Tuesday, October 11, 2011

தேர்தல் -ஒரு சிந்தனை

நாம் சில சூழ் நிலைகள் ஏற்படவேண்டுமென்பதற்காக
எவ்வளவோமுயன்றிருப்போம் . போராடியிருப்போம்
அது அப்போதெல்லாம் நடக்காது போய் நாம் எதிர்பாராத
நேரத்தில் தானாகவே திடுமென தோன்றினால் எப்படி
இருக்குமோ அப்படி இந்த உள்ளாட்சித்தேர்தல்
நமக்கு வாய்த்திருக்கிறது

தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சிகளும் ஏதோ ஒரு
கொள்கை விளக்கம் கொடுத்து அணி மாறி மாறி
போட்டி இடும்.அவர்கள் அவ்வப்போது சொல்கின்ற
விளக்கங்களையும் காரணங்களையும் எண்ணிப் பார்த்தால்
மக்களை எவ்வளவு முட்டாள்களாக மதிக்கிறார்கள்
என்பது தெளிவாகத் தெரியும்.நான் அதற்குள் போகவில்லை

அனைத்து கட்சிகளுமே தனக்கென ஒரு ஓட்டு வங்கி
இருப்பதைப் போல ஒரு பெரிய மாயையை உண்டாக்கி
அதை வைத்தே கூட்டணி கணக்கு போடுவதும்
தொகுதி பங்கீடு  செய்வதுமான வேலைகளைச்
செய்து வருகின்றன.உண்மையில் யாருக்கு
எவ்வளவு வாக்கு வங்கி இருக்கிறது என்பதும்
வெறும் வாய் ஜாலத்தில் எத்தனை கட்சிகள் உதார்
விட்டுக் கொண்டிருக்கின்றன எனபதும்
இந்தத் தேர்தலில் நிச்சயம் தெரிந்து விடும்

எல்லா கட்சிகளிடத்தும் சில சிறப்புகளும்
சில கோளாறுகளும் உண்டு
என்ன காரணத்தினாலோ ஒவ்வொருவருக்கும்
ஒவ்வொருகட்சியை பிடித்துப் போயிருக்கும்
.இந்தத் தேர்தலை கட்சிகளின் உண்மையான பலத்தை
அறிய உதவும் தேர்தலாக நாம் பயன்படுத்த்க் கொள்ளலாம்
கட்சி சின்னமற்ற  உள்ளாட்சிப் பதவிகளுக்கு
நபர்களைப் பொருத்தும்கட்சி சின்னமுள்ள பதவிகளுக்கு
நபர்களைக் கணக்கில் கொள்ளாமல் கட்சிகளை
கணக்கில் கொண்டு அவரவருக்கு பிடித்த கட்சிகளுக்கு
வேறு ஜாதி உணர்வோ இன உணர்வோ இல்லாமல்
வாக்களித்தால்உண்மையான கட்சியின் பலமும் தெரியும்
வெறும் உப்புமா கட்சிகளின் சவுடாலும்  
நிச்சயம்   ஓய்ந்து போகும்

எனவே இந்தத் தேர்தலில் அனைவரும்
ஜாதி மத உணர்வுகளுக்கோ பணத்திற்கோ  ஆட்படாது
நாமனைவரும் தவறாது வாக்களிப்போம்
தமிழக அரசியல் கட்சிகளின் உண்மையான பலத்தை
அறிந்து கொள்வோம்
இப்படி ஒரு சந்தர்ப்பம் அமைவது கடினமே என்பதில்
தெளிவாய் இருப்போம்


 

Friday, October 7, 2011

புதிய பரம பதம்

 " வா பரமபதம் விளையாடலாம் "
என்றான் பேரன்

" சகுனிபோல் எனக்கு
சோளி உருட்டும் சாமர்த்தியமில்லை
அதனால் ஏணிகளுக்கும் எனக்கும்
எப்போதும் ஏழாம் பொருத்தமே
என்னை என்றுமே
அவைகள் ஏற்றி விட்டதே இல்லை
சூட்சுமம் சிறிதும் அறியாத
விளையாட்டுக்காரன் என்பதால்
பாம்புகளுக்கோ என்னிடம்
கோபம் மிக மிக அதிகம்
அதனால் என்னை தீண்டாது
விட்டதும் இல்லை
பாதிக்கு மேல் என்னை
ஏறவிட்டதும் இல்லை
என்வே நான் வரவில்லை "என்றேன்

பேரன் தலையிலடித்துக் கொண்டான்

 "தாத்தா நீ பழங்கதைகள் பேசுகிறாய்
விதிகளை மாற்றி வெகு நாட்களாகிவிட்டது
இப்போது பாம்பின் வால் பிடித்து
உயரம் போகலாம்
ஏணிதான் இறக்கி விடும்
வா விளையாடலாம்
வெற்றி நிச்சயம் " என்றான்

நான் விளையாடத் துவங்கினேன்
பாம்பின் வழி உயரம் போவது
மிக மிக எளிதாய் இருந்தது
ஏணியின் இறக்கம்
பாதிக்கும் படியாய் இல்லை

"இந்த விதி வசதியாய் இருக்கிறதே
சிகரத்தை எட்டுதல்
வெகு எளிதாய் இருக்கிறதே
இந்த புதிய விதியை
சொல்லிக் குடுத்தது யார் "என்றேன்

"ரமேசின் தாத்தா " என்றான்

"அவர் என்ன செய்கிறார் " என்றேன்

" அரசியலில் இருக்கிறார் "என்றான்



( சாகம்பரி அவர்களின் கருவை புதிய உருவில்
கொடுத்துள்ளேன் நன்றி சாகம்பரி )


Monday, October 3, 2011

என்னை நானே அறிய விடு

நண்பகலையும் நடு நிசியாய் காட்டும்
அடர்ந்த காட்டினுள்
என்னைத் தனியே  விட்டுப் போ

நான் சிறு பிள்ளையில்லை
திசை காட்டும் கருவியின்
வரைபடங்களின் துணையும்
எனக்குப் போதும்
உன் விரல் பிடித்து நடந்துவர
எனக்கு இஷ்டமில்லை

இப்போதெல்லாம் எனக்கு
பாதுகாப்பான பயணங்கள் உடன்பாடில்லை

வேகத்தால் வரும் விளைவுகள் குறித்து நான்
விழுந்தே தெரிந்து கொள்கிறேன்
உடலெங்கும் உன்னைபோல் எனக்கும்
காயம்பட்டு தழும்பாகட்டும்
விவேகத்திற்குப் பின் வேகம் வர
சந்தர்ப்பமே இல்லை
விழாதிரு என எப்போதும் விரும்பாதே
விழுந்தாலும் எழப் பழகு என மட்டும் ஆசிர்வதி

எத்தகைய சுவையான பழமாயினும்
உரித்துக் கொடுத்தவை யெல்லாம்
கசக்கவே செய்கின்றன

என்னைப் புரிந்து கொள்
என்னைப் பசி அறியவிடு
குறியீடுகளின் ,படிமங்களின் தோல்கள்
கடினமானவையே

என்னைக் கடித்து உண்ணவிடு
என் பற்களும் நகங்களும்
சிறிதேனும் பலம் பெறட்டும்

என்னை இனியேனும்
அலைய விடு
தேட விடு
அறியவிடு

பூசாரியாய் புத்த பிட்சுவாய்
வாழ்வைத் தொடராது
ஒரு சித்தனாய்
ஒரு புத்தனாய்
என்னை மலரவிடு
என்னை நானே அறிய விடு


Saturday, October 1, 2011

அஞ்ஞான விளிம்பு ...


எது அவரை தலைகீழாகப் புரட்டிப் போட்டது ?
சொல்லிய கதையா ?சொல்லிய விதமா ?கேட்ட விதமா ?
எல்லோரும்தான் ஹரிச்சந்தரன் கதை கேட்கிறோம்
காந்தியும்தான் கேட்டார்
அவர் மட்டும் எப்படி மகாத்மா ஆகிப் போனார் ?
எது அவரை மாற்றிப் போட்டது ?

எது அவரை ஞானியாக்கிப் போனது ?
நோயா? மூப்பா ? சாவா?
எல்லோரும்தான் மூன்றையும் தினம் பார்க்கிறோம்
கௌதமன் மட்டும் எப்படி மாறிப்போனான் ?
எது அவரை புதியவராக்கிப் போனது ?
அவலமா? அவை தந்த கழிவிரக்கமா ?
அதீத சிந்தனையா?
எது அவரை புத்தனாக்கிப் போனது ?

சூழல் எவரையும் மாற்றிவிடுமா?
மாறுபவருக்கு சூழல் ஒரு பொருட்டில்லையா ?
கேள்விகள் என்னுள் சூறாவளியாய்   சுழன்றடிக்க
நேரம் காலம் மறந்து கோவில் சன்னதியில்
குழம்பிப் போய்க் கிடந்தேன்
அருகில் வந்தமர்ந்த என் சித்தப்பா
ஆறுதலாகத் தலையைத் தடவி
"என்ன குழப்பம் சொல் முடிந்தால் தீர்க்கிறேன் " என்றார்

முழுவதையும் கேட்ட அவர்
"எனக்கும் அந்தக் குழப்பம் உண்டு
பாட்டி இறந்ததும்
சில மாதம் குழம்பித் திரிந்த தாத்தா
திடுமென ஒரு நாள் காசிக்கு
மரண யாத்திரை கிளம்பிவிட்டார்
நாங்கள் அதிர்ந்து போனோம்
அவரை திடுமென மாற்றிப் போட்டது எது ?
விரக்தியா ?வேதனையா ? ஞானத் தேடலா ?
அவ்ரை வழியனுப்ப போயிருந்த நான்
கடைசியாக இதே கேள்வியை கேட்டேன்
லேசாகச் சிரித்தபடி அவர் இருக்கைக்கு மேலிருந்த
வாசகத்தை காண்பித்தார்
"சுமையைக் குறை சுகமாய் பயணம் செய் " என்றிருந்தது

சுமை என்பதற்கும் சுகம் என்பதற்கும்
வேறு அர்த்தமும் உண்டென
நமக்கேன் இதுவரை புரியவில்லை ?
அவருக்கு மட்டும் எப்படிப் புரிந்தது ?
இந்த வாசகம் அவரை முடிவெடுக்கத் தூண்டியதா?
முடிவெடுத்த அவருக்கு வாசகம் கைகொடுத்ததா ?
எனக்கும் அந்தக் குழப்பம் உண்டு
உனக்குப் புரிந்தால் எனக்கும் சொல் "  எனச் சொல்லிப் போனார்

குழப்பம் கூடியதுதான் மிச்சம்
எனக்கேதும் புரியவில்லை
எது ஒரு சிலரை மட்டும்
தலைகீழாய் புரட்டிப் போடுகிறது ?
கருவிலே திருவா ?
வாய்க்கிற சூழலா ?


Thursday, September 29, 2011

நவராத்திரிச் சிந்தனை


மரத்தின் இருப்புக்கும் வளர்ச்சிக்கும் ஆணிவேர்தான் காரணம்
என்பதை விவசாயிக்கு விளக்க வேண்டியதில்லை
மாளிகையின் நிலைப்புக்கும் உறுதிக்கும்
அஸ்திவாரம்தான் முழுக்காரணம் என்பதை எந்த பொறியாளருக்கும  
விளக்க வேண்டியதில்லை
இச்சமூகத்தின் வளச்சிக்கும் மேன்மைக்கும் பெண்கள்தான்
காரணம் என்பதைஇந்தியாவில் எவருக்கும் யாரும்
விளக்கவேண்டிய அவசியமே இல்லை

ஏனெனில் இதனை
ஆதியிலேயே மிகத் தெளிவாக அறிந்திருந்தனால்தான்,

படைக்கும் பிரம்மனுக்குத் துணையாக கலைக்கும்
கல்விக்குமான கலைமகளை துணையாக்கி மகிழ்ந்திருக்கிறான்
காக்கும் திருமாலுக்கு இணையாக கருணையும்
செல்வத்திற்குமான திருமகளை துணைவியாக்கி
குதூகலித்திருக்கிறான்
அழிக்கும் ருத்திரனுக்கு இணையாக ஆக்ரோஷமும்
சக்தி மிக்கவளுமான மலைமகளை இணையாக்கி இன்பம் கொண்டிருக்கிறான்

கலைமகள் துணையற்று படைத்தலும்
திருமகள் கருணையற்று காத்தலும்
சக்தியின் அருளற்று அழித்தலும்
ஆகாத ஒன்று என அறிந்ததால்தான்
முப்பெரும் தேவியரை பிரதானப் படுத்தி
ஒன்பது இரவுகளை தேர்ந்தெடுத்து
 நவராத்திரியாக கொண்டாடியும்  மகிழ்ந்திருக்கிறான்
நாமும் தொடர்ந்து கொண்டாடி மகிழ்கிறோம்

அதைப் போன்றே 
குழந்தையாய் முழுமையாக அவளைச்  சார்ந்திருக்கும் நாளில்
அன்பின் மொத்த வடிவாக  அன்னையாக
கணவனாக அவளுக்கு இணையாக சேர்ந்திருக்கும் நாளில்
பின்னிருந்து இயக்கும் சக்தியாக தாரமாக 
வயதாகி சக்தியிழந்து ஓய்ந்துச் சாய்கிற நாளில்
அனைத்துமாய்  தாங்கும் அன்புமிக்க மகளாக
 மண்ணகத்தில் மங்கையர் எல்லாம் கண்கண்ட
முப்பெரும் தேவியராய்த் திகழ்வதாலேயே
மங்கையரைக் கௌரவிக்கும் நாளாகவே இந்த
 நவராத்திரித் திரு நாளைக் கொண்டாடி
 நாமும் மகிழ்கின்றோம்
அவர்களது தியாக உள்ளங்களை இந் நாளில்
 சிறிதேனும் நாமும் கொள்ள முயல்வோம்
அவர்களோடு இணந்து இந்தச் சீர்கெட்ட சமூகம் சிறக்க
 நாமும்  நம்மாலானதைச் செய்வோம்

Monday, September 26, 2011

மர்ம இடைவெளி



தொடக்கமும் முடிவும் தெரியாது
போகிற போக்கும் புரியாது
தொடர் நாடகம் ஒன்று
தொடர்ந்து நடக்கிறது

உரையாடலில்
பேசுபவனே கேட்பவனாகவும்
கேட்பவனே பேசுபவனாகவும்
மாறிக்கொள்ளுதலைப் போலவே

இந்நாடகத்தில்
பார்வையாளர்களே நடிகர்களாகவும்
நடிகர்களே பார்வையாளர்களாகவும்
மாறி மாறி
நாடகத்தை தொடர்ந்து நடத்திப் போகிறார்கள்

ஆயினும்
நாடகம் ஒத்திகையற்றததாய் இருப்பதால்
திடுமெனத் தோன்றும் எதிர்பாராத திருப்பங்கள்
அதிர்ச்சியூட்டிப் போவதால்
பலர் நிலை குலைந்து போகிறார்கள்

இயக்குநர் யாரெனத் தெரிந்தால்
முடிவினை அறியக் கூடுமோ என
புலம்பத் துவங்குகிறார்கள்

புலம்பித் திரிபவர்களுக்கு ஆறுதலாய்
கைகளில் பேரேடுகளைச் சுமந்தபடி
பலர் அரங்கினுள் வலம் வருகிறார்கள்

இதுதான் மூலக் கதையென்றும்
இதுதான் இயக்குநர் வந்து போனதற்கான
உண்மை அத்தாட்சி யெனவும்
இனி அவரின் வருதலுக்கான
உறுதிமொழியெனவும்
அறுதியிட்டுக் கூறுகிறார்கள்

பலர் இதை ஒப்புக்கொண்டு
உடன்பட்டுப் போகிறார்கள்

சிலர் மட்டும் இன்னும் அதிகம்
குழம்பிப் போகிறார்கள்

"ஒரு நாடகத்திற்கு எப்படி
பல கதைகள் இருக்கக் கூடும்
பல இயக்குநர்கள் எப்படிச் சாத்தியம் "

இவர்கள் கேள்விக்கு ப்திலேதும் இல்லை

ஒவ்வொருவரும் தத்தம் கதைப்படித்தான்
நாடகம் தொடர்கிறது
முடிவு கூட இதன் படித்தான் என
சாதித்துத் திரிகிறார்கள்

இவர்களின் பிரச்சாரத்தில்
குழுக்கள் கூடிப்போகிறதே தவிர
குழப்பம் தீர்ந்தபாடில்லை

இந்தக் குழுக்களுக்களுக்கு
சிறிதும் தொடர்பே இல்லாது
ஒரு புதிய குழு உரக்கக் கூச்சலிடுகிறது

" இது நிகழ் கலை
இதை எழுதியவன் எவனும் இல்லை
இதை இயக்குபவன் எனவும் எவனும் இல்லை
நடிகன் இய்க்குநர் எல்லாம் நாமே
நாடகத்தின் போக்கும் முடிவும் கூட
நம் கையில்தான் " என்கிறது

இது குழம்பித் திரிபவர்களை
இன்னும் குழப்பிப் பைத்தியமாகிப் போகிறது

பசியெடுத்த குதிரையின் உடலில்
ஓரடி நீட்டி கட்டப்  பட்டப்
புல்லினைப் பிடிக்க
குதிரை நித்தம் ஓடி ஓடி  ஓய்கிறது

ஓடினாலும் நின்றாலும்
அதன் வாய்க்கும் புல்லிற்குமான
இடைவெளி  மட்டும்
குறையாது இருத்தல் போல

கேள்விக்கும் புதிருக்குமான
மாய இடைவெளி மட்டும்
குறையாது
தொடர்ந்து கொண்டே இருக்கிறது

தொடக்கமும் முடிவும் தெரியாது
போகிற போக்கும் புரியாது
தொடர் நாடகம் மட்டும்
தொடர்ந்து கொண்டே  இருக்கிறது

Monday, September 19, 2011

லெட்சுமணக்கோடு


லெட்சுமணக் கோட்டில் நின்று
இருபுறமும் பார்த்த அனுபவம் உண்டா ?

சிற்றுண்டிச் சாலைகளில்
அன்னியர்கள் பிரவேசித்தல் கூடாது
என்கிற எல்லையின் வலதுபுறம்
இட்டிலியில் கிடந்த ஈயை
எடுத்துப் போடும் அசிங்கத்தையும்
வலதுபுறம் மிகப் பணிவாக
அவனே பறிமாறும் லாவகத்தையும்...

நாடக மேடையில்
திரைச்சீலையில் வலதுபுறம்
அவசர அவசரமாய்
முதுகு சொரியும் கண்ணனையும்
இடதுபுறம் முன் மேடையில்
ரசிகர்கள் ஆர்ப்பரிக்க
அருள் கொடுக்கும் அதே  கண்ணனையும்

திருமண மண்டபத்தின் பின்னறையில்
இரண்டு பவுன் குறைவதற்காக
ருத்ர தாண்டவமாடும் சம்பந்தியையும்
அது சரிபடுத்தப் பட்டபின்னே
மணவறை மேடையில்
நாகரீகமாய் நடந்துகொள்ளும்
அதே பச்சோந்தி சம்பந்தியையும்

இலக்கியக் கூட்டங்களில்
கற்பைப் பொதுவென வைப்பது குறித்து
அனல்பறக்க பேசிவிட்டு
கூட்டம் முடிந்தவுடன்
புதிதாகச் சேர்த்த சின்னவீட்டை
சிரித்து அணைத்தபடிச் செல்லும்
சிரு
ங்கார வேலர்களையும்

திருவிழாக் கூட்டங்களில்
மனைவி முன்செல்ல
காமக் கண்களைஅலைய விட்டு
பின் சேர்ந்து நடக்கையில்
கண்களில் காதலும் கனிவும   பொங்க
ராமனாய் காட்சி தரும்
அயோக்கிய சிகாமணிகளையும்...

இப்படி

இருளுக்கும் ஒளிக்கும்
பொய்மைக்கும் உண்மைக்கும்
இடையில் நின்று பார்க்கத் தெரிந்தவர்கள்தான்
தலைவர்களாக,
 கவிஞர்களாக
ஏன் ஞானிகளாகக் கூட மாறிப் போகிறார்கள்

நாம் அப்படியெல்லாம் கூட மாறவேண்டாம்
அவர்களைக் கண்டு மயங்கித் தொலையாதிருக்க
ஏமாந்து தொலையாமல் இருப்பதற்காகவாவது
இந்த மாயக் கோட்டில் நின்று பார்க்கப் பழகுவோமா