Friday, September 21, 2012

படைப்பாளியின் பலவீனம் ?

யாரும் கேட்டுவிடக் கூடாது என
மெல்லிய விசும்பலுடன்
யாரும் பார்த்துவிடக் கூடாது என
விழி  ஓரத்து நீரைத் துடைக்கும்
அந்தப் பெண்மணியைக் கண்டவுடன்
அவள் யாரெனத் தெரியாத போதும்
காரணம் எதுவெனத் தெரியாத போதும்...

அதுவரை  நண்பர்களுடன்
உல்லாச  ஊஞ்சலாடிக் கொண்டிருந்த நான்
சிதைந்து போகிறேன்
சின்னாபின்னப்பட்டுப்போகிறேன்

கோபம் போல
கோடை மழை போல
மாலையின்றி
சட்டென வரும் இரவு போல
தடம் மாறி குடிசைக்குள்
கண் இமைப்பதற்குள் நுழையும்
கனரக வாகனம்போல்
சுனாமி போல்
என்னுள்ளும் ஒரு சோகம்
புயலாய் விரைந்து வீசி
என்னை  நிலை குலையச் செய்து போகிறது
என்னுள் வெறுமையை விதைத்துப் போகிறது

நான் சோர்ந்துச் சாய்கிறேன்

" என்ன ஆனது உனக்கு
இதுவரை சரியாகத்தானே இருந்தாய் "
அக்கறையுடன் கையைப்பற்றுகிறான்
ஆருயிர்  நண்பன்

 "இல்லையில்லை இப்போதுதான்
சரியாய் இருக்கிறேன்
நான் சரியாகத் தெரிந்த பொழுதுகள்தாம்
சரியில்லாத பொழுதுகள் "என்கிறேன்

குழம்பிப்போய் பார்க்கிறான அவன்

எனக்கும்  அதற்கு மேல்
எப்படி விளக்குவது எனத் தெரியவில்லை

அவனும்  படைப்பாளியாய் இருந்தால்
ஒருவேளை என்னைப் புரிந்து   கொண்டிருப்பானோ ?


33 comments:

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

//"இல்லையில்லை இப்போதுதான்
சரியாய் இருக்கிறேன்
நான் சரியாகத் தெரிந்த பொழுதுகள்தான்
சரியில்லாத பொழுதுகள் //
அர்ப்ய்தமான வரிகள்

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

த ம 1

குட்டன்ஜி said...

பலவீனமே பலம்!
அருமை
த.ம.3

ஸ்ரீராம். said...

சரியாகப் புரியவில்லை.

ஸ்ரீராம். said...
This comment has been removed by the author.
Yaathoramani.blogspot.com said...



ஸ்ரீராம். ...

சரியாகப் புரியவில்லை.//

எந்த உணர்வும் அதீதமாய் பாதிக்கிற
நிலையில்தான் படைப்பாளி இருப்பான்
சம நிலை அவனுக்கு கை கூடி வருவதில்லை
என சொல்ல முயன்றிருக்கிறேன்
இன்னும் சரியாகச் சொல்லி இருக்கலாமோ ?
வரவுக்கும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

ஸ்ரீராம். said...

நன்றி. நடுவில் ஒருவரி விட்டுப் போயிருக்கிறதோ என்று எண்ணினேன். இப்போது புரிகிறது.

திண்டுக்கல் தனபாலன் said...

/// நான் சரியாகத் தெரிந்த பொழுதுகள்தான்
சரியில்லாத பொழுதுகள் ///

அருமை... (TM 5)

சாந்தி மாரியப்பன் said...

மிக மிக அருமை..

கே. பி. ஜனா... said...

வியக்க வைக்கிற கவிதை!
ஆமாம்,அது பலமா பலவீனமா?

Admin said...

//எனக்கும் அதற்கு மேல்
எப்படி விளக்குவது எனத் தெரியவில்லை//


விளக்க முடியாது.விளக்கினாலும் விளங்கிக்கொள்ள முடியாது.

சிவகுமாரன் said...

படைப்பாளியின் பலமும் பலவீனமும் அது தான்.
அருமை

Avargal Unmaigal said...

உங்களது பலவீனமே இளகிய மனதுதான். அந்த இளகிய மனதில் இருந்து வந்த படைப்பு மிக நன்றாக இருக்கிறது, வாழ்த்துக்கள்

NKS.ஹாஜா மைதீன் said...

அருமை சார்....

Easy (EZ) Editorial Calendar said...

மிக அருமையான கவிதை.......பகிர்வுக்கு நன்றி.....

நன்றி,
பிரியா
http://www.ezedcal.com/ta (வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)

காயத்ரி வைத்தியநாதன் said...

//இப்போதுதான்
சரியாய் இருக்கிறேன்
நான் சரியாகத் தெரிந்த பொழுதுகள்தாம்
சரியில்லாத பொழுதுகள் "என்கிறேன்// நல்லதொரு பகிர்வு தோழரே..அருமை..

காரஞ்சன் சிந்தனைகள் said...

"இல்லையில்லை இப்போதுதான்
சரியாய் இருக்கிறேன்
நான் சரியாகத் தெரிந்த பொழுதுகள்தாம்
சரியில்லாத பொழுதுகள் "என்கிறேன்

குழம்பிப்போய் பார்க்கிறான அவன்

//சரியான படைப்பாளிதான் நீங்கந் அற்புதமான படைப்பு!=
காரஞ்சன்(சேஷ்)

ஷைலஜா said...

பலமான பலவீனம் எனலாம்...சிந்திக்க வைக்கும் கவிதை!

ரிஷபன் said...

அவனும் படைப்பாளியாய் இருந்தால்
ஒருவேளை என்னைப் புரிந்து கொண்டிருப்பானோ ..


அருமையான கவிதை.

மாலதி said...

உண்மைதான் ஒவ் வொரு படைப்பாளியும் தனக்கான படைப்பு கண்களை அகலவிருத்து வைத்து எல்லாவற்றையும் விமர்சன கண்ணோட்டத்துடன் .... பார்க்கும் விதமும் சிறு நிகழ்வையும் படப்பக்கும் திறனும் கொண்டவர்கள் சிறந்த படிப்பாளிகள் ... படைப்பாளிகள் ... தொடரட்டும்.....

http://bharathidasanfrance.blogspot.com/ said...

வணக்கம்

குழம்பிப்போய்ப் பார்க்கின்ற நண்பா் உள்ளார்!
குழப்புகின்ற தோழா்களும் உள்ளார்! நல்ல
அழகியைப்போல் கண்கவரும் வண்ணம் பாடி
அடியவனின் அகத்துள்ளே இடம் பிடித்தீா்!
தழும்பிவரும் நீரலையாய்க் கருக்கள் யாவும்
தாம்பொங்கிப் பாய்கின்ற வன்மை கண்டேன்!
விழும்மிவரும் ஆசையினால் விருத்தம் ஈந்து
வியக்கின்றேன்! விரைகின்றேன் தமிழைக் காக்க!

கவிஞா் கி.பாரதிதாசன்
தலைவா். பிரான்சு கம்பன் கழகம்
http://bharathidasanfrance.blogspot.fr/
kavignar.k.bharathidasan@gmail.com
kambane2007@yahoo.fr

அருணா செல்வம் said...

படைப்பாளியின் பலம் என்று சொல்லாமல்
பலவீனம் என்று சொன்னதே
அதீத பலம் தான் !

வணங்குகிறேன் ரமணி ஐயா.

Murugeswari Rajavel said...

ஸ்ரீராமுக்கு நீங்கள் சொன்ன கருத்தை வைத்துப் பார்த்தால் ஏதோ புரிந்த மாதிரி இருக்கிறத்.ஆனாலும்...
வழக்கமான உங்கள் நடை,நன்றாக உள்ளது ரமணி சார்.

அப்பாதுரை said...

சரியாகத் தெரிந்த பொழுதே சரியில்லாத பொழுது - இதில் ஒளிந்திருக்கிறது கவிதையின் பொருள்.
எனக்கென்னவோ கலைஞனின் மனது குப்பையாக இருந்தால் தான் அவன்/ள் வெளிப்படுத்தும் கலை மாணிக்கமாக இருக்க முடியுமென்று அவ்வப்போது தோன்றுகிறது.

சுதா SJ said...

அவனும் படைப்பாளியாய் இருந்தால்
ஒருவேளை என்னைப் புரிந்து கொண்டிருப்பானோ ?///

உண்மைதான் படைப்பாளியாய் இருந்திருந்தால் கண்டிப்பாய் புரிந்து கொண்டு இருப்பான்... அருமையான கவிதை.

Unknown said...

உங்கள் வரிகள் அனைத்தும் அருமை...
குறிப்பாக
//என்ன ஆனது உனக்கு
இதுவரை சரியாகத்தானே இருந்தாய் "
அக்கறையுடன் கையைப்பற்றுகிறான்
ஆருயிர் நண்பன்//

எனது தளத்தில்
என் காதல் க(வி)தை... 02

தி.தமிழ் இளங்கோ said...

எங்கிருந்து என்ன சொல்ல வருகின்றீர்கள் என்று எனக்கும் புரியவில்லை. மன்னிக்கவும்.

கதம்ப உணர்வுகள் said...

இந்த கவிதையை பலமுறை படித்தேன்.. மர்ம இடைவெளி என்ற உங்கள் கவிதையைப்போல கருத்தை உள்ளடக்கி கண்ணாமூச்சி காட்டும் அழகிய வரிகள்.... பதில் இல்லாத கேள்விகள் கண்டிப்பாக கிடையாது... கருத்தில்லாத கவிதைகள் பிறக்கவே முடியாது.... மனதின் மூலையில் ஏற்படும் சலனம், கோபம், மகிழ்ச்சி இப்படி ஏதோ ஒரு உணர்வு கவிஞரை கவிதை வரிகளில் கொட்டிவிட வைக்கிறது.... படைப்பாளிகளின் மனம் பலவீனமாக இருப்பதால் தான் எப்போதும் அவர்களின் உணர்வுகள் மட்டும் உயிர்ப்புள்ளதாகவே இருக்கிறது... தன் கண்ணெதிரே நடக்கும் அநியாயங்களை தட்டிக்கேட்க முடியவில்லை என்றால் படைப்பாளி அதே வீச்சுடன் வந்து தன் எழுத்துகளில் தன் மொத்த பலத்தையும் கொட்டிவிட்டு ஆசுவாசமாகிறான்... அவனிடம் இருந்து வலுப்பெற்ற எழுத்துகள் அவனின் பலத்தையும் எடுத்துக்கொண்டு கம்பீரமாக நிற்கிறது... படைப்பாளியோ மீண்டும் பலவீனமாகிவிடுகிறான்... தன் கண்முன் நடக்கும் எந்த ஒரு நிகழ்வையும் மனதில் இருத்திக்கொள்வதில் படைப்பாளியின் நிகர் அவனே தான்.... அந்த நிகழ்வு அவன் மனதை அசைக்கிறது.... என்ன செய்திருக்கலாம்?? எப்படி காத்திருக்கலாம்?? எப்படி தடுத்திருக்கலாம் என்று தன் எண்ணங்களை விரித்து யோசிக்கிறது..... இப்படியாக.....

இந்த கவிதையின் முதல் பத்தியில்.... யாரோ ஒரு பெண் தனக்கு முன்பின் அறிமுகம் ஆகாதவள் என்றபோதும் அவளின் அழுகை, கண்ணீரின் வேகம், அவள் மனதின் சோகம் சுற்றி இருப்போரை கவனத்தில் ஈர்க்கவில்லை என்றாலும் படைப்பாளியின் கண்கள் காதுகள் எப்போதும் கூர்மையுடன் தன்னைச்சுற்றி நடப்பவைகளில் கவனம் வைத்தபடி இருக்கும். ஒரு பொறி கிடைத்தால் போதும் சட்டென அதை அழகிய வரிகளில் கோர்த்து எழுத்துகளை அரங்கேற்றிவிடுகிறான்.... இங்கே அதே தான் நடந்திருக்கிறது... யாரென்று அறியாத போதும் அந்த பெண்ணின் சோகம் யாரும் அறியாது அவள் மறைத்த கண்ணீர் படைப்பாளின் கண்களுக்கு மட்டும் ஏதோ விபரீதம் நடந்திருக்கிறது என்று அறிய முயல்கிறது... முடியாத சூழலில் இப்படியாகி இருக்குமோ இப்படியாகி இருக்குமோ என்று பரிதவித்து துடிக்கிறது.... தன் சந்தோஷங்களை கூட மறந்துவிடுகிறது.... தன்னால் ஏதாவது உதவிட முடியுமா என்று பதைக்கிறது... மனம் சட்டென எல்லா மகிழ்ச்சிகளில் இருந்தும் தன்னை பிடிவாதமாய் மறுத்து மனதை வெறுமையாகிவிடுகிறது....

இயல்பாய் தன் உணர்வுகளையும் மனதில் உள்ள அன்பையும் மறைக்கத்தெரியாத பலவீனமானவன் தான் படைப்பாளி... ஆமாம் உண்மையே...

ரமணிசாரின் இந்த வரிகள் மிக அருமை....கோபம் போல கோடை மழை போல... மாலையின் வருகை இல்லாமல் சட்டென இரவு வருவதையும்... தடம் மாறி குடிசைக்குள் நுழையும் கனரக வாகனம் போல.... கண்முன் காட்சிகள் தெரிகிறது ரமணிசார்... ரசித்தேன் இவ்வரிகளை... உவமைகள் மிக அருமை...

இதுவரை சரியாகத்தானே இருந்தாய்??? இல்லை இல்லை இப்போது தான் நான் சரியாக இருக்கிறேன். அழுத்தமான வரிகள் இவை... ஆழ்ந்த வரிகள்.... தன்னில் இருந்து தன்னை பிரித்து இன்னொருவராக தன்னை நிலைநிறுத்தி அவர் சோகம், கோபம், மகிழ்ச்சி, காதல், இப்படி எல்லாமாக அவரின் உணர்வுகளாக மாற தன்னில் இருந்து விடுபட்டு அவராக மாற்றும் முயற்சி தான் இந்த அயற்சி... மிக அருமையான நூலிழை சிந்தனை தான்... ஆனால் சொல்லவந்த கருத்து மிக மிக உண்மை...

ஒரு படைப்பாளி தான் தானாகவே இருந்து படைப்புகள் படைத்தால் அதில் உணர்வுகள் எப்படி வரும்?? ஹாஸ்யம் எப்படி வரும்?? யாரை படைக்கிறானோ அவனாகவே தன்னை மாற்றிப்பார்க்கிறான்... அவர்களின் சிந்தனைகளை தனக்குள் கொண்டுவரத் துடிக்கிறான்.. அவராகவே மாறி அவர் மனதை உணர்வுகளை கொண்டு வந்து படைப்பில் படைக்கிறான்....

ஆமாம் ஒரு படைப்பாளி தான் இன்னொரு படைப்பாளியை அவன் மனதை, அவன் சிந்தனையை, அவன் எண்ணங்களின் போக்கை, அவன் உணர்வுகளை சரியாகப்படிக்கமுடியும்.... அறிந்து தெளியவும் முடியும் என்று மிக அற்புதமாக சிந்திக்க வைத்த கவிதை வரிகள் பகிர்வுக்கு அன்பு நன்றிகள் ரமணிசார்....

கதம்ப உணர்வுகள் said...

த.ம 13

G.M Balasubramaniam said...


அதீத பாதிப்புகளுக்கு உள்ளாகும் ஒருவனால்தான் படைப்பாளியாக முடியும் என்று கொள்ளலாமா.

Anonymous said...

எனக்கும் புரியவில்லை
vetha.elangathilakam.

kowsy said...

காண்பவற்றை கருத்தில் நிறுத்தி அதனை அலசி ஆய்பவன் தான் எழுத்தாளன் படைப்பாளி . எந்தவிடயமானாலும் முதலில் பாதிப்பை ஏற்படுத்துவதும் பகிர்ந்து கொள்வதும் படைப்பாளியிடம்தான் உள்ளது . உங்கள் எழுத்துகளில் ஆழமான நோக்கம் மறைந்திருக்கும் . சமுதாய நோக்கு கலந்திருக்கும் . அடுத்து என்ன சொல்லப் போகின்றீர்கள் என்று அறியும் ஆர்வத்தைக் கொண்டுவரும் . அதனால் காத்திருக்கின்றேன் அடுத்த படைப்புக்காய்

வை.கோபாலகிருஷ்ணன் said...

//அவனும் படைப்பாளியாய் இருந்தால்
ஒருவேளை என்னைப் புரிந்து கொண்டிருப்பானோ?//

அருமை. பாராட்டுக்கள்.

Post a Comment