Thursday, December 1, 2016

வெல்லுதலுன் நோக்கமெனில் உள்ளமதில் இதைக்கொள்...

அழகைச் சொன்னதைவிட
அழகாகச் சொன்னதும்
புரிந்ததைச் சொன்னதைவிட
புரியச் சொன்னதும்
நல்லதைச் சொன்னதைவிட
நன்றாகச் சொன்னதும்
நிலை பெறும் உலகிது
நினைவினில் இது கொள்

உள்ளத்தைச் சொன்னதை விட
உள்ளதுபோல் சொன்னதும்
உண்மையைச் சொன்னதைவிட
உண்மைபோல் சொன்னதும்
பயனுறச் சொன்னதைவிட
நயமுறச் சொன்னதும்
வென்றிடும் உலகிது
நெஞ்சினில்    இதைக் கொள்

சொல்வதைப் பொருத்தன்றி
சொல்பவனைப் பொருத்தும்
நல்லதனைப் பொருத்தன்றி
வெல்வதனைப் பொருத்தும்
நிலைமாறும் நிறம்மாறும்
கலையறிந்த  உலகமிது
நிலைத்திட  நினைக்கினில்
நினைவினில்  இதைக்கொள்

மின்னுவதெல்லாம் பொன்னல்ல
என்கிற சொலவடை
மின்னுவதொன்றே  பொன்னென
முற்றாக  மாறி
காலம் வெகுவாகிவிட்டது
ஞாலம் குணம் மாறிவிட்டது
வெல்லுதலுன் நோக்கமெனில்
உள்ளமதில் இதைக்கொள் 


Wednesday, November 30, 2016

பின்னணி பாராது பின்னணி தொடரின்.....

முந்தைய காலங்களில்

முன்னணி இருந்தவர்
பின்னணிப் பார்க்கின்..

உழைப்பு இருக்கும்
தியாகம் இருக்கும்
நேர்மை இருக்கும்
வீரமும் இருக்கும்
விவேகமும் இருக்கும்

இன்றைய காலங்களில்

முன்னணி நிற்பவர்
பின்னணிப் பார்க்கின்

ஜாதி இருக்கும்
மதம் இருக்கும்
பொய்மை இருக்கும்
பணமும் இருக்கும்
பரம்பரையாயும் இருக்கும்

இனியும் வரும் காலங்களில்

முன்னணி செல்பவர்
பின்னணி பாராது
பின்னணி தொடரின்..

எந்நிலை ஆயினும்
மேலும் கொள்ளும்
 நம் நிலை  நிச்சயம்
கையறு நிலையே

உணர்ந்து தெளிந்தால்
மாறிடத் துணிந்தால்
நிச்சயம் மாறிடும்
நம்தலை விதியே 

Tuesday, November 29, 2016

மீன்பிடிப் போட்டி...

குளம் கலக்கும் குணம்
குளம் அழிக்கும் குணம்
மீன் பிடிக்க
நினைப்பவர்களுக்கே வரும்

குளம் ஆக்கும்  மனம்
குளம் காக்கும் குணம்
நீரின் அருமை
அறிந்தவர்களுக்கே தகும்

மீன் பிடிப் போட்டியில்
சேறும் சகதியும்
குளத்து நீரை
சாக்கடையாக்கியத் தினங்கள்

ஒரு கெட்டக்
கனவினைப் போல
மெல்லக் கடந்து போக

மெல்லத் தெளியத்
துவங்குது
எங்கள் ஊர்க்குளத்து நீர்

துவேஷமும் வெறுப்பும்
மெல்லப் படிய
சீராகிடும் மனம் போலும்  

Monday, November 28, 2016

காலம் கடக்கும் பேராசை...

காலங்கடக்கும் பேராசை
துளியும் எனக்கில்லை
அதன் காரணமாகவே
என்படைப்புகளுக்கும்
அந்தப் பேராசை துளியுமில்லை

பொசுக்கும் மணற்பரப்பில்
வெற்றுக் காலுடன்
தகித்து வருவோனுக்கு
கொஞ்சம் ஒதுங்க இடம்தரும்
ஒற்றைப் பனைமரமாய்...

நீண்டு விரிந்த நெடுஞ்சாலையில்
தன் எடை மீறிய சுமையுடன்
ஒடுங்கி வருவோனுக்கு
கொஞ்சம் நிமிர இடம் தரும்
ஒரு கற்சுமைதாங்கியாய்...

கொட்டும் பெருமழையில்
முற்றாக நனைந்து ஊறி
நடுங்கி வருவோனுக்கு
கொஞ்சம் ஒடுங்க இடம் தரும்
ஒரு பாழடைந்த கோவிலாய்..

தனிமை தரும் வெறுமையில்
சூழல் கூட்டும் கொடுமையில்
நசுங்கித் தவிப்போனுக்கு
கொஞ்சம் இளைப்பாற வழிசொல்வதே
இலக்கியம் எனக் கொண்டதால்...

என் படைப்புகளுக்கு
காலம் கடக்கும் ஆசை
துளியும் இல்லை
அதன் காரணமாகவே
எனக்கும் அந்தப் பேராசை
என்றும் எப்போதும்
வருவதே  இல்லை 

Sunday, November 27, 2016

தகவல்கள்... தகவல்கள்.. தகவல்கள்...தலைவலிகள் ..

அந்தப்புரச் சுகமும்
அரியணைச் சுகமும்
பங்கப்படாதிருக்க
அரசனுக்கு அன்று
தகவல்கள் அவசியமாக இருந்தது..

ஆம் தகவல்கள்
தேடிப்பெற வேண்டிய
தங்கமாயிருந்தது

அதனாலேயே
படைபலத்தை விட
ஒற்றர்பலம்
அதிகத் தேவையாக இருந்தது

அறிவின் பசியடக்க
வாய்ப்பின் வாசலறிய
பின்னடையாதிருக்க
அனைவருக்கும் பின் நாளில்
தகவல்கள் தேவையாயிருந்தது

ஆம் தகவல்கள்
தேடிப்பெற வேண்டியப்
பொக்கிஷங்களாக இருந்தது

அதனாலேயே
புத்திசாலித்தனத்தை விட
தகவல்களைச் சேகரித்தவன்
வெற்றியாளனாய் இருந்தான்

மன அமைதியும்
வாழ்வின் முன்னேற்றமும்
சாத்தியப்பட
அனைவருக்கும் இன்று
தகவல்கள் ஒருதடையாக இருக்கிறது

ஆம் தகவல்கள்
அதிகமாகி நாற்றமெடுத்த
குப்பையாய் வழிமறிக்கிறது

Saturday, November 26, 2016

ஊமையாய் ஒரு சமூகம் ....ஒரு உலகாண்ட சமூகம்

எந்த ஒரு
பெரும் தவறினையும்
தவறியும்
எவரும்
கண்டுபிடிக்கமுடியாதபடி
மிகச் சரியாகச்
செய்யத் தெரிந்தவர்கள்
கொள்ளும் தொடர் வெற்றியையும்

எந்த ஒரு
மிகச் சரியானதையும்
தவறியும்
எவரேனும்
கண்டுமகிழும்படி
மிகச் சரியாகச்
செய்யத் தெரியாதவர்கள்
காணும் தொடர் தோல்வியினையும்

நாள்தோறும்
கண்டு

மனம் புழுங்கி
வெந்து
வேதனைப்பட்டு
மெல்ல மெல்ல
நம்பிக்கை இழந்து
வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கிறது
ஊமையாய் ஒரு சமூகம்
ஒரு உலகாண்ட சமூகம்

அது ஒரு சுகலயம்...

மொட்டாகி
மெல்ல மெல்ல
விரிந்து
மணந்து
அழகூட்டும் மலரை.

பறித்து
மாலையாக்கிப் பார்க்க...
அது ஒரு அழகு

செடியின் அணைப்பிலேயே
துயிலப் பார்க்க
அது ஒரு அழகு

உறக்கத் தில்
எதனிலோ
மயங்கி
இரசித்துச் சிரிக்கும்
மலரனைய மழலையை

அணைத்து
முத்தமிட
அதுஒரு பெரும் சுகம்

எட்ட நின்று
அப்படியே இரசிக்க
அது ஒரு தனிச்சுகம்

குளிர் ஊற்றென
மெல்லச்சுரந்து
பரவி
நிறையும்
கவித்துவ உணர்வை

சொல்லில்
அடக்கிப் பார்க்க
அது ஒருஅருந்தவம்

அதனுள்
விழிமூடி ஒன்றிட
அது ஒரு சுகலயம்