Friday, December 14, 2012

புலம்பி அலையும் பொது நலம்


உணவைத் தீர்மானிக்கும் அதிகாரம்
நாவுக்கும் நாசிக்கு போக
எகத்தாளம் போடுகிறது மனது
குடலும் உடலும் நாசமாவதறிந்து
குழம்பித் தவிக்கிறது அறிவு

வெற்றியைத் தீர்மானிக்கும் அதிகாரம்
இலவசத்திற்கும் லஞ்சத்திற்கும் போக
துள்ளிக் குதிக்குது பண நாயகம்
நேர்மையும் நியாயமும் புலம்புதல் கண்டு
நொந்துத் துடிக்குது ஜன நாயகம்

நீதியைத் தீர்மானிக்கும் அதிகாரம்
சாட்சிக்கும் சந்தர்ப்பத்திற்கும் போக
மீசை முறுக்குது சட்டம்
உண்மையும் நிஜமும்தோற்பது கண்டு
கதறித் திரியுது நியாயம்

மதிப்பைத் தீர்மானிக்கும் அதிகாரம்
பணத்திற்கும் பதவிக்கும் போக
எகிறிக் குதிக்குது அராஜகம்
எளிமையும் ஏழ்மையும்  ஒடுங்குவது கண்டு
தடுமாறி நிற்குது தர்மம்

வாழ்வைத் தீர்மானிக்கும் அதிகாரம்
வசதிக்கும் வன்முறைக்கும் போக
திமிரோடு வளருது சுய நலம்
மதிப்பும் மரியாதையும் அழிதலையறிந்து
புலம்பி அலையுது பொது நலம்


Wednesday, December 12, 2012

பாரதியும் சூப்பர் ஸ்டாரும்


நமக்கு உயிரளித்து
உலகில் உலவவிட்டவர்களை விட
நமக்கு கல்வி கொடுத்து
செம்மைப் படுத்தியவர்களை விட
நாம் சறுக்கியபோது
விழாது காத்தவர்களை விட
நாம் சோர்ந்தபோது
நமக்கு ஊக்கமளித்தவர்களை விட

நம் பொழுதை நாமே அறியாது
நம்மிடமே களவாடியவர்கள்
நம் சிறுவாட்டுப் பணத்தை
சிதறாது பறித்தவர்கள்

சுயமாக ஏதுமின்றி
ஆட்டுபவனுக்கு ஏற்றார்ப்போல
ஆடம் மட்டுமே தெரிந்தவர்கள்

குரலெத்துப் பாடாது
சிறந்த பாடகனுக்கு
வாயசைப்பு  கொடுப்பவர்கள்

முதலீடு ஏதுமின்றி
அடுத்தவன் முதலீட்டில்
ஆட்டம் காட்டுபவர்கள்

வாலிபம் இருக்கிறவரையில்
காதல் காட்சிகளில்
புகுந்து விளையாடி

நடுவயதில் தவறாது
சமூக அக்கறையை
வசனத்தில் மட்டுமே காட்டுபவர்கள்

சேர்த்த பணத்தைப் பாதுகாக்க
அவ்வப்போது வாய்ஸ் கொடுத்து
தன்னை பலப்படுத்திக் கொள்பவர்கள்

பாலுக்கும் பூனைக்கும்
பாதுகாவலாய் இருப்பதுபோல்
இரு துருவங்களுக்கும்
இதமாய் இருப்பவர்கள்

எப்படி இப்படிக்
கொண்டாடப்படுகிறார்கள்
எப்படி யோசித்த போதும்
காரணம் விளங்கவே இல்லை

என்ன செய்வது
கூடலழகர் பெருமாள் கோயில் கூட
ஒயின்ஸ் ஷாப்புக்குப் பின்னால் என
அடையாளம் காட்டப் படுவது போல

மகாகவி பிறந்தது கூட
சூப்பருக்கு முதல் நாள் என
ஞாபகம் வைத்துத் தொலைக்க வேண்டியிருக்கிறது

ஒரு வகையில் இந்தப்
பதிவின் தலைப்பைப் போலவும்

Monday, December 10, 2012

கவிதை என்பது உணர்வு கடத்தி


" ஏதோ ஒன்று குறைவதைப் போலுள்ளது
இன்னும் கொஞ்சம் முயற்சி செய் "என்கிறேன்

தரையில் சட்டென விழுந்து ஓடும்
தை மாத மேகம் போல்
சிறு வெறுப்பு அவன் முகம் கடக்கிறது

"எதுகை இருக்கிறது
மோனை இருக்கிறது
பாயாசத்து முந்திரியாய்
படிமமும் இருக்கிறது
மொக்கையாக இல்லாது
ஒரு செய்தியும் சொல்லி இருக்கிறேன்
கவிதைக்கு வேறென்ன வேண்டும் "என்கிறான்

"தலைவாரிப் பூச்சூடுகிறாள்
ஆடை அணிவிக்கிறாள்
சோரூட்டுகிறாள்.தாலாட்டுகிறாள்
தாய்க்குரிய அனைத்தையும் செய்வதால்
அவள் தாயாக இருக்கவேண்டும் என்பதில்லை
கவிதைக்குரிய அனைத்தும் இருப்பதால்
அது  கவிதை போல் இருக்கலாம்
ஆயினும் அது கவிதையாய் இருக்கவேண்டியதில்லை
ஏனெனில் கவிதை ஒரு புராடெக்ட் இல்லை"என்கிறேன்

"பின் இவை ஏதுமற்றதுதான் கவிதையா ""என்கிறான்

"அப்படியும் இருக்கலாம்
கவிதை வெறும் சொல்லடுக்கு இல்லை
கவிதை  நாட்டு நடப்புகளைச் சொல்லும்
செய்தித் தாளும் இல்லை
இலக்கண அறிவை விளம்பிட உதவும்
விடைத்தாளும் இல்லை
தான் அறிந்ததை பிறர் அறியச் சொல்லும்
விளம்பர சாதனமும் இல்லை
தான் உணர்ந்ததை பிறர் உணரச் செய்பவை எவையோ
அவை மட்டுமே  கவிதையாய் இருக்க முடியும்
ஏனெனில் கவிதை ஒரு உணர்வு கடத்தி "என்கிறேன்

புரிந்தது போல் லேசாகத் தலையாட்டிப் போகிறான்

புரிந்ததும் புரியாததும் அவனது அடுத்த படைப்பில்
புரிந்துவிடும் என்பது நமக்கெல்லாம் புரிந்தததுதானே ?


Sunday, December 9, 2012

நான் என்னைக் கடந்து கொண்டிருக்கிறேன்

நான் சீராக ஓடிக் கொண்டிருக்கிறேன்

என் முன் கடந்து செல்பவனின்
முகத்தில் வெற்றிப்  புன்னகை
இதழ்களில் ஒரு அலட்சியச்  சுழிப்பு

நான் எப்போதும் போல் ஓடிக் கொண்டிருக்கிறேன்

என்னிலிருந்து பின் தங்கத் துவங்குபவன்
முகத்தினில் கவலை ரேகைகள்
விழிகளில் தெறிக்கும் பொறாமைப் பொறி

நான் என் வேகத்தில் ஓடிக் கொண்டிருக்கிறேன்

உடன் வருபவன் அதிசமாய்க் கேட்கிறான்
" அவனது அலட்சியப் புன்னகையும்
இவனது பொறாமைப் பார்வையும்
உன்னைப் பாதிக்கவில்லையா "

"பாதிக்க வாய்ப்பே இல்லை
அவர்களின் இலக்கு நானானதால்
அவர்கள் குழப்பமடைகிறார்கள்
எனக்கு நான் மட்டுமே இலக்கு என்பதால்
எனக்கு எவ்வித குழப்பமுமில்லை "என்கிறேன்

கேட்டவன் குழப்பமடைகிறான்

சீரான வேகத்தில்
 நான் என்னைக் கடந்து கொண்டிருக்கிறேன்

Saturday, December 8, 2012

நிஜமும் நிழலும்


வனவாசம் முடிந்து திரும்பும் ஸ்ரீராமனுக்காக
மாலைக்குப் பின் முதன் முதலாய்
மீண்டும் பகலைக் கண்ட அயோத்தி
ஒலி ஒளி வெள்ளத்தில் தத்தளிக்க

ஒழிய இடமில்லா நிசப்தமும் இருளும்
ஒதுங்கியிருந்த அந்தப்புரத்துள்
புகைப் போல் மெல்லப் பரவி
திடப் பொருளாய் உருமாறத் துவங்க

தலைவிரி கோலமாய் இருளோடு இருளாக
இறுகிப் போய்க் கிடந்தாள்
இளமையை யும் அழகையும் உணர்வையும்
காலக் கரைசலில் கரையவிட்ட ஊர்மிளை

அடக்குமுறைக்குப் பயந்திருந்த அடிமையாய்
அதுவரை அடங்கிக் கிடந்த பணிப்பெண் மெல்ல

"மகாராணி அச்சமாய் இருக்கிறது
மன்னரை வரவேற்கும் விதமாய்
ஒரு சிறு அகல் விளக்காவது ஏற்ற
அடிமையை அனுமதிக்க வேண்டும்"எனப் பணிகிறாள்

மெல்லப் புன்னகைத்த ஊர்மிளை
"நிஜத்துக்கு ஒளியும் ஒலியும் சரி
நிழலுக்கு எதற்கு ?
அதற்கு இருளும் நிசப்தமுமே போதும் "என்கிறாள்

அரண்மனை வாயிலில்
ஸ்ரீ ராம ஜெய கோஷம்
விண்ணைத் தொட்டுக் கொண்டிருக்கிறது


Tuesday, December 4, 2012

நிஜமாகும் கட்டுக்கதை

ஏழுகடல் தாண்டி
ஏழுமலை தாண்டி
எங்கோ இருக்கும் மலைக் குகையில்
ஒரு கூண்டுக் கிளியிடம்  உயிரைவைத்து
ஊரில் உலவித் திரிந்த அரக்கனின் கதையை
நான் நம்பியதே இல்லை

உயிருக்கும் உடலுக்குமான
இடைவெளித் தூரம்
சாத்தியமற்றதென்றும்
அது ஒரு  தெளிவான கட்டுக்கதையென்றும்
ஆக்ரோஷமாய் விவாதித்திருக்கிறேன்

இப்போதெல்லாம் அப்படியில்லை

முகமறியாது பேசியறியாது
ஊரறியாது நாடறியாது
எங்கிருந்தோ என்னை ஊக்குவித்து

சாரமற்ற  என் படைப்பினுக்கு
உயிரளிப்போரை நினைக்க நினைக்க
புதிய சிந்தனைப் பிறக்கிறது

எங்கிருக்கும் உடலையும்
எங்கோ  இருக்கும்  உயிரும்
ஓயவிடாது  இயக்குதெலென்பது

அன்பிருந்தால் சாத்தியமென்று
தெளிவாகவும் புரிகிறது

இப்போதெல்லாம்
கட்டுக்கதை என நம்பிக்கைகொண்டிருந்த
அரக்கன் கதை  கூட
நிஜமாயிருக்கவும்
சாத்தியமென்றே படுகிறது

Monday, December 3, 2012

சில சந்தேகங்கள்


 சராசரிகள் எல்லாம் பள்ளி நாட்களில்
புத்திசாலிகளாய் ஜொலிக்க
உலகுக்கு பல அபூர்வ கண்டுபிடிப்புகளைக்
கொடுத்தவர்கள் எல்லாம் ஏன்
பள்ளியில் சேரவே
தகுதியற்றவர்களாய்க் கருதப்பட்டார்கள் ?

கல்வித்திட்டம் சரியில்லையா அல்லது
நம் அனுமானங்கள் சரியில்லையா ?

சராசரிகள் எல்லாம் இளமைக்காலங்களில்
அறிவுப் பெருக்கத்திற்கு
நூல்களையும் சான்றோர்ளையும் சார்ந்திருக்க
தீர்க்கதரிசிகள் எல்லாம் ஏன்
தனிமையையும் காடு மலைகளையும்
விலங்கினங்களையும் சார்ந்தே இருந்தார்கள் ?

நூல்களைவிட தனிமையும் விலங்கினங்களும்
அதிகம் சொல்லித் தருமோ ?

அறிஞர்களும் சான்றோர்களும்
தங்கள் உணர்வுகளை எண்ணங்களை
நேரடியாக வெளிப்படுத்திப் போக
எல்லையற்ற சக்திமிக்கவனுக்கு மட்டும் ஏன்
தன்னை வெளிப்படுத்திக் கொள்ள
ஒரு அவதாரமோ ஒரு தூதுவனோ
அவசியத் தேவையாக இருக்கிறது ?

ஆண்டவன் என்பவன் மனிதனுக்கு
மட்டும்தானா ? அல்லது
மனிதனுக்குத் தான் ஆண்டவன் தேவையா ?