வெகு நாட்களுக்குப் பின் தையற்கடை வைத்திருந்த
என் நண்பரைப் பார்த்தேன்
வழக்கம்போல " தொழில் எப்படிப் போகிறது ?"
எனக் கேட்டும் வைத்தேன்
நண்பன் புலம்ப ஆரம்பித்துவிட்டான்
" முன்பெல்லாம் நம் சீதோஷ்ண நிலைக்கு
ஏற்றார்ப் போல அதிக நாள் உழைக்கும் படியான
துணியெடுத்து தைக்கக் கொடுப்பார்கள்
உடலுக்கு ஏற்றார்ப்போல
வடிவமைக்கச் சொல்வார்கள்
அவயங்கள் அசிங்கமாகத் தெரியாதவாறு
கொஞ்சம் பெரியதாகவும் தைக்கச் சொல்வார்கள்
இப்போது எல்லாம் தலை கீழ்
மினுமினுப்பு பளபளப்பு இருந்தால் போதும்
உழைப்பது குறித்து அக்கறையில்லை
உடலை ஒட்டி இருக்கும்படியாகவும்
அவயவங்கள் கொஞ்சம் தெரியும் படியாகவும்
முடிந்தால் பெரிதாகத் தெரியும் படியாகத்
தைக்கச் சொல்கிறார்கள்
கலாசாரச் சீரழிவுக்கு துணை போகிறோமோ என
அச்சம் என்னுள் இருளாய் பரவுகிறது
எனக்கு மனம் வெறுத்துப் போய்விட்டது
தொழிலை மாற்றலாம் என இருக்கிறேன் " என்றான்
அவனுக்கு ஆறுதலாக இரண்டு வார்த்தைகள்
கூறிவிட்டு நடக்கையில் நேர் எதிரே
என் இலக்கிய நண்பனைப் பார்த்துவிட்டேன்
முன்பெல்லாம் முன்ணனி இலக்கியப் பத்திரிக்கைகளில்
அவன் கவி இடம் பெறாத பத்திரிக்கைகளே இருக்காது
சினிமாவிலும் எழுதிக் கொண்டிருந்தான்
இப்போது ஏனோ அதிகம் எழுதுவதில்லை
காரணம் கேட்டுவைக்க
அவனும் புலம்பத் துவங்கிவிட்டான்
" முன்பெல்லாம் கவிதையெனச் சொன்னால்
காலம் வெல்லக் கூடியதாய் தரமானதாய்
இருத்தல் வேண்டும் என வலியுறுத்துவார்கள்
உள்ளதை உள்ளபடி உரைக்கக் கூடியதாய்
உண்மையை அழுந்தச் சொல்வதாய்
அவசியம் இருக்கவேண்டும் என்பார்கள்
அனைவரும் ஏற்கும்படியாகவும்
ஆபாசம் அறவே தவிர்க்க வேண்டும் என்பார்கள்
இப்போது எல்லாம் தலைகீழாகிவிட்டது
வக்கிர உணர்வை உடன் உசுப்பிவிடும்
வல்லமை மிக்க காமக் கவிதைகளாய்
அறிவை மழுங்கடிக்கக் கூடியதாகவும்
மனதின் அரிப்பிற்கு தீனி போடும்படியாகவும்
வார்த்தைகள் அவசியம் என்கிறார்கள்
முடிந்தால் வார்த்தைகள் கூட வேண்டாம்
ஆபாச சப்தங்கள் குறியீடாக இருந்தாலே போதும்
இளைஞ்ர்களையும் காமக் கிழடுகளையும்
வசீகரிப்பதாய் இருக்க வேண்டும் என்கிறார்கள்
சமூகம் கெட நானும் காரணமாகி விடுவேனோ என்
எனக்குள் ஒரு நெருடல் விஷமாய்ப் பரவுகிறது
எனக்கு வெறுத்துப் போய்விட்டது
எழுதுவதையே நிறுத்திவிடலாமென இருக்கிறேன்" என்றான்
இவனுக்கும் ஆறுதலாக நாலு வார்த்தைகள் சொல்லி
வீடு வந்து சேர்வதற்குள்
எனக்குள் குழப்பம் கூடிப்போனது
பரமனின் முதுகில் பட்ட அடி
அனைத்து ஜீவராசிகளின் மீதும் பட்டது போல
கலாச்சாரம் பண்பாடுகளின் மீது விழும் அடியும்
இப்படித்தான் பாகுபாடின்றி பரவித் தாக்குமா?
கவிஞனும் தையற்காரரும் கூட
ஏன் சட்டையும் கவிதையும் கூட
அதற்கு ஒன்றுதானா ?


