என் பள்ளிக் காலத்தில், படிப்பு வராத மாணவர்களைப் பார்த்து ஆசிரியர்கள் அடிக்கடி சொல்லும் வாக்கியம்,
*‘உனக்குப் படிப்பு வராது,*
*நீ மாடு மேய்க்க போயிடு’*
என்பதாகும்.
என்னுடன் எட்டாங்கிளாஸில் அய்யாத்துரை என்று ஒரு மாணவர் படித்தார்.
ஏன் 'ர்' போட்டு அழைக்கிறேன் என்று யோசிப்பீர்கள்!!
அப்போதெல்லாம் கம்பல்சரி பாஸ் கிடையாது.
பாஸ் ஆகாவிட்டால் ஒவ்வொரு வகுப்பிலும் பாஸ் ஆகிற வரை படிக்கவேண்டும்.
அய்யாத்துரை மூன்று நாட்கள் முக ஷவரம் பண்ணாமல் இருந்தால், முகம் கஞ்சா கருப்பு போல ஆகிவிடும்;
அவ்வளவு மயிர்வளம்!
காரணம், ஒவ்வோர் வகுப்பிலும் நல்ல Foundation!
அந்த அய்யாத்துரையிடம் ஆசிரியர் வழக்கமான அந்த வாக்கியத்தைச் சொன்னார்.
துரதிஷ்டவசமாக, அந்த அய்யாத்துரை நிஜமாகவே அவ்வப்போது மாடு மேய்த்துக்கொண்டிருந்தார்!
‘மாடு மேய்க்கிறது ஈஸியா?’ என்றார், ஆசிரியரிடம்.
‘இல்லையா பின்னே?
படிப்பு இல்லாதவந்தானே மாடு மேய்க்கிறான்?’
என்றார் ஆசிரியர்.
‘அம்பது மாட்ல எது கன்னியப்பச் செட்டியார் மாடு, எது பாண்டிய நாடார் மாடுன்னு உங்களாலே கண்டுபிடிக்க முடியுமா?’
ஆசிரியர் அதிர்ந்தார்.
‘எல்லா மாடும் ஒரே இடத்துலதான் மேயுமா?’
அடுத்த கேள்வி இன்னும் அதிகமாகத் தாக்கியது.
‘எது எங்க மேயும்ன்னு பாத்து ஓட்டிக்கிட்டு வருவீங்களா?’
இப்போது ஆசிரியர் பாண்டியராஜன் போல விழித்தார்.
‘மாடு எப்ப சாணி போடும்ன்னு தெரியுமா?’
இப்போது விழி ஆடு திருடின கள்ளன்போல் ஆயிற்று.
‘சாணி மொத்தத்தையும் கூடைல பிடிப்பீங்களா?
வரட்டி தட்டத் தெரியுமா?
வரட்டியில ஏன் வைக்கோல் போடணும்ன்னு தெரியுமா?
அது ராடு வச்ச கான்க்ரீட்போல ஸ்ட்ராங்குன்னு தெரியுமா?’
கேள்விகள் சரமாரி ஆயின.
*‘எனக்கு மாடு மேய்க்க வரல்லைன்னுதான் எங்கப்பா படிக்க அனுப்பிச்சார் தெரியுமா ?!!*
*நீ மாடு மேய்க்க லாயக்கில்லை, பேசாம படிச்சி வாத்யார் ஆயிடுன்னு அனுப்புச்சாரு’*
*அதற்கப்புறம், அந்த வாத்தியார் யாரையுமே நீ மாடு மேய்க்கத்தான் லாயக்கு என்று சொன்னதே இல்லை!*
😍😍😍😍🤓🤓🤓🤓🤓😍😍😍😍
3 comments:
அருமையான பாடம்...
ஆசிரியருக்கு நல்ல பாடம் . கேள்வி பதில்கள் சுவாரஸ்யமாகவும் இருந்தது.
ஆஹா, சிறப்பான பாடம், நமக்கும் சேர்த்து..
Post a Comment