Thursday, October 25, 2012

பெண்ணே நீ புதிராகவே இரு

காலங்காலமாய்
இப்போதிருப்பதைப் போலவே
பெண்ணே நீ
எப்போதும்
புதிராகவே இரு
ஒப்பிட முடியாத
உன்னதமாகவே இரு

உணர்வின் வெளிப்பாடு ஒலியிலிருந்து
மொழியாகிய காலம் முதல்

எண்ணத்தின் விரிவு கனவாகி
கற்பனையாகிய நாள் முதல

உன்னை அடைதலே வெற்றியின்
அடையாளமெனக் கொண்ட கணம் முதல்

வாள்வீச்சு சாதிக்காததை சொல்வீச்சு
சாதிக்குமென்பதைக் கண்ட நொடி முதல்

முகமது நிலவென இதழது மலரென
கார்மேகம் குழலென சங்கதே கழுத்தென

இயற்கையில் துவங்கி

டெலிபோன் மணியென மெல்போர்ன் மலரென
ஃபிஃப்டி கேஜ் தாஜ்மகாலென நடமாடும் சாக்லேட் என

இன்று எதிர்படும் உன்னதங்களுடனெல்லாம்
 
சலியாது ஒப்பிட முயன்றும்
எதனுள்ளும் அடங்காது திமிறும்
உன்னதமே,எழிலே,அற்புதமே,ஆனந்தமே

எப்படி முயன்றபோதும்
ஏன்   விரும்புகிறாய்
எதற்காக வெறுக்கிறாய்
ஏன்  அரவணைக்கிராய்
எதற்காக  கழுத்தறுக்கிறாய்

 என   எவராலும்  எப்போதும்

புரிந்து கொள்ள இயலாத
ஆழ்கடல் அதிசயமே
பூவுலக ரகசியமே
சூட்சுமப் பெட்டகமே

நீ புரிந்து போனால்
வாழ்வின் சுவை குன்றிப் போகும்
உன்னை மிகச் சரியாக ஒப்பிட முடிந்தால்
எங்கள் கற்பனைகள் வறண்டு போகும்

எனவே
என்றும் போல
எப்போதும்போல
பெண்ணே நீ
புதிராகவே இரு
மனிதர்கள் எல்லாம் உன்னைப் புரிய முயன்று
வாழ்வை சுவாரஸ்யப்படுத்திக் போகிறோம்
தனித்துவமாகவே இரு
உன்னை ஒப்பிட முயன்று என்போல்
சராசரிகள் கூட கவிஞராகிக் போகிறோம்

33 comments:

ஆத்மா said...

புரியாத புதிரை புரியும் படி பதிந்துள்ளீர்கள் சார்
ரசித்தேன் (3)

திண்டுக்கல் தனபாலன் said...

அவர்களை புரிந்து கொள்ள முடியுமா...?

நம்மை புரிந்து கொண்டால் போதுமே...!!!

/// உன்னை மிகச் சரியாக ஒப்பிட முடிந்தால்
எங்கள் கற்பனைகள் வறண்டு போகும் ///

உண்மை வரிகள்...

நன்றி...
tm2

சசிகலா said...

உன்னை ஒப்பிட முயன்று என்போல்
சராசரிகள் கூட கவிஞராகிக் போகிறோம்.

நீங்களே சராசரி என்றால் நாங்கள் எல்லாம் என்ன சொல்லி திரிவது.

துரைடேனியல் said...

Beautiful Poem! Super Sir!

G.M Balasubramaniam said...


பெண் புரியப் பட்டால் வாழ்வின் சுவை குறையக் கூடும். வித்தியாசமான புரிதல். வாழ்த்துக்கள்.

கவியாழி said...

ஆழ்கடல் அதிசயமே
பூவுலக ரகசியமே
சூட்சுமப் பெட்டகமே


ஆஹா ..என்ன அருமையான உண்மை

பால கணேஷ் said...

சராசரியா ஸார் நீங்கள்? என்னே தன்னடக்கம். எனில் நானெல்லாம் பூஜ்யமல்லவா? பெண் என்னும் புரியாத புதிரைப் புரிந்து கொள்ள ஒரு ஆயுள் தேவைதான் நிச்சயம். அருமையான. அனைவரும் ஏற்றுக் கொள்ளும் கருத்தைப் பகிர்ந்துள்ளீர்கள். மிக ரசித்தேன்.

”தளிர் சுரேஷ்” said...

புரியாத புதிர்களை புரிய வைத்த கவிதை! சூப்பர்!

இராஜராஜேஸ்வரி said...

சுவாரஸ்யப்படுத்திக் போகும்
தனித்துவமான கவிதை ! பாராட்டுக்கள்..

குறையொன்றுமில்லை. said...

சுவாரசியமான கவிதை நல்லா இருக்கு வாழ்த்துகள்.

சென்னை பித்தன் said...

புதிரவிழ்ந்தால் சுவாரஸ்யம் போய் விடுமே!

மனோ சாமிநாதன் said...

பெண் புதிராக இருப்பதனால்தான் ஒவ்வொரு வரியும் இத்தனை அழகாய் வந்து விழுந்ததோ? பெண்மைக்கு இங்கே மகுடம் சூட்டியிருக்கும் உங்களுக்கு அன்பு நன்றி!!

Muruganandan M.K. said...

புரியாததுபோல்
பாவனையில்
புரிந்தெழுதிய நல்ல
படைப்பு

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

பெண் புதிராக இருக்கும்வரைதான் சுவாரசியம். தேடலின் மையம் பெண்தான் என்பதை இதைவிட அழகாக சொல்லமுடியாது.

அருணா செல்வம் said...

புரிந்து கொள்ள இயலாத
ஆழ்கடல் அதிசயமே
பூவுலக ரகசியமே
சூட்சுமப் பெட்டகமே

இப்படியே உசுப்பேத்தி உசுப்பேத்தி...
அவர்களை ஆண்கள் புரிந்து கொள்ள முயலுவதில்லை.

பெண்கள் முகம் காட்டும் கண்ணாடி போன்றவர்கள்.
நீங்கள் சிரித்தால் அவர்களும் சிரிப்பார்கள்!
நீங்கள் அழுதால் அவர்களும் அழுவார்கள்...இப்படியே...
தவறி கீழே போட்டால் உடைந்து விடுபவர்கள்.

பதிவின் ஓட்டம் அருமை இரமணி ஐயா.

Avargal Unmaigal said...

பெண்களை புரிந்து கொள்வது கடினம் என்பதை உங்களிள் அருமையான பதிவின் மூலம் தெரிந்து கொண்டேன் இது தெரியாமல் நான் மட்டும்தான் பெண்களை புரிந்து கொள்ளவில்லை என்று கருத்து இதுவரை இருந்தது உங்கள் பதிவின் மூலம் என்போலத்தான் அனைவரும் இருக்கிறார்கள் என்பதையும் புரிந்து கொண்டேன் பகிர்வுக்கு நன்றி


உங்கள்தளம் மூலம் பெண்களுக்கு ஒரு வேண்டுகோள் பெண்களே உங்களை புரிந்து கொள்ள கடவுளாலும் முடியாது அதனால் ஆண்களை குறை சொல்வதைவிட்டு விட்டு இன்று முதல் ஆண்களை நீங்கள் புரிந்து கொள்ள முயற்சிப்பீர்களா?

சுதா SJ said...

பெண் புதிராக இருக்க ஆண் அதை புரிந்து கொள்ள நினைக்க இதானே மனித வாழ்வு....

புதிராக இருப்பது கூட பெண்ணுக்கு அழகுதானே :))

வெங்கட் நாகராஜ் said...

புரியாத புதிர்...

அப்படி இருப்பதே நல்லது என கவிதை மூலம் சொன்ன உங்களுக்குப் பாராட்டுகள்....

சிறப்பான கவிதைக்கு நன்றி.

தி.தமிழ் இளங்கோ said...

பெண்ணுக்குள் இத்தனை புதிர்
ஆணுக்குள் எத்தனையோ?

Unknown said...

பெண்களை புரிந்து கொள்ள முடியாது என்பதை புரிந்து அதை எனக்கும் அழகாக புரிய வைத்துவிட்டீர்கள். அழகோ அழகு உங்கள் கவிதை..

Anonymous said...

எதிராக இருந்தால் புதிராகத் தான்
இருக்கும் .
ஆனால் எதிர் எதிர் துருவங்கள் தான்
ஒன்றை ஒன்று ஈர்க்கும் என்பதால் நாங்கள்
புதிராக இருப்பது தான் அனைவருக்கும் சுவை.
பொதுவில் ... பெண்கள் - formals
ஆண்கள் - informals

Unknown said...


புரியாத புதிர்தானே பெண்ணுக்கு அழகு-அதை
புரிந்துமே அளவாக அவரோடு பழகு!
சரியாக சொன்னீரே இரமணியே இங்கே -நல்
சிந்தனை! ஆனால் உணர்வாரும் எங்கே?

அகலிக‌ன் said...

மனதுக்குள் உட்கார்ந்து மணியடித்தாள் அவள் தனித்துவத்தை நீங்கள் கவியாக வடித்தெடுத்தீர்! பல கவிஞர்களின் கற்பனை தவிடுபொடி உங்கள் கவிதை அதிரடி!

அப்பாதுரை said...

புதிராகிப் போனால் ஒதுங்கிவிடுவது என் வாடிக்கை. இருக்கிற பத்து செல் புத்தியை புதிர்ல போட்டுத் தாளிப்பானேன்?

'எதற்காகக் கழுத்தறுக்கிறாய்' - இதில் உங்கள் வீச்சு இருப்பதாக உணர்கிறேன்.

அருணா செல்வம் சொல்லியிருப்பதை ரசித்தேன்.

Ranjani Narayanan said...

சும்மாவா சொன்னார்கள் Men are from Mars, Women are from Venus என்று?

ஓஹோ என்று புகழ்ந்துவிட்டு 'கழுத்தறுக்கிறாய்' என்று சொல்லிவிட்டீர்களே!

கவிதையை ரசிக்கும்போதே நிஜமாகவே எங்களைப் புரிந்து கொள்ள இத்தனை திண்டாட்டமா என்றும் தோன்றுகிறது!

பாராட்டுக்கள்!

ADHI VENKAT said...

பெண்மையை போற்றும் நல்லதொரு கவிதைக்கு பாராட்டுகள் சார்.

ஸ்ரீராம். said...

புரிந்தாலும் புரியாதது போலச் சொல்ல, புதிர் புதிர் என்று சொல்லி.....!

Yaathoramani.blogspot.com said...

சிட்டுக்குருவி //

புரியாத புதிரை புரியும் படி பதிந்துள்ளீர்கள் சார்
ரசித்தேன் (3)


\தங்கள் முதல் வரவுக்கும்
வாழ்த்துக்கும் மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

திண்டுக்கல் தனபாலன் //

உண்மை வரிகள்...//

எப்போதும் போல் தங்கள் உடன் வரவுக்கும்
வாழ்த்துக்கும் மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

Sasi Kala //


நீங்களே சராசரி என்றால் நாங்கள் எல்லாம் என்ன சொல்லி திரிவது. //

தங்கள் வேகமும் சிந்தனைத் திறனும்
என்னை எப்போதும் பிரமிக்கச் செய்யும்
எப்போதும் போல் தங்கள் உடன் வரவுக்கும்
வாழ்த்துக்கும் மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

துரைடேனியல் //

Beautiful Poem! Super Sir!//

தங்கள் உடன் வரவுக்கும்
வாழ்த்துக்கும் மனமார்ந்த நன்றி

Anonymous said...

''..மனிதர்கள் எல்லாம் உன்னைப் புரிய முயன்று
வாழ்வை சுவாரஸ்யப்படுத்திக் போகிறோம்
தனித்துவமாகவே இரு
உன்னை ஒப்பிட முயன்று என்போல்
சராசரிகள் கூட கவிஞராகிக் போகிறோம்..''
மிக சரியாக அளந்து எழுதியுள்ளீர்கள்..
சிறப்பு.
இனிய நல்லவாழ்த்து.
வேதா. இலங்காதிலகம்.

Yaathoramani.blogspot.com said...


kovaikkavi //

தங்கள் வரவுக்கும்
வாழ்த்துக்கும் மனமார்ந்த நன்றி

Post a Comment