Friday, January 9, 2015

தாய்மை

அகன்று விரைந்து பரவி
ஆக்ரோஷமாய்
ஊர் மிரட்டி ஓடியது
அகண்ட காவேரி.

அதனுள்
இருப்பிடம் தெரியாது
கரைந்து கிடந்தாலும்
தான் தான் காவேரி என
பெருமிதம் கொண்டிருந்தது
தலைக்காவேரித் துளி நீர்.

அதிகாலைப் பொழுதில்
மெல்ல மெல்ல விரியும்
பூவிதழ்களாய்
வ்ளர்ந்து விரிந்து
வாசல் நிறைத்து நின்றது
மார்கழி மாதத்து வாயிற்கோலம்

தான் முற்றாய்
மறைந்துபோனாலும்
அதன் முழு வளர்ச்சியில்
அதனை நிர்மானித்த பெருமிதத்தில்
மன நிறைவு கொண்டது கோலப்புள்ளி.

சொற் காம்புகளின் உச்சியில்
பூத்துச் சிரித்த
உணர்வுப் பூக்களைத்
தாங்கிய போதையில்
மண்மறந்து வானம் தொட
முயன்று  மகிழ்ந்தது ஒருகவிதை

அதிகம் அறியப்படாது
உள்ளடங்கிக் கிடந்தாலும்
கவிதைக்கு உயிர்தரும் மகிழ்வினில்
வேராக உள்ளிருந்தே
பெருமையில் திளைத்தது
கவிதை தந்த கரு

பட்டம் பதவி தந்த
வசதி வாய்ப்புகளில்
ஊரெல்லாம் வாய்பிளக்க
வானம் தொட்டு நின்றான்
வறுமை அறியாதபடி
பொத்திப்  பொத்தி வளர்த்த பிள்ளை

சுட்டெரிக்கும் வறுமைக்கு
துளி நிழல் தாராது போயினும்
விஸ்வரூபம் எடுத்து நிற்கும்
அவனின் வளர்ச்சி கண்டு
அவனிருந்த அடிவயிறு தடவி
ஆனந்தம் கொண்டது தாய்மை

19 comments:

ஸ்ரீராம். said...

அருமை. நெகிழ்ச்சி.

கரந்தை ஜெயக்குமார் said...

ஆகா
அருமை ஐயா
நன்றி

கரந்தை ஜெயக்குமார் said...

தம 3

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

//தான் முற்றாய்
மறைந்துபோனாலும்
அதன் முழு வளர்ச்சியில்
அதனை நிர்மானித்த பெருமிதத்தில்
மன நிறைவு கொண்டது கோலப்புள்ளி.//
இப்படி ஒரு உவமையை இதுவரை யாரும் சொன்னதில்லை.
தாயின் தன்னலமில்ல அன்பை இதைவ இட எப்படி சொல்லமுடியும்? அருமை சார்

திண்டுக்கல் தனபாலன் said...

அருமை ஐயா அருமை...

துரை செல்வராஜூ said...

காவிரியின் நீரலைகள் மீது தவழ்ந்து வரும் காற்றெனக் கவிதை!..

Unknown said...

அடடா ,இதுவல்லவோ தாய்மை :)
த ம 6

ananthako said...

தாய்மை மேன்மை அருமை

ராமலக்ஷ்மி said...

அருமையான கவிதை.

கவிதை வீதி... // சௌந்தர் // said...

தாய்மை குறித்து புதிய பரிமாண கவிதை...
அசத்தல்...
வாழ்த்துக்கள்

இளமதி said...

வணக்கம் ஐயா!

அருமை என்கின்றதற்கு மேலாக ஏதேனும் சிறப்பான சொல்லிருந்தால் அதுவே உங்கள் கவிதைக்குப் பொருந்தும்!

தாயின் பெருமையை எழுதிய ஆத்மார்த்தமான
அழகிய கவிதை! மீண்டும் மீண்டும்
படித்து மகிழ்ந்தேன் ஐயா! வாழ்த்துக்கள்!

Anonymous said...

''..அதனுள்
இருப்பிடம் தெரியாது
கரைந்து கிடந்தாலும்
தான் தான் காவேரி என
பெருமிதம் கொண்டிருந்தது
தலைக்காவேரித் துளி நீர்....''
தாய்மை...Nanru..
Vetha.Langathilakam.

KILLERGEE Devakottai said...

அருமை கவிஞரே...

”தளிர் சுரேஷ்” said...

தாய்மைக்கு புது இலக்கணம் படைத்துவிட்டீர்கள்! அருமை!

சசிகலா said...

தங்களின் ஒவ்வொரு படைப்பும் ஒவ்வொரு அற்புதமான கருத்தை முன்வைக்கின்றன. வழக்கம் போலவே வெகு சிறப்புங்க ஐயா.

Yarlpavanan said...


"சுட்டெரிக்கும் வறுமைக்கு
துளி நிழல் தாராது போயினும்
விஸ்வரூபம் எடுத்து நிற்கும்
அவனின் வளர்ச்சி கண்டு
அவனிருந்த அடிவயிறு தடவி
ஆனந்தம் கொண்டது தாய்மை" என்ற
அடிகள் தானே
தாய்மை அடையும் மகிழ்வை
வெளிப்படுத்துகிறதே!

Thulasidharan V Thillaiakathu said...

சுட்டெரிக்கும் வறுமைக்கு
துளி நிழல் தாராது போயினும்
விஸ்வரூபம் எடுத்து நிற்கும்
அவனின் வளர்ச்சி கண்டு
அவனிருந்த அடிவயிறு தடவி
ஆனந்தம் கொண்டது தாய்மை//

மனம் நெகிழ்ந்துவிட்டது! அருமையான வரிகள்! உண்ர்வு பூர்வமான வரிகள்!

Unknown said...

அவனின் வளர்ச்சி கண்டு
அவனிருந்த அடிவயிறு தடவி
ஆனந்தம் கொண்டது தாய்மை

அதன் பண்பே அதுதானே!

கவிஞர்.த.ரூபன் said...

வணக்கம்
ஐயா.
சொல்ல வார்த்தைகள் இல்லை.. மிக அருமையாக உள்ளது. பகிர்வுக்கு நன்றி த.ம 12
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

Post a Comment