Friday, September 14, 2012

மதத்தின் பெயரால்..மனிதனைப் பிரிப்பது...

என்னுடையது சிறந்தது
என்னுடையதும் சிறந்தது
என்பதற்கும்
என்னுடையது மட்டுமே சிறந்தது
என்பதற்கும் வேறுபாடு இல்லையா ?

கடவுள் ஒருவரே என
அவரவர்கள் சொல்லி கொள்வதற்கும்
கடவுள் ஒருவரே
அவர் இவர் மட்டுமே என்பதற்கும்
வித்தியாசம் இருக்கிறதா இல்லையா  ?

இல்லையெனச் சொல்பவர்களுக்கும்
இருக்கிறது எனச் சொல்பவர்களுக்கும்
இடையினில் முரண் எனில் சரி
நம்புபவர்களுக்கிடையில்
வாதப் பிரதிவாதம் என்பது
கேலிக் கூத்தாக இல்லையா ?

மாறுதல் ஒன்றே மாறாதது
எனபதற்கு மறுப்பற்ற
இந்த விஞ்ஞான யுகத்தில்
விஞ்ஞானத்தின்  முழுப்பயனையும் ருசித்தபடி
பழமைச் சேற்றில் காலூன்றி நின்று
கத்தி தூக்குதல் தவறா இல்லையா ?

உடல் மூலம்  செயல் மூலம் மனம் அடக்கி
அடங்கிய மனம் மூலம் அறிவொளி பெருக்கி
வாழும் உலகை சொர்க்கமாகப் பிறந்ததே
எந்த மதமும் எந்த மார்க்கமும்
இதனை அறியாது புரியாது
குள்ள நரிகளின் ஊளையினை
சங்கீதமெனப் புகழ்தலும் தொடர்தலும்
முட்டாள்களின் செயல்தான்  இல்லையா ?
மதத்தின் பெயரால் மனிதனைப் பிரிப்பது
மதிகெட்ட செயல்தான்  இல்லையா ?

43 comments:

”தளிர் சுரேஷ்” said...

மதபிரிவினை வாதம் ஒரு கேடு கெட்டசெயல்! நல்ல கருத்துள்ள கவிதை! நன்றி!

இன்று என் தளத்தில்
சரணடைவோம் சரபரை!
http://thalirssb.blogspot.in/2012/09/blog-post_14.html





கோவி.கண்ணன் said...

//கடவுள் ஒருவரே என
அவரவர்கள் சொல்லி கொள்வதற்கும்
கடவுள் ஒருவரே
அவர் இவர் மட்டுமே என்பதற்கும்
வித்தியாசம் இருக்கிறதா இல்லையா ?//

கலக்கல்

நண்டு @நொரண்டு -ஈரோடு said...

சரிதான்.

குட்டன்ஜி said...

//மதத்தின் பெயரால் மனிதனைப் பிரிப்பது
மதிகெட்ட செயல்தான் இல்லையா ?//
ச்ந்தேகமின்றி

குறையொன்றுமில்லை. said...

ம் கவிதை நல்லா இருக்கு

எம்.எஸ்.ரஜினி பிரதாப் சிங் said...

மிக அருமை

வெங்கட் நாகராஜ் said...

//மதத்தின் பெயரால் மனிதனைப் பிரிப்பது
மதிகெட்ட செயல்தான் இல்லையா ?//

சரியாச் சொன்னீங்க!

த.ம. 5

Anonymous said...

தந்தை ஒருவரே என
அவரவர்கள் சொல்லி கொள்வதற்கும்
தந்தை ஒருவரே
அவர் இவர் மட்டுமே என்பதற்கும்
வித்தியாசம் இருக்கிறதா இல்லையா

Anonymous said...

///இல்லையெனச் சொல்பவர்களுக்கும்
இருக்கிறது எனச் சொல்பவர்களுக்கும்
இடையினில் முரண் எனில் சரி
நம்புபவர்களுக்கிடையில்
வாதப் பிரதிவாதம் என்பது
கேலிக் கூத்தாக இல்லையா ?///

---உனக்கு தந்தை ஒருவர்... அவர் இவர் மட்டுமே எனபதும்... எல்லாருமே உனக்கு தந்தைதான் என்று சொல்வதும் சரியா..? ஏற்க இயலுமா..?

Yaathoramani.blogspot.com said...

neethimaan //

மிகப் பெரியவனை மனித நிலையில்
வைத்து யோசிப்பது சரியா ?
இது கொஞ்சம் மோசமான உவமையாக உள்ளது
இன்னும் கொஞ்சம் உயர்வாக அழுத்தமாகச்
சொல்ல முயலலாமே !

திண்டுக்கல் தனபாலன் said...

ஒவ்வொரு வரியும் சூப்பர் சார்...
த.ம. 6

மிகவும் பிடித்தவை :

/// இந்த விஞ்ஞான யுகத்தில்
விஞ்ஞானத்தின் முழுப்பயனையும் ருசித்தபடி
பழமைச் சேற்றில் காலூன்றி நின்று
கத்தி தூக்குதல் தவறா இல்லையா ? ///

ராஜி said...

மதம் யானைக்கு பிடித்தாலும், மனிதனுக்கு பிடிதாலும், எல்லா மதத்தவரும்தான் பாதிக்கப்படுவர்.

Rasan said...

மதம் என்னும் குறுகிய வட்டத்தில் நில்லாது பரந்த விரிந்த இந்த உலகம் என்ற பெரிய வட்டத்தில் நின்றால் நன்றாக இருக்கும். அருமையாகவுள்ளது. பகிர்ந்தமைக்கு நன்றி. தொடருங்கள்.

நம்பள்கி said...

கவிதை பிரமாதம். அதுவும் நம்பள்கிக்கு கவிதை வராது. நன்றாக கவிதை எழுதுகிரீர்க்கள்.
இதே கருத்தை ஒரு நையாண்டி இடுகையாக எழுதினேன்; அதற்கு பலத்த எதிர்ப்பு. ஒரு வேளை நான் எழுதியதாலோ?
Many people shoot the messenger; not the message!

உலகத்தைப் படைத்தது கடவுள்; டார்வின் ஒரு வடிகட்டின முட்டாள்! இதனுடைய லிங்க் கீழே:

http://www.nambalki.com/2012/05/blog-post_30.html

ஹேமா said...

மனிதனைப் படைத்த கடவுளையே பிரிச்சு வைக்க இந்த மனிதனால்தான் முடிகிறது !

தனிமரம் said...

மதப்பிரிவினை வாதம் ஒரு நாசசெயல்! நல்ல கருத்துள்ள கவிதை! வாழ்த்துக்கள் ஐயா!

மகேந்திரன் said...

உண்டெனச் சொன்னால்
உனக்கொன்று எனக்கொன்று
என்று பிதற்றாதே
என்று அழகாக சொல்லும் கவிதை...

Angel said...

என்னுடையதும் சிறந்தது
என்பதற்கும்
என்னுடையது மட்டுமே சிறந்தது
என்பதற்கும் வேறுபாடு இல்லையா ?//

மிக மிக அற்புதமான கவிதை வரிகள் அண்ணா .

அருணா செல்வம் said...

மாறுதல் ஒன்றே மாறாதது
எனபதற்கு மறுப்பற்ற
இந்த விஞ்ஞான யுகத்தில்
விஞ்ஞானத்தின் முழுப்பயனையும் ருசித்தபடி
பழமைச் சேற்றில் காலூன்றி நின்று
கத்தி தூக்குதல் தவறா இல்லையா ?

அருமை அருமைங்க ரமணி ஐயா.
வணங்குகிறேன்.

ராஜ நடராஜன் said...

எங்கே அந்த வைரமுத்து?கவிதைக்குப் பொய் அழகல்ல!சொல்லே அழகு.

கருத்துக்கும்,கவிதைக்கும் நன்றி.

Admin said...

சரியாய்ச் சொன்னீர்கள் அது மதி கெட்ட செயல்தான்..

பால கணேஷ் said...

உண்மை ததும்பிய வரிகள். மதிகெட்ட செயல்தான். மதத்தின் பெயரால் மனிதனைப் பிரிப்பது என்றுதான் மாறும் என்பதே கேள்விக்குறி.

தி.தமிழ் இளங்கோ said...

// மதத்தின் பெயரால் மனிதனைப் பிரிப்பது
மதிகெட்ட செயல்தான் இல்லையா ? //

உங்கள் கவிதை வரிகளிலேயே விடையும் தந்த பின்னர் வினாவுக்கு வேலையே இல்லை. ஆம்! மதிகெட்ட செயல்தான்!

சசிகலா said...

மனிதர்கள் உணருவார்களா பிடித்திருக்கும் மதத்தை விட நினைப்பாரோ ?

ADHI VENKAT said...

நல்லதொரு கவிதை. பாராட்டுகள் சார்.

த.ம.16

NKS.ஹாஜா மைதீன் said...

மதத்தின் பெயரால் மனிதனை பிரிப்பது ..அருமையான தலைப்பு ..அழகான கவிதை ...

G.M Balasubramaniam said...


ALL THE ROADS LEAD TO ROME என்னும் சொல்வழக்கு ஆங்கிலத்திலிருக்கிறது. நதிகள் கடலில் சங்கமிக்கின்றன அல்லவா அதுபோல. பாராட்டுக்கள்.

Tamilthotil said...

மதத்தின் பெயரால் மனிதனைப் பிரிப்பது
மதிகெட்ட செயல்தான் இல்லையா ?

ஆமாம் இது காலம் தோறும் நிகழ்ந்த வண்ணம் தானிருகிறது. நம் பண்டைய காலத்தில் சமயம் என்ற பெயரில் சண்டைகள் நடந்தது. இன்று பெயர் மாற்றம் மதம்.
நல்ல பகிர்வு

காரஞ்சன் சிந்தனைகள் said...

மதத்தின் பெயரால் மனிதனைப் பிரிப்பது
மதிகெட்ட செயல்தான் இல்லையா ?
//
அருமை!

துரைடேனியல் said...

நல்ல படைப்பு. அருமை. மதச்சண்டைகளும் வாக்குவாதங்களும் வீண்தான்.

ம.தி.சுதா said...

ஃஃஃபழமைச் சேற்றில் காலூன்றி நின்று
கத்தி தூக்குதல் தவறா இல்லையா ?ஃஃஃ

ஒவ்வொரு வெறியனும் படிக்க வேண்டிய அருமையான வரி சகோ...

சுதா SJ said...

ரமணி சார் எப்புடி இருக்கீங்க
ரெம்ப நாளைக்கு அப்புறம் வந்து இருக்கேன் :))))

வழமைபோல் நல்லொழுக்கத்தை சொல்லும் கவிதை... ஆனால் இதெல்லாம் மதவாதிகளுக்கு உறைக்காது :(( எவ்மதமும் ஒன்றே என்ற உண்மையை அவர்களுக்கு யாராவது உணர்த்தினால் ஹப்பி .....

அருமையான படைப்பு

முனைவர் இரா.குணசீலன் said...

அழகாகச் சொன்னீர்கள் நண்பரே.

கீதமஞ்சரி said...

மனிதப் பிறவியின் பயனை உணராதவர்களே மதத்தின் பெயரால் மனம் வேறுபட்டு வாழ்வை சிதைத்துக் கொள்கிறார்கள். அனைவரும் உணரும் விதத்தில் அருமையான கருத்துவெளிப்பாடு. சிந்திக்கவைக்கும் வரிகளுக்கு மனம் நிறைந்த நன்றியும் பாராட்டும் ரமணி சார்.

vimalanperali said...

கடவுள் இருக்கிறார் எனச்சொல்பவரை நம்பி விடலாம்.க்கடவுள் இல்லை எனச்சொல்பவரைக்கூட நம்பி விடலாம்,ஆனால் நாந்தான் கடவுள் என்பவரை நம்பமுடியாது.என ஒரு சொல் உண்டு.அது போல்தான் எனது மதமே சிறந்தது என சொல்பவரின் நிலையும்/

மோகன்ஜி said...

சிந்திக்க வைக்கும் கவிதை... மனிதர்களுக்கு மதம் பிடிப்பது அழிவிற்கேயல்லவா?

மாதேவி said...

/மதத்தின் பெயரால் மனிதனைப் பிரிப்பது
மதிகெட்ட செயல்தான் இல்லையா ?//

நன்றாகச் சொன்னீர்கள்.

ரிஷபன் said...

கடவுள் ஒருவரே என
அவரவர்கள் சொல்லி கொள்வதற்கும்
கடவுள் ஒருவரே
அவர் இவர் மட்டுமே என்பதற்கும்
வித்தியாசம் இருக்கிறதா இல்லையா ?

அன்பின் வழியில் இணைய வேண்டிய மனிதர்கள் சண்டையிட்டுக் கொள்வது வேதனை

கதம்ப உணர்வுகள் said...

இன்றைய காலக்கட்டத்திற்கு எல்லோருக்குமே மிகமிக அவசியமான பகிர்வு இது ரமணி சார்... டைமிங்கா கொடுத்து அசத்தி இருக்கீங்க...தலைப்பில் தொடங்கி கருத்து பகிர்ந்து இறுதி வரி வரை சுத்தியலால் அடிப்பது போன்ற அழுத்தமான வார்த்தைகள் அடங்கிய மிக அட்டகாசமான கவிதை.. நான் எதிர்ப்பார்த்ததும் இதைத்தான் ரமணிசார்....

உவமையில் தொடங்குகிறது கவிதை வரிகள்....

எத்தனை வித்தியாசம்... அடேங்கப்பா.. என்னுடையது, என்னுடையதும், என்னுடையது மட்டும்.... அருமையான வேறுபாடு காண்பித்து இருக்கிறீர்கள்.... மனிதர்களில் பலபேர் மத துவேஷம் பல இடங்களில் செய்வதை பார்க்கிறேன். அவர்களின் அறியாமையை நினைத்து வேதனையாக இருக்கிறது..... பிள்ளைகள் தன் தாய் சிறந்தவர் என்றும் , தன்னுடைய தாயும் சிறப்புக்குரியவர் என்றும், என்னுடைய தாய் மட்டுமே சிறந்தவர் என்று சொல்லும்போது அங்கே தான் காழ்ப்புணர்ச்சியும் கோபத்தை தூண்டும் செயல்கள் தொடங்குவதும் தெரிந்துக்கொள்ள முடிகிறது. யாருக்குமே தன் தாயை தவறாக பேசினால் பொறுக்கமுடியாது தான்... அதற்காக மற்றவர் தாயை துவேஷிப்பதும் அசிங்கப்படுத்துவதும் எந்தவிதத்தில் நியாயம் என்ற ஆதங்கத்துடன் தொடர்கிறது தங்கள் கவிதை வரிகள் ரமணிசார்...
மதம் மதம் என்று மதம் பிடித்து அலைவதற்கு முன் முதலில் மனிதனாக இருக்க முயற்சியுங்கள் என்று வேண்டுவது போல் அமைகிறது கவிதை வரிகள்... ஆமாம்... மனிதனாக இருங்கப்பா... மனிதன், மனிதம், மதம் இது எல்லாவற்றிலும் ஏதோ ஒரு ஒற்றுமை இருப்பது போல் தெரிகிறது தானே?... மனிதனாய் பிறக்கிறவன் மனிதநேயத்தோடு முதலில் இருக்க முயற்சித்தாலே போதுமானது... மதம் மனிதனை எந்த அளவுக்கு மிருகமாக்குகிறது என்பதற்கு அங்கங்கு நாம் காணும் சில விஷயங்கள் மூலம் அறிய முடிகிறது....

அவரவர் இறைவன் அவரவர்களுக்கு உயர்வே.. ஒப்புக்கொள்ள வேண்டிய விஷயம்... ஆனால் இறைவன் ஒன்று தான். நாம் தான் பலவிதமாய் வணங்குகிறோம். இந்த புனித நூலிலும் மதத்தின் பெயரால் மனிதர்கள் அவரவர்களுக்குள் சண்டை பிடித்துக்கொள்ளச்சொல்லி போதிக்கவே இல்லை... நல்லதை செய்யுங்கள். நல்லதை பேசுங்கள்... யார் மனமும் புண்படாவண்ணம் வாழ பழகுங்கள்... உதவும் மனம் படைத்தவர் முழு மனதுடன் உதவுங்கள்... இது தான் எல்லா வேத நூல்களும் ஒன்றாய் போதிப்பது.

இந்த மதச்சண்டை மனிதர்கள் தமக்குள் இருக்கும் நல்லத்தன்மையை கொன்றுவிடுகிறது என்றே சொல்வேன் நான்... இருக்கும் காலம் எத்தனை நிமிடங்களோ நாட்களோ மாதங்களோ வருடங்களோ யாரறிவார்... இருக்கும்வரை எல்லோருக்கும் நல்லது செய்துவிடும் முயற்சியில் தான் முந்தவேண்டுமே தவிர.. என் கடவுள் தான் பெரியது என் மதம் தான் பெரியது மற்றதெல்லாம் வீண், பொய் என்று இழிவாக பேசி தன்னை தானே தரம் தாழ்த்திக்கொள்கிறார்கள்.. கடவுள் கூட இவர்களின் இந்த சண்டையை பார்த்து சிரித்துக்கொள்வார்.. கடவுள்களுக்குள் மதச்சண்டை இல்லை.... கடவுளை நம்பும் மனிதர்கள் மட்டும் ஏன் இப்படி???

அடுத்த பத்தி மிக அருமையாக சொல்லி இருக்கிறீர்கள் ரமணி சார்... கடவுள் இருக்கார்... என்று ஒரு கூட்டமும் இல்லை என்று ஒரு கூட்டமும் வகைக்கொரு பேராக ஆத்திகவாதி நாத்திகவாதி என்று சொல்வதில் ஒரு நியாயம் இருக்கிறது... ஆனால் கடவுள் இருக்கிறார் என்று சொல்லிக்கொள்வோரே எங்க கடவுள் தான் உண்மை. எங்க கடவுள் தான் நல்லதை செய்கிறார். உங்களது அப்படி இல்லை என்று அவர்களுக்குள்ளேயே ஒற்றுமை இல்லாமல் இப்படி சண்டை பிடித்துக்கொள்வது அண்டை அயலார்கள் கண்டிப்பாக நம்மை கிண்டல் செய்வார்கள்.. இவர்களுக்குள் ஒற்றுமை இல்லை என்று... ஒற்றுமை இல்லாத இடத்தில் குள்ளநரிக்கூட்டங்களான அண்டை அயல் நாடுகள் மிக எளிதாக உள் ஊடுருவி நமக்குள் சண்டை மூட்டிவிட்டு நம்மை அடக்கி ஆளத்தொடங்கிவிடும்.... நம்மை அடிமையாக்கிக்கொண்டு கெக்கலிக்கும்..ஆனால் ந்மக்குள் இருக்கும் சண்டைக்கு மட்டும் ஓய்வு இருக்காது. புதுசு புதுசாக தினுசு தினுசாக சண்டைக்கு காரணம் கொடுத்துக்கொண்டு வளர்த்துக்கொண்டு இருப்போம்.. நம் வீடு தான் பற்றி எரிந்துக்கொண்டு இருக்கிறது அதுவும் நம் ஒற்றுமையின்மையால் தான் என்பதை அறியாத மூடர்களாக இருப்போம்... எத்தனை வேதனையான விஷயம் இது :(

கடவுள் உண்டா இல்லையா என்று ஆரம்பித்து அதில் மதத்தை புகுத்தி பின் அதில் ஆளாளுக்கு இது என் மதம் இது மட்டும் தான் நல்லது என்று போராடுவது கண்டிப்பாக நம்மை நாமே தாழ்த்திக்கொள்ளும் விஷயம்... அதை மிக அழகாக உவமையோடு நீங்கள் சொல்லிச்சென்றது சிறப்பு ரமணி சார்....

கதம்ப உணர்வுகள் said...

நாளுக்கு நாள் மாற்றங்கள் மட்டுமல்லாது முன்னேற்றங்களை நோக்கி சாதனைகளை தொடர்ந்து சிகரம் தொட்டுக்கொண்டு இருக்கும் நம் போன்றோருக்கு இது மட்டும் ஏன் புரிவதில்லை?? ஆக்கங்கள் எல்லாம் நல்லவைக்கு தான் என்ற நிலை மாறி அழிவின் பாதையில் சென்றுக்கொண்டு இருக்கிறோமோ என்ற பயம் தலை தூக்குகிறது....

மிக அழகாக சொல்லி இருக்கிறீர்கள் ரமணிசார் விஞ்ஞானத்தின் முழுப்பயனையும் அனுபவித்துக்கொண்டு அஞ்ஞானத்தில் ஏன் கண்மூடி கிடக்கிறீர்கள் என்று... மெய்ஞ்ஞானம் அறிய தன்னை தான் அறிவது மிக அவசியம்.. தன்னை தன் தவறுகளை அறிந்து தெளிபவன் மதத்துவேஷம் செய்யமாட்டான்... மற்ற மதங்களை இழிவு படுத்தமாட்டான்.. தன் தாயை நேசிப்பவன் எப்படி பிறர் தாயை மதிக்காமல் இருப்பான்?? தன் தாயை முழு அன்போடு முழு மனதோடு நேசிப்பவன் பிறருடைய தாயையும் அதே கௌரவம் கொடுத்து மதிப்புடன் நேசிப்பான்... தன் தாய் அன்பையே முழுமையாக அறிய முடியாதவன் தான் பிறர் மனதை துன்புறும்படி துவேஷங்களை வளர்ப்பான்... இங்கே தன் தாய் என்று சொல்வது மதம் என்றே எடுத்துக்கொள்வோம்.. தன் மதத்தை பற்றி பெருமையாக கூறுபவன் அதன் புனிதத்தை அதன் மேன்மையை அதன் உண்மையை முழுமையாக அறிந்தானா என்றால் அதுவும் இல்லை என்று தான் சொல்வேன்.. ஏனெனில் தன் மதத்தை அதன் தன்மையை முழுமையாக அறிந்தவன் பிறருடைய மதங்களை மதிக்கத் தவறுவதில்லை.. பிறருடைய பக்திக்கு மதிப்பளிக்கவும் தவறுவதில்லை....

பழைய காலத்தில் தான் இந்த பிரச்சனை பிரதானமாக இருந்தது... இப்போது எல்லோரும் கூடுமானவரை எல்லாவற்றையும் அறிந்து தெரிந்தவர்களாகவும் தெளிந்தவர்களாகவும் தான் இருக்கிறார்கள் ஆனாலும் இந்த விஷயத்தில் மட்டும் இத்தனை பிடிவாதம் ஏனோ :(

கடைசி பத்தி மனம் நிறைத்தது ரமணிசார்... அழகு வரிகள்.... கருத்து சொல்லும் ஆழ்ந்த வரிகள்.... சிந்தனையை தூண்டும் அற்புத வரிகள்.... உடல் மூலம் (நல்லவை பேசு, நல்லதையே கேள், நல்லதையே பார்) செயல்மூலம் (நல்லதைச்செய், நல்லதை செய்ய இயலவில்லை என்றால் அமைதியாக இரு) மனம் அடக்கி ( தியானம், அமைதி ) அடங்கிய மனம் மூலம் அறிவொளி பெருக்கி ( கண் பார்க்கிறது செவி கேட்கிறது ஆனால் உதடுகள் மௌனம் காக்கிறது.. வாய் மூடி மௌனியாக இருப்பவன் மனதில் ஆத்ம தரிசனம் காணும் சிறப்பை பெற்றவனாகிறான்) மனதை அன்புமயத்தால் வசப்படுத்தி அன்பையே எல்லோருக்கும் பகிரும்போது இந்த உலகம் ஒரு சொர்க்கபூமியாகும்... எல்லோருக்கும் இடையில் கோபம் துவேஷம் பொறாமை என்னுடையது என்ற நிலை மாறி அன்பினால் மனம் நிறைந்து எல்லோரும் நல்லவர் என்று சொல்லவைக்கும்...

இதை அறியாமல் மதத்துவேஷம் செய்து தன் மதம் பற்றி புகழ்ச்சியாக கூறினாலும் தன் மதத்தை இழித்தவனாகவே மற்றவரால் கருதப்படுவான்.. ஏனெனில் இவன் செயல்கள் தான் இவன் எப்படிப்பட்டவன் என்பதை உலகுக்கு காட்டப்படுவது... இவன் செயல்கள் நல்லவையாக இருந்தால் ஆஹா இவனை பெற்றோர் எத்தனை நல்லவர் எத்தனை நல்லவிதமாக இவனை வளர்த்திருக்கிறார் என்று புகழ்வர்.. அதே இவனின் கெட்டச்செயலால் இவனை அல்ல இவனோடு சேர்த்து இவன் பெற்றோரையும் தூற்றுவர்.. இங்கே பெற்றோர் என்று சொன்னது மதமாக கூட எடுத்துக்கொள்ளலாம்..ஆனால் உண்மையில் எந்த மதத்திலும் மனிதனை மனிதன் ஏசவோ இகழவோ பழிக்கவோ பிற மதங்களை தாழ்த்திச்சொல்லவோ சொல்லித்தரவில்லை..மாறாக மனிதன் என்றும் நல்ல சிந்தனையோடு நல்லதைச்செய்ய சொல்லி தான் சொல்கிறது...

கருத்துகள் நிறைந்த மிக அற்புதமான இந்த காலத்திற்கு தேவையான அழகிய கவிதை பகிர்வுக்கு அன்பு நன்றிகள் ரமணிசார்.




கதம்ப உணர்வுகள் said...

tha.ma 22

Easy (EZ) Editorial Calendar said...

நல்ல கவிதை........


நன்றி,
பிரியா
http://www.ezedcal.com/ta (வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)

அ. வேல்முருகன் said...

இருக்கும் வரை
இருக்கும் பிரிவினை
இல்லாதிருக்க
ஏது வினை

Post a Comment