதை விட படிப்பது

அளவு கடக்க வேண்டும் என்பதில்

அதிக அக்கறை கொள்கிறேன்


எழுதுவதற்கு விஷயங்கள்

வற்றாது பெருகுகிறது


கடந்ததை விட கடப்பதில்

கவனம் அவசியம் என்பதில்

கவனமாகவே இருக்கிறேன்


வாழ்க்கை என்றும் எப்போதும்

இனிதாகவே கடக்கிறது



( இங்கு நான் என்பதும்  எனக்கு என்பதும்

என்னை மட்டும் குறிப்பதில்லை

வாழ்வின் சூட்சுமம் அறிந்தவர்கள்

அனைவரையும்தான் )

6 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

ஆகா... தெளிவான எண்ணங்கள்...

Kamala Hariharan said...

வணக்கம் சகோதரரே

அருமையான அறிவு சார்ந்த அறிவுரைகள். உங்கள் எண்ணங்கள் அனைத்தும் மிகச் சிறப்பாக அனைவருக்குமே பயனுள்ளதாக இருக்கிறது. பகிர்வுக்கு மனம் நிறைந்த வாழ்த்துக்களும், வந்தனங்களும். நன்றி.

நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.

SrinivasaSubramanian said...

மிகவும் உபயோகமான அறிவுரை.

Unknown said...

கருத்துக்ளை கடைபிடிப்போம் அதன்படி நடப்பது தான் தர்மம்.

ஸ்ரீராம். said...

உண்மையிலேயே நிறைவின் சூட்சுமம் இதுதான்... இவைகள்தான்.

ராமலக்ஷ்மி said...

மிக நன்று.

Post a Comment