Monday, January 24, 2022

சில நேரம் ஊசி விழும் சப்தம் பேரிடியாய்...

 ஊசி விழும் சத்தம் கேட்குமா ? 

 சில நேரம் கேட்கும்.


1)ஃபீல்ட் மார்ஷல் மானேக் ஷா ஒரு முறை அகமதாபாத்தில் ஆங்கிலத்தில் பேச துவங்கினார். "குஜராத்தியில் பேசுங்கள்... நீங்கள் குஜராத்தியில் பேசினால் தான் கேட்போம்." என்று கூச்சலிட்டனர் மக்கள். 


 பேச்சை நிறுத்தி விட்டு தீர்க்கமாக மக்களைச் சுற்றிப் பார்த்தவாறே பதிலளித்தார் ஷா: "நண்பர்களே, என் நீண்ட பணிக்காலத்தில், பல போர்கள் புரிந்திருக்கிறேன். 


ராணுவத்தில் உள்ள ஸீக் ரெஜிமெண்ட் வீரர்களிடம் இருந்து பஞ்சாபி மொழியை கற்றிருக்கிறேன்; மராத்தி மொழியை, மராத்தா ரெஜிமெண்ட்டிடம்; மெட்ராஸ் ஸாப்பர்களிடம் தமிழ்; பெங்காலி ஸாப்பர்களிடம் பெங்காலி மொழி; ஏன் ? கூர்க்கா ரெஜிமேன்ட்டிடம் இருந்து நேப்பாளி மொழியைக் கூட கற்றிருக்கிறேன்.


துரதிஷ்டவசமாக,குஜராத்தில் இருந்து ஒரு வீரர் கூட இல்லை, எனக்கு குஜராத்தி மொழி கற்றுத்தர." என்றார்.


தொடர்ந்த நிசப்தத்தில்  ஊசி விழும் சப்தத்தை கேட்டிருக்க முடியும்.


2) ஃபிரான்ஸ் நாட்டுக்கு விமானம் மூலம் வந்திறங்கிய 83 வயது அமெரிக்கர் ராபர்ட் வொய்ட்டிங், கஸ்டம்ஸ் அதிகாரியிடம் தன் பாஸ்போர்ட்டை துழாவி எடுத்துக்காட்ட சற்று நேரம் எடுத்துக்கொண்டார். 


இதுதான் ஃபிரான்ஸ் நாட்டுக்கு முதல் முறையாக வருகிறீர்களா.." என்று 

நக்கலாக கேட்டார் அதிகாரி. 


இல்லை முன்பு வந்திருக்கிறேன்.


அப்படியானால், உங்கள் பாஸ்போர்ட்டை தயாராக எடுத்துவைத்துக் கொள்ள வேண்டும் என்று தெரிந்திருக்க வேண்டும், உங்களுக்கு." என்றார்.


நான் கடைசியாக வந்த பொழுது, எனக்கு பாஸ்போர்ட் காட்டவேண்டிய அவசியம் ஏற்படவில்லை."


சான்ஸே இல்லை.அமெரிக்கர்கள் இங்கு வந்திறங்கும் பொழுது தங்கள் பாஸ்போர்ட்டுகளை காட்டவேண்டும் என்பது எப்பொழுதுமே உள்ள விதி." உறுமினார் அதிகாரி!


சில வினாடிகள் தீர்க்கமாய் அந்த அதிகாரியைப் பார்த்தவாறே, 

அமெரிக்கர் சொன்னார்:


இரண்டாம் உலகப் போரின் போது, உங்கள் நாட்டை விடுவிக்க 1944ஆம் ஆண்டு,  ஜூன் 6ம் தேதி, அதிகாலை 04:40 மணிக்கு ஒமஹா கடற்கரையில் நான் வந்திறங்கிய பொழுது,... என் பாஸ்போர்ட்டை காண்பிக்க, ஒரு ஃப்ரெஞ்சுக்காரர் கூட அங்கில்லை." என்றார்.


தொடர்ந்த நிசப்தத்தில்,ஊசி விழும் சப்தத்தை கேட்டிருக்க முடியும்.


3) இந்திய விடுதலைக்குப் பிறகு பிரதமராய் தீர்மானிக்கப்பட்டிருந்த நேரு, சுதந்திர இந்தியாவின் முதல் ராணுவத் தளபதியைத் தேர்ந்தெடுக்க, ராணுவ உயரதிகாரிகளைக் கூட்டிப் பேசினார்.: 


நமக்கு ராணுவத்தை நிர்வகித்து அனுபவம் இல்லாததால், ஒரு ஆங்கிலேய ராணுவ வீரரையே நம் படைத் தளபதியாக நியமிக்கலாம் என்று நினைக்கிறேன்."


பிரிட்டிஷாரிடம் சேவகம் செய்தே பழக்கப்பட்டிருந்த கூடியிருந்தோர் அனைவரும் ஒத்துக்கொண்டு தலையசைத்தனர். 


ஆனால், நாத்து சிங் ரதோர் எனும் 

ஒரு ராணுவ உயரதிகாரி தனக்கு 

பேச சந்தர்ப்பம் கேட்டார். 


சுயமாய் சிந்திக்கும் இந்தப் போக்கை

கண்டு துணுக்குற்றாலும், 

நேரு பேச அனுமதி அளித்தார்.


சார் நமக்கு நாட்டை ஆளவும்கூட அனுபவம் கிடையாது. நாம் ஏன் ஒரு பிரிட்டிஷ்காரரை, இந்தியப் பிரதம மந்திரியாக நியமிக்கக் கூடாது. ?"


தொடர்ந்த நிசப்தத்தில் ஊசி விழும் சப்தத்தை கேட்டிருக்க முடியும்.!


அரூபமான இத்தாக்குதலில் இருந்து 

சற்று நேரத்தில் சுதாரித்துக் கொண்டு 

நேரு கேட்டார்: 


முதல் ராணுவத் தளபதியாக நீ, ஆகிறாயா?"


இல்லை சார். நம்மிடம் மிகுந்த திறமை வாய்ந்த லெஃப்டினெண்ட் ஜெனரல் கரியப்பா இருக்கிறார்.அவர் இப்பதவிக்கு மிகவும் தகுதியானவர்."


இப்படித்தான் கரியப்பா அவர்கள் நம் முதல் ராணுவத் தளபதியானது வரலாறு!


ஊசிவிழும் சப்தமும் சில நேரம் கேட்கும்.!  


 படித்தது.பிடித்தது..

Sunday, January 23, 2022

வித்தானவர்களை நினைவு கூர்வோம்..

 இன்று ஜனவரி 24


இந்தியாவின் முதல் பெண் அதிகாரி 

சி.பி. முத்தம்மா 

பிறந்த தினம்.

 (24.1.1924).


    இந்தியாவின் உயர் அதிகாரிகளாக ஆவதற்கு ஐ.ஏ.எஸ்., ஐ.எப்.எஸ்., உள்ளிட்ட தேர்வுகளில் வெற்றி பெற வேண்டும்.

    ஆனால் அவற்றில் வெற்றி பெற்றாலும் பெண்கள் அதில் சேர முடியாத நிலை இருந்தது.

   அதை முதலில் உடைத்து வெற்றி பெற்ற பெண் சி. பி. முத்தம்மா கர்நாடகத்தில் பிறந்தவர்.

   அவர் சென்னையில் உள்ள பெண்கள் கிருத்துவக் கல்லூரியில் பட்டப்படிப்பை மேற்கொண்டார். சென்னை பிரெசிடென்ஸி கல்லூரியில் ஆங்கில இலக்கியத்தில் பட்டப்படிப்பை முடித்தார். கல்லூரிகளில் மூன்றுமுறை தங்கப்பதக்கம் பெற்ற மாணவி.

   இந்தியாவின் முதல் பெண் வெளியுறவுத்துறை அதிகாரியாக 1949ல் 

சி.பி. முத்தம்மா பணியில் சேர்ந்தார்.

   அந்த காலத்தில் வெளியுறவுத் துறையில் உள்ள பெண் அதிகாரி திருமணம் செய்ய வேண்டும் என்றால் அரசின் அனுமதியைப் பெற வேண்டும், திருமணம் வேலையைத் தடுக்கிறது என அரசு கருதினால் அவர் ராஜினாமா செய்துவிட வேண்டும் என்பன உள்ளிட்ட பெண்களுக்கு எதிரான பல விதிகள் இருந்தன.

   அவற்றை எதிர்த்து முத்தம்மா உச்ச நீதிமன்றத்தை அணுகினார்.

   வழக்கை விசாரித்த நீதிபதி கிருஷ்ணய்யர் தனது தீர்ப்பில் “வெளியுறவுத் துறையில் காணப்படும் 8(2)ஆம் விதி பெண்களுக்கெதிரான பாகுபாட்டை வெளிப்படையாகக் காட்டுகிறது என்று கூறினார்.

    மேற்காணும் பாலியல் பாகுபாடு நிறைந்த விதிகள் நீக்கப்பட்டதாக வெளியுறவுத் துறையின் சார்பில் பிரமாணப் பத்திரம் அளிக்கப்பட்டதை நீதிபதி ஏற்றுக்கொண்டார்.

  முத்தம்மாவின் தகுதி பதவி உயர்வுக்கு ஏற்றதாக இருக்கிறதென அறிவித்த அரசு அவரை நெதர்லாந்துக்கான இந்தியத் தூதராக நியமித்தது.

    இந்த வழக்குக்குப் பிறகு ஆணாதிக்க விதிகள் உடனே மாற்றப்பட்டன. 

   இதனால் முத்தம்மா பதவி உயர்வுகளைப் பெற்றார்.

   வெளிநாட்டு தூதர், ஹைகமிஷனர் பதவிகளில் அமர்ந்த முதல் இந்தியப் பெண் ஆனார்.


Saturday, January 22, 2022

படித்து விட்டு...?

 


நீங்கள் பிஜேபிக்கு வோட்டு போடுங்க ; இல்லை 60வருடம் ஏமாற்றி பிழைக்கும் திமுகவுக்கு வோட்டு போடுங்க. அது உங்கள் இஷ்டம் - ஆனா பிஜேபி மோடி ஆதரவாளராக நான் கேட்டு கொள்வது :


1.பிரதமர் காப்பீட்டு திட்டம்( Pradhan Mantri Suraksha Bima Yojana)


வருடம் 12ரூபாய் மட்டுமே உங்கள் வங்கிகணக்கில் இருந்து பிடித்தம் செய்யப்படும். இதனால் எதிர்பாராத விபத்துகளுக்கு 2லட்சம் வரை உங்களுக்கு காப்பீடு கிடைக்கும்.  அதிகம் பயணம் செய்யும் அனைவரும் இதை கட்டாயம் எடுத்து கொள்ளுங்கள். 


2015 புள்ளிவிவரம் கூறும் தகவல்படி - வருடத்திற்கு சுமார் 2,75,000நபர்கள் விபத்துகளில் பெரிய காயங்களுடன் உயிர் தப்புகிறார்கள். இந்தியாவில் ஒவ்வொரு நிமிடமும் 400பேர் சாலை விபத்தால் உயிர் இழக்கிறார்கள். உடனே இதை அரசு தான் காரணம் என்று வழக்கம் போல குறை சொல்வதே புத்தியாக இல்லாமல் கொஞ்சம் பிரச்சனையும் எதார்த்தம் புரிந்து காப்பீட்டை எடுத்து கொள்ளுங்கள்.


(தயவு செய்து உடனே கார்ப்பரேட் எதிர்ப்பு!!! - ஒருதனுக்கு 12 ரூபாய் அப்போ 10கோடி மக்கள் , 100கோடி மக்கள் என்று கிறுக்கன் போல கணக்கு போடாதீர். உலக நாடுகள் அனைத்திலும் இது தான் காப்பீட்டு நடைமுறை. எல்லோருமே உங்களை ஏமாற்றுவது போல ஒரு வியாதி பிடித்திவிட்டது தமிழகத்தில். நீங்கள் சிந்திக்க வேண்டியது: வருடம் 12 ரூபாய் கொடுத்தேனா - 2லட்சம் காப்பீடு - இது உனக்கு லாபமா? இல்லையா? என்று மட்டும் யோசி. அதையும் அரசே கட்டலாமே என்று ஆரம்பித்துவிடாதே.)

------------------------------------------

2.ஓய்வுஊதிய திட்டம் (Atal Pension Yojana)


60 வயது தாண்டி ஒரு தடுமாற்றம் இல்லாத வாழ்வை கிடைக்க மக்களுக்கு ஒரு குறிப்பிட்ட ஓய்வூதியம் தேவை. அரசு ஊழியர்கள் ஓய்வுக்கு பின் நிம்மதியாக வாழ வழிசெய்யும் ஓய்வூதியம் என்பது அரசு கொடுப்பது அல்ல - அவர்கள் வருமானத்தில் பிடித்தம் செய்து அவர்களுக்காக உருவாக்கபட்ட பாதுகாப்பு அது.


அது போல அனைவரும் கிடைக்க வழிவகை செய்யும் இந்த திட்டத்தில் கட்டாயம் காய்கறி, மீன் வியாபாரம் செய்யும் சிறு குறு வியாபரிகள் முதல் அனைத்து  - தொழிலாளர்கள் வரை அனைவர் கட்டாயம் செய்ய வேண்டியது நம் கடமை.  மாதம் 168ரூபாய் சேமிப்பில் - ஓய்வு காலத்தில் உங்களுக்கு மாதம் 4000கிடைக்கும் என்றால் அது பாதுகாப்பான திட்டம் தானே. 

-----------------------------------------


3.இறப்பு காப்பீட்டு (Pradhan Mantri Jeevan Jyoti Bima Yojana)


குடும்பத்தில் தலைவராக ஆண் / பெண் யாராக வேண்டுமானாலும் இருந்துவிட்டு போங்க - ஆனா எதிர்பாராத மரணம் உங்கள் வீட்டை நட்டாத்தில் நிறுத்திட கூடாது. நல்ல பொறுப்பான குடும்ப தலைவனுக்கு அழகு எது? " குடும்பம் பொருளாதார நிலைதன்மையுடன்(economic stability) இருக்க வேண்டும் - அது குடும்ப தலைவன் இருந்தாலும் இல்லை என்றாலும்". 


அதாவது நீ ஒருவேளை எதிர்பாராமல் இறந்த பின் குடும்பம் பொருளாதார பாதுகாப்பு இல்லாமல் நிற்கும் என்றால் நீ சரியான பொறுப்பான தலைவன் இல்லை. எனவே அப்படி சூழல் வரும் என்றால் ஒரு குறிப்பிட்ட உதவி குடும்பத்திற்கு சேரும் வண்ணம் ஒரு பாதுகாப்பினை உருவாக்கி கொள்.


successfull life அப்டி சொல்றதுக்கு அர்த்தமே  economical balancing mechanism என்று பொருளாதார நிபுணர்கள் கூறுவார். சின்ன சேமிப்பு அதை செய்யும் என்றால் அதை எடுத்து கொள்வதில் என்ன தவறு இருக்கு? 


எல்லாவற்றிற்கும் அரசே செய்ய முடியுமா? 


வருடம் 330 ரூபாய் - எதிர்பாராத மரணம் என்றால் வீட்டுக்கு 2லட்சம் சென்று சேரும். ஒரு படத்திற்கு ஒரு டிக்கெட் செலவு கூட கிடையாது இது.

------------------------------------------------------


4.பிரதம மந்திரி வங்கி கணக்கு (Pradhan Mantri Jan Dhan Yojana)


மேல இதுமே எனக்கு முடியாது ?


சரி அனைவரும் இந்த கணக்கை உருவாக்கி அதில் சம்பளம் வரவு வையுங்கள். பெரிய உதவி அல்ல 1 லட்சம்  வரை ஒரு உதவி கிடைக்கும் எதிர்பாராத விபத்துக்கு. மேலே எதுவும் செய்ய முடியவில்லை என்றால் இதையாது செய்யுங்கள்.


இந்த வங்கி கணக்குக்கு எந்த மினிமம் பேலன்ஸ் தேவை இல்லை. வெறும் கணக்கை ஒழுங்க பயன்படுத்துங்க என்று மட்டும் தான் மோடி கூறுகிறார்.


இந்த மேலே நான் கூறிய நான்கு திட்டமும் பணக்கார வர்க்கத்துக்கோ - நடுத்தர வர்க்கத்துக்கோ அல்ல. அமைப்புசாரா   வேலையாட்கள் என்று கூறப்படும்- கட்டட வேலை முதல் காய்கறி வேலை செய்பவர்கள் வரை அனைவரும் என்பதால் உருவாக்கபட்ட நலத்திட்டம். 


இதை சென்று மக்களிடம் சேர்க்க வேண்டியது படித்தவர்கள் கடமை - இதை ஒத்துழைக்க வேண்டியது மக்கள் கடமை. 


---------------------------------------------------------


நடுத்தர வர்க்கத்தினர் செய்ய வேண்டியது என்ன??? ஒழுங்கா நல்ல முதலீட்டு சிந்தனையை வளர்த்து கொள்ளுங்கள்.


1.Kisan Vikas Patra :


அது என்ன????? அரசு ஊழியர்கள் மற்றும் கொஞ்சம் வருமானம் சேமிக்கும் அளவுக்கு  வருமானம் உள்ளவர் முதலீடு என்ன??? நிலம் , தங்கம்.


நிலம் வாங்கி போடுவேன் - இல்லை தங்கம் வாங்கி போடுவேன் என்று இருப்பது நல்ல முதலீடு கிடையாது. தங்கம் இனியும் நல்ல முதலீடு கிடையாது அதை முதலில் தயவு கூர்ந்து புரிந்து கொள்ளுங்கள். தங்கம் நகை வாங்கி சேர்ப்பதே ஒரு வியாதி, அதை முதலில் விட்டு ஒழியுங்கள். 


இதை கொஞ்சமாது புரிந்து கொள்ளுங்கள்:


10கிராம் தங்கம் விலை வைத்து ஒரு சின்ன கணக்கு யோசிக்கவும்:


1985ல் 10கிராம் தங்கம் விலை - 2130 ருபாய் 

1990ல் 10கிராம் தங்கம் விலை - 3200 ருபாய் 


அதாவது 1985ல் போட்ட முதலீடு 1990ல் ஏறக்குறைய 50% அதிக ரிட்டன் தருகிறது. ஆக நல்ல முதலீடு.


2000ல் தங்கம் விலை - 4400 ருபாய்  (1990-2000 பத்து வருடத்தில் 37% கூடியுள்ளது. ரிட்டன் 37% என்பது நல்ல முதலீடு தான்)

2010ல் தங்கம் விலை - 18,500 ருபாய் (2000-2010 இந்த பத்து வருடத்தில்தான் 320% கூடியுள்ளது. ரிட்டன் 320% என்பது மிக மிக நல்ல முதலீடு.) ஆனால் 


2015ல் தங்கம் விலை - 22,500 ருபாய் (அடுத்த 5  வருடத்தில்தான் 21% கூடியுள்ளது. ரிட்டன் 21% என்பது தங்கத்தை பொறுத்தவரை ரெம்ப நல்ல ரிட்டன் கிடையாது. செய்கூலி , சேதாரம் அது இது என்று பார்த்தால் ஒன்னும் பெரிய லாபமான முதலீட்டாளர்களுக்கு கிடையாது.)


சரி கடந்த கடைசி 5வருடத்தில்????? கொஞ்சம் நீங்களே யோசிக்கவும் அந்த முதலீடு நஷ்டம் தான். 


2011ல் தங்கம் விலை - 28,667 ருபாய் ; இன்று 2017ல் 29408ரூபாய் - ஆக மொத்தம் இந்த 7 வருடத்தில் வெறும் 2.58%தான் ரிட்டன்???? ஆனால் அதில் செய்கூலி சேதாரம் இதுலாம் கொஞ்சம் யோசிக்கவும்... இதுவா நல்ல முதலீடு? நஷ்டம் என்று கண்கூட தெரியவில்லையா ???? இனியும் தங்கம் விலை எப்படியே தான் நீடிக்கும்.


அதற்கு பதிலாக வருடம் 8.7% உத்திரவாதம் தர அரசின் Kisan Vikas Patra முதலீடு செய்யலாமே ????? நல்ல முதலீடு பாதுகாப்பானது தானே. அரசு உத்திரவாதமும் கொடுக்க இதில் ஏன் முதலீடு செய்வது இல்லை மக்கள் அதிகம்? மீச்சுவல் பண்ட ,அரசு பத்திரங்கள் பல நல்ல முதலீடுகள் உண்டு- நல்ல ரிட்டன் கிடைக்கும் முதலீடு செய்யும் பக்குவத்திற்கு வாருங்கள். இன்னும் பழைய காலம் போல தங்கம் , நிலம் என்று இருக்க வேண்டாம்.


நீண்டகால முதலீடாக தொழில் துறைகளில் ஏதாவது கம்பெனி சேர் வாங்கி போடுங்க. அது 15% வரை ரிட்டன் கொடுத்தால் கூட போதும். ரிஸ்க் ????


ரிஸ்க் என்று பார்த்தால் அனைத்திலுமே உண்டு. எனவே உங்களுக்கு தகுந்த முதலீட்டை தேர்வு செய்யும் பொது கொஞ்சமாது நிலம் , தங்கம் தாண்டி வேறு நல்ல முதலீடுகளை தேடவும். முதலீடு அரசுக்கும் , தொழில் துறைக்கும் உதவியாக இருக்க வேண்டும் தவிர முடங்க கூடாது. அது முதலீட்டாளர்கள் உங்களுக்கும் நல்லது- நாட்டுக்கும் நல்லது.

------------------------------------------------


இறுதியாக : 


10வயது கீழ் இருக்கும் பெண் குழந்தைகளுக்கு வருடம் 1000 ரூபாய் முதல் 1லட்சம் வரை Sukanya Samriddhi Scheme திட்டத்தில் முதலீடு செய்யுங்கள் என்கிறார் மோடி- அது அந்த பெண் குழந்தைக்கு  9.20% வருடம் ரிட்டன் கிடைக்க அரசு வழி செய்துள்ளது, உறுதியும் அளிக்கிறது. அவள் கல்வி , வேலைவாய்ப்பு , எதிர்காலம் உறுதிபடுத்தபடும். ஒருநாளும் யாருக்கும் அவள் பாரமாக ஆவது இல்லை இந்த விதம் சரியான திட்டமிடல் இருந்தால்.


அரசு ஒரு system கொண்டு வருவது உங்கள் நல்லதுக்கு தான். எப்போ நாம ஒரு குடிமகனாக குறை சொல்ல தகுதி வரும் என்றால் - நாம் அரசின் சரியான முயற்சிக்கு ஆதரவு கொடுக்கும் போது தான். 


எந்நேரமும் எதையாது அரசு இலவசமா கொடுக்கும் நாம வாங்கிகணும் என்ற ஒருவித மன நோய் எப்படியோ நாம் பழகி கொண்டோம் அதை திருத்தவும். இந்தியாவில் அரசுக்கும் மக்களுக்கும் உள்ள தொடர்பு என்றால் அரசு ஏதாவது கொடுக்கும் - மக்கள் வாங்கிக்கணும். ஏன் என்றால் வோட்டு போடுகிறார்கள்!!!!


இன்னொரு முக்கியமான விஷயம்:


தயவு கூர்ந்து புதிய போராளிகளை நம்பாதீர் - எல்லாமே நாசம் என்று தான் அவனுக பேசி திரிவானுக. நல்லதே அவனுகளுக்கு கண்ணில் படாது. அவனுக நோக்கம் மக்களுக்கும் அரசுக்கு பகையை தூண்டிவிடுவது மட்டுமே. 


உங்களுக்கு ஒன்று தெரியுமோ ?????


12ருபாய் எடுத்ததுக்கு- வங்கி மீது வழக்கு போட்டு 8000ரூபாய் வாங்கியது பெருமையாக சொல்லி திரியும் இந்த போராளிகள் - அந்த 12ரூபாய் மூலம் அவனுக்கு 2லட்சம் காப்பீடு அரசு தரும் என்ற நல்ல விஷயத்தை ஏன் மறைக்கிறான் ????? சொல்லாமல் எடுப்பது தவறு தான் அதுக்காக அவன் காரணம் சொல்லியும் காசு செலவு பண்ணி இவன் ஏன் நீதிமன்றம் செல்ல வேண்டும்????? அது தான் நவீன போராளிகள்.


இதுலாம் நல்ல மனிதன் எவனாது செய்வானா???? 


போராளி என்று திரிபவன் 90% பிரிவினைவாதிகள் ; இவனுகளை தூண்டிவிட்டு வருடம் முழுவதும் அரசியல் ஆதாயம் பார்ப்பது நம்ம திமுக. அதுக்கு பக்க துணையாக நிற்பது திக. அது இல்லாமலா 60வருடம் மேல் பல ஆயிரல் கோடி எல்லாம் ஊழல் செய்யும் திமுக இன்னும் ஆட்சியை பிடிக்க முடிகிறது? 


இன்றைய திமுக எண்ணம்  எளியது : அதிமுக ஜெயாவுக்கு பின் வீழ்ச்சி உறுதி - மாற்று என்று பார்த்தால் வேறு 64,000பூத் கமிட்டி போட்டு தேர்தலை சந்திக்க திராணி பிஜேபி உண்டு. அதை இப்போவே முழுசா அழிச்சுட்டா கனிமொழி பேரன் வரை திமுக ஆட்சி நீடிக்கும் என்பது தான் இவர்கள் திட்டம். அதுக்கு வசதியா இந்த போராளிகள். போராளிக்கு பின்னல் நிற்கும் கூட்டம் எல்லாமே நம்ம திக , திமுக அனுப்பி வைக்கும் கூட்டம். இதனால் வேறு கட்சி வளராது என்பது அவன் திட்டம்.


நான் கேட்பது பிஜேபிக்கு வோட்டு போடுங்க போடாதிங்க - அது அல்ல விஷயம் ; அரசியலை தாண்டி மோடி கூறும் அறிவுரைகளை கொஞ்சமாது கேளுங்க. தமிழகத்திற்கு இப்போதைக்கு எந்த தொழில்துறையும் வரமாட்டான். காரணம் அரசு அல்ல - போராளிகள். எப்போ பாரு கார்ப்பரேட் எதிர்ப்பு அரசு எதிர்ப்பு நேரு இருந்ததால் தான் கேரளாவில் எவனும் தொழில் தொடங்க மாட்டான். இப்போ தமிழகமும் அந்த நிலைக்கு செல்கிறது. 


நல்லதை பேசு ; நல்லதை பின்தொடரு ; நாலு நல்ல விஷயம் தினமும் தெரிந்து கொள்; நல்ல விஷயத்தை பரப்பு. அப்போதான் நல்லது நடக்கும். 

எப்போ பாரு நாடு நாசம் , ஊர் நாசம் என்று எதையாது பரப்பிகிட்டே இருப்பது "நானும் போராளி" என்ற ஒரு வியாதி.


மோடி அடிகடி வருத்தம் தெரிவிப்பது "மக்கள் முதலீட்டு முறை - காப்பீட்டு முறை இவைகளில் நல்ல வழிகாட்டப்பட்ட வேண்டும்" என்று. அதன் நியாயமானா நல்ல எண்ணத்தை புரிந்து கொள்ளுங்கள். அதுக்கு மேல உங்க உங்க இஷ்டம்.

Wednesday, January 19, 2022

....னால்..

 தன்னுள் அடைக்கலமான

ஜீவத் துளியினை

உயிரெனக் காக்கும்

தாயென மாறிப் போனால்....


கூட்டில் உயிரைவைத்து

குஞ்சுகளுக்கென

பலகாதம் கடக்கும்

பறவையென மாறிப்போனால்...


இன்னும் இன்னும் என

மிக மிக நெருங்கி

ஓருடலாகத் துடிக்கும்

காதலர்கள் ஆகிப் போனால்..


விட்டு விலகி

விடுதலையாகி

தாமரை இலைத் துளிநீர்

தன்மையடைந்து போனால்..


வேஷம் முற்றும் கலைத்து

ஜனத்திரளில்

இயல்பாய் கலக்கும்

மன்னனாகிப் போனால்..


தானே யாவும்

தானே பிரம்மன் என்னும்

தன்னம்பிக்கை மிக்க

தனியனாகிப் போனால்...


மொத்தத்தில்

தன்னிலை விடுத்து

கூடுவிட்டு கூடுபாயும்

வித்தையறிந்து போனால்..


காணும் யாவும்

கருவாகிப் போகவும்

எழுதும் எல்லாம்

கவியாகிப் போகவும்

நிச்சயம் சாத்தியம் தானே ?

Monday, January 17, 2022

காலச் சூழல்..

 காலச் சூழல்

தலை கீழ் மாற்றம் கொண்டுள்ளது
ஆயினும்
எமது தேர்வுகளில் விருப்பங்களில்
எவ்வித மாற்றமுமில்லை

கலப்படத்தால்
முன்பு
அரிசியில் கல்லைப் பொறுக்குவது
மிக எளிதாயிருந்தது

இப்போது
கல்லில் அரிசி பொறுக்குவதே
மிக எளிதாயிருக்கிறது

ஆயினும் எம் தேவை
அரிசி என்பதில்
எவ்வித மாற்றமுமில்லை

நல்லவைகளில்
முன்பு
தீயவைகளை ஒதுக்குவது
மிக எளிதாய் இருந்தது

இப்போது
தீயவைகளில் நல்லதை எடுப்பதே
மிக எளிதாய் இருக்கிறது

ஆயினும் எம் தேவை
நல்லவையே என்பதில்
எவ்விதக் குழப்பமுமில்லை

ஆம்
எம் விருப்பங்களில் தேர்வுகளில்
எவ்வித மாற்றமுமில்லை என்பதால்

காலச் சூழல்
எப்படித்தான் மாறினும்
எம்முள் எவ்வித மாற்றமுமில்லை


Sunday, January 16, 2022

தவப்புதல்வனே...

 


சாணக்கியத் தனமே

அரசாள  அச்சாணி
எனும் போலி நம்பிக்கையை
மக்கள் மன்றத்தில் சிலர்
பரப்பிக் கொண்டிருந்த காலத்தில்.

இல்லையில்லை
மக்கள் நல மனத்தாலும்
மனிதாபிமானத்தால் கூட
அது சாத்தியம் என
நிரூபித்துக் காட்டியவனே..

கலை கலைக்காகவே
எனும் பழமை வாத வழியில்
பலர் பயணப்பட்டு
விருதுகளும் கேடயங்களும்
பெற்றுக் கொண்டிருந்த காலத்தில்

கலை மக்களுக்காகவே
எனும் கொள்கை வழியில்
திடமாய் இருந்து
ஏழை எளிய மக்களின்
உள்ளம் கவர்ந்த உயர்ந்தவனே

வாழ்ந்தவர்  கோடி
மறைந்தவர் கோடி
மக்களின் மனதில்
நிறைந்தவர் யார் எனும்
கேள்வியை நீயே எழுப்பி

மறைந்து ஆண்டுகள்
நாற்பதை நெருங்கியும்
மக்கள் மனங்களில்
மறையாது நிலைத்து
அது "நான் தான் "என நிரூபிப்பவனே

உன்னை நினைத்திருப்பதே
எங்கள் நலம் எங்கள் பலம்

உன் பிறந்த நாளில்
உன் நினைவுகளில் மூழ்குவதையே
தவமாகக் கொள்கிறோம்
இன்றுபோல் என்றென்றும்
வாழ்க நீ வாழ்க நீ
தமிழகத்தின் தவப்புதல்வனே

மனிதர்கள். ஜாக்கிரதை..

 இந்த காட்சி பார்க்கும் அனைவரின் மனதையும் பதறவைக்கும் . இந்தக் கொடூரமான காணொளியை உடனே மற்ற பக்கங்ளுக்கும் பகிர்ந்து அரசின் கவனத்துக்கு கொண்டு செல்ல முயலுங்கள். தெரு நாய்களை அறவே ஒழிக்க வேண்டும் ஒரு தெருவில் பயணித்தால் குறைந்தது 50 நாய்களாவது இருக்கிறது ஒருசில நேரம் நாமே இரவு நேரங்களில் நடந்து சென்றாலும் நமக்கும் இந்த நிலை தான் ஏற்படும்(பங்களாக்களுக்குள் பாதுகாப்பாக அமர்ந்து கொண்டு  தெருநாய்களுக்கு வக்காலத்து வாங்குவோருக்கு இந்த அவலம் நேர வாய்ப்பில்லை) முக நூலில் காணொளியை நேரடியாகப் பதிவிட்டால் வன்முறை காணொளி என பிளாக் செய்ய வாய்ப்புண்டு..


ஆகையால் இந்த விஷயத்தை அரசின் கவனத்துக்கு கொண்டு செல்ல வேண்டும் தயங்காமல் சேர் செய்யுங்கள் நன்றி

Saturday, January 15, 2022

வாழ்த்தி மகிழ்வோம்..

 


பிறந்தநாள் வாழ்த்து சொல்லுவோம் நாம், நம் மக்களின் சரித்திரத்தை மாற்றியமைத்த ஒரு பிறந்தநாள் வாழ்த்து சொல்வோம்.


ஜனவரி 15: முல்லைப்பெரியாறு அணையை கட்டிய பென்னிக் குக் பிறந்த தினம்.


ஜான் பென்னி குக் எனும் அற்புத மனிதர் பிறந்த நாள். எத்தியோப்பியாவில் ஆங்கிலேய அரசுக்கு பணி செய்துவிட்டு பொதுப்பணி துறை பொறியியல் வல்லுனராக மதுரையில் பணியாற்றினார். பசியும், வறுமையும் தென்பகுதி மக்களை வாட்டுவதை கண்டார். பலபேர் கொள்ளையடிப்பில் ஈடுபடுவதையும் கண்டார். வெறுமனே வைகை நதியை மட்டும் நம்பி வானம் பார்த்த பூமியாக இருந்த இவற்றை எப்படி பசுமையாக்குவது என யோசித்தார்.


அப்பொழுது தான் அவர் கண்களில்  முல்லைப்பெரியார் நதிபட்டது. மேற்கு நோக்கி பாய்ந்து அரபிக்கடலில் வீணாக கலக்கும் அந்நதியை திசை திருப்பி கிழக்கு நோக்கி பாயவிட்டால் தேனி, திண்டுக்கல், மதுரை, ராமநாதபுரம், மதுரை, சிவகங்கை முதலிய பகுதிகளை பசுமை போர்த்திய பூமியாக மாற்றிவிடலாம் என உணர்ந்து  களத்தில் இறங்கினார் பென்னி குக். ஏற்கனவே ராமநாதபுரம் ராஜா தன்னுடைய தளபதி முத்து அருளப்ப பிள்ளையிடம் கேட்டு முடியாது என்று

ஒதுக்கப்பட்ட யோசனை அது.


பென்னிகுக் மனம் தளராமல் திட்டம் தீட்டினார். ஜான் ரைவ் என்கிற பொறியியல் வல்லுனருடன் விவாதித்தார். அறுபத்தி இரண்டு லட்சம் அணை கட்ட செலவாகும் என்று அறிக்கை தயாரித்து ஆங்கிலேய அரசிடம் கொடுத்தார்.


இந்த திட்டம் நிறைவேற்றப்பட்டால் இந்தப்பகுதி முழுக்க செழிப்படையும் திட்டம் நிறைவேறினால் உலகத்திலேயே மிக அழகான மகிழ்ச்சி தரும் சுற்றுலா மையமாக இது மாறும் சாத்தியமும் உள்ளது. இதுவே என் கனவு என்று அறிக்கையில் குறிக்கிற அளவுக்கு அவர் மனதெல்லாம் இந்த திட்டம் பொங்கிக்கொண்டு இருந்தது. பல லட்சம் ஏக்கர் நிலம் பாசனம் பெறும், வரி வசூல் செய்யலாம் என அவர் சொன்னதும் அனுமதி கொடுத்தது அரசு.


பணிகள் தொடங்கி வேகவேகமாக நடந்து பாதி பணிகள் முடிந்த பொழுது  காட்டாற்று வெள்ளம் எல்லாவற்றையும் அடித்துக்கொண்டு போயிற்று. ஆனால், பென்னி குக்கின் நம்பிக்கையை அது அசைக்கவில்லை. அரசிடம் உதவி கேட்டார். அரசு மறுத்தது.


கப்பலேறி ஊருக்கு போனார். இருக்கிற சொத்துக்களை எல்லாமும் விற்றார். மனைவியின் நகைகள், வீடு எல்லாமும் விற்கப்பட்டது. எந்த அளவுக்கு வறுமை அவரை ஆட்க்கொண்டது என்றால், எப்படி தமிழர்களுக்கு தாலியோ அதுபோல ஆங்கிலேயர்களுக்கு அவர்கள் படுக்கும் கட்டில்... அதையே விற்று செலவுச் செய்கிற அளவுக்கு எதுவுமே இல்லாத நிலைக்கு வந்தார். ஆனாலும் முல்லைப்பெரியாறு அணையை கட்டினார். தொன்னூறு அடி நீளமுள்ள தேக்கு மரங்களை வெட்டிப்போட்டு ரோப்வேக்களை அமைத்தார். பல நூறு பேரின் இறப்பு, காலரா, மலேரியா என்று எத்தனையோ சிக்கல்கள் துரத்திய பொழுதும் மனம்தளராமல் செயல்பட்டார். எட்டு வருட உழைப்பில் உருவானது முல்லை பெரியாறு அணை.  பென்னி குக்கின் நிலை அப்பொழுது எப்படி இருந்திருக்கும் என சொல்லவேண்டாம் 


அவரே சொல்கிற வரிகள் இவை.


இந்த உலகத்தில் இருக்கப்போவது ஒரே முறை, எனக்கு செய்ய கிடைத்த நல்ல

செயலை நான் அலட்சியப்படுத்தவோ, தள்ளிப்போடவோ கூடாது! என்றார்.


2.23 லட்சம் ஏக்கர் நிலப்பரப்பை இன்றைக்கு காத்து நிற்கும் முல்லைப்பெரியாறு அணையை கட்டிய அவருக்கு சிலை வைத்து தெய்வமாகவே வழிபடுகின்றனர் அப்பகுதி மக்கள். எத்தனையோ பிள்ளைகள் இங்கிலாந்தில் பிறந்த அவரின் பெயர் தாங்கி அப்பகுதிகளில் வளர்கிறார்கள். அறுபத்தைந்து லட்சம் மக்களின் குடிநீர் தேவை தீர்த்த வள்ளல் அல்லவா அவர்.


தன் சொத்துக்கள் அனைத்தையும் பொது சேவைக்கு பயன்படுத்திய அந்த வள்ளலுக்கு நாமும் பிறந்தநாள் வாழ்த்து சொல்வோம்.இதைத் தொடர்ந்து பகிர்ந்து அனைவரும் அறியச் செய்யலாமே..

Friday, January 14, 2022

பொங்கல் நல்வாழ்த்துகள்.

 


வயலில் உழுதுகொண்டிருந்தார் அந்த விவசாயி.

காளைக்கு கஷ்டம் தெரியக் கூடாதென்பதற்காக

அதனுடன் பேசிக்கொண்டே உழுதார்.


மாடு நீ.. முன்னால போற. மனுஷன் நான்.. பின்னால வர்றேன். பாத்தியா..! இதான் என் தலையெழுத்து. விவாசயத் தொழில்ல நீதான் முன்னாடி. நான் பின்னாடிதான்.

முகத்தை சோகமாக வைத்துக்கொண்டு சொன்னார்.


அடடா.. இந்த மனித ஜாதிதான் எவ்வளவு மேலானது

என்று நினைத்து சிலிர்த்துப் போனது காளை.


விவசாயி தொடர்ந்தார்.

நீயும் நானும் இந்த விவசாயத்தில் கூட்டாளி.


அதனால வர்ற விளைச்சல்ல உனக்கு பாதி எனக்கு பாதி.


காளைக்கு தலைச் சுற்றியது. எவ்வளவு நேர்மை..!

பாதிக்குப் பாதி பங்கு தர யாருக்கு மனசுவரும்..!


பாதிப் பாதின்னா எப்படி பங்கு வைக்கலாம்? நீ முன்னால போறதால முன்னால கிடைக்குறது உனக்கு. பின்னால கிடைக்குறது எனக்கு. சரியா? என்றார் விவசாயி.


முன்னால வர்றது எல்லாமே எனக்கா..!

பெருமிதமாய் பார்த்தது காளை.


விதை விதைத்து

நாற்று நட்டு சில காலத்தில் பச்சைப் பசேலென்று மாறியிருந்தது வயல்.

மாட்டுக்கு வாயெல்லாம் எச்சில்.

விவசாயியை பார்த்தது.


முதல்ல வந்த இதெல்லாம் உனக்கு.

இதுல அப்புறமா ஒன்னு வரும்.

அதுமட்டும் எனக்கு.

சரியென்று தலையாட்டியது காளை.


கொஞ்சநாட்களில் நெற்கதிர்கள் குதிரை வால் போல

விளைந்து தரை பார்த்துக் கிடந்தன.


அறுவடை நாள் வந்தது.

முதலில் வந்த வைக்கோல் காளைக்கு.

பின்னர் வந்த நெல் விவசாயிக்கு.


மாடு கோர்ட்டுக்கா போக முடியும்..?

பாகப் பிரிவினையில் அநீதியுள்ளதென்று பரிதாபமாய் பார்த்தது காளை.

கவலைப்படாதே! நெல்லிலும் பங்கு தர்றேன்.

அதிலும் நமக்கு பாதிப் பாதி.

சோகத்துடன் தலையாட்டியது காளை.


நெல்லை உலர வைத்து

அரைத்துப் புடைத்ததும்

உமியும் தவிடும் முன்னால் வந்தது.

அது காளைக்கு.

பின்னால் வந்த முத்து முத்தான அரிசி முழுமையும் மனிதனுக்கு.

இந்த பங்கீட்டிலும் நியாயமில்லை யென்று கண்ணீர் விட்டது காளை.


அழுவாதே. இந்த அரிசியிலும் உனக்கு பாதி எனக்கு பாதி.

.. சரியா? என்றார்

விவசாயி.


அதற்கும் சரியென்று தலையாட்டிய அந்த வாயில்லா ஜீவன்,

அரிசியை நோக்கிச் சென்றது.


பொறு.,,,,அரிசியை சோறாக்கி, அதில் முதலில் வருவது உனக்குதான்.

அடுத்து வருவதுதான் எனக்கு.

சோகத்துடன் தலையாட்டியது காளை.


அரிசியை சோறாக்கி வடித்தபோது

முதலில் வந்த சோற்றுக்கஞ்சி காளைக்கு.

அடுத்து வந்த சோறு மனிதனுக்கு.

காளை முரண்டு பிடித்தது.


இந்த முறை,

முன்னால மனிதனுக்கு

பின்னால மாட்டுக்கு என்று ஒப்பந்தத்தை மாற்றும்படி கெஞ்சியழுதது.


சரியென்று ஏற்றுக்கொண்ட விவசாயி அப்படியே செய்தார்.

பொங்கல் திருவிழா வந்தது.


முதலில் வந்த பொங்கல் மனிதனுக்கு.

அடுத்துவந்த பொங்கல் மாட்டுப்பொங்கல்.. அனைவருக்கும் பொங்கல் நல் வாழ்த்துக்கள். பொங்கலோ பொங்கல்! பொங்கலோ பொங்கல்!


படித்தேன்.பகிர்ந்தேன்👍👍

Thursday, January 13, 2022

நல்வாழ்த்துகள்..

 

 அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்..