Sunday, August 24, 2014

பச்சைப் பாலும் சுட்டப் பாலும் வேற


சொட்டு ஒண்ண மேலே விட்டுப் போகும்-அந்த
மேகம் என்னுள் தாகம் கூட்டிப் போகும்
"லுக்கு" ஒண்ண என்மேல் விட்டுப் போகும் -அவ
மோகம் என்னுள் நாகம் போலச் சீறும்

குளத்து மேல புரண்டு வந்த போதும்-காத்து
அனலை கக்கி மனசை வாட்டிப் போகும்
எனக்கு என்று முடிவு செஞ்ச போதும்-கள்ளி
பிணக்குக் காட்ட மனசு வெந்துச் சாகும்

ஆசை கோடி நெஞ்சில் பூக்கும் போதும்-வண்டை
சுத்த விட்டு காற்றில் ஆடும் பூவு
நேசம் கோடி நெஞ்சில் நிக்கும் போதும்-பொய்க்
கோபம் காட்ட பெருகும் நோவு நூறு

பச்சைப் பாலும் சுட்டப் பாலும் வேற-இதை
புரியாது ஓடும் முட்டாள் பூனைப் போல
மெச்சும் காதல் நச்சுக் காமம் வேற-இது
புரியாத பாவி மகளை என்ன சொல்ல ?

Saturday, August 23, 2014

வேராகப் பதிவுலகு இருக்க..

சந்தமதும் சிந்தனையும்
சந்தனமும் குங்குமமாய்
ஒன்றையொன்று சார்ந்துநிற்கும் போது-கவிநூறு
பொங்கிவரத் தடையுண்டோ கூறு

தாளமதும் இராகமதும்
தண்ணீரும் குளுமையுமாய்
மாயக்கட்டுக் கொண்டிருக்கும் போது-கவிஆறு
மடையடங்கிக் கிடந்திடுமோ கூறு

இளமனதும் அனுபவமும்
இலைபோலக் கிளைபோல
பலமாகப் பிணைந்திருக்கும் போது-கவித்தேர்
நிலையடங்கிக் கிடந்திடுமோ கூறு

சீராட்டவும் பாராட்டவும்
தாயாக உறவாக
வேராகப் பதிவுலகு இருக்க-கவிச்சீர்
வழங்குவதில் குறைவருமோ கூறு

Thursday, August 21, 2014

வெற்றி என்பது உணர்வது...

குழந்தைக்கு
செமிக்காது போய்விடுமோ எனக் கருதி
மிகத் தெளிவாய் உணர்ந்தே
பாலில் கூடுதலாய் நீரதைச் சேர்க்கிறேன்
கஞ்சப் பிசினாறி எனத்
தூற்றிப்போகிறது உலகு
கண்டுகொள்ளாது தொடர்கிறேன்

வெட்டுப்படுபவனின் பக்கமும்
நியாயம் இருக்கக் கூடுமெனக் கருதி
வெட்டருவாளை
அதிகக் கூர்ப்படுத்தாதே விடுகிறேன்
தொழிலில் தேர்ச்சியில்லை என
விட்டுவிலகுகிறது ஒரு பெருங்கூட்டம்
கலங்காது தொடர்கிறேன்

நியாயத்தின் பக்கமே
இருந்துவிட உறுதியுடனிருக்கையில்
நியாயங்கள் அணிமாற
நானும் மாறித்தொலைக்கிறேன்
பச்சோந்தியென பரிகசித்துப் போகிறது
பண்டிதர் பெருங்கூட்டம்
குழம்பாது தொடர்கிறேன்

எண்ணிக்கை
தரத்தை முடிவுசெய்வதில்லை என
காகமும் மயிலும் எனக்கு
ஆறுதல் சொல்லிப்போக
தொடர்ந்து நான் பயணிக்கிறேன்
வெற்றி என்பது உணர்வது
பெறுவதல்ல என்னும் இறுமாப்புடனே...

Thursday, August 14, 2014

இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்

சுய நல நோக்கில் பொது நலத்தை கட்டுப்படுத்துவது
சர்வாதிகாரம் எனில்
பொது நல நோக்கில் சுய நலத்தைக்
கட்டுப்படுத்திக் கொள்வதே
சுதந்திரம் என அறிவோம்

அனைவருக்கும் இனிய
சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்

Sunday, July 27, 2014

துரோகம் ( 11 )

மிக மிக வேகமாக கதைச் சொல்லிக்கொண்டிருந்த
சுப்புப்பாட்டி சட்டென ஒரு நீண்ட பெருமூச்சை
விட்டுச் சிறிது நேரம் மௌனமானார்

இப்படியானால் நிச்சயம் ஏதோ ஒரு அழுத்தமான
பழைய நினைவுகளில் மூழ்கிப் போகிறார் என்பது
எங்களுக்கும் பழகிப் போயிருந்ததால் நாங்களும்
அவராக தொடரட்டும் என மௌனம் காத்தோம்

எதிர்பார்த்தபடி மீண்டும் சம நிலைக்கு வந்த
சுப்புப்பாட்டி கதையைத் தொடர ஆரம்பித்தார்.

"சில முக்கிய நிகழ்வுகள் சிலரை முன்னிலைப்படுத்தும்
அதைப்போலவே சிலரால்தான் சில நிகழ்வுகள்
முன்னிலைப்படுத்தப்படும்னு பெரியவா சொல்வா.

ராமாயணத்திலே கைகேகியும் பாரதத்தில் சகுனியும்
இல்லையானா கதை சுவாரஸ்யப்படுமா என்ன ?

இங்கே இந்த மீனா விஷயத்திலே சுந்தரமையர்
இல்லையாட்டி இது விஷயம் யாருக்கும் எதுவும்
நிச்சயம் தெரியாமலேயே போயிருக்கும்

அன்று காலையில் அவர் வந்ததும் கூட ஒருவேளை
பாலமீனாம்பிகையின் வழிகாட்டுதலால் கூட
இருக்கலாமோ என்கிற எண்ணம் எனக்கு அடிக்கடி
தோணுவதுண்டு

அதிகாலைப் பூஜைக்கு வீட்டிலிருந்து கோவிலுக்கு
வரவேண்டிய காசி ஐயர் கோவிலிருந்து வீட்டிற்குப்
போறதும் இந்த நேரம் குறட்டை விட்டுத்
தூங்கிக் கொண்டிருக்கிற மீனாஅவங்க அப்பா கூட
இருக்கிறதும் சுந்தரமையருக்கு இதிலே ஏதோ
விஷயம் இருக்குன்னு பட்டிருக்கு

சும்மாவே ஆடறவன் கொட்டடிச்சா
கேட்கவா வேணும்னு
கிராமத்திலே ஒரு பழமொழி சொல்லுவா
அதை மாதிரி எங்கேடா வம்பு கிடைக்கும்னு அலையிற
பிரகிருதி இந்த சுப்பையர்.சும்மா இருப்பாரா ?

வழக்கம்போல பிரத்தட்சிணமா சுத்தி முறைப்படி
போகிற பொறுமை அவருக்கில்லை.ஏற்கெனவே
சன்னதி நீரோடையச் சரி செய்யப்போகிற விஷயம்
எல்லோரையும் போல அவருக்கும் தெரியும்கிறதுனாலே
சட்டென நேராகவே அம்பாள் சன்னதிக்குப்
போயிருக்காருடி

அவருக்கு அந்த சாரப்பலகையைப் பார்த்ததும்
அதிகச் சந்தேகம்.யாரும் சன்னதியில் இல்லாதது
அவருக்கு ரொம்ப வசதியாகப் போயிருக்கு
சட்டென பலகையைத் தூக்கிப்பார்த்தா பெரிய பள்ளம்
அபிஷேக நீர் போனா பள்ளம் விழ வாய்ப்பிருக்கு
ஆனா இவ்வளவு பெரிய பள்ளத்திற்கு
நிச்சயம் வாய்ப்பில்லையேன்னு அவருக்கு சட்டென
ஒரு சந்தேகம்.நிச்சயம் உள்ளே இருந்து ஒரு
கனமான பொருளை எடுத்திருக்கா.அதை மூட
அதிக மண் தேவைப்பட்டதாலே நேரம் இல்லாததாலே
பலகையை வைச்சு டெம்பரவரி வேலை என்னவோ
பண்ணி வைச்சிருக்கான்னு அவருக்குப் புரிஞ்சு போச்சுடி

காசி அய்யர் பேசாம முகத்தைத் திருப்பிக்கிட்டுப்
போனதை வைச்சு நிச்சயம் என்னவோ நடந்திருக்கு
அதுவும் போக அவர் போகையிலே கையில் ஏதும்
இல்லாததுனாலே அப்படி எதை எடுத்திருந்தாலும்
நிச்சயம் அது கோவிலைவிட்டு வெளியேற
வாய்ப்பில்லைனு அவருக்கு திட்டவட்டமா
புரிஞ்சு போறது.விடுவானா மனுஷன்

அம்பாள் சன்னதி,சுவாமி சன்னதி நடராஜர் சன்னதி
முன்னால இருந்த தகர சப்பர ஷெட் எல்லாம்
சல்லடைபோட்டு அலசிப் பார்த்தும்
ஒண்ணும் இல்லைன்னு தெரிஞ்சதும் ரொம்ப
அலுத்துப்போய் கோவில் வெளிப்பிரகாரத்தில் இருக்கிற
நந்திக்கு முன்னால் உட்காருரார்

அங்கே

அவருக்கு நேர் எதிரே

இருந்த மடைப்பள்ளிப் பூட்டைப்
பார்த்து அவர் அதிர்ச்சியாகிப் போறார்,

ஏன்னா அவருக்கு விவரம் தெரிஞ்ச நாளில் இருந்து
நேற்று வரை அந்த மடைப்பள்ளியைப் பூட்டி
அவர் பார்த்ததே இல்லை,

(தொடரும் )

Saturday, July 26, 2014

துரோகம் ( 10 )

எதையும் குழப்பமின்றித் தெளிவாக அவசரப்படாது
சுவாரஸ்யமாகச் சொல்லுகிற நெளிவு சுழிவு
கொஞ்சமேனும் எனக்கு இருக்கிறது எனில்
அதற்கு முழுமையான காரணம் சுப்புப்பாட்டியும்
எனது தாயாரும்தான்.

நான் அடுத்து என்ன நடந்தது என அறிய
பதட்டப்பட்டபோது அம்மா இப்படிச் சொன்னாள்
"நூற்கண்டின் நுனி கிடைக்க தாமதமாகிறதுன்னு
அவசரமாக நூலை அறுத்தெடுப்பது நிச்சயம்
மேலும் சிக்கலைத்தாண்டா உருவாக்கும்.
கொஞ்சம் பொறுமையா நுனியை எடுத்துட்டா
பின் சிக்கல் வர வாய்ப்பேயில்லை.

முதலில் சுப்புப்பாட்டி மூலம் நான் மீனா மாமியை
அறிமுகம் செய்துக்கிறேன்.உனக்கும்
ராகவனை அறிமுகம் செய்து வைக்கிறேன்.
இன்றைய தேதிவரை அவசரப்படாது சுப்புமாமி
மூலமே நடந்ததைத் தெரிஞ்சுக்குவோம்.
பின் நாமா இவா மூலம் மேற்கொண்டு
விஷயங்களைத்தெரிஞ்சுக்கப் பார்ப்போம்
அதுதான் சரியா வரும்"என்றாள்

எனக்கும் அது சரியெனத்தான் பட்டது

அடுத்து பத்து நாளில் வந்த ஒரு ஞாயிறு அன்று
சுப்புப் பாட்டியையும் என்னையும் அழைத்துக் கொண்டு
மீனாப்பாட்டி வீட்டிற்கு என அம்மா அழைத்துப் போனார்

ஏற்கெனவே ஒரு வாரத்தில் சுப்புப்பாட்டி
மீனாப்பாட்டியை நான்கு ஐந்து முறை
சந்தித்திருப்பார் போல இருந்தது
ஆகையால் அந்தச் சந்திப்பு அவ்வளவு
.உணர்வு பூர்வமாக இல்லை.எங்கள் அம்மா கையோடு
கொண்டு வந்திருந்த பழக்கூடையை மீனாப்பாட்டியிடம்
கொடுத்து காலில் விழுந்து ஆசீர்வாதம் பெற்றார்.
நானும் காலில் விழுந்து ஆசீர்வாதம் பெற்றேன்..

அப்போதுதான் குளித்து முடித்து வந்த ராகவனை
எங்களுக்குச் சுப்புப்பாட்டி அறிமுகம்
செய்துவைத்தாள்."அடிக்கடி வாங்கோ "என்கிற
சம்பிரதாயமானஅழைப்புடனும்"அவசியம்
வருகிறோம்" என்கிற சம்பிரதாயமான பதிலுடன்
அந்த முதல் சந்திப்பு எவ்வித சுவாரஸ்யம்
 ஏதுமின்றி முடிந்தது

அடுத்த வாரத்தில் காலேஜ் எதற்கோ விடுமுறை
அப்பா ஆபீஸ் போயிருந்தார்வீட்டில் அப்பள ஸ்டாக்
இருந்தும்அம்மா உளுந்து அப்பளம் வைக்க
ஏனோ ஏற்பாடு செய்திருந்தார்.

"எதற்கம்மா இவ்வளவு இருக்கும் போது திரும்பவும்.."
என்றேன்

"எல்லாம் ஒரு டெக்னிக்தான் இல்லையானா
சுப்புப்பாட்டியைஇரண்டு மணி நேரம் ஒரு இடத்தில
உட்கார வைக்க முடியாது.
இனியும் அரைக்கதையைக் கேட்டு வைச்சும்
அவஸ்தைப்படமுடியாது
அப்பளம் வைக்க ஆர்ம்பிச்சா போதும் அது முடிய
எப்படியும் இரண்டு மூணு மணி நேரமாச்சும் ஆகும்
சுப்புப் பாட்டியின் கைப் பக்குவம் சூப்பரா இருக்கும்
கதைக்கும் கதையாச்சு.அப்பளத்துக்கும்
அப்பளமாச்சு.என்னாலயும் முன்னப்போல இரும்பு
உலக்கையைத் தூக்கி இடிக்க முடியலை.உனக்கும்
ஒரு வேளை கொடுத்தமாதிரி ஆச்சு.
எப்படி என் ஐடியா"என்றாள்

அம்மா ஐடியா அற்புதமா ஒர்க் அவுட் ஆச்சு

மாவு இடித்து முடித்து பாம்பு போல்
ஒரே சமமாய்த் திரித்துமிக நேர்த்தியாய்
ஒரே அளவாய்ஒவ்வொன்றாய் சுப்புப்பாட்டி
கத்தியால் நறுக்கிப்போட்ட விதம்
அத்தனை அற்புதமாய் இருந்தது

அப்பளப்பலகையை எடுத்துப் போட்டு நான்கு ஐந்து
அப்பளம் இட்டு முடித்ததும் என் அம்மா மிகச் சரியாக
சுப்புப்பாட்டியைப் பார்த்து "என்ன மாமி சும்மா கிடந்த
தேரை இழுத்து தேரில் விட்ட மாதிரி சுவாரஸ்யமா
மீனாமாமிக் கதையைச் சொல்லி பாதியிலேயே
விட்டுவிட்டேளே அன்னைக்கு இருந்து   எனக்கு
அதே நினைப்புத்தான்.அப்புறம்என்னதான் ஆச்சு "
என்றாள்

"கதை கேட்கிறவாளுக்கு மட்டும் இல்லேடி.
சொல்றவாளுக்கும்பாதியில நிறுத்திப் போறது
அவஸ்தையாய்தாண்டி இருக்கும்
சரி சரி எதுல நிறுத்தினேன்" என்றாள்

நாங்கள் அந்த நகையைப் பார்த்து மூவரும்
 திகைச்சுநின்னதைச் சொல்லி "அடுத்து "என்றோம்
பாட்டி தொடர்ந்தாள்

"இவா மூணு பேரும் தொடர்ந்து தெகச்சிப்போய்
 நிக்கபிள்ளைவாள்தான் முதலில் நிதானத்திற்கு
வந்திருக்கார் ஏன்னா அவர் அரசியலிலும் இருந்தார்
 இல்லையோஅவாளுகெல்லாம் குயுக்தியா யோசிக்கச்
சொல்லியா தரணும்
சட்டென அவர் மேல் சால்வையை எடுத்து விரிச்சு
"அப்புறம் என்ன செய்யறதுன்னு யோசிப்போம்
முதலில அந்த நகையையெல்லாம் எடுத்து இந்தத்
துண்டில் எடுத்து வைங்கோன்னு " எடுத்து
வைக்கச் சொல்லி இருக்கார்
,
திக் பிரமையிலும் ஆசையிலும் சிக்கித்
திணறிக் கொண்டிருந்த மூணு பேரும்
மறு பேச்சில்லாமல் அப்படியே இரண்டு
கையிலேயெலும் வாரியெடுத்து
அந்தச் சால்வையில் குவிச்சிருக்கா.
அவர் அதையெல்லாம் அப்படியே ஒரு
சோத்துப் பொட்டலம் போலச் சுருட்டி மீனா வோட
அப்பா கையில் கொடுத்து "இன்னும் கொஞ்ச நேரத்தில்
விடிய ஆரம்பிச்சுடும்,
இதை என்ன செய்யலாம்னு நாளைக்கு யோசிப்போம்
முதலில் இதை அப்படியே கொண்டு போய்
மடைப்பள்ளி விறகுக்கு உள்ளே மறச்சு வையுங்கோ.
மீனாம்மா நீயும் அப்பாக்கு  உதவியா
போடாக்கண்ணுன்னு சொல்லிஅனுப்பிச்சுட்டு.
ஊமையன வச்சு அவசரம் அவசரமா குழிய மூட
ஏற்பாடு பண்ணி இருக்கார்

பெட்டி இருந்த இடம் மண் போறாம கொஞ்சம்
பள்ளமாகவே இருக்க அப்படி இருந்தா சந்தேகம்
யாருக்கும் வரும்னு சட்டுனு ஊமையன் விட்டு
வீட்டில் இருந்து ஆறு ஏழு செண்டிரிங் பலகையைக்
கொண்டு வரச் சொல்லி மேலே அடுக்கி வச்சுப்புட்டு
அவசரம் அவசரமாய் வீட்டுக்குப் போய் ஒரு பெரிய
திண்டுக்கல் பூட்டையும் கொண்டு வந்து
மடைப்பள்ளியையும் பூட்டச் சொல்லி சாவியை
மீனாவோட அப்பாக்கிட்டயே கொடுத்திட்டு
ஊமையனையும் கூட்டிக்கிட்டு
"நீங்களும் வீட்டுக்குப் போயிட்டு வாங்கோன்னு
மீனாவோட அப்பாக்கிட்ட சொல்லிட்டு
பிள்ளைவாள் வீட்டுக்கு கிளம்பியிருக்கா ருடி

பொழுது மெல்ல வெளுக்கத் துவங்கிருக்குடி

மீனாவுக்கும் அவளோட அப்பாவுக்கும் உடல்
நடுங்க ஆரம்பிச்சுடுச்சிருக்கு..
ஏன் அவர் சொன்னாருன்னுபொட்டலம் கட்டினோம்
ஏன் நம்ம பொறுப்பிலே"அவளோட "சொத்தை
இப்படி திருட்டுத்தனமாஒளிச்சு வச்சிருக்கோம்
.நம்மளை அம்பாள்தான் சோதிக்கிறாளா
இல்லை பிள்ளைவாள்தான்சோதிக்கிறாரான்னு
குழம்பியபடி குளிச்சிட்டு சட்டுனு
கோவில் அதிகாலைப் பூசைக்கு வருவோன்னு
வாசலுக்கு வர மிகச் சரியா எதிரே சுப்பையர்
வந்திருக்காண்டி

அவரைப் பார்த்ததும் மீனாவோட அப்பாவுக்கு
கூடுதலா உடம்பு நடுங்க ஆரம்பிச்சிருக்குடி
ஏன்னா ஈரைப்பேனாக்கி பேனைப் பெருமாளாக்கிறதுல
இந்த சுந்தரம் ஐயர் வெகு கிள்ளாடிடி

இதுவரை தெருவில சுந்தரமையர் சம்பந்தம் இல்லாம
 நல்லதோ கெட்டதோ நடந்ததா சரித்திரம் இல்லையடி

அவர் சம்பந்தப்படாம ஒதுங்கிப் போனாலும்
விதியோ எதுவோ அவரைத் தானா கொண்டு வந்து
சம்பத்தப்படுத்திடும்டி

இப்பவும் அப்படித்தான் சம்பத்தப்படுத்துதுன்னு
அப்பவே புரிய ஆரம்பிக்க,இன்னும் பயம் கூட
அவரைக் கண்டும் காணாம மீனாவோட அப்பா
தெருவில் இறங்கி நடக்கத் துவங்கவும்

விதியோ  எதுவோ
அதுவரை வாக்கிங் போயிட்டு கோவில் வரலாம்னு
நினைச்சு வீட்டைவிட்டுக் கிளம்பிய சுந்தடரமையரின்
மனத்தை  மாற்றி   கோவிலுக்குப் போய்விட்டு பின்
வாக்கிங் போகலாம்னு முடிவெடுக்க வைத்து 
கோவிலுக்குள் நுழையவைக்கவும்
மிகச் சரியாக இருந்திருக்குடி

(தொடரும் )

Thursday, July 24, 2014

துரோகம் ( 9 )

வெறும்கையால் சொறிந்து கொண்டிருப்பவனுக்கு
சீப்புக் கிடைத்தால் சும்மாவா இருப்பான்
சுப்புப்பாட்டியின் கதை சொல்லும் நேர்த்தியில்
அமானுஸ்யம் அறியும் ஆர்வத்தில் இருந்த எனக்கு
சன்னதித் தரையின் நடுப்பகுதி மட்டும்
வித்தியாசமாக இருந்தது கூடுதல் ஆர்வத்தை
உண்டாக்கிவிட்டது.நிச்சயம் சுப்புப்பாட்டி சொல்லிச்
சென்றது கதையில்லை நிஜம் என்பதை நானும்
நம்பத் துவங்கிவிட்டேன்

"போடா லூசு அரண்டவன் கண்ணுக்கு
இருண்டதெல்லாம் பேய் என்கிற மாதிரி
கதையில் மயங்கிப்போன உனக்கு சில
கல்லு நகந்து சரிசெஞ்சது கூட உனக்கு
பெரிய ஆதாரமாப் படுது. போடா போய்ப்
படிக்கிற வேலையைப் பாருடா " என
எல்லோருடைய தாயைப் போல என் அம்மாவும்
அப்போதேச் சொல்லி இருந்தால் நான்
தொடர்ந்து இந்த மர்மதேசத்திற்குள் நிச்சயம்
புகுந்து இருக்கமாட்டேன்

மாறாக எனது அம்மா இப்படிச் சொல்லி
உசுப்பேற்றி விட்டாள்

".சுப்புப் பாட்டி உணர்வு பூர்வமாகச் சொன்னது.

நல்ல நிலையில் இருந்த இரண்டு குடும்பம்
நசிந்து போனது

வாய்வழிக் கதைதான் ஆயினும் இந்தக் கோவில்
குறித்தப் புராதானப் பெருமை

நீ இப்போ அங்கே சன்னதியில் பார்த்த
வித்தியாசமாக இருந்த சன்னதித் தளம்

இதையெல்லாம் வைத்துப் பார்க்கையில
நிச்சயம் இது கதையில்லை எனத்தான்
எனக்கும் படுது

காசா பணமா ,நானும் சுப்புப்பாட்டி மூலம்
அடுத்த விஷயத்தைத் தெரிஞ்சுக்கப் பார்க்கிறேன்
மீனா மாமி கூடவும் கொஞ்சம் நெருக்கத்தைக்
கூட்டிக்கிறேன்.நீயும் ராகவன் கூட அதுதாண்டா
மீனா மாமியின் பையன் அவனுடன் ஃபிரண்ட்ஸிப்
வைச்சுக்கோ.

கதையை கேட்டிருப்போம்.கதையைப்
படமா பார்த்திருப்போம்,ஏன் நாம கூட நடந்ததை
கதையாச் சொல்லிச் சந்தோஷப்பட்டிருப்போம்
இப்படி கதையோடயே நாமும் வாழறதும்
கதையோட கதாபாத்திர்ங்களோட
நாமும் ஒன்னுமன்னாக் கலந்து  போற சான்ஸும்
எத்தனை பேருக்கு வாய்க்கும் ?

அது மட்டுமில்ல ஒருவேளை கதையின்
கதா நாயகனான அந்த நகைப் பொட்டலம்
இருப்பிடம் கூட  ஒருவேளை நமக்குத் தெரியக் கூட
வாய்ப்பிருக்கலாம் இல்லையா
அப்ப்டிக் கிடைத்தால் யோகம்தானே "
எனச் சொல்லிச் சிரித்தாள்

எங்கள் அப்பா அடிக்கடிச் சொல்வார்
"டேய் உங்க அம்மா பல சமயம் சொல்றது
நிஜமாக் கிண்டலான்னும் இத்தனை வருஷம்
குப்பைக் கொட்டியும் எனக்கும் புரிஞ்சு தொலைய
மாட்டேங்குதுடா "என்று

எனக்கும் கூட அம்மாவின் இந்தப் பேச்சு
இப்போது அப்படித்தான் பட்டது

ஆனாலும் இது நிஜமா அல்லது மிகச் சரியாக
கெட்டிக்காரத்தனமாகப் புனையப் பட்ட கதையா
என்பதை அவசியம் கண்டுபிடித்தே ஆவது என்று
நான் உறுதி செய்து கொண்டேன்

அந்த உறுதியின் பலனாய்
ஆண்டவன் பெயரைச் சொல்லி
மனிதன் செய்கிற சில அழிச்சாட்டியங்களும்
மனிதர்களை வைத்து ஆண்டவன்
தன் தீர்ப்பை அமல்படுத்திக் கொள்கிற சூட்சுமங்களும்
கொஞ்சம் புரியத்தான் செய்தது

தொடரும் )