Saturday, June 30, 2012

கூண்டில் அடைபட்ட சிங்கம்

கிடைக்கிற மூன்று கற்களை
சமமாய அடுக்கி
சுற்றி கிடைக்கும் சுள்ளிகளைப் பொறுக்கி
பற்றவைத்து
பேப்பருக்குள் எடுத்து வந்த
 மளிகைச்சாமானகளை வைத்தே
சமைக்கத் துவங்குகிறாள் ஆச்சி

சமமற்ற தரையோ
சுழன்றடிக்கும் காற்றோ
எடுக்க மறந்த பொருட்களோ
அவளுக்கு ஒரு பொருட்டாய் இல்லை
கொதிக்கிற குழம்பின் வாசம்
கோவில் வெளியெங்கும்
பரவி விரிகிறது
என்றுமில்லா பசி
குடலுக்குள் உருண்டு புரள்கிறது

நிழலிருக்கும் இடத்தைப் பெருக்கி
சமதளம்ற்ற தரையில்
இலையைப் போடுகிறாள் ஆச்சி
ஊட்டினாலும் முகம் திருப்பும்
பேரப்ப்பிள்ளைகளெல்லாம்
போட்டி போட்டு இலை நிரப்பி
சப்புக் கொட்டி உண்ணுகிறார்கள்

நவ நாகரீக அடுப்படி
அனைத்துப் பொருட்களும் உள்ள
அஞ்சறைப்பெட்டி
சுத்தீகரிக்கப் பட்ட தண்ணீர்
தேக்காலான சாப்பாட்டு மேஜை
இவைகளின்றி ஏதும் செய்ய இயலாத
மருமகள் கள் எல்லாம்
வரிசையாய் அமர
பரிமாறத் துவங்குகிறாள் ஆச்சி

சட்டிக் குழம்பும்
அண்டாச் சோறும்
கற்பூரமாய்க் கரைய
ஏனோ கண்கலங்குகிறாள்
வீட்டில் கேஸ் அடுப்பு கூட
பற்றவைக்கத் தெரியாத
 "அந்த க் காலத்து ஆச்சி "


Friday, June 29, 2012

இருண்மை


எழுதுதலை கொஞ்சம்
நிறுத்தி இருந்தான் நண்பன்
காரணம்கேட்டேன்

"புரியாததை
புரியாதபடியே
படிப்பவர்களும்
புரிந்து கொள்ளாதபடியே
மறை பொருளாய் எழுதினேன்
பலர் முகம் திருப்பிப் போனார்கள்

மாறுதலாக
புரிந்ததை
புரிந்து கொண்டபடி
படிப்பவர்களும் புரிந்து கொள்ளுபடி
தெளிவாக எழுதிப் போனேன்
பலரும் பாராதே போனார்கள்
அதுதான் எழுதுவதில்லை "என்றான்

நான் சிரித்துக் கொண்டேன்

"பட்டப் பகலும்
நடு நிசியும்
அதிகம் போற்றப்படுவதில்லை
பாடப்படுவதும் இல்லை
பட்டப் பகலில் எல்லாமே தெளிவாகத் தெரியும்
அதில் சொல்ல என்ன இருக்கிறது
நடு நிசியில் எதுவுவேதெளிவாகத் தெரியாது
அதில் சொல்ல என்ன இருக்கிறது

விடிந்தும் விடியாத காலையிலும்
முடிந்தும் முடியாத மாலையிலும்
ஒரு ஒளிவு மறைவு இருக்கும்
அது குறித்து சொல்லவும் நிறைய இருக்கும்
அது எவரையும் மிக எளிதாயும் கவரும்
அப்படி முயற்சி செய்
அம்மணம் நிச்சய்ம் பெரும் ஆபாசம்
முழுமறைப்பில் சொல்ல ஏதுமில்லை
ஒளிவு மறைவே பேரழகு என்றேன்

புரிந்தது போலவும்
புரியாதது போலவும்
தலையாட்டிப் போனான் அவன்
நிச்சயம் அவன் தலைசிறந்த
"இருண்மைகவி" ஆவான் என
அப்போதே முடிவுசெய்துவிட்டேன்


Wednesday, June 27, 2012

புதிய பாதை

என்னுடல்
என் மனம்
என் சுகம்
இதைக் கடந்து

சமயலறை
படுக்கையறை
வாசல்படி
இதைக் கடந்து

என் ஜாதி
என் மதம்
என் இனம் கடந்து

எனது தெரு
எனது ஊர்
என் நாடு கடந்து

என்பணி
என் சகா
என் வர்க்கம் கடந்து..

இப்படி

எல்லாவற்றியும் கடந்து கடந்து
அனைத்தையும்
மிகச் சரியாகக்
கடந்துவிட்டதாக எண்ணி
மகிழ்ந்து அமர்கையில்
எதிரே

"உன்னத வாழ்வுக்கான பாதை
இங்குதான் துவங்குகிறது "
என்கிற அறிவ ப்புப் புடன்
நீண்டு செல்கிறது
ஆளரவமற்ற
ஒரு புதியசாலை

குழம்பிபோய்
கடந்துவந்த பாதையைப் பார்க்க
காலம், சக்தி ,செல்வம்
அனைத்தையும்
ஏய்த்துப் பிடுங்கிய
எக்களிப்பில்
எகத்தாளமாய் சிரிக்கிறது அது

Tuesday, June 26, 2012

வட்டத்தை நேராக்குவோம்

உடல் சுகமே சதமென
விலங்கொடு விலங்காய்
காட்டிடை வாழ்ந்தவன் காலம்
கற்காலமே

மனமும் அறிவும்  விரிய
அகம் புறமென
வாழ்வியல் நெறி கண்டு
வாழ்வாங்கு வாழந்தவன் காலம்
நிச்சயம நற்காலமே

இகம்  பரமென
இரு நிலை வகுத்து
மனமடக்கும் வழிதனை
உலகுக்கு உணர்த்தி
வாழ்ந்தவன் காலமும்
உன்னதப் பொற்காலமே

சுகமே சதமென
அதற்கென எதையும்
பலிபீடமேற்றத்
தயாரானவனின்
இன்றைய காலம்
எக்காலம் ?

யோசித்துப் பார்க்கையில்
ஒருசிறு படி கடந்தால்
முதல் நிலை சர்வ நிச்சயமெனும்
சாத்தியம் மனத்துள்
சங்கடமேற்படுத்திப் போகிறது

எப்போதும்
அவ நம்பிக்கையூட்டிப் போகும்
விஞ்ஞானத்தில் பட்டம் பெற்ற
பகுத்தறிவு நண்பனும்
"இயற்கையின் சுழற்சி எப்போதும்
இயல்வட்டமோ
நீள் வட்டமோதான்
புறப்பட்ட இடம் சேருதற்கே
அதிக சாத்தியம்  "என
பயமுறுத்திப் போகிறான்

குழம்பிக் கிடைக்கியில்
ஆதாரங்களைத் தேடாது
எதையும் நம்பித் தொலைக்கும்
பகுத் தறிவற்ற நண்பனோ
"வட்டங்களைச் சிதைப்பது மிக எளிது
அவ நம்பிக்கை மையப் புள்ளியினை
சிதைத்தால் போதும்
வட்டம் சிதைந்து
நேர்கோடாகிப் போகும்" என்கிறான்

"எப்படிச் சாத்தியம் " என்கிறேன்

" பூமிக்கு வெளியில்
உறுதியாய் நிற்க ஒரு இடமும்
நெம்புகோலும் இருப்பின்
பூமியை நகர்துதல் சாத்தியம்
எனச் சொன்னவனின் தொடர்ச்சி நாம்
வட்டத்தை உடைத்து நேராக்குதல்
அதை விடப் பெரிய விஷமில்லை "என்கிறான்

எனக்கும் இப்போது
நம்பிக்கையுடன்  கொஞ்சம் முயன்றால்
வட்டத்தை நேர்கோடாக்குதல்
அவ்வளவு கடினமில்லை எனத்தான் படுகிறது

உங்களுக்கு ?

Saturday, June 23, 2012

பிரிதலும் பிரித்தலும், இணைதலும் இணைத்தலும்

பிரிதலுக்கும்
பிரித்தலுக்கும் இடையில்
இணைதலுக்கும்
இணைத்தலுக்கும்
ஓரெழுத்து மட்டும் வித்தியாசமில்லை
ஒரு நூறு வித்தியாசமிருக்கிறது

பிரிதல் இணைதல்
சோகமானதாகவோ
சுகமானதோ
இதில் வன்முறையில்லை
இதில் கொள்கை திணிப்பில்லை
அடுத்தவர் தலையீடில்லை

பிரித்தல் இணைத்தல்
சோகமானதோ சுகமானதோ
இதில் வன்முறையுண்டு
கொள்கைத் திணிப்புண்டு
அடுத்தவர் தலையீடு அதிகம் உண்டு

ஜாதி மதத்தில் இருந்து பிரித்து
இனத்தில் சேர்த்தவனாயினும்
இனத்திலிருந்து பிரித்து
தேசீயத்தில் சேர்த்தவனாயினும்
தேசீயத்திலிருந்து பிரித்து
வர்க்கத்தில் இணைத்தவனாயினும்...

அப்பத்தைப் பங்கிட்ட குரங்காய்
அதிகப் பங்குகொண்டவன்
அவனாகத்தான் இருக்கிறான்
நிகழ்வில்
பங்கேற்பவனாக மட்டுமே நாமிருக்கிறோம்
பலனடைபவன் அவனாயிருக்கிறான்

இழப்பதற்கு கோவணம் தவிர
ஏதுமில்லையாயினும்
பிரிதலோ இணைதலோ
முடிவெடுப்பதில்  இனியேனும்
சுயமாய்  இருப்போம்
சுய நலப் பிண்டங்களை
இனி எட்ட நிறுத்தியே ரசிப்போம்

Thursday, June 21, 2012

தேடல்

என் முன்னே என் பின்னே 
லட்சம் லட்சமாய்
கோடி கோடியாய்
எல்லோரும் ஒடிக் கொண்டிருக்கிறார்கள்
என்னைப் போலவே

"நாமெல்லாம் எங்கே போகிறோம்"
 என்றேன்என்னை ஒத்தவரிடம்
"நம் முன்னால் செல்பவர்கள்
எல்லாம் தெளிவானவர்கள்
அனைத்தும் தெரிந்தவர்கள்
அவர்கள் பாதையில்தான்
 நாம் போகிறோம்" என்றார்

"நம் பின்னால் வருபவர் கூட
 நம்மைப் பற்றி
அப்படி எண்ணலாம் தானே
அப்படியானால்
அது தவறல்லவா" என்றேன்
அவர் முறைத்த படி ஓடத் துவங்கினார்

"நம் பயணத்தின் முடிவில்
 என்ன இருக்கும்" என்றேன்
பக்கத்தில் ஒருவரிடம்
"தக தகக்கும் தங்க வாயில் கொண்ட
சொர்க்கம் இருக்கும்
நம்மை வரவேற்க்க
 ஆண்டவன் அங்கே இருப்பார்" என்றார்

"இதனைப் பார்த்துத் திரும்பியவர்
எவரேனும் உண்டா
இல்லை உறுதி செய்யத்தான்
 யாரேனும் உண்டா" என்றேன்
நீ நாத்திகம் பேசுகிறாய்
நீ எதனயும் அடையவும் மாட்டாய்
நீ எவனையும் அடைய விடவும் மாட்டாய்"
என சபித்துப் போனான்

நான் சலிப்பின்றி
அடுத்தவரிடம் கேட்டேன்
"நாம் எதற்காக ஓடுகிறோம்"
அவன் சொன்னான்
"நம் கால்கள் ஓடத்தான்
 படைக்கப் பட்டிருக்கின்றன
நாம் ஓடத்தான்
 பயிற்றுவிக்கப் பட்டிருக்கிறோம்
என்வேதான் ஓடுகிறோம்"

நான் சொன்னேன்
"நிற்கவும் நடக்கவும்
ஓய்வாக அமரவும்
நாம் பயிற்றுவிக்கப் பட்டிருந்தால்
நம் கால்கள் அதற்காகத்தான்
 படைக்கப்பட்டது எனக் கொள்ளலாமா?

"நீ பேசுவது விதண்ட வாதம்
இதற்கான பதிலை
 நிற்பவனிடமோ அல்லது
ஓய்வாக அமர்ந்திருபவனிடம் கூட
 கேட்கலாம்தானே" என்றான் வெறுப்புடன்

ஓடுதலை விடுத்து
ஓரமாய் ஒதுங்கி
ஓய்வாக அமர்ந்திருப்பவரைப்
 பார்த்துக் கேட்டேன்
"இவர்கள் எல்லாம் ஏன் ஓடுகிறார்கள்
நீங்கள் எல்லாம் ஏன்
 ஓய்வாக இருக்கிறீர்கள்" என்றேன்

அவர் சிரித்தபடி கேட்டார்
"கேள்வி உன்னுடயதா
அல்லது உன்னிடம் கேட்கப்பட்டதா" என்றார்

"கேள்வி என்னுடையதுதான்"
என்றேன் அடக்கமாய்

"அப்படியானால் சரி
அறிந்ததையெல்லாம் ஆழப் புதை
கண்களையும் காதுகளையும்
கவனமாய் மூடு
உள்ளே மிக உள்ளே தொடர்ந்து போ
உற்றுப் பா ர்-கேள்வி கேள் -
 எல்லாம் தெரியும்" என்றார்

"நீங்களெல்லாம்
விடைதெரிந்தவர்களா" என்றேன்
அவர் பலமாகச் சிரித்துச் சொன்னார்
"சும்மா இருப்பவர்களிடம் மட்டும் இல்லை
ஓடுகிறவர்களில் கூட
விடை தெரிந்தவர்கள் இருக்கக்கூடும்
ஆனாலும் என்ன
பெரும்பாலோர் விடைத் தேடி அலைபவர்கள்
இன்னும் பெரும்பாலோர்
விடை தெரிந்தவர்கள் போல்
 நடிப்பவர்கள்" என்றார்

நான்
தொடர்ந்து ஓடவும் இல்லை
ஓய்ந்து அமரவும் இல்லை
நின்றபடியே இருக்கிறேன்
எல்லாம் புரிந்தது போலவும் இருக்கிறது
எதுவுமே புரியாதது போலவும் இருக்கிற்து
முன்னைப் போலவே....

Tuesday, June 19, 2012

யாதுமாகி....

ரூப மற்றதாயினும்
அனைத்து இயக்கங்களுக்கும்
அச்சாணியாய் இருக்கும் அற்புதமே

நீதானே பிரம்மன்
நீதானே விஷ்ணு
நீதானே ருத்ரன்

தொப்புள் கொடி அறுபட
எம்முள் பிராண ஜீவனை ஏற்றி
எம்மை இயக்கத் துவங்கும்
நீதானே பிரம்மன்

ஒரு சிறு துளிக்கும்
பேரண்டப்பெருங்கடலுக்கும்
ஒரு இணைப்புப் பாலமாய் இருந்து
எம்மை தொடர்ந்து இயக்கும்
நீதானே விஷ்ணு

ஜீவ ராசிகளை
தோற்றுவித்தும் வளர்த்தும்
ஒரு நொடியில்வெளியேறி
ஏதுமற்றதாக்கியும்
களி நடனம் புரியும்
கருணையற்ற அரூபமே
நீதானே ருத்ரன்

உன் கருணையற்றுப் போயின்
உன் சகோதர்கள் நால்வரின்
வீரியமும் ஆகிருதியும்
ஒரு நொடியில்
அர்த்தமற்றதாகித்தானே  போகிறது

காலதாமதமாயினும்
உன் சக்தியை
மிகச் சரியாய்ப் புரிந்து கொண்டோம்
எங்கள் ஜீவனே
எங்கள் காலமே
எங்கள் காலனே
உன் அருள் வேண்டி நின்றோம்
எம்மை ரட்சிப்பாயே !