Friday, March 28, 2014

மூடுபனி ( 5 )

நம்பிக்கை இல்லாதவற்றில் சில ஊசலாட்ட
சிந்தனையின் காரணமாக நம்பிக்கை
வந்து விடக்கூடாதுஎன்பதற்காகவும்
,சிலர் சில விஷயங்களைக்
கூடுதலாகத் தெரிந்து நம்மை குழப்பிவிடக்கூடாது
என்பதற்காகவும் நம்பிக்கையற்ற விசயங்களில்
கொஞ்சம் கூடுதல் விவரங்களைத்
தெரிந்து வைத்திருப்பேன் எப்போதும்.

அந்த வகையில் என் ஜாதக விஷயத்திலும்
நான் தேவையான சில கூடுதல் தகவல்களைத்
தெரிந்து வைத்திருந்தேன்

அதன்படி எனக்கு என் நட்சத்திரம்,ராசி,லக்னம்
மற்றும் மற்ற கிரங்கள் இருப்பு எல்லாம்
எனக்கு எப்போதும் அத்துப்படி

மிகச் சரியாக பிறந்த ஊர் பிறந்த தேதி,நேரம்
முதலாவைகள் இல்லாமல் லக்னம்,நட்சத்திரம்
முதலானவைகளை கண்டு பிடிக்க முடியாது
என்பதுவும் எனக்குத் தெரியும்

இந்த நிலையில் என்னையே சிறிது நேரம்
ஆழமாகப் பார்த்த சோமு அவர்கள்
"நீங்கள் புனர்பூச நட்சத்திரமாக,மிதுன ராசியாக
ரிஷப லக்னமாக இருக்கக் கூடும் " எனச்
சொன்னது மிகுந்த அதிர்ச்சி அளிப்பதாக இருந்தது

இப்படி சிறிது நேர உற்றுப் பார்த்தல் மூலம்
சட்டென இப்படி ஜாதக விவரங்களை மிகச் சரியாகச்
சொல்கிறார் என்றால் இவரிடம் ஏதோ ஒரு வித்தை
அல்லது ஒரு சூட்சும அறிவு இருக்கவேண்டும் என
எனக்கு நிச்சயமாகப் பட்டது என்றாலும்...

 ஹிப்னாடிசத் தூக்கத்தில்
என்னை இருக்க வைத்த சமயத்தில் என்னிடமிருந்தே
இந்தத் தகவலைத் தெரிந்திருக்கவும் வாய்ப்பிருக்கிறது
என பகுத்தறிவும் ஒரு எச்சரிக்கை செய்து போக
நான் அதிகமாக என ஆச்சரியத்தை வெளிப்படுத்திக்
கொள்ளாது "ஆம் நீங்கள்  சொல்வது சரிதான் "
என மட்டும் சொல்லிவைத்தேன்

அவர் மிக லேசாகச் சிரித்தபடி " இது மட்டும் இல்லை
நீங்கள் ஒரு பகுத்தறிவு வாதி போல வெளியே
காட்டிக் கொள்வது கூட வெறும்
 நடிப்புத்தான் மாப்பிள்ளை
உண்மையில் நீங்கள் அப்படி இல்லை
உங்கள் ஜாதக அமைப்பு அப்படி "என்றார்

இந்த சமயத்தில் டிரைவர் அறைக்குள் வந்து சேர
எங்கள் உரையாடல் தடைபட்டுப் போனது

நாங்கள் அவர் அவர்களுக்கான உடமைகளை
எடுத்துக் கொண்டு திருமண மண்டபம் வந்து சேரவும்
"கெட்டிமேளம்...கெட்டிமேளம் " என
திருமண மேடையில் இருந்தவர்கள் குரல் கொடுக்க
அட்சதையையும் பூக்களையும் கைகளில் ஏந்தியபடி
அனைவரும் மேடை நோக்கி நகரவும் மிகச் சரியாக
இருந்தது

சோமு அந்தக் கூட்டத்தோடு மேடை நோக்கி நகர
நான் காலியாக இருந்த ஒரு இருக்கையில்
அமர்ந்து கொண்டேன்

"நீங்கள் உண்மையில்  பகுத்தறிவு வாதி இல்லை
உங்கள் ஜாதக அமைப்பு அப்படி "என்கிற வார்த்தை
மட்டும் மீண்டும் மீண்டும் என்னுள் ஒரு பெரிய
தாக்கத்தை ஏற்படுத்திக் கொண்டே இருந்தது

காரணம்--
ஒரு இருபது ஆண்டுகளுக்கு முன்னால்
ஏறக்குறைய இதே வார்த்தையை  தீர்மானமாக
வேறு விதமாகச் சொன்ன எனது பெரியப்பாவின்
மறக்க முடியாத நினைவுகளும்,,,,
அந்த நிகழ்வுகளும்தான்

(தொடரும் )

Tuesday, March 25, 2014

மூடுபனி ( 4 )

முன்பதிவிற்கு
 http://yaathoramani.blogspot.in/2014/03/3.html

இந்த  ஒரு இரவுப் பொழுதுதான்.
எப்படியோச் சமாளித்து இவரிடம் இருந்து
தப்பப் பார்க்கவேண்டும் அதுவரை
மௌனம் காப்பதே சாலச் சிறந்தது
என முடிவெடுத்து
"சரி எனக்கு தூக்கம் வருகிறது
காலையில் சந்திப்போம் "எனச்  சொல்லிவிட்டு
எனக்கென இருந்த மற்றொரு அறையில்
போய்ப்படுத்துக் கொண்டேன்

இரவெல்லாம் பாதாள பைரவி முதல் எத்தனை
மந்திரவாதிப் படங்கள் உண்டோ அத்தனையும்
கனவில் வந்து பயமுறுத்திப் போனது

ராஜ நளாவுக்குப் பதில் சோமுவே அத்தனையிலும்
மந்திரவாதியாக வந்து பயமுறுத்திக் கொண்டிருந்தார்
பயந்து முழிக்கவும் பின் அலுப்பில் என்னையறியாது
தூங்கவும் என மாறி மாறி எப்படியோ அந்த இரவு
ஒருவழியாகக் கடந்து தொலைந்தது

மறு நாள் காலையில் அலுப்பில் தூங்கிக்
 கொண்டிருந்த என்னை சோமுதான்
 தட்டி எழுப்பினார்

நான் விழித்துப் பார்க்கையில் நேற்றைப் போலவே
குளித்து முடித்து திருநீறு காவி வேட்டி அணிந்து
சிவப்பழமாக்த் தெரிந்தார்.

எதிரே நேற்றைப் போலவே பெட்டித்
 திறக்கப்பட்டு பூஜை சாமான்கள்
முன்னர் பரப்பிவைக்கப்பட்டிருந்தன

அந்தப் பெட்டியின் உள்புறம் மேல்பகுதியில்
காவி உடையணிந்து சோமுவைப்பொலவே
முடிவளர்த்து நெற்றி நிறைய திருநூறு
அணிந்திருந்தபடி தியான நிலையில்
ஒருவரின் திரு உருவப்படம் இருந்தது

சாயலில் வட நாட்டவரைப் போல இருந்த அவரின்
முகத்தில் தெரிந்த ஆழந்த அமைதியும்
அருளொளியும் சட்டென என்னுள் பரவி என்னை
என்னவோ செய்வது போலிருந்தது

இந்தப் படத்தை எப்படி நேற்றுப் பார்க்காமல் போனேன் ?
பார்த்திருந்தால் மந்திரவாதிக் கனவுகள் வந்து
தொலைந்திருக்காதோ ?எனக்கும் தேவையில்லாத
பயமும் வந்திருக்காதோ என நான் நினைத்துக்
கொண்டிருக்கையில் "மாப்பிள்ளை சீக்கிரம்
குளித்து  முடித்து வாருங்கள்  மணி ஐந்தரையாகிறது
ஆறரை முதல்  எட்டுக்குள் முகூர்த்தம்.
அதற்குள் போகவேண்டும்.இல்லையெனில் நாம்
வந்தது பிரயோஜனம் இல்லாமல் போய்விடும்
நான் அதற்குள் பூஜையை முடித்துவிடுகிறேன் "
எனச் சொன்னபடி பெட்டியின் முன் அமர்ந்து
மந்திர உச்சாடனம் செய்யத் துவங்க்கிவிட்டார்

விடிந்ததாலா அல்லது அந்தத் திருவுருவப்படம்
 என்னுள் ஏற்படுத்திய நம்பிக்கையாலா
எனத் தெரியவில்லை
நேற்று இருந்த பயம் கொஞ்சம் குறைந்து
குழப்பம் மட்டும்மிஞ்சி இருப்பது போலப் பட்டது

குளித்து முடித்து வரவும் அவர் பூஜை முடிக்கவும்
மிகச் சரியாக இருந்தது

குளித்து ஈரத்துண்டுடன் வந்த என்னை அப்படியே
அந்த ஹாலில் தொட்டு நிறுத்தி
"மாப்பிள்ளை நீங்க தீவீர பகுத்தறிவு வாதி
தொழிற்சங்கத் தலைவர் என எல்லாம் உங்கள்
மனைவி சொல்லி உங்கள் மாமியார் மூலம்
நானும் தெரிந்து கொண்டேன்.
அது எல்லாம் அப்படியே இருக்கட்டும்
இப்போது இந்தத் திரு நீறைப் பூசிக் கொண்டு
சாமிகளைக் கும்பிட்டுக் கொள்ளுங்கள் "என்றார்

வெளியே வெளிச்சம் பரவத் துவங்கிருந்தது
எனக்குள்ளும் மெல்ல மெல்ல இவர் இனி எப்படிக்
கட்டுப்படுத்தமுடியும் என்கிற தைரியமும்
வளர்ந்திருந்தது

சட்டென கொஞ்சம் கோபம் தொனிக்கிற தொனியில்
"நீங்கள் என்னை எப்படி நினைத்துக்
கொண்டிருக்கிறீர்கள்என எனக்குத் தெரியவில்லை.
அது எனக்கு  அவசியமும் இல்லை
எனக்கு இதிலெல்லாம் சுத்தமாக
நம்பிக்கைக் கிடையாது
என்னைத் தொந்தரவு செய்யவேண்டாம் " எனச்
சொல்லியபடி என் பெட்டியைத் திறந்து எனது
உடுப்புகளை அணிந்து கிளம்பத் தயாரானேன்

அவரும் அதற்கு மேல் என்னைத் தொந்தரவு
செய்யவில்லை,அவரும் பெட்டியை
மூடி வைத்துவிட்டு வெளியில் இருந்த
துண்டு முதலானவைகளை
கைப்பையில் வைத்தபடி "அதுவும் சரிதான்
நம்பிக்கையில்லாதவர்களை தொந்திரவு
செய்யக் கூடாதுதான் " என லேசாக முனகியபடி
என்னைப்பார்த்தவர் திடுமென
ஏதோ ஞாபகம் வந்தவர்போல
"ஆமாம் மாப்பிள்ளை நேற்று பேசிக் கொண்டிருந்தபோது
பேச்சுவாக்கில் ஜாதகம் கூட பொருத்தம் பார்க்கத்
தரவில்லை எனச் சொன்னீர்கள் இல்லையா "என்றார்

"ஆமாம், அதற்கென்ன இப்போ " என்றேன் எரிச்சலுடன்

"அதற்கொன்றுமில்லை, தராவிட்டால் பரவாயில்லை
உங்களுக்காவது உங்கள் நட்சத்திரம்
லக்னம் தெரியுமா ?"என்றார்

"தெரியும் அதற்கென்ன இப்போ " என்றேன்

"கோபித்துக் கொள்ளவேண்டாம் .கார்
ஆறரைக்குத்தான் வரும் அதுவரை பொழுது போக
 எதையாவது பேசிக் கொண்டிருக்கலாமே
எனத்தான் கேட்டேன் "என்றார்

"அப்படியானால் சரி.பேசிக் கொண்டிருக்கலாம்
எனக்குப் பிரச்சனையில்லை.இப்படி லேசாக
நச்சத்திரம் திதி எதையாவது கேட்டு பலன் எதுவும்
சொல்லிக் குழப்பிவிடுவார்கள் எனச் சொல்லித்தான்
எனக்கு பன்னிரண்டு கட்டங்கள் முழுவதுமாக
மனப்பாடமாகத் தெரிந்தும் கூட ,என் மனைவி
எப்படி எப்படித் துருவிக் கேட்டும் கூட
 நான் சொன்னதில்லை
ஏனெனில் எனக்கு அதில் முழுவதுமாக
நம்பிக்கையில்லை"என்றேன் அழுத்தமாக

"அப்படியானால் ரொம்ப நல்லது. நீங்கள் அப்படியே
கொஞ்ச நேரம் அப்படியே  சோபாவில் அமருங்கள் "
எனச் சொல்லி எதிரே இருந்த ஈஸி சேரில் சாய்ந்தபடி
என்னை முன்போல தலை முதல் கால்வரை
உற்றுப்பார்த்தபடி மட மட வென அவர்
சொல்லிப்போன விஷயம் என்னை மீண்டும்
நிலை குலையச் செய்துவிட்டது

(தொடரும் )

Monday, March 24, 2014

மூடுபனி ( 3 )

மூடுபனி  ( 2 )
http://yaathoramani.blogspot.in/2014/03/2.html

நினைவிழந்து எவ்வளவு நேரம் கிடந்தேன்
எனத் தெரியவில்லை

நான் விழித்தபோது ஹாலின் மேற்குச் சுவற்றோரம்
இருந்த சோபாவில் படுக்கவைக்கப் பட்டிருந்தேன்
நெற்றியிலும் முன் தலை முடியிலும் தட்டுப்பட்ட ஈரம்
என் முகத்தில் நீர் தெளித்து சோமு விழிக்கச்
செய்திருக்கிறார் எனப் புரிந்து கொள்ளச் செய்தது

எதிர் சுவற்றில் இருந்த கடிகாரம் மணி
பன்னிரண்டெனக் காட்டியது

மெல்ல மெல்ல எனக்கு பழைய நினைவுகள்
திரும்பத் துவங்கியது

நான் மெல்ல சோபாவைவிட்டு எழுந்திருக்க
முயலுகையில்உள் அறையில் இருந்து
வெளிப்பட்ட சோமு
"கொஞ்சம் அப்படியே படுத்துக் கொள்ளுங்கள்
இப்போது எழவேண்டாம் ,நான் சொன்னதும்
எழுந்தால் போதும் " என்று சொல்லியபடி
என் அருகில் இருந்த ஒரு சாய்வு நாற்காலியில்
அமர்ந்து கொண்டு என்னையே வெறிக்கப் பார்த்தார்.

எனக்கு உதறலெடுக்கத் துவங்கியது

நான் பேசாமல் கொசுக்கடியுடனேயே மண்டபத்தில்
படுத்திருக்கலாமோ ? இவர் என்னை வைத்து
என்னவோ பரிட்ஷித்துப் பார்க்கிறாரோ ?
நான் பலிகடா ஆகிப் போனேனோ ?
அது சரி அவர் என்னை எதற்கு இதற்குத் தேர்ந்தெடுத்தார் ?
நானும் இனி இவர் சொல்லிகிறபடிச் செய்கிற
பொம்மையாகிப் போவேனோ ?
விபரீத கற்பனைகளில் என் மனது தவிக்கத் துவங்கியது

தலையை ஒரு குலுக்கு குலுக்கிவிட்டு என்னை
 வெறிக்கப்பார்த்தபடி சோமு பேசத் துவங்கினார்

"மாப்பிள்ளை என்னிடம் இதுவரை யாரிடமும்
சொல்லாத ரகசியம் ஒன்று இருக்கிறது
அதை யாரிடமாவது சொல்லிப் போகவேண்டிய
காலமும் வந்து விட்டது

நான் உங்களை மூன்று மாதங்களுக்கு முன்னால்
இதே போல்  ஒரு சாத்தூரில் ஒரு திருமணத்தில்
பார்த்தபோதே உங்களிடம்  சொல்லவேண்டும் என
நினைத்தேன்.அப்போது ஏனோ சரியாக அமையவில்லை
இன்றுதான் மிகச் சரியாகப் பொருந்தி இருக்கிறது
அதுதான் தெய்வ சித்தம் "என்றார்

சரி இவரை இனிமேல் இவர் போக்கிலே விட்டால்
நமக்கு எதாவது விபரீதம் நேர்ந்து போகும்
இனி சங்கடப்படாமல் முரண் படவேண்டும்
அதுதான் சரி என முடிவெடுத்து மெல்ல எழுந்து அமர்ந்தேன்

"கோவித்துக் கொள்ளாதீர்கள்.எனக்கு இந்த சாமி பூசாரி
தெய்வ சித்தம் இதிலெல்லாம் எனக்கு துளியும்
நம்பிக்கையில்லை.நான் உங்கள் சொந்தத்தில்
பெண்ணெடுக்கும் போது கூட ஜாதகம் தரவில்லை
அது உங்களுக்கும் தெரியும் தானே
தயவு செய்து உங்கள் உங்கள் ரகசியத்தை
நீங்களே வைத்துக் கொள்ளுங்கள்.
அல்லது வேறு யாரையாவது தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்
என்னை ஆளை விடுங்கள்நான் தூங்க வேண்டும்.
நாளை எனக்கு ஊரில்மிக முக்கியமான வேலைகள் இருக்கிறது
இப்போது படுத்தால்தான் சரியாக வரும் "எனச் சொல்லி
நான் எழத் துவங்கினேன்

அதுவரை இயல்பாக இருந்தவரின் முகம்
சட்டென இறுகத் துவங்கியது போல் பட்டது

சட்டென கனத்த குரலில் பார்த்தபடி
"இது நீங்களும் நானும் முடிவு
செய்கிற விஷயமில்லை.முடிவெடுக்கப்பட்டதை
செய்பவர்கள் மட்டும்தான் நாம்
நாளை நீங்கள் ஊருக்குப் போகவில்லை
என்னுடன் வேம்பார் கோவிலுக்கு வருகிறீர்கள்
இரவு அங்கு  தங்குகிறீர்கள்
நான் உங்களுக்குச் சொல்லவேண்டியதை
அங்குவைத்துச்சொல்கிறேன்.சரியா ? " எனக்
கட்டளையிட்டது போலச் சொல்லிவிட்டு
அவர் என்னை வெறிக்கப் பார்த்தார்

அவரை மீறி என்னால் எதுவும் செய்ய முடியாது
என என் உள் மனம் உறுதிபடுத்தத் துவங்கியது

(தொடரும் )

Wednesday, March 19, 2014

கொடுத்ததெல்லாம் கொடுத்தான்...


கடந்த பத்தாண்டு காலமாக நான் அரிமா
சங்கத்தில் உறுப்பினராக பொருளாளராக,செயலாளராக
மாவட்டத் தலைவராக பல்வேறு பொறுப்புக்களை
வகித்து மீண்டும் நண்பர்களின் வேண்டுகோளைத் தவிர்க்க
முடியாமல் இவ்வாண்டும் ஒரு சங்கத்தில்
தலைவராக பொறுப்பேற்று உள்ளேன்

பிறக்கும் முன்னே நமக்கென அனைத்தையும்
மிகத் தயாராக வைத்திருந்து வரவேற்ற இந்தச்
சமூகத்திற்கு நம்மாலான எதையேனும் நிச்சயம்
செய்ய வேண்டும் என உறுதி கொண்ட நண்பர்களின்
துணையோடு பல்வேறு நலத்திட்டங்களை 
அவை வேண்டி நிற்போருக்குச்செய்யத் திட்டமிட்டிருக்கிறோம்

சேமிப்பே முதல் செலவாக இருக்கவேண்டும் என
சேமிப்புக் குறித்து அறிந்தவர்கள் சொல்வதைப்போல
தானம் போக மீதமே தனக்கு என்கிற கொள்கையும்

நம் மூலம் கொடுத்தால் நிச்சயம் பகிர்ந்தளிக்கப்படும்
எனத்தான் ஆண்டவன் நமக்கு சகல சௌபாக்கியங்களும்
வழங்கியிருக்கிறான் என்பதில் அசையாத 
நம்பிக்கையும் கொண்ட பலரும் 
இந்த இயக்கத்தில் இணைந்திருப்பது 
அதிக மகிழ்வளிப்பதாகவும்
அதிக ஊக்கமளிப்பதாகவும் இருக்கிறது

அந்த வகையில் நேற்று தனது 34 வது  திருமண நாளைக்
கொண்டாடிய திரு நகரைச் சேர்ந்த  
அரிமா,மோகன் உஷா தம்பதியினர் தங்கள்
இல்லத்திற்கு அருகில் இருந்த ஆதரவற்ற
பாலர் பள்ளிக் குழந்தைகளுக்கு மிகச் சிறப்பான 
இரவு டின்னர் ஏற்பாடு செய்து அதையும்
தங்கள் கைகளால் உணவு பரிமாறி தங்கள் 
மகிழ்ச்சியை இர்ட்டிப்பாக்கிக் கொண்டனர்

அன்று இரவு எங்கள் சங்கத்தில் நாங்கள் ஏற்பாடு
செய்திருந்த சிறப்பு நிகழ்ச்சியில் அவர்கள் பேசுகையில்
"உழைத்துச் சாப்பிடுவதைவிட கொடுத்துச் சாப்பிடுவது
எத்தனை மகோன்னமானது என இன்று எங்களுக்குப்
புரிந்தது.

இனி எங்கள் வாழ்நாள் முழுவதும் எங்கள்  இல்ல
சுப நிகழ்வுகளில் அந்தப் பள்ளிக் குழந்தைகளையும்
எங்கள் குடும்ப அங்கத்தினர்களாக நிச்சயம் ஏற்று
விருந்தளித்து மகிழ்வோம் "என உறுதி சொன்னது
அனைவருக்கும் ஒரு நல்ல வழிகாட்டும் செய்தியாக
இருந்தது

"கொடுத்ததெல்லாம் கொடுத்தான் -அவன்
யாருக்காகக் கொடுத்தான்
ஒருத்தருக்கா கொடுத்தான்-இல்லை
ஊருக்காகக் கொடுத்தான் " 

என்பதைஉணர்ந்த ,அனைவருக்கும் உணர்த்திய தம்பதிகள்
பல்லாண்டு பல்லாண்டு சீரோடும் சிறப்போடும் வாழ
எல்லாம் வல்லவனைப் பிரார்த்தித்துக் கொள்வோமாக
கைப்பட  பரிமாறுவதில்
களிப்பு கொள்ளும் தம்பதிகள்  


குழந்தைகளின்  வாழ்த்து 



Tuesday, March 18, 2014

மூடுபனி ( 2 )

முதல்  பதிவிற்கு
http://yaathoramani.blogspot.in/2014/03/blog-post_16.html

விருதுநகரில் இப்படிப்பட்ட நட்சத்திர அந்தஸ்துள்ள
ஹோட்டல் இருப்பது  குறித்த ஆச்சரியமா (அப்போது )
அல்லது சோமுவுக்கு எப்படி இவ்வளவு
செல்வாக்கு வந்ததுஎன்பதனால் வந்தக் குழப்பமா
எனத் தெரியவில்லை
என்னால் வெகு நேரம் எதுவும் பேச முடியவில்லை

சோமு இயல்பாக  இருந்தார்.தனது சூட்கேஸில் இருந்து
காவி வேட்டியை எடுத்துஅணிந்தபடி டிரைவரிடம்
"எனக்கு காலையில் ஆறு மணிக்கு மண்டபம் போக
வண்டி வந்தால் போதும்.முதலாளியிடம் சொல்லி விடு
வேறு எதுவும் வேண்டுமென்றால் போன் செய்கிறேன்
நீ போகலாம் : என்றார்

டிரைவர் மீண்டும் ஒருமுறை அவருக்கு பௌவ்யமாக
வணக்கம் செலுத்திவிட்டு போனால் போகிறதென்று
எனக்கும் ஒரு வணக்கம் சொல்லிவிட்டுக் கிளம்பினார்

எனக்கு எப்படி பேச்சை ஆரம்பிப்பது எனத் தெரியவில்லை
இருந்தாலும் ஆனது ஆகட்டும் என "இந்த
டிரைவரையும் காரையும் பார்க்க மிகப் பெரிய
முதலாளியுடையது எனப் புரிகிறது
அவர் யார் ? உங்களுக்கு எப்படி இவர் பழக்கம் "
என பொதுவான ஒரு கேள்வியைப் போட்டு வைத்தேன்

இதுபோன்ற ஆழம் பார்க்க கேட்கிற கேள்விகளை
அதிகம் கேட்டு பழகியதாலா அல்லது நான் நிச்சயம்
இப்படிக் கேட்பேன் என எதிர்பார்த்ததாலா
எனத் தெரியவில்லை
சோமு என் கேள்வியைக் கேட்டதாகவே
 காட்டிக் கொள்ளாது
"மாப்பிள்ளை கொஞ்சம் ரெஸ்ட் எடுங்க
நான் ஒரு குளியல் போட்டுவிட்டு வந்து விடுகிறேன்"
எனச் சொன்னபடிஒரு காவித் துண்டை எடுத்து
தோளில் போட்டபடி குளியறை நோக்கி
 நடக்கத் துவங்கினார்

நானும் என்னுடைய உடைகளை மாற்றிக் கொண்டு
முகம் கைகால் கால் கழுவி என்னை
ஆசுவாஸப் படுத்திக் கொண்டு கொஞ்சம்
ஓய்வெடுக்கலாம்எனப் படுக்கையில் சாய்கையில்
சோமு குளித்து முடித்து உடலெங்கும்
 திருநீர் தரித்தபடிசிவப்பழமாய் வந்தார்

அவரது கலைந்த நீண்ட முடி ,தாடி கழுத்தில் மின்னிய
அந்த ஸ்படிக மாலை காவி வேட்டி இடுப்பில் கட்டிய
காவித்துண்டு,அந்தச் சூழலை வித்தியாசமானதாக
மாற்றிக் கொண்டிருந்தது

ஷெல்பில் இருந்த ஸூட்கேசை மிகப் பௌயமாக
கீழே சுவரோரம் வைத்துத் திறந்து அதன் முன்
சம்மணமிட்டபடி அமர்ந்து உள்ளிருந்து ஒவ்வொரு
பூசை சாமான்களாக வெளியிலெடுத்து வைத்து
மந்திர உச்சாடனாம் செய்ய ஆரம்பித்தார்

நேரம் நேரம் ஆக ஆக கூடிய மந்திரச் சப்தமும்
அவர் குரலில் இருந்த கம்பீரமும்.
முறுக்கேறிய அவர் உடல் முன் பின்னாக
ஆடத் துவங்கிய ஆட்டமும் என்னை மிக லேசாக
பயம் கொள்ளச் செய்தது

நான் என்னையறியாது கட்டிலைவிட்டு இறங்கி
சம்மணமிட்டு தரையில் அமர்ந்து கொண்டேன்

அந்த ஏ ஸி அறை,இரவு மணி பதினொன்று
இதுவரை பார்த்திராத முறையில் வித்தியாசமாக
எனது உறவினர் சோமு, மணிச் சத்தம்
மந்திரச் சப்தம், தூக்கக் கலக்கம் என்னை
என்னவோ செய்து கொண்டிருந்தது

ஒரு மந்திரவாதியிடம் மாட்டிக் கொண்ட
பலியாட்டின் நினைவு என்னுள் மிக லேசாகப் பரவ
உடல் மிக லேசாக நடுங்கத் துவங்கியது

இடது கையில் வேகமாக மணியாட்டியபடி
வலது கையில் பெட்டிக்கு சூடம் காட்டியபடி
மிகச் சப்தமாக மந்திரம்  சொல்லிக்கொண்டிருந்தவர்
சட்டென என் பக்கம் திரும்பி என்னை
தலைமுதல் கால் வரை ஒருமுறை பார்த்துவிட்டு
சட்டென  என் கண்களை உற்றுப் பார்த்தார்

அந்த விரிந்த கண்களிருந்து ஏதோ ஒன்று
என் கண் வழியே என்னுள் வேகமாக இறங்க்குவதைப்
போலத் தெரிய மெல்ல மெல்ல நான்
என் நினைவுகளை இழக்கத் துவங்கினேன்

(தொடரும் )

Monday, March 17, 2014

விமர்சனப் பகிர்வு

பதிவுலகப் பிதாமகர் வை.கோ அவர்களின்
சிறுகதைப் போட்டியில் எனக்கு இரண்டாவது
பரிசுபெற்றஎனது விமர்சனத்தை தங்களுடன்
 பகிர்ந்து கொள்வதில்பெரும் மகிழ்ச்சி கொள்கிறேன்

ஆப்பிள் கன்னங்களும் அபூர்வ எண்ணங்களும்

குழந்தைப் பருவத்திற்கும் காளைப்பருவத்திற்கும்
இடையிலான பருவம்,ஒரு சிக்கலான
 பருவம் மட்டுமல்ல
ஒரு விசித்திரமான பருவமும் கூட
.
காயுமாக இல்லாது பழமும் ஆகாது
வித்தியாசமாக இருக்கும்
"ஒதைப்பழம் " போல எனக் கூடச் சொல்லலாம்

இந்த சிக்கலான பருவத்தை அதன் அர்த்தமற்ற
எண்ணங்களை, செயல்களை ,பெரியவர்கள்
 மனமுதிர்சியோடுபுரிந்து கொள்ளவேண்டும் என்கிற
உயரிய நோக்கில்எழுதப்பட்ட கதையாகத்தான் இந்த
"ஆப்பிள் கன்னங்களும் அபூர்வ எண்ணங்களும்" என்கிற
கதை இருக்க வேண்டும் என்பதே எனது அபிப்பிராயம்

சிறுவயது முதலே ஒன்றாக வளர்ந்து வந்தாலும்
பருவ வயது ஆண்களிடத்தில் ஒரு வகையான
 மனக் கிளர்ச்சியையும் பெண்களிடத்தில்
ஒருவகையான மன முதிர்ச்சியையும்
ஏற்படுத்திப் போவதுதான் இயற்கையின் விசித்திரம்

அந்த வித்தியாசமான விசித்திரத்தை
விடலைப் பையனின் மாறுபாடான
 எண்ணங்கள் மூலமும், அந்த விடலைப் பெண்ணின்
முதிர்ச்சியை அதன் மாறுபாடுகள் இல்லாத
செயல்களின் மூலம் மட்டும் சொல்லிப் போனதுதான்
இந்தக் கதையின் சிறப்பு

புறவெளித் தாக்கங்கள் அதிகம் தாக்கவிடாது
பெண்கள்தங்களைக் காத்துக் கொள்ளும்படியாக
சமூக அமைப்பும் குடும்பப் பாதுகாப்பும்
இருப்பதால்தான்  பெண்கள் ஓரளவுக்குமேல்
தங்கள் எண்ணச் சிறகுகளை
அதிகம் விரித்து அவதிக் கொள்வதில்லை

பருவமடைந்ததும் பெண்களுக்கென செய்யப்படுகிற
அந்தமங்களச் சடங்குகள் கூட உறவுகளின்
அவசியத்தை அதன் நெருக்கத்தை அவளுக்குள்
ஆழ விதைத்துப் போகிறது

அதற்கு மாறாக விடலைப் பருவத்து ஆணோ
மிக அதிகம் புறவெளித் தாக்குதலுக்கு உள்ளாவதுடன்
குடும்பத்திலும் பெரியவனாக வளர்ந்துவிட்டவன்
என்கிற நிலையில்தாய் தந்தை மற்றும்
சகோதரிகளிடம் இருந்தும் ஒரு இடைவெளியைப்
பராமரிக்க வேண்டிய அவசியத்திற்கு
உட்படுத்தப் படுகிறான்

அந்த இடைவெளிக்குள் காதல் தவிர
அந்த வயதிற்கான விஷயம்வேறொன்றுமில்லை என
விஷ விதையை ஊடகங்களும்
உடன் பழகும் நண்பர்களும் விதைத்துப் போக
அதுவரை கள்ளம் கபடமற்று இருக்கும் அவன் மனம்
கண்டதையும் நினைக்கத் துவங்குகிறது
மெல்ல மெல்ல தடம் மாறி நடக்கவும் தொடங்குகிறது

அதன் உச்சக் கட்டமே இக்கதையில் கதை நாயகன்
அவன் வரைந்திருந்த படத்தின் கன்னத்தின் மேல்
ஆப்பிளை வைத்துக் கடிக்கத் துணிவதும்
அப்படி கடித்ததே  அவள்  அழகிய ஆப்பிள்
கன்னத்தைக்கடித்துருசித்ததைப் போன்ற
அற்ப மகிழ்ச்சியைக் கொள்ளவதுவும்...

கதையில் மட்டுமல்ல, நிஜவாழ்விலும்
விடலைப் பருவத்தில் தன் வயப்பட்ட
அதீத காதல் சிந்தனையில், பருவம் அவனுள்
ஏற்படுத்திப்போகும் புரிந்து கொள்ளமுடியாத
அந்த உணர்வுப்பாய்ச்சலில் ,கற்பனை எண்ணங்களில்
இருந்து,தனிமைச் சூழலில் இப்படி
அரைவேக்காட்டுத்தனமான செயல்களில் ஈடுபடுபவன்
அதனால் கிடைக்கும் அற்ப சந்தோஷத்தில்
மகிழத் துவங்குதல்தான் ஒரு இளைஞனை
நரக லோகத்திற்கு இட்டுச் செல்லும்
தலைவாசல் என்றால் நிச்சயம் அது மிகை இல்லை

இந்தக் கதை நாயகனின் குடும்பச் சூழல்
 மிகச் சரியானதாகஇருப்பதால்தான்
பிறந்த நாள் பரிசாக அந்தப் பெண்ணின்
படத்தை வரையத் துவங்குவதையோ,
பரிசாகத் தருவதையோ தவறாக
கற்பனை செய்து கொண்டு தடைவிதிக்க முயலவில்லை
இப்படி எத்தனை பேரின் குடும்பத்தில் சாத்தியம் ?

அதனால்தான் அவள் அவனுக்கு இல்லை
என்கிற போதுமிக இயல்பாக சுவற்றில்
அவள் ஓவியத்தை ஆணி அடித்து
மாட்டுகையில் அந்த நினைவையும் அத்துடன்
ஆணி அடித்து மாட்டவும்
கை கழுவுகையில் அவள் நினைவுகளையும்
மெல்லக் கை கழுவவும் வைக்கிறது

இல்லையெனில் "அடைந்தால் மகாதேவி
இல்லையேல் மரணதேவி "
தனக்கில்லாதது நிச்சயம் வேறு யாருக்கும்
கிடைக்கக் கூடாது "போன்ற வில்லத்தனமான

விஷ எண்ணங்ளை உடன் வளர்ந்து
அவனை அழித்துக் கொள்ளச் செய்துவிடும்
அல்லது அடைய முடியாததை அழித்து கொடூரச்
 சுகம் காண விழையும்இது போன்று நம்
அன்றாட வாழ்வில்  காண்கிற, கேள்விப்படுகிற
காதல் தற்கொலைகளும் ஆசிட் வீச்சுகளும்தான்
இந்தக்கதையைஎழுதும்படியான ஒரு உத்வேகத்தை
கதை கதாசிரியரின் மனதில்உருவாக்கி
இருந்திருக்க வேண்டும்  என நான் நினைக்கிறேன்

அந்த சிந்தனையை,மிக நேர்த்தியான
கதையாக விரிவாக்கி நம்முள் அற்புதமான காட்சியாக
விரிவாகும் வண்ணம் தன் எழுத்தாற்றலால்
 மிகச் சிறப்பாகப் பதிவு செய்த சிறு கதை மன்னன்
திருவாளர் வை,கோ அவர்களுக்கு
எனது மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

(தலைப்பு மட்டும் ஆப்பிள் கன்னங்களும்
அபூர்வ எண்ணங்க்களும் என இல்லாது
ஆப்பிள் கன்னங்களும் அழிச்சாட்டிய எண்ணங்களும்
என்பதுபோல்இருந்திருக்கலாமோ என எனக்குப்பட்டது
காரணம் இந்த அபூர்வ என்கிற வார்த்தை அதிகம்
நேர்மறையான விஷயத்திற்குத்தான்
மிகச் சரியாகப் பொருந்தும் என நினைக்கிறேன் )

Sunday, March 16, 2014

மூடுபனி

அன்று விருதுநகரில் நடைபெற்ற என் உறவினரின்
திருமணத்திற்குச் சென்றிருந்தேன்

மறுநாள் அவசியம் அலுவலகம் செல்லவேண்டும் லீவு
எடுக்கமுடியாது என்கிற  நிலைமை இருந்ததாலும்
திருமண முகூர்த்தம் அதிகாலையாக இருந்ததாலும்
முதல் நாள் மாலை மாப்பிள்ளை அழைப்பிற்கே
சென்றுவிட்டு இரவு மண்டபத்தில் தங்கிவிட்டு மறுநாள்
முகூர்த்தம் முடிந்ததும் மதுரை திரும்ப
 உத்தேசித்திருந்தேன்

மாலை டிபன் இரவு சாப்பாடு எல்லாம் முடித்து
இரவு தூங்கத் துவங்குகையில்தான் விருது நகர்
கொசுவின் அருமை பெருமைகள் புரிய ஆரம்பித்தது

மாப்பிள்ளை வீட்டார் அனைவரும் இருக்கிற
அறைகளைபங்கிட்டுக் கொள்ள
பெண்வீட்டைச் சார்ந்தவன் என்பதால்
இருக்கிற இடத்தில் அட்ஜஸ்ட் செய்து
கொள்ளவேண்டிய நிலைமை,

என்னால் இரவு சாப்பிடாமல் கூட இருந்துவிட முடியும்
ஒரு நாள் இரவு தூக்கம் கெட்டால் மறு நாள்
கிறுக்குப் பிடித்தவன் போலாகிவிடுவேன்
என் உடல் வாகு அப்படி.

திருமண மண்டபத்திற்கு அருகில் லாட்ஜ் ஏதும்
இல்லையென்பதால் என்ன செய்வது
என குழப்பத்தில் இருந்தபோதுதான்
 "என்ன மாப்பிள்ளை..எப்போது வந்தீர்கள் "
என விசாரித்தபடி நான் படுக்கத் தாயாராகிக்
கொண்டிருந்த இடத்திற்குசோமு வந்தார்.

சோமுவுக்கு என்னைவிட ஐந்து வயது கூட இருக்கும்
சம்பந்த முறையில் எனக்கு உறவு
எனது ஒன்று விட்ட மைத்துனர் உறவாக வேண்டும்
எப்போதும் என்னை அதிக உரிமையுடன் மாப்பிள்ளை
எனத்தான் அழைப்பார்.அவர் பேச்சு எப்போதும்
உச்சஸ்தாயியிலும் இருக்கும்.அதில்
அதிக அன்னியோன்யமும் இருக்கும்

எதனாலேயோ எனக்கு சம்பந்த வகையில்
அவரைரொம்பப் பிடிக்கும். அவரும்  என்னிடம்
அதிக உரிமை எடுத்து பேசுவதில் இருந்து
அவருக்கும் அப்படித்தான் இருக்கும்
என்கிற நம்பிக்கை  எனக்கும் உண்டு

அருகில் வந்தவர் "கொசுக்கடியில் இந்த ஹாலிலா
படுக்கப் போகிறீர்கள்.இங்கே ஒரு லாட்ஜில் ரூமுக்குச்
சொல்லி இருக்கிறேன்.இப்போது கார் வரும்
இருவரும் போய் அங்கு தங்கி விட்டு குளித்து முடித்து
ஃபிரஸ்சாக அதிகாலையில் வருவோம் "என்றார்

அவர் இப்படிச் சொல்லிக் கொண்டிருக்கையிலேயே
வாசலில் மிக உயர்தரக் கார் ஒன்று வந்து நின்றது
அதிலிருந்து யுனிஃபாம் அறிந்த டிரைவர் ஒருவர்
 இறங்கிவந்து அவருடைய சூட்கேஸை
 கையில் வாங்கிக் கொண்டு காரை நோக்கி நடக்க
நானும் அவரைத் தொடர்ந்தேன்

அந்தக் காரின் மதிப்பு,அந்த டிரைவர் காட்டிய அதீத
மரியாதை எனக்கு ரொம்ப ரொம்ப
வித்தியாசமாகப்பட்டது

மூன்று வருடத்திற்கு முன்னால்...

ராமனாதபுரம் ஜில்லாவில் மிகச் சாதாரணமான
ஒரு கடலோரக் கிராமத்தில் ஒரு சிறிய கோவிலில்
அவர்கள் கொடுத்த ஒரு அறை வீட்டில் அவர்கள்
கொடுக்கிற மிகச் சொற்பமான ஊதியத்தையும்
அரிசியையும் நம்பி தன் மனைவி மக்களுடன்
திருமணம் ஆகாத இரண்டு தங்கைகளுடன்
மிகக் கஷ்ட ஜீவனம் நடத்திக் கொண்டிருந்தவர்.....

இரண்டு வருடங்களுக்கு முன்பு அந்த ஊரில்
ஒரு மிகப் பெரிய வீட்டை வாங்கி இன்னும்
கூடுதலாக செலவு செய்து மிக மிக ஆர்பாட்டமாக
கிரஹப் பிரவேசம் செய்ததும்.

கடந்த வருடம் தனது மூத்த மகளுக்கு அதிக நகையும்
வரதட்சனையும் கொடுத்து இதுவரை அந்த ஊரில்
யாரும் செய்யாத அளவில் மிகச் சிறப்பாக திருமணம்
செய்து வைத்ததும்...

இப்படி வருகிற இடங்களில் எல்லாம் மிகப் பெரிய
இடத்து தொடர்புகளை ஏற்படுத்தி வைத்து இருப்பதுவும்..

எங்கள் உறவினர்களுக்கு மத்தியில் அவர் குறித்த
ஏதோ ஒரு சந்தேகத்தை ஏற்படுத்தி இருந்தது

நானும் திருமணமான புதிதில் அவர் வீட்டிற்குப்
போய் அவருடைய வறிய நிலையை அறிந்திருந்தவன்
என்கிற முறையிலும் ,கடந்த மூன்று ஆண்டுகளில்
அவர் கொண்ட அபரிதமான வளர்ச்சிக் குறித்து
எனக்கும் ஏதோ ஒரு சந்தேகம் இருந்து
கொண்டே இருந்தது

அந்தக் கார் விருதுநகரிலேயே அதிக வசதிகள் கொண்ட
அதிக வாடகைக் கொண்ட லாட்ஜில் நுழைந்ததும்,,,

முன் சென்ற டிரைவர் அந்த ஏ ஸி அறையில்
சோமுவின் பெட்டியை செல்ஃபில்
மிகப் பௌமியமாக வைத்துவிட்டு
" ஐயா எதுவேணுமின்னாலும் உடன்
போன் செய்யச் சொன்னார்கள்
நீங்கள் ஊரில் இருக்கிற வரையில் காருடன்
என்னையும் உங்களுடன் இருக்கச் சொன்னார்கள் "
என்றதும்

எனக்கும் நிச்சயம் இவரிடம் ஏதோ ஒரு  மர்மம்
இருக்கிறது என ஊர்ஜிதமாக ஆரம்பித்தது

(தொடரும் )